December 21, 2019

மெய் சிலிர்த்திடும் என்பது மெய்!

இந்த பதிவிற்கு இரண்டு முன்னோட்டங்கள் தேவைப்படுகின்ன.
பதிவில் மூன்று பேர் இடம் பெறுகிறார்கள். முதலில் இரண்டு பேரை பற்றி சுருக்கமான குறிப்பைத் தருகிறேன்


1. ஹாரி எமர்சன் ஃபாஸ்டிக் (1878-1969) [ HARRY EMERSON FOSDICK ] என்ற
பாதிரியார். இவர் சாதாரண பாதிரியார் அல்ல; அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தேவாலயத்தை நிறுவியவர். சுமார் 50 புத்தகங்களை எழுதியவர்.
இவரது தந்தை, அமெரிக்காவின் மிகப் பெரிய செல்வந்தரான ராக்பெல்லர் நிறுனத்தில் பணியாற்றியவர்- அதுவும் நன்கொடை அளிக்கும் இலாகாவில்!
ஃபாஸ்டிக் எழுதியுள்ளஎழுதியுள்ள புத்தகங்களில் ஒன்று: ON BEING FIT TO LIVE WITH. அதில் கிடைத்த ஒரு தகவல் மெய் சிலிர்க்கச் செய்தது. அந்தத் தகவலைப் பதிவாக அளிக்கிறேன்.

2. நியூட்டன் பேக்கர் (1871-1937) [NEWTON BAKER] : இவர் ஒரு பிரபல வழக்கறிஞர், அரசியல்வாதி, சிறந்த பேச்சாளர். அன்றைய கால கட்டத்தில் அமெரிக்க அதிபராக இருந்த வுட்ரோ வில்சன் [Woodrow Wilson] இவரை தனது யுத்த இலாகா செயலராக (1916 -1921) நியமித்திருந்தார். மேலும், இவர் பிரபல ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் ஒரு அறங்காவலாரகவும் இருந்தார். இவர் பின்னால் அமெரிக்க அதிபர் பதவி தேர்தலில் நின்றவர்.

( இவர்களின் படங்களை மேலே MAST HEAD-ல் பாருங்கள். இருவரும்
TIME பத்திரிகையின் அட்டையில் இடம் பெற்ற பிரமுகர்கள்.)

நியூட்டன் பேகர், தன்னிடம் கூறிய ஒரு தகவலைப் பாதிரியார் ஃபாஸ்டி க் தன்னுடைய புத்தகத்தில் எழுதியுள்ளார். அந்தத் தகவலைப் பார்க்கலாம்
* *
யுத்த இலாகா செயலர் என்ற முறையில், நியூட்டன் பேகர் பல ராணுவ மருத்துவமனைகளுக்குச் சென்று, போரில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களைச் சந்தித்து நலம் விசாரிப்பது மற்றும் ஆறுதல் கூறுவது வழக்கம். அப்படி ஒரு சமயம் மருத்துவமனைக்குச் சென்ற சமயம் அங்கு சிகிச்சை பெற்றுவரும் ஒரு ராணுவ வீரரைப் பார்த்த போது, அவருடைய ரத்தமே உறைந்து போய்விட்டது! (மனதைத் திடப்படுத்திக் கொண்டு படியுங்கள்.)
அந்த ராணுவ வீரர் ஒரு இளைஞன். அந்த வீரனை மருத்துவமனையை ஒட்டி இருந்த புல்தரைக்கு சக்கர நாற்காலியில் ரு நர்ஸ் கொண்டு வருவதைப் பார்த்தார்; அப்படியே இரத்தம் உறைந்தது போல் உணர்ந்தார். காரணம் அந்த இளைஞனுக்கு இரண்டு கால்களும் இல்லை; ஒரு கையையும் இழந்திருந்தான்; இரண்டு கண்களும் பறி போயிருந்தன. போதாக்குறைக்கு போரில் ஏற்பட்ட காயங்களால் அவன் முகம் கன்னாபின்னாவென்று குரூரமாகக் காட்சியளித்தது.
அந்த ராணுவ வீரன் மிகவும் சகஜமாகப் பேசிக் கொண்டிருப்பதையும் கவனித்தார். வாழ்க்கையே அதலபாதாளத்திற்கு சென்று விட்ட நிலையில் இப்படி ஒரு ஆள் இருக்கமுடியுமா என்று வியந்தார்.
அந்த மருத்துவமனையைச் சுற்றிவிட்டுத் திரும்பி விட்டார்.

சில மாதங்களுக்கு பிறகு பேகர் மறுடியும் அதே மருத்துவமனைக்கு விஜயம் செய்தபோது அந்த குறிப்பிட்ட ராணுவ வீரனைப் பற்றி விசாரித்தார். “அந்த இளைஞன் எப்படி இருக்கிறான்? பிழைத்து விட்டானா?’ என்று கேட்டார்
அதற்கு மருத்துவமனை அதிகாரி “ என்னது? பிழைத்து விட்டானா என்றா கேட்டீர்கள், மிஸ்டர் பேக்கர்? அவன் பிழைத்து விட்டான்; ஜாம் ஜாம் என்று இருக்கிறான். அவனைக் கவனித்து வந்த நர்ஸையே அவன் கல்யாணம் பண்ணிக்கொண்டு விட்டான்!” என்றார்.
அந்த நர்ஸின் அன்பு உள்ளத்தையும், பாச உணர்வையும் எண்ணி வியந்தார் பேகர்.

சில வருடங்கள் கழித்து பேக்கருக்கு, ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தில் இருந்து ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தின் சாராம்சம் இதுதான்:
“நமது பல்கலைக்கழகத்தில் ஒரு வித்தியாசமான நிகழ்ச்சியை நடத்த நாங்கள் தீர்மானித்து இருக்கிறோம். இதுவரை செய்திராத ஒரு காரியத்தைச் செய்யப் போகிறோம்.
நம் பல்கலைக்கழகத்தில் வருடத்தின் மத்தியில் ஒரு சிறப்பு பட்டமளிப்பு விழாவை நடத்த இருக்கிறோம். அதுவும் ஒரே ஒருவருக்காக மட்டும் பட்டமளிக்க இந்த விழாவை ஏற்பாடு செய்திருக்கிறோம்.
பட்டம் பெறப்போகிறவர் மிகவும் கடுமையாக ஊனமுற்ற ஒரு ராணுவ வீரர். அபாரமான, இதுவரை யாரும் செய்திராத அளவு சிறப்பான ஆராய்ச்சிகளைச் செய்து, டாக்டர் ஆஃப் ஃபிலாசஃபி என்ற பட்டத்தைப் பெறப் போகிறவர்.”

சில வருடங்களுக்கு முன்பு மருத்துவமனையில், சக்கர நாற்காலியில் பார்த்த அந்த இளைஞனாக இருக்கும் என்று பேக்கரின் மனம் நம்ப மறுத்து விட்டது சொல்ல முடியாத அளவு உடல் ஊனமுற்ற வீரன் என்று கடிதத்தில் எழுதி இருந்ததால், பட்டத்தைப் பெறப் போகிற அந்த இளைஞனைப் பற்றிய விவரங்களைக் கேட்டார். கால்கள், கை, கண்கள் இழந்த அந்த வீரனேதான்!எப்படியோ படித்து, ஆராய்ச்சி செய்து, விவரிக்க முடியாத சிறப்புடன் கட்டுரை எழுதி இருந்ததாகத் தெரிவித்தார்கள். இந்த தகவலை அறிந்த பேக்கர் அப்படியே உருகிப் போய் விட்டார்.

ஜான் ஹாப்கின்ஸ் ஒரு மாணவனுக்காகச் சிறப்பு பட்டமளிப்பு விழாவையே நடத்தியது மிக மிகப் பெரிய கவுரவம். ஜான் ஹாப்கின்ஸ் நம் பாராட்டுக் குரிய பல்கலைக்கழகம்.
* *
பின்குறிப்பு: அந்த வீரனின் பெயர், புகைப்படம் ஆகியவை கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட நூறு வருஷம் ஆகிவிட்டிருந்ததால் தகவல் பெறுவது சற்று கடினமாக உள்ளது. பழைய கோப்புகளை எல்லாம் தேடிப் பார்த்தும் விவரங்களைக் கண்டு பிடிக்க முடியவில்லை என்று பல்கலைக் கழக உயர் அதிகாரி எனக்கு நீண்ட கடிதம் எழுதியுள்ளார்.

8 comments:

  1. மிக அருமை. பலருக்கும் தன்னம்பிக்கையை ஊட்டும் பதிவு. இவ்வளவு கடுமையான உடல்நிலையிலும் படிப்பில் ஆர்வம் வந்து படித்து டாக்டரேட்டும் பெற்றது சிறப்புக்கு உரியது. அரிய தகவல். உண்மையிலேயே அந்தப் பல்கலைக்கழகமும் போற்றுதலுக்கு உரியதே! சிறப்பான இதுவரை அறிந்திராத தகவல்.

    ReplyDelete
  2. அந்த வீரனின் படத்தைப் பெற கடுமையாக உழைத்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது.  உற்சாகமூட்டும் தகவல்.

    தளத்தின் தோற்றம் அழகாக மாறி இருக்கிறது.  இப்போதுதான் கவனிக்கிறேனா, முன்னரேயா என்று தெரியவில்லை.

    ReplyDelete
  3. ஸ்ரீராம் அவர்களுக்கு:
    மிக்க நன்றி. தளத்தில் மாறுதல் இல்லை. இப்படித்தான் பல வருஷங்ளாக தெரிந்தவரையில் போட்டுக் கொண்டு இருக்கிறேன்..
    என் உழைப்பை விடுங்கள். நான் பல்கலை கழக அதிபருக்குக் கடிதம் எழுதினேன். ஒரு அதிகாரி பத்து நாள் தேடிப் பார்த்துவிட்டு, எங்கெங்கு தேடினார் என்பதையும் தெரிவித்து.எனக்கு நீண்ட கடிதம் எழுதியுள்ளார்.
    ‘பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து’ என்ற பதிவையும் பாருங்கள். --கடுகு

    ReplyDelete
  4. // பழைய கோப்புகளை எல்லாம் தேடிப் பார்த்தும் விவரங்களைக் கண்டு பிடிக்க முடியவில்லை என்று பல்கலைக் கழக உயர் அதிகாரி எனக்கு நீண்ட கடிதம் எழுதியுள்ளார். // எனக்கு என்கிற ஒரு வார்த்தையை சுற்றிச் சுற்றி வருகிறேன். Hats off to you sir!

    ReplyDelete
  5. நம்பவே முடியாத சம்பவம். சாதாரண பிரச்சனைகளுக்கே நான் மனம் ஒடிந்து போயுள்ளேன். கிட்டத்தட்ட தன் வாழ்க்கையே முடிவுக்கு வந்த இடத்திலிருந்து, வாழ்க்கையின் ஆரம்பமாகக் கொண்டு சாதனை புரிந்த அந்த இளைஞன் என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்துகிறான். அவனுடைய ஆட்டிடியூட்தான் அந்த நர்ஸை அவனை மணம் புரிந்துகொள்ளச் செய்திருக்கவேண்டும். அவனது தைரியம், புத்திசாலித்தனம் போன்றவை பல்கலைக்கழகப் பேராசிரியர்களை அளவுக்கு அதிகமாகக் கவர்ந்திருக்கவேண்டும். அதனால்தான் அவனுக்கு அவர்கள் சிறப்புப் பட்டமளிப்பு நடத்தியிருக்கிறார்கள்.

    இராணுவ சேவை செய்தவர்களையும், புத்திசாலிகளையும், அவர்கள் யார், எந்த நிலையில் இருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்காமல் கெளரவப்படுத்துவது மேற்கத்தைய நாடுகளுக்குத்தான் வரும் போலிருக்கிறது.

    குறிப்பு: பத்து நாட்கள் பயணத்தால் இணையத்திற்கு வர இயலவில்லை.

    ReplyDelete
  6. அவனின் புகைப்படத்தையும் வெளியிட்டு கெளரவப்படுத்தி, எங்களையும் காணவைக்கவேண்டும் என்று நினைத்து முயற்சி செய்த உங்களைப் பாராட்டுகிறேன் கடுகு சார்.

    ReplyDelete
  7. நெல்லைத்தமிழன் அவர்களுக்கு,
    அந்த ராணுவ வீரனின் சாதனை அசாதாரணமானதன்று. அதனால்தான் அந்த பல்கலைக் கழகம் வருடத்திற்கு மத்தியில் பட்டமளிப்பு நிகழ்ச்சியை ஒரே ஒரு மாணவனுக்காக நடத்தி அவனைப் பெருமைப் படுத்தியதுடன் தன்னையும் பெருமைப்படுத்திக் கொண்டது.--- கடுகு

    ReplyDelete
  8. அசாதாரணமான மனிதர். ஆச்சர்யமூட்டும் நிகழ்வு. பகிர்வுக்கு நன்றி. 

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!