October 02, 2019

நானும் ஒரு ஷேக்ஸ்பியர்- ஒரு ஜகஜ்ஜாலப் புரட்டுகம்பராமாயணம் போன்ற இலக்கியங்களில் இடையிடையே ஒரு சில   சொந்தப்  பாடல்களைப் பல புலவர்கள் புகுத்தி வைத்துள்ளது  அனைவரும் அறிந்ததே.
கம்பன் பெயரோடு தாங்களும் சேர்ந்து பெருமைப்படலாம் என்ற எண்ணத்துடன் இந்த இடைச்செருகல் பாடல்களை உருவாக்கி வந்துள்ளார்கள்!
  அவற்றைக் கண்டுபிடித்து நீக்குவதற்கு மிகுந்த திறமையும் புலமையும் வேண்டும்;  டி.கே.சி போன்று ஆழ்ந்த சிந்தனை உடையவர்கள்  விழிப்புடன் ஈடுபட்டால் இந்த கலப்பட பாடல்களை கண்டுபிடிக்க முடியும்.
  இந்த  பித்து உலகெங்கும் பலரைப் பிடித்து ஆட்டும் அல்ப ஆசை! ஆனால் இங்கிலாந்தில் ஒரு இருபது வயது பையன் செய்த தில்லுமுல்லுவுக்கு ஈடு எதுவும் கிடையாது.  சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை. அதாவது ஷேக்ஸ்பியர்  காலமான பிறகு, நூறு ஆண்டுகள் கழிந்த பிறகு நடந்த தில்லு முல்லு!

       வில்லியம் ஹென்றி அயர்லாந்து என்ற இளைஞன் என்ன செய்தான் தெரியுமா?  அவன் லண்டனில் ஒரு பத்திரப்பதிவு அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தான். ஒரு நாள் ஏதோ பழைய பத்திரங்களைத் தேடியபோது, ஒரு பத்திரத்தில் ஷேக்ஸ்பியரின் சாட்சிக் கையெழுத்து இருப்பதை பார்த்தான்.  

அவன் உடலில் மின்சாரம் பாய்ந்தது.

 ஷேக்ஸ்பியர் எழுதிய சில நாடகங்களைப் படித்து இருந்ததால், அவருடைய கையெழுத்தைப் பார்த்ததும் அவனை ஒரு வெறி பிடித்துக் கொண்டது.  ஷேக்ஸ்பியரின்  நாடகங்களை ஆழ்ந்து படிக்க ஆரம்பித்தான். 

   அத்துடன் நிற்கவில்லை. சுமார் ஒன்றரை வருஷம்  பத்திரத்தில் இருந்த ஷேக்ஸ்பியரின் கையெழுத்தைப் பார்த்து,  அப்படியே  எழுதப் பழகினான்.  
இத்தனைக்கும் அவரது நாடகங்களின் ஒரிஜினல் கையெழுத்து பிரதிகள் யாவும் மறைந்து போயிருந்தன. 
இளைஞன் அயர்லாந்திற்ககு மேடை நாடகங்களில் மிகவும் ஆர்வம் உண்டு அவனே நடிகனாக வேண்டும் என்று விரும்பினான். அத்துடன் கவிதைகள் எழுதுவதிலும் அவனுக்கு விருப்பம் உண்டு .
படிப்பில்  அவன் படு சூனியம். அவனுடைய பள்ளிக்கூட தலைமையாசிரியர் ஒரு சமயம் கூறியது  “ உன்னால் பள்ளிக்கூடமே அவமானம் அடைகிறது.” .
அவனுடைய பெற்றோர்களும் அவனை ’வடிகட்டி’ என்றுதான் சொல்வார்கள் 


ஷேக்ஸ்பியர் மீது ஏற்பட்ட வெறியால் அவன்,   Vortigern and Rowena  என்ற கிரேக்கப் பெயர் பாணி தலைப்பில்  நாடகம் எழுதிவிட்டான்.  மொத்த நாடகத்தையும் ஷேக்ஸ்பியரின் கையெழுத்தில் (!) எழுதிய அந்தக் கில்லாடி,  சுமார் இருநூறு வருஷத்துக்கு முன்பு e எழுதப்பட்டது போல் கையெழுத்துப் பிரதி இருக்க   வேண்டும் என்பதற்காக மிகவும் பழுத்துப்போன, கிட்டத்தட்ட மஞ்சள் நிறத்தில் இருந்த காகிதத்தில் எழுதினான்.  பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரங்களுக்கு இடையே வெற்றுப் பேப்பர் கிடைத்திருக்கக்கூடும். அது மட்டுமல்ல, மிக மிக மங்கலான மசியில் எழுதினான்.. இதில் வேடிக்கை என்னவென்றால் அவன் எழுதிய நாடகம் ஓரளவு  ஷேக்ஸ்பியரின் நடையிலேயே இருந்ததுதான்.

    தன் வீட்டுப் பரணில் பலவருஷங்களக இருக்கும் தட்டு முட்டு சாமான்களுக்கு இடையே  இருந்த தகரப் பெட்டியில்  இது இருந்ததாக கதை திரித்துவிட்டடான்..
(அவனூடைய அப்பா கயலான் கடை சாமான்களைச் சேகரிக்கும் பித்து பிடித்தவர். பத்து இருபது கயலான் கடை சமான்களால் வீட்டை நிரப்பி வைத்திருந்தார்!) 
      நாடகம்  ஓரளவு நன்றாகவே அமைந்துவிட்டது அல்லாமல், ஷேக்ஸ்பியரின் நடை அதில் பிரதிபலித்தது.  சொல்லப்போனால் பல இடங்களில் அவன் எழுதியது ஷேக்ஸ்பியர் பொன்மொழிகளுக்கு நிகராக இருந்தனவாம்.
இந்தத் தகவல் லண்டனில்  பரவியதும், லண்டனில் 1795-ம் ஆண்டில் இருந்த கவிஞர்கள் எல்லோரும் அவன் வீட்டிற்குப் படையெடுத்தார்கள், இந்த அரிய நாடகத்தின் கையெழுத்துப் பிரதியைப்  பார்ப்பதற்கு!
அப்படி வந்தவர்களில் ஒருவர் பிரபல எழுத்தாளர் ஜேம்ஸ் பாஸ்வெல். சாமுவேல் ஜான்சன் என்ற பிரபல எழுத்தாளரின் வரலாறை எழுதிப் புகழ் பெற்றவர். 
 மக்கிப்போன காகிதத்தில், கோழிக் கிறுக்கல் போன்ற ஷேக்ஸ்பியரின் கையெழுத்தில் எழுதப்பட்டிருந்த நாடகத்தைக் கண்களைச் சுருக்கி சிரமப்பட்டுப் பாஸ்வெல் படித்தார்;
 “இதைப் படிக்க இந்த நாள்வரை உயிர் வாழ்ந்தேனே, அதுவே போதும் என்ற மன நிறைவுடன் நான் மரணம் அடைவேன்” என்று சொன்னார்.  நாடகப் பிரதியை கீழே வைத்து, அதன் முன்னே மண்டியிட்டு, அதைப் பெரிய புதையலாகக்   கருதி, பணிவுடன் முத்தமிட்டு விட்டுச் சென்றார் 
     ஆவணங்களின் உண்மைத் தன்மையை சோதிக்கும் நிறுவனத்தின் தலைவர், இதைத் தீவிரமாகச் சோதித்துப் பார்த்துவிட்டு,  “இது ஷேக்ஸ்பியர் காலத்தை சேர்ந்த  ஆவணம்தான்.  இது அவருடைய பேனாவில் இருந்து வந்ததுதான். அவரே  சொர்க்கத்தில் இருந்து வந்திருக்க வேண்டும்” என்றும் அறிவித்து விட்டார்.
அவ்வளவுதான்! அந்த இளைஞனுக்குத் தலைகால் புரியவில்லை. அவனுடைய அப்பாவும் மிகவும் சந்தோஷப்பட்டார்.  பையனுடைய தில்லுமுல்லு இது என்று அவருக்குத் தெரிந்திருந்தும், அதை அவர் வெளிப்படுத்தவில்லை. மாறாக, அது உண்மையானது என்றே அவர் சொல்லிக் கொண்டிருந்தார். 
  திடீர் என்று யாரும் நினைத்துப் பர்க்க முடியாத அளவுக்கு அயர்லாந்து  பிரபலமாகி விட்டான்.
*                    *                                              *                                  *
நாடகத்தை மேடையேற்ற நடவடிக்கைகள் துவங்கின. ஒருவாறாக நாடகம் தயாராயிற்று. முதல் நாள், முதல் காட்சிக்குத் திரண்ட கூட்டம் அளவில்லாதது. முதல் இரண்டு அங்கம் வரை நாடகம் சிறப்பாகச் சென்றது..
   நாடகத்தின் மூன்றாவது அங்கம்  நடைபெற்றபோது  அதனுடைய தரம் கொஞ்சம் குறைந்து போய்விட்டது.  போர் அடிக்க ஆரம்பித்து விட்டது. (லண்டனில் நடைபெறும் நாடகங்களைப் பார்க்க வருபவர்கள் அவ்வப்போது விசிலடித்து, கைதட்டி கிண்டல் வார்த்தைகளை வீசி கலாட்டா செய்வது வழக்கம். )நாடகம் ‘போர்’ அடித்ததனால்   பார்வையாளர்கள்   அதிக அளவு தங்கள் எதிர்ப்பையும் காட்டினார்கள்.
   நாடகம் ஒருவாறாக முடிந்தது. .  இத்தனை கசமுசாவிற்கும்  நடுவில் நாடகம் முடிந்தது என்றாலும்,. இந்த நாடகம்  ஷேக்ஸ்பியர்  எழுதியதுதான் என்பதை எல்லாரும் நம்பினார்கள்.
 ”இந்த நாடகம் திரும்பவும் திங்கள்கிழமை மாலை போடப்படும்” என்று அறிவிப்பு செய்தபோது,  “கூடாது, கூடாது”  என்று பலர் கத்த ஆரம்பித்தார்கள்.   அந்த நாடகத்தை ரசித்த சிலரும், ரசிக்காத பலரும் ஒருவரைத் தாக்க ஆரம்பித்தார்கள்.
 மறுநாள் பத்திரிகைகளில் இந்த நாடகத்தை பிச்சு உதறித் துவைத்து காயப்போட்டு விட்டார்கள் ’சரியான வடிகட்டின அபத்தமான நாடகம்’ என்று சில பத்திரிகைகள் எழுதின.. 
   பிரபல எழுத்தாளர் R. B.ஷெரிடன், அயர்லாந்தின்  வீட்டிற்கு வந்து,   அந்த கையெழுத்துப் பிரதியைப்  பார்த்தார்.  அவர்  “இது ஷேக்ஸ்பியர் எழுதியதுதான்”   என்று சொல்லிவிட்டார்.  அதே சமயம்,” மொத்தத்தில்   தரமற்ற முயற்சி” என்றும் அவர் கூறிவிட்டார். இருந்தாலும் அவன் மனம் தளரவில்லை. திடீரென்று கிடைத்த புகழை அவன் கொண்டாடிக் கொண்டிருந்தான்.  

சுமார் ஒன்றரை வருஷம் கழித்து அவனுடைய  குட்டு வெளிப்பட்டது. இது ஏமாற்று வேலை என்று அவனே ஒப்புக்கொண்டான். அது மட்டுமல்ல;. அவன் அது பற்றி ஒரு புத்தகமே எழுதி விட்டான்! அந்த புத்தகத்தின் தலைப்பு: THE CONFESSIONS OF WILLIAM IRELAND.  அதில்,  இந்த தில்லுமுல்லுவை எப்படி   செய்தான் என்பதை அவன்  விவரமாகஎழுதிவிட்டான்! (அந்தப் புத்தகம் நன்றாக விற்பனை ஆயிற்றாம்!)

( சில வருஷங்களுக்கு முன்பு  SMITHSONIAN என்ற பத்திரிகையில் படித்தது.)     

5 comments:

 1. மிக ரசனையான ஏமாற்றுவிஷயம்.

  பேசாமல் அந்த போலி நாடகப் பேப்பர்களையே அவர் விற்று பணக்காரராயிருக்கலாம். (அது ஒரிஜினல் என்று சொன்னவங்கள்ட சர்டிபிகேட் வாங்கிக்கிட்டு... நாளை பிரச்சனை வந்தால் அவங்களையும் மாட்டிவிட்டுடலாமே).

  ஏன் அவர் உண்மையைச் சொன்னார்னு புரியலை. அவர் பெயர் கெடுவதுதான் மிச்சம்.

  ReplyDelete
 2. நெ.த அவர்களுக்கு,
  அவனுடைய அப்பாவே அந்தக் கையெழுத்து நாடக பக்கங்களைப் படம் பிடித்துப் புத்தகமாப் போட நினைத்தாராம்...அவனுடைய பெற்றோருடன் மனக்கசப்பு ஏற்பட்டு, வீட்டை விட்டுப் போய்விட்டானாம். அவனுடைய குடும்பத்தினரே பற்ற வைத்து விட்டார்கள் என்றும் தகவல். CONFESSIONS புத்தகத்தில் விவரங்கள் இருக்கக்கூடும்- கடுகு

  ReplyDelete
 3. சுவாரசியமான பலரும் அறியாததொரு விஷயம். பாவம் கடைசியில் அகப்பட்டுக்கொண்டாரே என வருத்தமாக உள்ளது.

  ReplyDelete
 4. நீங்களும் ஆரம்பகால துக்ளக் போல மாதமிருமுறை இடுகை என்று ஆரம்பித்துவிட்டீர்களா?

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தீபாவளி வாழ்த்துகளுக்கு நன்றி.. மாதம் ஒரு இடுகை என்று ஆக்கலாம் என்று நினைக்கிறேன். பதிவு போடுவது சற்று strain இருக்கிறது. டிசம்பர் மாதத்தில் முடிவெடுப்பேன்.-- கடுகு

   Delete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!