டாக்டர் லூமிஸ் (1877–1949) தனது இந்த அனுபவம் பற்றி ஒரு விவரமான கட்டுரையைப் பின்னால் எழுதினார். அதன் தலைப்பு “ஒரு சீன தோட்டத்தில்!” அதிலிருந்து சில வரிகளைப் பார்க்கலாம்.
டாக்டர் லூமிஸின் கட்டுரை:
“ஒரு கடிதத்தின் கதையைப் பல தடவை பலரிடம் நான் சொல்லி இருக்கிறேன். அந்த ஒரு கடிதம் நிகழ்த்திய மாற்றம் அளவிட முடியாதது. முதலில், கடிதத்தைத் தருகிறேன். அது சைனாவில் இருந்து வந்தது.
அன்புள்ள டாக்டர்,
இந்த கடிதத்தை பார்த்து வியப்படையாதீர்கள். என் முழுப் பெயரை இங்கு நான் எழுதவில்லை. என் பெயரும் உங்கள் பெயர் தான் என்பதை மட்டும் மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்காது. இரண்டு வருடங்களுக்கு முன்பு உங்கள் மருத்துவமனையில் நான் இருந்தேன். வேறு ஒரு டாக்டர் என்னைக் கவனித்துக் கொண்டிருந்தார். எனக்குக் குழந்தை பிறந்தது; அன்றே அது இறந்து விட்டது.
என்னை கவனித்து வந்த டாக்டர் ஒரு நாள் என்னிடம், ”உங்களுக்கு ஒரு சின்னத் தகவல். உங்கள் பெயரையே உடைய ஒரு டாக்டர் இங்கே இருக்கிறார். இங்கு அட்மிட் ஆனவர்களின் பெயர்கள் எழுதியுள்ள நோட்டீஸ் போர்டில் உங்கள் பெயரைப் பார்த்த அவர் உங்களைப் பற்றி என்னிடம் விசாரித்தார்; உங்களைப் பார்க்கவும் விரும்பினார்.... குழந்தையை இழந்த நீங்கள் யாரையும் சந்திக்க விரும்புவது சந்தேகம் என்று அவரிடம் சொன்னேன்” என்றார்.
“அதனால் என்ன? அவரைப் பார்க்க எனக்குத் தயக்கம் இல்லை” என்று நான் கூறினேன்.
சிறிது நேரம் கழித்து நீங்கள் என் அறைக்கு வந்தீர்கள். என் படுக்கைக்கு அருகில் உட்கார்ந்து கொண்டீர்கள். எனக்கு ஆறுதல் கூறினீர்கள். மற்றபடி என்னிடம் அதிகம் எதுவும் பேசவில்லை. உங்கள் முகபாவமும், குரலில் இருந்த கனிவும் என் கவனத்தை ஈர்த்தன. அது மட்டுமல்ல, உங்கள் நெற்றியில் கவலையின் அறிகுறியாக பல ஆழமான கோடுகள் இருந்ததையும் பார்த்தேன். உங்கள் பரிவான ஆறுதல் வார்த்தைகளாலோ என்னவோ வெகு விரைவிலேயே என் உடல் நலமடைந்துவிட்டதைப் போல் உணர்ந்தேன்.
அதன் பிறகு உங்களை நான் சந்திக்கவில்லை. ஆனால் தாங்கள் இரவு பகல் என்று பாராது மருத்துவ மனையிலேயே இருப்பதாகச் சொன்னார்கள்.
.
இன்று பகல் சைனாவில் பீஜிங் நகரில் ஒரு அழகான வீட்டிற்கு விருந்தினராக வந்துள்ளேன். வீட்டின் தோட்டத்தைச் சுற்றி உயரமான மதில் சுவர்கள் இருந்தன. அதன் ஒரு பகுதியில், அழகிய சிவப்பு, வெள்ளை மலர்ச் செடிகள் காட்சியளித்தன. அங்கு சுவரில் சுமார் இரண்டு அடி நீளமுள்ள ஒரு பித்தளைத் தகடு பதிக்கப்பட்- டிருப்பதைப் பார்த்தேன். அதில் சீன மொழியில் ஏதோ பொறிக்கப் பட்டிருந்தது. அதைப் படித்து மொழிபெயர்த்துச் சொல்ல ஒருவரைக் கேட்டுக் கொண்டேன். அவர் படித்துச் சொன்னார்:
“மகிழ்ச்சியை அனுபவியுங்கள், நீங்கள் நினைப்பதைவிட அதிக காலம் கடந்து விட்டது!” என்பதே அந்த வாசகம்.
அந்த வாசகத்தை பற்றி விடாது மனதில் அசை போட்டேன். எனக்கு இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் இல்லை. இறந்துபோன குழந்தையை எண்ணி இன்னும் வருந்திக் கொண்டிருக்கிறேன். ஆனால் அந்தக் கணம் என் மனதில் ஒரு திடீர் முடிவு தோன்றியது. ‘இனியும் நான் காலம் தாழ்த்தக் கூடாது. நான் ஏற்கனவே தாமதம் செய்து விட்டேன்’ என்று என் உள்ளுணர்வு எனக்குத் தெரிவித்தது. ‘இறந்துபோன குழந்தையைப் பற்றிய எண்ணி விசனத்திலேயே மூழ்கி இருக்கிறாயே’ என்று என் உள் மனது கேட்டது.
குழந்தையை பற்றி எண்ணம் வந்ததும், மருத்துவமனையில் நீங்கள் என்னை வந்து பார்த்தது நினைவுக்கு வந்தது. அது மட்டுமல்ல, ஓய்ச்சலே இல்லாமல் உழைப்பதன் அடையாளமாக உங்கள் நெற்றியில் விழுந்திருந்த கோடுகளும் நினைவுக்கு வந்தன. எனக்குத் தேவைப்பட்ட அனுதாபத்தைக் கனிவுடன் நீங்கள் அளித்தீர்கள்.
உங்களுக்கு என்ன வயது என்பது எனக்குத் தெரியாது. ஆனால் உங்களை என் தந்தை ஸ்தானத்தில் நான் வைக்கக்கூடிய அளவு வயதானவர் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. எனக்காக நீங்கள் அன்று செலவழித்த சில நிமிடங்கள் உங்களைப் பொருத்தவரை ஒன்றும் பெரிய விஷயமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒரு குழந்தையை இழந்த, அதுவும் அது பிறந்த தினத்தன்றே பறிகொடுத்த ஒரு பெண்ணுக்கு அது மிக மிகப் பெரிய விஷயம்.
பதிலுக்கு நான் உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அவ்வப்போது எண்ணுவது வழக்கம். அது அறிவீனம் என்று எனக்குத் தெரியும்.
இந்தக் கடிதம் உங்களுக்குக் கிடைத்த தினம், நீங்கள் தனியாக ஒரு இடத்தில் அமைதியாக உட்கார்ந்து, சீன தோட்டத்துப் பொன்மொழியை தீர்க்கமாகச் சிந்தியுங்கள்!
மகிழ்ச்சியை அனுபவியுங்கள், நீங்கள் நினைப்பதைவிட அதிக காலம் கடந்து விட்டது!
--- மார்க்கெரட்