February 27, 2010

சுஜாதாவும் நானும் - கடுகு

ஸ்ரீரங்கம் எஸ்.ஆர் என்ற பெயரில் கணையாழியில் சுஜாதா எழுத ஆரம்பித்த காலத்திலிருந்தே அவரை எனக்குத் தெரியும். நானும் கணையாழியில் சில இதழ்களில் டில்லி வாழ்க்கை என்ற தலைப்பில் எழுதி உள்ளேன். கணையாழி ஆசிரியர் திரு.கஸ்துரிரங்கன் என் நண்பர்.குமுதத்தில் சுஜாதா என்ற பெயரில்  ”இதுமட்டும்” என்ற அவருடைய கதை  வந்ததும் அவர் தமிழ்ப் பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் வாசகர்கள் ஆகியவர்களின் கவனத்தைக் கவர ஆரம்பித்தார்.
அவருடைய கதை வெளியான வாரம் நான் கரோல்பாக் போக  வேண்டிய வேலை இருந்தது. அங்கிருந்த அவர் வீட்டிற்குச் சென்று பாராட்டினேன். அப்போது  குமுதத்தில் நானும் ஒரு ஆஸ்தான வித்வானாக இருந்தேன்.
         அவரது அலுவலகம் சப்தர்ஜங் விமான நிலையத்தில் இருந்தது..  பார்லிமெண்ட், கன்னாட் பிளேஸ் போன்ற மத்திய டில்லியிலிருந்து சற்றுத் தள்ளியிருந்தது. அதனால் யு.என்.ஐ கேன்டீன் ஜமாவிற்கு அவர் எப்போதாவதுதான் வருவார்.

வித்தியாசமான நடை மட்டுமல்ல, வித்தியாசமான பதப் பிரயோகங்கள், சற்று கவர்ச்சியான வர்ணணைகள் காரணமாகவும் குமுதத்தில் நைலான் கயிறு தொடர்கதை வெளியானதும் அவருடைய பெயர் இன்னும் ஒரு படி மேலே போய் விட்டது.
அச்சமயம் பிரிட்டிஷ் கவுன்சில் லைப்ரரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வந்து படித்துக் கொண்டிருந்தேன்.
அந்தக் கதை மறந்து விட்டது. ஆனால் அதில் சில லே அவுட், சில வார்த்தைகளுக்கு வித்தியாசமான ஸ்பெல்லிங், சில எழுத்துக்களைத் திருப்பிப் போட்டிருந்தது, சில வரிகள் சாய்வுப் பாதையாக அமைந்திருப்பது போன்று பல சர்க்கஸ் வித்தைகள் செய்திருந்த அந்தப் புத்தத்தை சுஜாதாவிடம் கொடுத்தேன்.  ( உதாரணமாக அதில் வந்த ஒரு புதுமையைச் சொல்கிறேன்.    “அவளுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. கண்ணை மூடிக் கொண்டு பத்து நிமிஷம் மௌனமாக இருந்தாள்” என்று  எழுதிவிட்டு, அடுத்த ஒரு பக்கத்தைக் காலியாக விட்டிருந்தார்கள்,) ”என்னென்னமோ பண்ணியிருக்கான்” என்று வியந்து ரசித்தார். இந்த புஸ்தகத்திலிருந்து அவர் எந்த ஐடியாவையும் எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் வித்தியாசமாக சிந்திக்க அந்தப் புத்தகம் ஒரு சதவிகிதமாவது அவருக்கு உதவியிருக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.

February 24, 2010

அன்புள்ள டில்லி - 11

எழுத்தாளர் தி. ஜானகிராமன் எவ்வளவுக்கெவ்வளவு திறமை வாய்ந்த  எழுத்தாளரோ அவ்வளவு எளிமை மிக்கவர். அலட்டல் இல்லாதவர். 'இலக்கியப் பத்திரிகைகள் அவரைச் சொந்தம் கொண்டாடினாலும், அந்த ஒரு சின்ன வட்டத்திற்குள் அகப்பட்டுக்  கொள்ளவில்லை.
அவர் டில்லியில் ஆல் இண்டியா ரேடியோவில் பணியாற்றி வந்தார். அவரது அலுவலகமும் என் ஆபீசும் எதிர் எதிர் கட்டடம். யு.என்.ஐ. கான்டீனில் இடைவேளைகளில் அவருடன் எத்தனையோ முறை அளவளாவியுள்ளேன். அவர் எல்லா  பத்திரிகைகளையும் விடாமல் படிப்பவர் அல்ல. ஆனால் படிப்பவைகளை ரசித்துப் படிப்பார்.
ஒரு சமயம் "மோனா"விற்கு  மாத நாவல் ஒன்றை எழுதித் தரும்படி "சாவி' கேட்டிருந்தார். நாவலை வாங்கி அனுப்புவது என் பொறுப்பாக இருந்தது. நான் தினமும் அவரைச் சந்தித்து 10,15 பக்கங்கள் என்று வாங்கி விமான மூலம் அனுப்பி வந்தேன்.
"சார், உங்கள் நாவல் எத்தனை பக்கம் வரும்?'' என்று கேட்டபோது அவர் சொன்ன பதில் எனக்கு வியப்பை அளித்தது மட்டுமல்ல, ஒரு அரிய பாடத்தையும் போதித்தது.
"நான் கதாபாத்திரங்களை நன்கு தீர்மானித்து விடுவேன். அதன் பிறகு, கதை என் கையில் இல்லை. பாத்திரங்கள் கையில் உள்ளது. ஆகவே கதையை எத்தனை பக்கங்கள் எடுத்துச் செல்கிறார்கள் என்பது அவர்களுக்குத்தான் தெரியும்'' என்றார்.
 ( ஒரு இடைச் செறுகல். பின்னால் நான் ஒரு நாவல் எழுதும்போது அவர் சொன்னபடி கேரகடர்களைத் துல்லியமாக  மனதில் உருவாக்கிக் கொண்டேன். அடுத்து கதையை 16  அத்தியாயங்கள் என்று  நிர்ணயித்து, அந்தந்த அத்தியாயத்தின் கதையை ஒன்றிரண்டு வரிகளில் எழுதினேன். தி.ஜா, சொன்னதை பின்பற்றி எழுதினேன். இரண்டே நாளில் 60 பக்க நாவலை எழுதினேன். அந்த  நாவல் பற்றி இன்னும் பல விவரங்கள் உள்ளன. பின்னால் பார்க்கலாம்.)
 \           சரி, தி ஜா.வின்  நாவலுக்கு வருவோம். ஒரு 29’ம் தேதி கடைசி அத்தியாயத்தை எழுதிக் கொடுத்தார். முதல் தேதிக்குள் புத்தகத்தை அச்சடித்து நாலைந்து பிரதிகளை விமான மூலம் ஆசிரியர் சாவி  எனக்கு அனுப்ப, அவற்றை தி.ஜா.விடம் கொடுத்தேன். "அட, ரொம்ப வேகமான் வேலையாக இருக்கிறதே. பாவம், உங்களை மிகவும் சிரமப்படுத்தி விட்டேன்'' என்றார்.
பதிலுக்கு நான் அவரை சிரமப்படுத்திய விஷயத்தைச் சொல்லுகிறேன்.

டாக்டர் தர்மராஜன்- கடுகு


ஒரு சிறு குறிப்பு:
அன்புள்ள டில்லி -11ல் லால்குடி ஜயராமன், என் டில்லி டெலிபோன் நம்பரைக் கண்டுபிடித்து முதன் முதலில் என்னுடன் பேசியதை எழுதியுள்ளேன். அப்போது, தங்கள் ஊர் டாக்டரை அப்படியே அச்சு அசலாகக்  கேரக்டர் கட்டுரையில்  நான் எழுதி இருப்பதாகக் கூறினார். . அந்த கேரகடர் கட்டுரை இதுதான்.
%%%%%%%%%%%
         அந்த போர்டை சற்று உற்றுப் பார்த்தால் தான் "விக்டோரியா டிஸ்பென்சரி,  ஸ்தாபிதம் 1932" என்று எழுதப்பட்டிருப்பதைச் சிரமப்பட்டு படிக்க முடியும்.
"விழுந்து விடுவேன்' என்று பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஓலைப்பந்தல் அலங்கரித்துக் கொண்டிருக்கிற அந்த பழைய கட்டிடத்தின் முகப்பைத் தாண்டி உள்ளே போனால், --ஜாக்கிரதை அங்குமிங்கும் பெயர்ந்திருக்கும் செங்கல்கள் உங்கள் கால் நகங்களைப் பெயர்த்துவிடப் போகிறது-- உள்ளே டாக்டர் தர்மராஜனைப் பார்க்கலாம்.
"வி" கழுத்து மல் ஜிப்பா, "நேரு மாடல்" வழுக்கை, முன் மூக்கில் தங்கப் ஃப்ரேம் மூக்குக் கண்ணாடி, பரந்த மேஜையின் முன் எட்டாம் எட்வர்ட் காலத்து நாற்காலியில் அமர்ந்து மருந்து சீட்டு எழுதிக் கொண்டிருப்பவர் தான் டாக்டர். வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருப்பார், முக்கியமாய் நோயாளிகள் தங்கள் நோயைப் பற்றிச் சொல்வதற்கு சான்ஸே கொடுக்காமல்! அவ்வப்போது டெலிபோன் மணி வேறு அடிக்கும்.
        அந்த அறையில் இருபதாவது நூற்றாண்டைச் சேர்ந்தது அந்த டெலிபோன் தான். மற்றதெல்லாம் டாக்டரின் தாத்தாவின் காலத்தைச் சேர்ந்தவை. மேஜைமேல் தொங்கும் டோம் விளக்கு, சுவரில் மாட்டப்பட்டிருக்கும் படங்கள், காலண்டர் எல்லாம் டிஸ்பென்சரியின் வயதைப் பளிச்சென்று எடுத்துக் கூறும்.

February 21, 2010

கமலாவும் ஷாப்பிங்கும்

  மனைவியுடன் ஷாப்பிங் போவதற்குச் சில பேருக்குப் பிடிக்காது. எனக்கு அப்படி அல்ல. என் அருமை மனைவி கமலா ஷாப்பிங் போகக் கிளம்பினால் நானும் கூடவே செல்வேன். ஷாப்பிங்கிற்கு மட்டுமல்ல, காய்கறி கடைக்குப் போகும் போதும்கூடச்  செல்வேன். இதனால் பல தொல்லைகளும் செலவுகளும் ஏற்பட்டாலும், சில சமயங்களில் (கவனிக்க:சில சமயங்களில்!) லாபமும் ஏற்பட்டிருக்கிறது.
    கறிகாய்க் கடைக்குச் சென்றால் கமலா விலை அதிகமாக இருக்கும் காய்கறிகளையே வாங்குவாள்.
    ''...காலிஃபிளவர் என்ன விலை?'' என்று தான் ஆரம்பிப்பாள்.
    "அதன் விலையை ஏம்மா கேக்கறீங்க?... அதெல்லாம் சேட்டுங்க வாங்கறது''  இது கடைக்காரரின் வழக்கமான மனோதத்துவ அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பதில்.
    "நாங்களும் சேட்டுதாம்பா, சொல்லு'' என்பாள் கமலா.
    "பதினெட்டு ரூபாய்'' என்று சொல்ல நினைத்தவர் "இருபது ரூபாய் கிலோ" என்பார்.
    திருமதி கமலா 'சேட்' மறுபேச்சு சொல்லாமல் வாங்கி விடுவாள். அதுவும் கறிகாய்க் கடையில் வேறு சில "ஜரிகை புடவைகள்' வந்திருந்தால் இப்படி ஜம்பத்திற்காகவே வாங்கிவிடுவாள். ஆகவே என் பொருளாதாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள நானும் அவளுடன் போக ஆரம்பித்தேன்.
    அவள் "காலிஃப்ளவர் என்ன விலை?'' என்று கேட்டதும். உடனே நான் "என்ன கமலா, தினமும் காலிஃப்ளவரும் பச்சை பட்டாணியும் தானா?'' என்று முகத்தில் அலுப்பை வரவழைத்துக் கொண்டு கேட்பேன். (நான் ஒரு சின்ன நடிகர் திலகம்!)
    "அதனாலென்ன, அவ்வளவும் ரத்தம்!'' என்பாள் சற்று உரக்க. மார்க்கெட்டுக்கு வந்திருந்த மாமிகளில் யாருக்காவது காது மந்தமாக இருந்தால்? என்ற முன் யோசனை காரணமாக.
    "ரத்தமாக இருந்தால் என்ன? நாம் என்ன மூட்டைப் பூச்சியா அல்லது சைதாப்பேட்டை கொசுவா?'' என்று மனத்திற்குள் கேட்டுக் கொண்டு, "கமலா ஒரு சேஞ்சிற்குக் கத்திரிக்காய் வாங்கு'' என்பேன். (என் பர்ஸில் வெறும் "சேஞ்ச்' இருப்பது எனக்குத் தானே தெரியும்?)
    கமலா வேண்டா வெறுப்பாகக் கத்திரிக்காய் வாங்குவாள். இந்த நாடகத்தால் எனக்குப் பணமும் மிச்சம், கமலாவின் ஜம்பத்திற்கும் லாபம்.