அறுபது, எழுபதுகளில் டில்லியில் நான் இருந்த போது, ராமகிருஷ்ணபுரம் சௌத் இந்தியன் சொஸைட்டியின் துணைத் தலைவராக இருந்தேன். சங்க நிகழ்ச்சிகளை நிறைய நடத்தி வந்தோம்.
அவ்வப்போது தமிழ்த் திரைப்படங்களை காலைக் காட்சிகளாகத் திரையிடுவோம். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. சங்கத்திற்கு நல்ல வருமானமும் இருந்தது. அந்த காலகட்டத்தில் கலாகேந்திரா நிறைய படங்களை எடுத்துக் கொண்டிருந்தது.
திரைப்படத் தயாரிப்பாளர் ’கலாகேந்திரா'
கோவிந்தராஜன் என் நண்பர். எங்க ஊர்க்காரர். அவர் சினிமாத்துறைக்கு வருவதற்கு முன் சென்னை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அந்தக் காலகட்டத்தில் நான் சென்னை ஜி பி ஓ-வில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.
எதிர்நீச்சல் பிரமாதமாக ஓடிக் கொண்டிருந்த காலகட்டம் அது. எதிர்நீச்சல் படத்தை ஒரு காட்சி டெல்லியில் நாங்கள் திரையிட விரும்புகிறோம் என்று தெரிவித்தேன். படத்தை கொடுத்து உதவ வேண்டும் என்று நான் கேட்டிருந்தேன். அவரும் ஒப்புக் கொண்டார்..
எங்கள் சொசைட்டி திரைப்படத்தை விளம்பரப்படுத்தி, டிக்கெட்டுகள் அச்சடித்து மளமளவென்று விற்பனை செய்யத் தொடங்கி விட்டது.
“படத்தின் பிரின்ட்டை உங்களுக்குச் சேர்ப்பது என்னுடைய பொறுப்பு” என்று கோவிந்தராஜன் சொல்லியிருந்தார். ஆகவே கவலையில்லாமல் இருந்தேன்.