October 04, 2018

கமலாவும் கிச்சன் கார்டனும்- பாகம் 1


      என் அருமை மனைவி டி.வி.யில் வரும் நிகழ்ச்சிகளில் எதைப் பார்க்க மறந்தாலும், இரண்டு நிகழ்ச்சிகளைப் பார்க்கத் தவறமாட்டாள். ஒன்று; சமையல் குறிப்பு; இரண்டாவது; தோட்டக்கலை, கிருஷிதர்ஷன், வயலும் வாழ்வும் என்ற பெயர்களில் வரும் எல்லா நிகழ்ச்சிகளையும் விடமாட்டாள்.

இத்தனை வருஷங்களாக நிகழ்ச்சிகளைப் பார்த்து வருவதால், என் மனைவிக்கு 200, 300 விதமான சமையல் குறிப்புகள் அத்துப்படி. கவனியுங்கள், குறிப்புகள் அத்தனையும் அத்துப்படியே தவிர, இன்னும் ‘பிராக்டிகல்’ பாடங்கள் வகுப்புக்கு அவள் போகவில்லை! அதனால், அது  ‘பிஸிபேளா-அன்னா’வாக இருந்தாலும் சரி, மிகவும் கஷ்டமான செய்முறையில் தயாரிக்கப்படும் சோன்பப்டி போன்ற இனிப்பு வகைகளானாலும் சரி, பாதி வார்த்தைகளாலும், மீதி பாதி மோவாயையும், தலையையும் அப்படி இப்படி ஆட்டி, தயாரிப்பதை விவரித்து விடுவாள்.
     பல சமயம் அவளிடம்  “சமையற்கலை பாடங்களில் தியரியில்    நூற்றுக்கு நூறு வாங்கி விட்டாய். பிராக்டிகல்தான்…..” என்று ஆரம்பிப்பதற்குள்  “அது என்ன கம்ப சூத்திரமா என்ன?  ‘ப்பூ’ என்று ஊதித் தள்ளி விடுவேன்”  என்பாள். (அவள் ‘ப்பூ’ என்று சொல்லும் வேகத்தில், நானே   இரண்டு அடி பின்னால் தள்ளப்படுவேன்!)
     “போகட்டும்.. மணி நாலு ஆகிறது. பசிக்கிறது  ஏதாவது டிஃபன் பண்ணேன்” என்பேன்.
      ”இதோ ஒரு நிமிஷம்” என்று சொல்லிவிட்டு சமையலறைக்குள் ஓடுவாள். சரியாக அரைமணி நேரம் கழித்து, பிளேட்டில் சுடச்சுட டிபன் கொண்டு வருவாள். என்ன டிபன்? ரவா உப்புமா!
      “நேற்று கூட ரவா உப்புமாதானே?” என்று ஈன சுரத்தில் கேட்பேன்.
      ”அதுவேற உப்புமா? இரும்பு வாணலியில் பண்ணேன். அது அவ்வளவு மணமாகவும் ருசியாகவும் இல்லை. இன்னிக்கு  ‘டெஃப்ளான் கோட்டட் ’ வாணலியில் பண்ணி இருக்கேன். அமெரிக்காவிலிருந்து என் அண்ணா வாங்கி அனுப்பினான். ரொம்ப உசத்தி தவ்வா?”
     “ரொம்ப உசத்தியா? எம்பையர் ஸ்டேட் கட்டடத்தில், 80-வது மாடியில் இருக்கிற கடையில் வாங்கி இருப்பாராக்கும்….” என்பேன். அதற்கு மேல் நையாண்டி பண்ணினால், இந்த ரவா உப்புமாவும் அம்பேல் ஆகிவிடும் என்று சும்மா இருந்து விடுவேன்.
       மறுநாள் டிபன் என்ன இருக்கும் தெரியுமா? அதே ரவா உப்புமாதான்!
      “என்ன கமலா….?”  என்று என் காதுக்கே கேட்காதபடி மவுனமாகக்(!) கேட்பேன்.
      கமலா நியூட்டனின் விதிகளைக் கரைத்துக் குடித்திருப்பவள். அவைகளைச் சற்று தனக்கு வசதியாக லேசாக மாற்றிக் கொள்வாள்.
     நியூட்டனின் மூன்றாவது விதி; “Every action has an equal  and opposite reaction” என்பதை நியூட்டனின் ‘ஆன்டி’ கமலா அதைக் கொஞ்சம் மாற்றி Every action has an equal and increased opposite reaction’ என்று, லேசான திருத்தத்துடன் மாற்றிக் கொள்வாள்.
     அதனால்தான் நான் மெல்லமாக என் எதிர்ப்பைத் தெரிவிப்பேன். அது பலமடங்கு   ‘டெஸிபலில்’ ரியாக்‌ஷனா’க வரும். சரி விட்ட இடத்திற்கு வருகிறேன்.
      ‘ஆமாம், நேற்று பண்ண உப்புமாவேதான். இன்னிக்கு எந்த பிளேட்டில் கொண்டு வந்திருக்கிறேன் பாருங்கோ…. கலியாணத்தின் போது உங்களுக்கு எங்க அப்பா வாங்கிக் கொடுத்த தட்டு. வெள்ளித் தட்டு. சாப்பாட்டுக்கு ருசி சேர்க்கும் என்பது மட்டுமல்ல; கொஞ்சம் வெள்ளியும் பஸ்பமாக உள்ளே சேர்கிறதால் உடம்புக்கும் பலம்” என்பாள்.
இந்த விளக்கம் அல்லது சிற்றுரை  எத்தனை தடவை சொல்லி இருப்பாள் எனக்குத் தெரியாது. அவள் சொன்ன அடுத்த கணம், அந்த வார்த்தைகளை அப்படியே காதிலிருந்து கொட்டிவிடுவேன்!
     இதுதான் கமலாவின் வெரைட்டி! ஒரு கவிஞர் சொன்ன புத்திமதியை என் மூளையில் ‘க்விக் ஃபிக்ஸ்’’ போட்டு ஒட்டி வைத்திருக்கிறேன். அது; உன் மனைவி நல்லது செய்தால்,  ‘BE KIND’;  சள்ளு புள்ளு என்று விழுந்தால் ’BE BLIND’!  இதன் காரணமாக  கிட்டத் தட்ட முழு  Blind  என்ற ஸ்டேஜில் இருக்கும் நான், மேலும் Blind  ஆக விரும்பவில்லை. ஆகவே, ‘ஆமாம். வெள்ளித் தட்டு மட்டும் இருந்தால் போதாது. வெள்ளி ஸ்பூன் கொடு… இன்னும் தூக்கி அடிக்கும். இரண்டு மடங்கு பலம் வரும். …. வெள்ளியில் Shovel  யாரும் பண்ணலையே… சே’ என்பேன்.
     “போதும், உங்க அசட்டுத்தனம்…” என்பாள்.
      இப்படி, அவளை அடிக்கடி குறை சொன்னதாலோ என்னவோ, சமையல் குறிப்பு நிகழ்ச்சிகளை விட அதிகமாகத் தோட்டக்கலை நிகழ்ச்சிகளைப் பார்க்கத் தொடங்கினாள்.  ஹிந்தி, தெலுங்கு, ரஷ்யன், ஸ்பானிஷ் என்று எந்த மொழியாக இருந்தாலும் பார்ப்பாள்.
      ஒரு நாள் - அன்றைக்கு ஏதோ பண்டிகை தினம் என்று நினைக்கிறேன்.-அல்லது ஒரே நாளில் இரண்டு தடவை ராகுகாலம் வந்ததோ என்னவோ, சமையல் குறிப்பு நிகழ்ச்சியில் இங்கிலீஷ் வெஜிடபள்கள் பயிரிடும் முறையை ஒருத்தர் அரைகுறை ஆங்கிலத்தில் விளக்கி விவரித்தார். (அவரது ஆங்கிலம், தமிழ் மாதிரியும், தமிழ், ஆங்கிலம் மாதிரியும் இருந்ததால் பாதி புரியவில்லை!)

           நிகழ்ச்சி முடிந்ததும், அவர் ஒரு சின்ன அறிவிப்பு செய்தார். “அன்பான நேயர்களே, உங்களுக்கு அரிய பரிசு காத்திருக்கிறது. “உங்களுக்கு இங்கிலீஷ் காய்கறிகள் விதை இங்கிலாந்திலிருந்து நேரடியாக உங்கள் வீட்டிற்கு வரும். முழுதும் இலவசம். தபால் செலவு மட்டும் நூறு ரூபாய்  அனுப்பினால் போதும். கிட்டத்தட்ட 500 ரூபாய் மதிப்பு விதைகள். உடனே கீழ்க்கண்ட முகவரிக்கு எழுதுங்கள்….” என்று ஏதேதோ சொன்னார்.  அதுமட்டுமல்ல; “இது லண்டன் வீட்டுத் தோட்டம். பாருங்கள் கத்திரிக்காய்.. இது ஆக்ஸ்ஃபோர்ட் யூனிவர்சிட்டி தோட்டம். பாவக்காய் பாருங்கள். அல்ஃபோன்சா மாம்பழம் கெட்டுது. அவ்வளவு ஸ்வீட்..” என்று சுற்றுலா விளம்பரம் மாதிரி பல ஊர்களைக் காட்டினார்.
     “நம்ப வீட்டில் தோட்டம் போடப் போகிறேன் நான் …உங்களைத்தான்… நூறு ரூபாய் அனுப்புங்கோ” என்று சொன்னாள். இல்லை, இல்லை.. சொல்லவில்லை. உத்தரவிட்டாள்!
     “உடனே நானும் தசரத மகாராஜனாக ஆகிவிட்டேன். மனைவிக்கு வாக்குக் கொடுத்ததைக் காப்பாற்றினேன். நூறு ரூபாயை அனுப்பினேன். அது 100% நஷ்டம் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன் 
              *                           *
       ஒரு வாரம் கழித்து, தபாலில் ஒரு பளபள பாக்கெட் கமலாவின் பெயரில் வந்தது. அதில் முகவரி பொன்னிற எழுத்துக்களில் இருந்தது. பாக்கெட்டைப் பிரித்தாள். கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் விதைப் பொட்டலங்கள் நாலு இருந்தன. பொட்டலங்களின் மீது தக்காளி, கத்திரிக்காய், காலிஃப்ளவர், கேரட் படங்கள் அச்சிடப்பட்டிருந்தது. ஏதோ தன் வீட்டுத் தோட்டத்திலிருந்து வந்த காய்கறிகள் அவை என்று கமலா கருதினாளோ என்னவோ,  அல்லது சில வாரங்களில் இப்படிக் கண்ணைப் பறிக்கும் அழகுடன் கூடை கூடையாகத் தன் கிச்சன் கார்டனில் வரப்போகும் காய்கறிகள் இப்படி இருக்குமோ என மானசீகமாக ரசித்தாளோ என்னவோ, அவள் முகம் அத்தனை மலர்ச்சி பெற்றது.
     “பொட்டலத்தை இப்படிக் கொடு, நான் பார்க்கிறேன்.” என்று கையை நீட்டினேன்.
     “தரேன்.. கொஞ்சம்  தளுக்காக வாங்கிக் கொள்ளுங்கள். உள்ளே விதைகள். உங்கள் இரும்புக் கையைப் போட்டு அதைப் பஸ்பமாக கசக்கி விடப் போகிறீர்கள். ஒவ்வொரு விதையிலிருந்தும் 10 கிலோ தக்காளி வரும்” என்றாள். (விதை விற்பனை செய்த கம்பெனி ஒவ்வொரு விதையும் 5 கிலோ தக்காளியை உற்பத்தி செய்யும்” என்றுதான் போட்டிருந்தான். ’கமலாவின் கைராசி; எல்லாம் இரண்டு மடங்கு உற்பத்தி செய்தாலும் செய்யும்’ என்று எனக்கு நானே விளக்கம் கொடுத்துக் கொண்டேன்.!)
     விதைப் பொட்டலங்களுடன், விவரமாக அச்சிடப்பட்ட சாகுபடி முறைக் கையேட்டையும் அனுப்பியிருந்தார்கள். பளபளவென்ற நேர்த்தியான காகிதம். அதை எடுத்து லேசாகப் புரட்டினாள்.  பக்கங்கள் புரளப் புரள கமலாவின் முகத்தில் மலர்ச்சியும் அதிகரித்துக் கொண்டே போயிற்று. (அவளுடைய கல்யாண அழைப்பிதழைப் பார்த்தபோது கூட இப்படி ஜொலிப்பு அவள் முகத்தில் வந்திருக்குமா என்பது சந்தேகம்!)
     எந்த செடிக்கு எந்த உரம் போட வேண்டும், போட வேண்டிய அளவு, அட்டவணை போன்ற விவரங்கள் கொடுத்து இருந்தார்கள். சொட்டு நீர் பாய்ச்சுவதற்கு தேவையான குழாய்கள் முதலியவற்றையும் அவர்கள் விற்பனை செய்வதாகவும், “நீங்கள்  எங்களது மிக முக்கியமான வாடிக்கையாளர் என்பதால் உங்களுக்குப் பத்து சதவீதம் தள்ளுபடி தருகிறோம்” என்று அச்சடித்த கூப்பனையும் அனுப்பி  இருந்தார்கள்.
     “கமலா, நீ ஸ்பெஷல் கஸ்டமர்.. உன் பெயருக்கு தனி ராசி இருக்கு” என்று ‘ஐஸ்’ வைத்தேன். இத்தனை வருஷங்கள் நான் வைத்த ஐஸ் அளவைக் கணக்கிட்டுப் பார்த்தால், கமலாவை ஒரு ’ஐஸ்பெர்க்’ என்று சொல்வீர்கள்.
     மளமளவென்று, தேவையான உரம், பூச்சி மருந்து, கோழிவலை, பயிர் டானிக் என்று பெரிய லிஸ்ட்டைப் போட்டு விட்டாள். ஐயாயிரம் ரூபாய்க்கு செக் கொடுத்தேன்.
     “இருங்க… போய் காபி போட்டுக் கொண்டு வருகிறேன்” என்று சொல்லிக் கொண்டே சமையலறைக்குச் சென்றாள். அட, திடீர் கரிசனம்!!!.
     அவள் சென்றதும், அந்த முக்கியமான வாடிக்கையாளர் கூப்பனை எடுத்து, இப்படியும் அப்படியும் திருப்பிப் பார்த்தேன். அப்போது மூலையில் சிறிய எழுத்தில் அச்சடிக்கப்பட்டிருந்த சிறிய குறிப்பு கண்ணில் பட்டது. “ஸ்பெஷல் கஸ்டமர் கூப்பன் 20,000 காபிகள்” என்று இருந்தது! (”இந்த கம்பெனிக்கு சாதாரண வாடிக்கையாளர் ஒருத்தர் கூட இருக்கமாட்டார்கள் என்பது நிச்சயம்… இதைக் கமலாவிடம் சொல்லக் கூடாது” என்று எனக்கு நானே புத்திமதியாகச் சொல்லிக் கொண்டேன்!)
(தொடரும்)
( பாகம்-2  இன்னும் நலைந்து நாட்களில் வரும்.)

September 21, 2018

துணுக்கு மகாநாடு

நான் ஒரு.......
நான் ஒரு துணுக்குப் பிரியன். அறுபதுகளில் ‘குமுதம்’ இதழில் எராளமான துணுக்குகளை ’ரீடர்ஸ் டைஜஸ்ட்’ பத்திரிகையைப் போல் போட்டுக் கொண்டிருந்தார்கள். சின்னச் சின்னத் துணுக்குகள், சுவையான துணுக்குகள் அவ்வளவுதான், இவற்றிற்கு நல்ல வரவேற்பு இருந்தது. வேறு சில பத்திரிகைகளும் இது போல் துணுக்குகளைப் போட ஆரம்பித்தன.

   அந்த கால கட்டத்தில் குமுதத்தில் நான் எழுதிய துணுக்குத் தகவல்கள் ஏராளம்.  பிறகு தினமணி கதிரிலும் நிறைய துணுக்குகளைத் தெளித்தேன். ‘கடுகு டயரி’ என்ற தலைப்பில், வாரா வாரம் கூடியவரை தேதிக்குப் பொருத்தமான துணுக்குகளை ஒரு வருஷம் எழுதினேன்.
 ‘துணுக்கு எழுத்தாளர் மகாநாடு’ என்று பாதி உண்மை, பாதி நகைச்சுவை கலந்த நீண்ட கட்டுரையையும் எழுதினேன்.
 பிறகு சில காலத்திற்குள் துணுக்குகள் மௌஸ் இழந்தன. ஆனால் துணுக்குகளை நோட்டுப் புத்தகங்களில் எழுதி வைப்பதை நான் விடவில்லை. இன்றும் அது தொடர்கிறது. என் நோட்டுப் புத்தகங்களிலிருந்து சில துணுக்குகளை இந்த வலைப்பூவில் அவ்வப்போது தர எண்ணியுள்ளேன்.  மெரினாவில் பாப்கார்ன் சாப்பிட்டு ரசிப்பதைப் போல் இவற்றை ரசியுங்கள். 

1.மில்டன்
 இந்த புகழ் பெற்ற எழுத்தாளருக்கு ஒரு அசாதாரணத் திறமை இருந்தது. அவர் இரண்டு கைகளாலும் எழுதும் திறமை கொண்டவர். இதற்குப், பழக்கமும் வேண்டும்.  “நான் வலது கையால் கவிதைகளை எழுதுவேன்., கட்டுரைகளை இடது கையால் எழுதுவேன்’” என்று சொல்லியிருக்கிறார்.
ஆழ்வார்களில் ஒருவராகப் போற்றி மதிக்கக்கூடிய தகுதி படைத்தவர் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார்.
அவர் வலது கையாலும்,இடது கையாலும் எழுதும் திறமை படைத்தவர். அது மட்டுமல்ல, ஒரே சமயத்தில் இரண்டு கையாலும் எழுதும் திறமை படைத்தவராம்!

2. ஹிட்லர்
அமெரிக்க TIME பத்திரிகையில் ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் “MAN OF THE YEAR’ என்று ஒருவரைத் தேர்ந்தெடுத்து அட்டைப் படமாகப் போடுவார்கள். 1939-ம் வருஷம் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் யார் தெரியுமா? ஹிட்லர்!

3. ஐயோ, கேள்விக்குறியா? வேண்டாம்   
 நம் தமிழ் சினிமாத் துறையில் ஒரு மூடப்பழக்கம் அல்லது மூட நம்பிக்கை ஒன்று இருந்தது. படத்தின் தலைப்பில் எட்டு எழுத்துகள் வந்தால், படம் வெற்றிகரமாக ஓடாது என்ற (மூட) நம்பிக்கை காரணமாக எட்டு எழுத்துத்தலைப்பை வைக்கவே மாட்டார்கள்.
ஹாலிவுட்டிலும் இது போன்ற ஒரு மூட நம்பிக்கை உண்டு. படத்தின் பெயரில் கேள்விக்குறி இருக்கக் கூடாது. அதானால் கேள்விக்குறி போட வேண்டிய தலைப்பாக இருந்தால் கூட, அதைப் போடமாட்டார்களாம். WHO WANTS TO BE A MILLIONARE என்ற படத் தலைப்பில், அதனால் தானோ என்னவோ கேள்விக்குறியைப் போடவில்லை!

4. வெள்ளை மாளிகையில் திருமணம்
வெள்ளை மாளிகையில் திருமணம் செய்து கொண்டிருக்கிறார் ஒரு அமெரிக்க அதிபர்: இருபத்திரண்டாம் அதிபரான கிளிவ்லேண்டின் (CLEVELAND 1837-1897) திருமணம் 1886’ம் வருஷம் நடந்தது. (கல்யாண மண்டபச் செலவு மிச்சம்!)

5. 'அனானிமஸ்’ எழுதிய நாவல்
’அனானிமஸ்’ என்ற புனைப்பெயரில் FIRST IMPRESSION  என்ற தலைப்பில் 3-பாக நாவல் 1813-ம் ஆண்டு வெளியாயிற்று. அதன் அடுத்த பதிப்பைத் தன் சொந்தப் பெயரில் புதிய பெயரில் வெளியிட்டு பெரும் புகழ் பெற்றார். அவர்: ஜேன் ஆஸ்டென்; புத்தகம்: PRIDE AND PREJUDICE!

6. BENHUR  திரைப்படத்தில்
1959’ ம் ஆண்டு வெளியான BEN HUR  திரைப்படம் 11 அகடமி விருதுகளைப் பெற்ற பிரம்மாண்ட படம். அதில் ஒரு காட்சிக்கு மட்டும் 15,000 துணை நடிகர்கள் தேவைப்பட்டார்களாம்.

7. நெப்போலியன் திரைப்படங்கள்
சரித்திரத்தில் புகழ் பெற்றவர்களைப் பற்றிய திரைப்படங்கள் நிறைய தயாரிக்கப்பட்டுள்ளன. ஆபிரகாம் லிங்கனைப் பற்றிதான் அதிக படங்கள் வந்துள்ளன என்று சொல்வார்கள். சமீபத்தில் 2017-ல் கூட ஒரு திரைப்படம் வெளியாயிற்று. ஆனால் லின்கனைச் சாப்பிட்டு விட்டவர்: நெப்போலியன்! அவரைப் பற்றி வந்துள்ள திரைப்படங்கள் (2010 வருஷக் கணக்குப்படி): 194!

8.JEOPARDY வினாடி வினா கேள்விகள்;
அமெரிக்காவில் மிக மிகப் பிரபலமான வினாடி வினா போட்டி. JEOPARDY. வெவ்வேறு துறைகளில், முதல் சுற்றில் 30 கேள்விகளும், இரண்டாவது சுற்றில் 30 கேள்விகளும் கேட்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட 3 பேர் தான் 
போட்டியில் இருப்பார்கள். ஒவ்வொரு கேள்விக்கும் பரிசுத் தொகை 200, 500, 1000, 2000 டாலர் என்று இருக்கும். இதில் பலர் ஐம்பதாயிரம் டாலர், லட்சம் டாலர் என்று பரிசுத் தொகையை அள்ளியிருக்கிறார்கள். சமீபத்திய கணக்குப்படி, நிகழ்ச்சியின் போது க்விஸ் மாஸ்டர் ALEX TREBEC தெரிவித்த தகவல்: இதுவரை கடந்த 35 ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்விகளின் எண்ணிக்கை: 75,000!

9. அபாரமான ANAGRAM
ஆங்கில வார்த்தை விளையாட்டுகளில் மிகவும் புகழ் பெற்றது; ANAGRAM.
 (ஒரு ஆங்கில வார்த்தையை எடுத்துக் கொண்டு அதில் உள்ள
எழுத்துக்களை மாற்றிப் போட்டு, வேறு ஒரு வார்த்தையை உருவாக்குவதை ANAGRAM என்பார்கள்.  உதாரணமாக; NEPAL என்பதை PLANE, என்று மாற்றலாம். (அதுமட்டுமல்ல PANEL, PENAL என்றும் மாற்றலாம்.  FLORENCE NIGHTINGALE என்பதன் அனக்ராம் FLIT ON CHEERING ANGEL. என்பதுதான் மிகவும் பிரபலமானது.) 

10. ஹிட்லரின் ரயில்
ஜெர்மனியின் சர்வாதிகாரியாக இருந்த ஹிட்லர் தனக்கென்று ஒரு ரயில் வைத்திருந்தாரம். அதற்கு 1940’ம் ஆண்டு அவர் வைத்த பெயர்; AMERIKA.

11.போப்பாண்டவரின் நகைச்சுவை 
போப்பாண்டவர் ஜான் பால் XXIII மிகவும் கலகலப்பானவர். அவருடைய நகைச்சுவை துணுக்குகள் ஒரு புத்தகமாகவே வெளிவந்துள்ளன.
ஒரு சமயம் போப்பாண்டவருக்கென்று விசேஷ அங்கி தயாரிக்க, ஒரு டிசைனை அவரிடம் காண்பித்தார்கள். அந்த உடையில் சிங்கத்தின் படம் போடப்பட்டிருந்தது. டிசைனைப் பார்த்த போப்பாண்டவர் சொன்னது; தயவு செய்து அந்த சிங்கம் ‘உர்’ரென்று பார்ப்பது போல் இருக்க வேண்டாம்!”

12. அம்மாதான் உலகம்
ஒரு பெண்மணி தன் பக்கத்து வீட்டுக்குப் போய், கதவைத் தட்டினார். ஒ0ரு ஆறு வயது பையன் கதவைத் திறந்தான். ”அம்மா இருக்காங்களா?” என்று அந்த பெண்மணி கேட்டாள். அந்தப் பையன் அம்மாவா இல்லையே அம்மாவுக்கு உடம்பு சரியாக இல்லை. ஆஸ்பத்திரிக்கு போயிருக்காங்க.. அப்பா டொனால்ட், அண்ணன் மைக்கேல், நான் மட்டும்தான் வீட்டில் தன்னந் தனியாக இருக்கிறோம்” என்றான்.

13. ’வெதர்’ சரிப்பட்டு வரலை!
டி.வி. நிகழ்ச்சியின் வானிலை அறிக்கையை ஒருவர் தொடர்ந்து பல வாரங்கள் செய்து வந்தார். துரதிர்ஷ்டம், அவர் ‘நாளைய வானிலை’ என்று அவர் அறிவித்தபடி எதுவும்  நடக்கவில்லை. பல பத்திரிகைகளும் நேயர்களும் அவரைப் கேலி ட்வீட்கள் மூலம் கலாய்த்தன.
   அவர்,  ‘நமக்கு இந்த வேலை வேண்டாம்’ என்று உதறிவிட்டு, வேறு ஒரு டி,வி கம்பெனிக்கு மனு செய்தார். நேர்முகப்பேட்டியிற்கு அவரைக் கூப்பிட்டார்கள். இவர் சென்றார். பேட்டியில் அவரிடம் சில கேள்விகள் கேட்டார்கள். அதில் ஒன்று: “ஆமாம் இதற்கு முன்பு இருந்த டி.வி. வேலையை ஏன் விட்டு விட்டீர்கள்?”
   “அதுவா? அங்கே வெதர் (weather) எனக்குச் சரிப்பட்டு வரலை” என்றார்.”(THE WEATHER DID NOT SUIT ME!")
 இது எப்படி இருக்கு?

14. கனம், மோகனம்
 ஒரு சமயம் அரியக்குடியின் கச்சேரி நிகழ்ச்சியில், சபா தலைவர் அவரைப் பாராட்டிப் பேசினார். முக்கியமாக அன்று அவர் அவர் பாடிய மோகன ராகத்தை  ‘ஆஹா, ஓஹோ’ என்று பாராட்டினார்.

அவர் பேசியதும் அரியக்குடி சின்ன  ‘கமெண்ட்’ கொடுத்தார். “சபா தலைவர் இவ்வளவு பாராட்டியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் என்ன சாதித்து விட்டேன் என்று தெரியவில்லை. என்னமோ கனராகம் பாடினேன், அவ்வளவுதான்” என்றார். 
‘என்ன மோகனராகம்” என்பதைச் சிலேடையாக,  'என்னமோ கன ராகம்’  என்று பிரித்துச் சொன்னதை ரசிகர்கள் கைதட்டி ரசித்தார்கள். 
15. ஓய்வை நாடாத வாழ்க்கை.
   ஒரு அற்புதமான பொன்மொழி:  “எப்படிப்பட்ட வாழ்க்கையிலிருந்து நான்   ஓய்வு பெற விரும்ப மாட்டேனோ, அப்படிப்பட்ட வாழ்க்கையை உருவாக்கிக் கொள்வதே என் இலக்கு,”  -- Kurt Vonnegut 
( My goal is to create a life I don't want to retire from!)

16. ஒரு சிலை - 350 துண்டுகள் (அல்லது) 350 துண்டுகள்- ஒரு சிலை)
   ஆம், 350 துண்டுகளால் உருவானதுதான் அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவியின் சிலை. பிரான்ஸ் நாட்டு சிற்பி உருவாக்கிய சிலையின் 350 பகுதிகளை 214 பெட்டிகளில் வைத்து கப்பலில் கொண்டு வந்தார்களாம். இச்சிலையின் ஆள்காட்டி விரலின் நீளம்; எட்டு அடி!


17. மலைக்க வைக்கும் மார்சல் பிரவுஸ்ட்
   பிரெஞ்சு எழுத்தாளர் மார்சல் பிரவுஸ்ட் (1871-1922)  IN SEARCH OF LOST TIME என்ற பிரம்மாண்டமான நாவலை எழுதியுள்ளார். கிட்டதட்ட அவரது சுயசரிதைதானாம் அது. ஏழு வால்யூம்கள், கிட்டத்தட்ட 2000 கதாபாத்திரங்கள் கொண்ட புத்தகம். எத்தனை பக்கங்கள்? 4221 பக்கங்கள்!
ஒவ்வொரு பகுதியாக புத்தகம் வெளியாயிற்று -14 வருடங்களில்!

18. ஹிட்ச்காக்கின் கருத்து.
  பிரபல டைரக்டர் ஹிட்ச்காக் சற்று துடுக்காகவும் ‘சுருக்’கென்றும் பேசக் கூடியவர் என்பார்கள். அவருடைய ‘சுருக்’கு மொழியில் பிரபலமானது: திரைப்பட நடிகர்களைப் பற்றி அவர் சொன்ன கருத்து: “திரைப்பட நடிகர்கள் எல்லாம் கால்நடைகள் என்று நான் ஒரு போதும் சொல்லவில்லை;  “திரைப்பட நடிகர்களைக் கால்நடைகள் போல் நடத்த வேண்டும்” என்றுதான் நான்  சொன்னேன்! 

19. மாமனார் நேருவும் மாப்பிள்ளை ஃபெரோஸ் காந்தியும்.
  நேரு பிரதமராக இருந்த போது,  இந்திரா காந்தியின் கணவர் ஃபெரோஸ் காந்தி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
  அப்போது ஒரு நாள் பாராளுமன்றத்தில் பிரதமர் நேருவை அவர் ஒரு கேள்வி கேட்டார்.
   கேள்வியைப் பற்றிய சற்றுப் பின்னணி தகவல்களை முதலில் தெரிவிப்பது அவசியம்.
   அந்த கால கட்டத்தில், சேத் ராமகிருஷ்ண டால்மியா என்ற ஒரு தொழிலதிபர்  ஏதோ தவறு செய்த காரணத்தால், கைது செய்யப்பட்டார். அவருக்குக் கோர்ட் ஜாமீன் வழங்கியது. அவருக்காக ஜாமீன் கையெழுத்து போட்டவர் யார் என்று தெரிந்து கொள்ள,விரும்பிய ஃபெரோஸ்       காந்தி  பாராளுமன்றத்தில் ஒரு கேள்விகேட்டார்:
  “ சேத் ராமகிருஷ்ண டால்மியாவிற்கும், அவருக்கு ஜாமீன் கையெழுத்து போட்டவருக்கும் என்ன உறவு?” என்று கேட்டார்.
 அந்த கேள்விக்கு   நேரு  அளித்த (சாதுரியமான) பதில்; “இந்த கேள்வி கேட்டவருக்கும், அதற்குப் பதில் சொல்பவருக்கும் உள்ள அதே உறவு தான்!”                       இது எப்படி இருக்கு?

September 11, 2018

கோர்ட்டுக்கு வந்த பூனை

நம்  ஊரில் பலர் ‘கிளி ஜோசியம்‘ சொல்லுகிறார்கள்.  ‘கரடி வித்தை’க் காட்டுகிறார்கள். குரங்கு வித்தையைக் காட்டுகிறார்கள். நாய்களும் வித்தை செய்கின்றன. சிட்டுக் குருவியும் ஜோசியம் சொல்லுகின்றன. எல்லாவற்றிற்கும் நாம் பணம் கொடுக்கிறோம். அதாவது இந்த மிருகங்கள், பறவைகள் தொழில் செய்து பணம் சம்பாதிக்கின்றன. தொழில் வரியோ, வருமான வரியோ, அவை செலுத்துவதில்லை; தொழில் ‘செய்ய’ லைசென்ஸ் எடுப்பதுமில்லை.
      “எதற்கு இத்தனை நீள முன்னுரை?’ என்று நீங்கள் கேட்பதற்கு முன்பு விஷயத்திற்கு வந்து விடுகிறேன்.
     அமெரிக்காவில் பல வருஷங்களுக்கு முன்பு ஒரு விசித்திர வழக்கு நடந்தது.
     ‘பேசும் பூனை’க்கு நகராட்சியின் தொழில் லைசென்ஸ் வாங்க வேண்டும்’ என்று நோட்டீஸ் தரப்பட்டது…
      ஆமாம், இது.உண்மை. 
அதிருக்கட்டும், அதென்ன பேசும் பூனை என்பதைச் சொல்லிவிடுகிறேன்.
     அமெரிக்காவில் ஜார்ஜியா என்ற மாநிலத்தில், அகஸ்டா என்ற நகரத்தில் MILEY என்பவர் ஒரு பூனை கறுப்பு பூனை பூனையை வைத்து, ஊரின் பல இடங்களில் வித்தை காட்டி பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தார். என்ன வித்தை தெரியுமா? அவர் வைத்திருந்த பூனை பேசும். ”ஹலோ”, “I Love you”,   “I want my Mama’  என்று பேசும்.
     அந்த பூனையின் பெயர் BLACKIE.  பணம் கொடுத்தவுடன்  ‘ஐ லவ் யூ’ சொல்லுமாம். MILEY-க்கும்  அவரது மனைவிக்கும் இந்தப் பூனை மூலம்  கிடைக்கும் பணம்தான் வருவாய்.
     “ஒரு பூனையை வைத்துக் கொண்டு MILEY கோடீஸ்வரனாக(!) ஆவதைப் பார்த்த வயிற்றெரிச்சல்காரன் ஒருத்தன், நகராட்சியில் உள்ள குறிப்பிட்ட இலாகாவில் வத்தி வைத்து விட்டான்.

September 01, 2018

தற்செயல் நிகழ்வுகள்


    நம் வாழ்க்கையில் பல சமயங்களில் பல தற்செயல் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. ஏதாவது ஒரு நாள் ஒருவரைப் பற்றி நினைவுக்கு வரும். “ஆம்….கடைசியாக திருப்பதி தரிசன கியூவில் பார்த்தோம்… அதற்கு அப்புறம் அவரைப் பார்க்கவில்லை. எங்கிருக்கிறார் என்றும் தெரியவில்லை” என்று தோன்றும். அத்துடன் அவரை மறந்து விடுவோம். 
ஆனால் மறு நாள் ஒரு  தற்செயல் நிகழ்வு ஏற்படும். தபாலில் ஒரு கடிதம் வரும். யாரிடமிருந்து? அந்த நபரிடமிருந்து! “நலமாக இருக்கிறீர்களா? பார்த்து ஏழு வருஷம் ஆயிற்று… என் பிள்ளைக்கு உங்கள் ஊருக்கு மாற்றலாகிவிட்டது…” என்று கடிதம் வரும். இதைக் COINCIDENCE  என்று, அதாவது, தற்செயலாக ஏற்பட்ட நிகழ்வு என்று சொல்லலாம்.
     இப்படி பல நிகழ்வுகள் எல்லாருடைய வாழ்விலும் நடந்திருக்கும். (என் வாழ்வில் நடந்த ஒரு சிலவற்றை என் வலைப்பூவில் பதிவாகக் போட்டுள்ளேன்.)

சுமார் 40 வருஷங்களுக்கு முன்பு ஒரு ஆங்கில வார இதழில் ஏழெட்டுப் பக்கங்களுக்கு  நீண்ட கட்டுரை- ஒரு புத்தகத்தின் சில பக்கங்கள்-  வந்திருந்தது. எல்லாம் COINCIDENCES பற்றி தான். அந்த கட்டுரையை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். பல சமயம் தேடிப் பார்த்து ஏமாற்றமடைந்திருக்கிறேன். சில நாட்களுக்கு முன்பு, எதிர்ப்பார்க்காத ஒரு நோட்டுப் புத்தகத்தில் ‘அப்பளமாக’ அது கிடைத்தது. ஆமாம், அது 1974’ம் வருஷம் SUNDAY  என்ற ஆங்கில வார இதழில் வந்திருந்த கட்டுரை. நியூஸ் பிரிண்ட் காகிதம் மிகவும் பழுப்படைந்து போயிருந்தது. கட்டுரை கிடைத்தது லாட்டிரியில் பரிசு விழுந்த மாதிரி எனக்குத் தோன்றியது.
     போகட்டும், அந்த கட்டுரையின் தலைப்பு’ ‘WORLD OF COINCIDENCES’. எழுதியவர்: Arthur Koestle  
முதலில் Arthur    Koestler  பற்றி சிறு குறிப்பு தருகிறேன். இவர் 1905-ல் பிறந்தார். இவர் 1983-ல் காலமானார். இங்கிலாந்தில் வாழ்ந்தவர். நாவல்கள், மனோதத்துவப் புத்தகங்கள், கதைகள் அல்லாத பொதுவான பல விஷயங்களையும், புத்தகங்களையும் எழுதியுள்ளவர். (நாவல்கள் 7, நாவல் அல்லாதவை 30, நாடகம்-1, சுயசரித்திரம் 6 (ஆமாம் ஆறு!) தனிப் புத்தகங்கள் எழுதியுள்ளார்.  பல்வேறு தொகுப்பு நூல்களுக்கும் கட்டுரைகள் எழுதித் தந்திருக்கிறார். இவரது வாழ்க்கை வரலாறு நூல்களை ஒன்பது எழுத்தாளர்கள் தனித்தனி புத்தகங்களாக எழுதியுள்ளனர் என்பது பெருமைக்குரிய விஷயம்.
     இவரது புத்தகத்தில் உள்ள பல விஷயங்களைப் படிக்கும்போது இவையெல்லலாம் உண்மையாக இருக்குமா என்று உங்களுக்கு சந்தேகம் ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான இவரைப் பற்றிய இத்தனை விவரங்களைத் தந்துள்ளேன்.
     இவரது வாழ்க்கையிலும் ஒரு COINCIDENCE நடந்துள்ளது. அது உங்களை மெய்சிலிர்க்கச் செய்யும். அதைக் கடைசியில் கொடுப்பதுதான் சரியாக இருக்கும்.

August 19, 2018

எங்கள் வீட்டு எறும்பே!


              ஒரு சின்ன முன்னுரை: சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்று, சுமார் இரண்டரை வருஷங்கள் இருந்துவிட்டு சென்னை திரும்பினேன். விமானத்தில் சில சாக்லேட்டுகளைக் கொடுத்தார்கள். அதை அப்படியே  எடுத்து வந்தேன்.
     சென்னை வந்து, வீட்டைத் திறந்தோம். இரண்டரை வருடங்களாக பூட்டிக் கிடந்த வீடு. ஜன்னல் கதவுகளெல்லாம் நன்றாகத் திறந்து, மின்விசிறிகளை ஓடவிட்டோம். மாடி அறையில் ஒரு அலமாரியைத் திறந்து அதில் எங்கள் கைப்பை முதலியவற்றை வைத்தோம்.  பெட்டிகளைத் திறப்பதில் அரைமணி நேரம் சென்றது. பிறகு உறங்குவதற்குச் சென்றோம். அப்போது அந்த குறிப்பிட்ட அலமாரியிலிருந்து எதோ ஒரு பொருளை எடுக்க அதைத் திறந்தவுடன் -- நம்பமாட்டீர்கள், -- நாங்கள் வைத்த சாக்லெட்டின் மீது எறும்புகள்  ‘நட்பும் சுற்றமும் சூழ’ விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தன!
     இரண்டரை வருடம் ‘பாலைவனமாக’ இருந்த வீட்டின் மாடியில், திடீரென்று சாக்லெட்டுகள் வைக்கப்பட்டதை எறும்புகளுக்கு யார் தகவல் கொடுத்திருப்பார்கள்? அலமாரிக்கு வரும் வழியை எந்த Google map-ல் அவை பார்த்திருக்கும்? அதுவும் இரவு 11 மணிக்கு, முதல் மாடி அலமாரிக்குள் இருப்பதை அவைகளுக்கு யார்  whatsup ல் தகவல் கொடுத்திருப்பார்கள்? வியப்புக்குரிய விஷயம்.
     கிட்டத்தட்ட இதேமாதிரி அனுபவம் இஸ்ரேல் எழுத்தாளர் Ephraim Kishon-க்கு ஏற்பட்டிருக்க வேண்டும்  ஒரு அனுபவக் கட்டுரையை எழுதியுள்ளார்.  அதற்கு ‘வேஷ்டி, ஜிப்பா’ போட்டுத் தமிழ்க் கதையாக்கித் தருகிறேன்.

எங்கள் வீட்டு எறும்பே!
     தரை தளத்தில் வீடு இருப்பது ஒரு விதத்தில் சௌகரியம்தான்  படிக்கட்டு ஏறவேண்டிய தொல்லை இல்லை. நமக்கு மட்டுமல்ல, எறும்புகளுக்கும் படியேறி நம் வீட்டிற்குள் நுழைய வேண்டிய கஷ்டம் இல்லை. ராஜ கம்பீரமாக, ரத,கஜ துரக பதாதிகளுடன் வரலாம். 
ஒவ்வொரு நாள் காலையிலும், கறுப்பு சாக்கால் கோடு போட்டது போல் ஒரு எறும்பு வரிசை என் வீட்டிற்குள் நுழையும். தினமும் அவைகளைப் பார்த்துப் பார்த்துப் பழகி விட்டதால் பல எறும்புகளை பத்தடி தூரத்திலிருந்து பார்த்தாலே பரிச்சயமான எறும்புகள்தான் என்பதைத் தெரிந்துக் கொண்டு விடுவேன். மற்ற மாதங்களை விட கோடைக் காலத்தில் எறும்புகள் அதிகம் வரும். (ஊரிலிருந்து ’சம்மர்-வெக்கேஷனி’ல் உறவினர்கள் வந்திருக்கக் கூடும் என்று எண்ணிக் கொள்வேன்!)