ஈரமுள்ள வீடு
இஸ்ரேல் நகைச்சுவை எழுத்தாளர் EPHRAIM KISHON எழுதிய ‘A HANGING MATTER’ என்ற கட்டுரையைத் தழுவி, தமிழ் முலாம் கொடுத்து இங்கு தருகிறேன்.
* .
* *
முதலில் ஒன்றைச் சொல்லி விடுவது முக்கியம். எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. மோட்ச உலகிலும் இயற்கையின் நடைமுறைகளிலும் எனக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு.
ஆனால் சமீபத்தில் குளிர் காலத்தின் போது இயற்கை மீதிருந்த மதிப்பு, மரியாதையெல்லாம் மாறிவிட்டது.
விஸ்தாரமாகச் சொல்லுகிறேன். நான் சொல்லி முடிப்பதற்குள் உங்கள் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாய்ப் பெருகும்!
விஸ்தாரமாகச் சொல்லுகிறேன். நான் சொல்லி முடிப்பதற்குள் உங்கள் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாய்ப் பெருகும்!
டிசம்பர் மாதம். திங்கட்கிழமை. பொழுது புலர்ந்தது. சூரியன் பளீரென்று உதித்து உலகையே உற்சாகப்படுத்தினான். ஜன்னல் வழியாகச் சூரியனை பார்த்து “ஆகா, வந்தாயே, என் மகாராஜனே” என்று அவனுக்குச் சின்ன வரவேற்பைச்சொன்னேன்.
ஆயிரம் வருஷம் காத்திருந்த மாதிரி, சூரியன் தலை காட்டியதற்கு விழாவே எடுக்கும் அளவுக்கு மகிழ்ச்சியில் குதித்தோம். ஒரு வாரத்திற்கு மேல் துணிகளைத் தோய்க்க முடியாமல், சுருட்டி சுருட்டி மூட்டைக் கட்டி வைத்திருந்தோம்.
ஆயிரம் வருஷம் காத்திருந்த மாதிரி, சூரியன் தலை காட்டியதற்கு விழாவே எடுக்கும் அளவுக்கு மகிழ்ச்சியில் குதித்தோம். ஒரு வாரத்திற்கு மேல் துணிகளைத் தோய்க்க முடியாமல், சுருட்டி சுருட்டி மூட்டைக் கட்டி வைத்திருந்தோம்.
மூட்டைகளைப் படுக்கையின் கீழே, மேஜையின் கீழே, (வேண்டாத சாமான்கள் நிரம்பிய பரணில் (எதையும் தூக்கிப் போடாதீங்க; எந்த சமயத்தில் எந்த சாமான் உதவும் என்று உங்களுக்குத் தெரியாது. காதறந்த ஊசியும் உபயோகப்படும்”- இது என் மனைவி என்னும் அரிஸ்டாட்டிலின் தத்துவம்!) நிறைந்து இருந்ததால் அங்கு கிடைத்த இரண்டு அங்குல இடத்தில், துணிகளைத் திணித்து வைத்திருந் தோம்.
மழை காரணமாக ஜன்னல்களைத் திறக்கவில்லை. வீட்டின் தரை சொத சொதவென்று இருந்தது. மூட்டைகளில் இருந்த துணிகளில், டவல் போன்றவை சற்று ஈரமாக இருந்தன. அதனால், அவை ஒரு ஸ்பெஷல் வாசனையுடன் இருந்தன. (இந்த
வார்த்தை சரியில்லைதான்; வேறு
வார்த்தையைப் போட மனம் வரவில்லை! - கிட்டதட்ட சர்க்கரை ஆலைகளிலிருந்து
வரும் மொலாசஸ்ஸே சந்தனமணம் என்று நாங்கள் கருதும் அளவுக்குத் துணிகளின் வாசனை எங்கள் மூக்கை உண்டு, இல்லை
என்று ஆக்கிவிட்டன!)
விடிந்தது காலை. வாராது வந்த மாமணி போல சூரியன் வந்தது. யாம் செய்த தவத்தால்
பளிச்சென்ற ஒளிச்சிதறலுடன் சூரியன் வந்தான்.
என் மனைவியும், மாமியாரும் தூக்கத்திலிருந்து எழுந்ததும், ஜன்னல்
வழியாகச் சூரிய ஒளிப் படர்ந்ததைப் பார்த்து “ஆ.. சூரியன்… வந்துவிட்டது.’ என்று
உற்சாகத்தில் குதித்தனர்.
"எடுங்கள் மூட்டையை…. துணிசோப்புக் கட்டிகளை! எல்லாத் துணிகளை யும் என்ன செய்கிறேன் பாருங்கள்,” என்றாள் என் மனைவி.
“வெளுத்துக்கட்டு” என்றேன். என் சிலேடையைக் கஷ்டப்பட்டு ரசிக்காமல் இருந்த என் மனைவி வேலையில் இறங்கினாள்.
எல்லா துணிகளையும் பக்கெட்டுகளில் போட்டுத் தண்ணீரையும் கொட்டி, சோப்புத் தூளையும் போட்டு கிளறி விட்டோம்
என் மனைவியும் என் மாமியாரும்
அவரவர் மாமியாரைப்பற்றிப் பேசியபடியே துணிகளைத் துவைத்து அலசினார்கள். எல்லா
துணிகளுக்கும் தோட்டத்தில் நாங்கள் கட்டியிருந்த கொடி போதாது என்று தோன்றியதால், கடைக்கு ஓடிப்போய், கொடி கட்ட கயிறு வாங்கி வந்தேன்.
டிராயிங் ரூம், பெட்ரூம், கிச்சன், ஸ்டோர் ரூம்
என்று பல அறைகளில் நுழைந்து, அங்குள்ள
ஜன்னல்கம்பி, மேஜையின் கால், கதவுத்
தாழ்ப்பாள், அலங்காரத் தோரணம் மாட்டப்பட்டிருந்த கொக்கி, ஷோகேஸ் அலமாரியின் கைப்பிடி, வாஷ்பேசின்
குழாய் என்று வீட்டின் பல பல இடங்களில் போய்ச் சுற்றி வந்து, கடைசியில் வாசற்கதவின் கைப்பிடி குமிழில் நாலு சுற்றுசுற்றி வந்தது கயிறு.
அங்கு அதற்கு மூன்று முடிச்சு போட்டுக் கட்டிவிட்டேன்.
நான் கயிறைக் கட்டியதும், என் மனைவி இரண்டு கைகளிலும் இரண்டு பக்கெட்டுத் துணிகளுடன் வந்தாள். “இந்தத்
துணிகளை
நன்றாக உதறி, கொடியில் போடுங்கள். பிரமாதமாக கொடி
கட்டியிருக்கிறீர்கள்” என்றாள்.
மனைவி சொல்லைத் தட்டாமல் கேட்கும்
கணவன், பெய் என்றால் மழை பெய்யும் என்று எனக்குத்
தெரியும். நில் என்றால் நிற்குமா என்று தெரியாது. அப்படி நான் சொல்லி, மழை
நிற்கவில்லை என்றால், என் மனைவி சுனாமியாக ஆக மாட்டாள் என்பதற்கு
எந்த உத்தரவாதமும் இல்லை.
மளமளவென்று துணிகளை உதறிப் போட்டேன்.
எல்லா அறைகளிலும் துணிகளைப் போட்டதும், மின்விசிறியைப்
போட்டுவிட்டேன்- மின்விசிறிக் காற்றினால் துணிகள் சீக்கிரம் உலர்ந்துவிடும் என்று
எண்ணி! துணிகள் படபடவென்று லேசாகப்பறந்தன. ஈரத் துணியிலிருந்து லேசாகச் சொட்டிக்
கொண்டிருந்த தண்ணீர் அங்குமிங்கும் பன்னீராய்த் தெளித்தது.
என் பணி உலர்த்துவது என்று
ஒருமாதிரி அதைச் செய்துவிட்டேன். சற்று ஓய்வு எடுக்க - அடுத்த 2, 3 பக்கெட் வரும் வரை - ஈசிசேரில் சாய்ந்தேன்.
அடுத்த நொடி, என் பையன் அமீர், ‘ஓ’வென்று கத்தினான். (அவனுக்கு இன்னும் ஏ,பி,சி,டி கூட எழுதத் தெரியாது. ஆனால் கத்துவதற்கு உபயோகமான எழுத்து ’ஓ’ என்று தெரியும் போலிருக்கிறது!)
’என்னடா. ஏன் கத்தறே ? அட
பாவமே… ஏன் அழறே? அம்மா அடிச்சாளா? அம்மா, துணிகளைத் தானே அடிச்சுத் தோய்க்கிறாள். உன்னை இல்லையே” என்று
கேட்டபடியே அவன் அறைக்கு ஓடினேன். அங்கு தொங்கிக் கொண்டிருந்த துணிகளின் நடுவே இருந்து வந்த அழுகைக் குரலைத் தேடி கண்டுபிடித்து, அவனருகில் சென்றேன்.
“என்னடா.. கண்ணா? ஏன் அழறே? என்ன ஆச்சு?” என்று
கேட்டேன். “போச்சு..போச்சு… எல்லாம் போச்சு.. என் யானை போச்சு.. நாளைக்கு டிராயிங்
டீச்சர்கிட்ட அடிதான் வாங்கணும்” என்று சொல்லிவிட்டு, ‘அழுகை
-பாகம் 2’ வைத் தொடங்கினான்.
”ஏதாவது கனவு கண்டாயா? சொல்லுடா. டாடி இருக்கேன்” என்றேன். என் பேச்சிற்கு எப்போதும் மதிப்புக் கொடுப்பவன் அவன் என்பதால், நான் பேசி முடிக்கும் வரை கம்மென்று கேட்டுக் கொண்டிருந்தான். நான் நிறுத்தியதும் ‘அழுகை பாகம்-3’-ஐ ஆரம்பித்தான். .
“இல்லை டாடி….. டிராயிங் டீச்சர் நாளைக்கு யானை படம் போட்டுண்டு வரச் சொல்லி ஹோம்வொர்க் கொடுத்திருந்தார். கஷ்டப்பட்டு வாட்டர் கலரில் போட்டு வச்சிருந்தேன் ஈரத் துணியிலிருந்து சொட்டிக் கொண்டிருந்த தண்ணீர் என் பெயிண்டிங்கை பாழாக்கிடுத்து..…..ஐயோ என் யானை.. கரைஞ்சு போச்சே” என்று அழ ஆரம்பித்தான்.
”ஏதாவது கனவு கண்டாயா? சொல்லுடா. டாடி இருக்கேன்” என்றேன். என் பேச்சிற்கு எப்போதும் மதிப்புக் கொடுப்பவன் அவன் என்பதால், நான் பேசி முடிக்கும் வரை கம்மென்று கேட்டுக் கொண்டிருந்தான். நான் நிறுத்தியதும் ‘அழுகை பாகம்-3’-ஐ ஆரம்பித்தான். .
“இல்லை டாடி….. டிராயிங் டீச்சர் நாளைக்கு யானை படம் போட்டுண்டு வரச் சொல்லி ஹோம்வொர்க் கொடுத்திருந்தார். கஷ்டப்பட்டு வாட்டர் கலரில் போட்டு வச்சிருந்தேன் ஈரத் துணியிலிருந்து சொட்டிக் கொண்டிருந்த தண்ணீர் என் பெயிண்டிங்கை பாழாக்கிடுத்து..…..ஐயோ என் யானை.. கரைஞ்சு போச்சே” என்று அழ ஆரம்பித்தான்.
” அழாதே …
சாயங்காலம் ஐஸ்கிரீம் பார்லருக்கு போகலாம்” என்றேன். ஐஸ்கிரீம் என்பது அவனைப்
பொறுத்தவரை “சர்வரோக நிவாரணி”.
உடனே " மேங்கோ ஐஸ்கிரீம்தான்
வேண்டும்” என்று சொல்லியபடி அழுகையை நிறுத்திவிட்டான்.
வெளியே சுள்’ளென்று வெயில் வந்தது.
என் மனைவியிடம்,” இப்படியே காய்ந்தால் தோட்டக் கொடியில் உள்ள
துணிகள் சீக்கிரமாக உலர்ந்துவிடும். அதை எடுத்துவிட்டு, இங்கே நம் வீட்டிற்குள் பிறந்த தின பார்ட்டி அலங்காரம் மாதிரி தொங்கும் துணிகள
எடுத்து, வெளியே உள்ள கொடிகளில் உலர்த்திவிடலாம்”
என்றேன். -
“ஆமாம், நானும் அதையேதான்
சொல்ல வந்தேன். நீங்களும் அதையே சொன்னீர்கள்” என்றாள்.
இப்படி இரண்டு பேருடைய
கருத்துகளும், எதிரும் புதிருமாக இல்லாமல் கைகுலுக்கியதால்
- இது மாமாங்கம், வால்நட்சத்திரம், முழு சூரிய கிரகணம் போன்று பல வருடங்களுக்கு ஒரு முறை வருகிற விஷயம் என்பதால், “அட.. என் ஐடியாவிற்கு நீ ’ஓ’ கே’
சொல்றது கிட்டதட்ட எட்டு கிரகங்கள் ஒன்று சேர்ந்து வருவது போன்றது... கட்டாயம் மழை
தான் வரப்போகிறது” என்றேன்.
நான் சொல்லி முடிக்கவில்லை.
சடாரென்று ஆகாயத்தில் இருந்த வருண பகவானின் ‘வாட்டர் டாங்க்’ உடைந்துவிட்டது; மழை கொட்டியது.
“ஐயோ..மழை..மழை…
உலர்ந்த துணியெல்லாம் ஈரம்… போச்சு..எல்லாம் போச்சு” என்றேன்.
“நீங்கதான்
‘கட்டாயம் மழை வரப்போகிறது’ என்று சொன்னீர்களே. கோபத்திலும் நீங்க விசுவாமித்திர
முனிவர்; சாபத்திலும் அவரேதான். ‘மழை பெய்து துணியெல்லாம் ஈரக்கட்டையாகப் போகட்டும்’ என்று மனசுக்குள்ளே நினைச்சுண்டு சொல்லியிருப்பீங்க, அதுதான்.” என்றாள். “போதும்,போதும்…
‘மழைதான் வரப்போகிறது’ என்று பேச்சு வழக்கில் இருக்கிறதை நான் சொன்னேன். என்னமோ நான் சொன்னதால்தான் மழை வந்தமாதிரி தான்
என்னைக் காய்ச்சறேயே..”
”ஆமாம். வெயில் காயவில்லை; துணி
காயவில்லை. அதனால்தான் உங்களைக்
காய்ச்சறேன்.”
“ “சரி.. மழை வந்து விட்டதால் உலர்த்தப் போட்ட துணியை எடுக்க வேண்டாம்.
கொடியிலேயே இருக்கட்டும். உலருகிறபோது உலரட்டும்.”.
மாலை வரை மழை நிற்கவில்லை. சூரியன் மறைந்ததும் மழை நின்றது.
மறுதினம் காலை சூரியன் வரவில்லை. கொடியில் இருந்த துணிகளில் பெரிதும்
சிறிதுமாக நிறைய புள்ளிகள்.
மர இலைகளிலிருந்த அழுக்கும், படிந்திருந்த
கரிப்புகையும் குழம்பாகக் கரைந்து சொட்டிக் கொண்டிருந்தன. (எங்கள் வீட்டுப்பின்
பக்கம் ஏதோ ஒரு தொழிற்சாலை இருக்கிறது. என்ன தொழிற்சாலை என்று தெரியாது. ஆனால் சதா
சர்வகாலமும் புகையைக் கக்கிக் கொண்டிருக்கும். புகை என்றால் சாதாரண புகையில்லை.
அடர்த்தியான, பயங்கரக் கருமையான டீசல் என்ஜின் புகை, வாசனையுடன் வெளி வந்துக் கொண்டே இருக்கும்.
அது புகை தயாரிக்கும் இண்டஸ்ட்ரியோ என்னவோ, அந்த எண்ணைப் புகை
இலைகளில் படிந்துவிடும். (எங்கள் வீட்டில்
மல்லிகைப்பூ கருப்பபாக பூக்கும்!) மழை அலம்பிவிட்டதால், மரங்களிலிருந்து கருப்பு மழைத்துளிகள்
துணிகளின்
மீது கொட்டி, கரும்புள்ளி, செம்புள்ளி
பூக்களை வரைந்து விட்டன.
அதைப் பார்த்ததும் எங்களுக்கு ஒரே
கோபம் வந்தது. எரிச்சல் ஏற்பட்டது. ‘போச்சு எல்லாம் பாழாய்ப் போச்சு’ என்று நான் சொல்ல, என் மனைவியும் அதே வரியை வேரொரு ட்யூனில் சொன்னாள். (இரண்டு ட்யூனும் நாராசம்
என்பது தனி விசேஷம்!)
கொடிக்கருகில் போனோம். யாரோ
மிளகாயை அடுப்பில் போட்டு புகையைக் கிளப்பி விட்டமாதிரி கண்களில் எரிச்சல் ஏற்பட்டது; குமட்டல் தரும் நாற்றமும் தாக்கியது..
“மரத்தில்
குருவிகள், காக்கைகள், ஆந்தைகள்
எல்லாம் ‘ரெஸ்ட்ரூம்’ கட்டிக்
கொண்டிருக்கின்றன. மழை அவற்றைச் சுத்தப்படுத்தியுள்ளது. மழை பெய்யும் போது கொஞ்சம் ‘பினாயில்’ கலந்து பொழிஞ்சிருக்கக் கூடாதா? என்றாள் என்
மனைவி
“இதோ பார்..
இப்ப என்ன செய்யறது? எல்லாத் துணிகளையும் அப்படியே விட்டுவிடு.
எல்லாம் உலர்வதற்கு எத்தனை நாளாவது ஆகட்டும். அதற்கப் புறம் ஒரே மூட்டையாகக் கட்டிப்போட்டு ‘டாட்டா’ காட்டிவிடுவோம்” என்றேன்.
‘பாதிக்கு மேலே என்னோட டிரஸ்தான். அதனால்தான்
தூக்கிப் போட்டு விடலாம் என்கிறீர்கள்…” என்று என் மனைவி சொல்லிக் கொண்டிருக்கும் போது மழை பெய்ய ஆரம்பித்தது.
நூறு மீட்டர் ஓட்டப் பந்தயத்தில்
ஓடுவது போல் ஓடினோம், வீட்டுக்குள்ளே! என் மனைவியும் மேல் மூச்சு, கீழ் மூச்சு,
‘சைட்’ மூச்சு
வாங்க ஓடிவந்தாள். உள்ளே வந்ததும், ஓடி வந்த வேகத்தில் அவளுக்கு லேசான தடுமாற்றம் ஏற்பட்டது. ஏதோ ஒரு கொடியைப்
பிடித்துக் கொண்டு சமாளிக்கப் பார்த்தாள்.
அவள் கொடி இடை பெண்மணியாக இருந்திருந்தால், கொடி தாங்கி
இருக்கும். இவள் இழுத்த இழுப்புக்கு வர அது என்னஅவளுடைய அம்மாவா? கணவனா! அதனால் கூடத்தில் இருந்த துணிக் கொடி ஆணியுடன் கழன்று வெளியே வர, கொடிப்பந்தல்கள் ’தபதப’வென்று விழுந்தன. கத்தும் ஜலதரங்கம் போல் என்
பிள்ளை அறையிலிருந்து ஒலிபெருக்கியில்
கத்தியதுபோல் கேட்டது.
“பையன்தான்
எதையாவது தள்ளிவிட்டானோ’ என்று ஒரு கணம் பயந்தேன்
ஒரு பிரச்னை வந்துவிட்டால், பல
குழப்பங்கள் வந்துவிடும். மேலும் செயல்படுவதும் தடுமாறும்.
“என்ன ஆச்சு?” என்று என் மனைவி கேட்டாள். அவள் குரலில் அவசரம் இருந்தது. (மழை மேல் காண்பிக்க
முடியாத கோபத்தை
வீணாக்கக் கூடாது என்று என் மேல் காண்பித்தாள் என்று
நினைக்கிறேன்!)
“தெரியலையே” என்று சொல்லிக் கொண்டே அவன்
பெட்ரூமிற்கு ஓடினேன். அங்கு. கண்டறியாததைக் கண்டேன். ’சுக்கல் நூறு’ என்று கேள்விப் பட்டிருக்கிறேனே தவிர அதைக்
கண்ணால் கண்டதில்லை. ‘உனக்கு எதற்கு அந்தக் குறை?’ என்று துணிக்கொடி
(ஈரத் துணிகளைப் பக்க பலமாகக் சேர்த்துக் கொண்டு) சுவற்றில் இருந்த ஆணியைப்
பிடுங்கி வெளியே தள்ளியிருந்தது.
அதன் தலையில் இடிவிழ! என்ன
செய்வது.? ஆணியைப் பிடுங்க அதற்கு அவ்வளவு ஆசையாக
இருப்பது தெரிந்திருந்தால் ஒரு கிலோ ஆணிகள் வாங்கிக் கொடுத்திருப்பேனே!
அது மட்டுமா? விலை உயர்ந்த ஆள் உயரக் கண்ணாடி, அதைவிட விலை உயர்ந்த வேலைப்பாடு செய்யப்பட்டிருந்த மரஃப்ரேம் எல்லாம் தரையில்
விழுந்து கிடந்தன. எப்படி! நூறு தூளாய்!
என் கலியாணத்திற்கு என் மாமனார் வாங்கிக் கொடுத்தது. “மாப்பிள்ளை.. இது
பெல்ஜியம் கண்ணாடி. விலை ஜாஸ்திதான் இருந்தாலும் வாங்கிட்டேன். ..இது பூதம் போன்று
காட்டாது. (”தேவையில்லை நேராகப் பார்க்கும்படி உங்கள்
பெண்ணைக்கொடுத்திருக்கிறீர்களே, அது போதாதா?”) என்று சொல்லி அதை எனக்குக் கொடுத்தார்!
என் உள்மனது இத்தனை
கலவரத்திற்கும் நடுவே, நிதானமாகக் கூறியது: “கண்ணாடி
கழண்டு விழுந்து.. உடைந்திருக்கிறது ஆயிரம் துண்டுகளாக.” அது எப்படியோ என் மனைவியின் காதிற்குக் கேட்டு விட்டது
“ஆயிரம் துண்டுகளாவது ஒண்ணாவது. எல்லாவற்றையும் ஒண்ணுக்கு இரண்டு மிகைப்படுத்தி
கூறுவது உங்கள் குடும்ப வழக்கம்…”
”இருக்கட்டும் … இதோ எண்ணிப் பார்த்து சொல்கிறேன்” என்று கூறிக் கொண்டிருக்கும்போதே என் மனைவி பெட்ரூமிற்குள்
வந்தாள்.
“அடப்பாவமே… நீங்கள் கயிறு கட்டும்போதே எனக்கு லேசாக சந்தேகம் வந்தது, துணி தாங்குமா என்று… சரி, துடைப்பத்தை எடுத்துக் கொண்டு வர்றேன்…. ஹூம், இந்த
வீட்டிற்கு வந்த வேளையே சரியில்லை என்று நினைக்கிறேன்.”
“ஆமாம்.. நானும் அப்படித்தான் நினைக்கிறேன் என்றேன். (நமக்குள் இருக்கட்டும்.
ஒரு சின்ன ரகசியத்தைசொல்கிறேன். இந்த வீட்டிற்கு வந்து பன்னிரெண்டு வருஷங்கள்
ஆகிவிட்டது.)
இந்த சமயம் என் பையன் திடீரென்று அலறினான். “அம்மா…. முள்
குத்திவிட்டது” என்று கத்தினான்.
“முள் எப்படிடா நம்ப டிராயிங் ரூமில் வந்தது? என்று
கேட்டுக் கொண்டே ஓடினேன்.
அங்கு அமீர் காலைத் தூக்கிக்
கொண்டு நின்று கொண்டிருந்தான்.
காலிலிருந்து சொட்டு சொட்டாய் ரத்தம். வெள்ளைக் கார்ப்பெட்டில் புள்ளிக் கோலம்
போட்டுக் கொண்டிருந்தது. “என்னடா ஆச்சு?… காலைத் தூக்கி வைத்துக் கொண்டு இரு.. கார்ப்பெட்டில். ஓடாதே…. ரத்தக் கறை
ஆகிவிடும்” என்று கத்திக் கொண்டே ஓடினேன்.
நான் போட்ட கத்தல் அடுத்த செகண்ட் அவனுடைய மெட்டிற்கு மாறிவிட்டது. கூடவே ‘ஐயோ..ஐயோ’
என்று வசனத்தையும் சேர்த்துக் கொண்டது. அப்பாவைப்
பார்த்து பிள்ளைக் கற்றுக் கொள்வது, தலை கீழாக மாறிவிட்டது.
அவனைப் போல நானும் காலைத் தூக்கி வைத்துக் கொண்டு அலறினேன். அவன் மாதிரி
அழவில்லையே தவிர அவன் நடனத்தின் ஜதி முதலியவை என் காலைத் தூக்கி நின்ற போஸில்
இருந்தது.
என் மனைவி, ”என்ன ஆச்சு, “என்ன ஆச்சு? என்ன
அலர்றீங்க” என்று கேட்டபடியே வந்தாள். ஒரு சின்னக்
கண்ணடித் துண்டு என் காலில் குத்தி, ரத்தத்தை
வெளியே எடுத்துக் கொண்டிருந்தது.
“என்ன ஆச்சா?.. கார்ப்பெட்டில் ரத்தம், கண்ணாடி
உடஞ்சி போயிருக்கே” என்றேன்.
அறையின் ஒரு பக்கத்தில், அதிக விலைக் கொடுத்து
வாங்கிய, மர வேலைப்பாடுகள் செய்த ஃப்ரேமில் இருந்த கண்ணாடி, ஆணியிலிருந்து
கழன்று.. இல்லை, இல்லை, ஆணியோடு கீழே விழுந்து மல்லாக்கக் கிடந்தது. சுற்றி ஏராளமான
கண்ணாடி சிதறல்கள். நான் இலக்கியம் படிக்காதவன். இருந்தாலும் இந்தக்
காட்சி எனக்கு லில்லி புட் குள்ளர்களைப் போல் தோன்றியது.
இத்தனை கலவரத்திற்கும் களேபரத்திற்கும் நடுவில், இப்படி
ஒரு இலக்கியத் தரமான உதாரணம் தோன்றியதை எண்ணி ஒரு கணம் எனக்கு நானே சபாஷ் சொல்லிக்
கொன்டேன். இன்னொரு சபாஷ் கூட போட்டிருப்பேன்.
ஆனால் அதற்குள் என்மனைவி மீண்டும் குரல் கொடுத்தாள். அழுகைக்கு இரண்டு
செகண்டு லீவு விட்டிருந்த என் பையன், தன் அழுகையைத் தொடர்ந்தான்.
“அடப்பாவமே…இத்தனை ஈரத் துணியைப் போட்டதால்,கொடி கனமாயிட்டுது. கனம்
தாங்காமல் ஆணி பிடுங்கிக்கொண்டது என்று, எல்லோருக்கும் தெரிந்தை, புதியதாகத் தானே
கண்டுபிடித்த மாதிரி கூறினாள்.
அப்படியே பையனை அலாக்காகத் தூக்கி வெளியே எடுத்துக் கொண்டு போனாள். நான்
சர்வ ஜாக்கிரதையாக, ஒற்றையடி பாலத்தில் போவது போல் வெளியே
சென்றேன்.
உடைந்த கண்ணாடியின் மீது விழுந்த துணிகளை, கொடியில் இருந்த மற்ற
கனமான துணிகள் விழுந்த வேகத்தில்
‘டர்ரென்று கண்ணாடித் துண்டுகளின் மீது இழுத்து, சில்க்
டிரஸ்களை முன்னாள் டிரஸ்களாக்கி விட்டதுடன், இந்நாள் கந்தல் தோரணங்களாக்கி விட்டிருந்தன!
“எல்லாவற்றையும் சுருட்டி முதலில் குப்பைத் தொட்டியில் போட்டு விடு. கார்ப்பெட்டில் துண்டுகள் இருக்கும். இதுவும்
பழைய கார்ப்பெட்டுதான், போகட்டும். அதையும் சுருட்டிப் போட்டுவிடலாம். உம், இந்த சமயத்திலா அமீரின் சில்க் சட்டை, சில்க் டிரஸ் எல்லாம் தோய்த்திருக்கணும்? போய்த்
தொலையட்டும்” என்றேன்.
ரத்தக்கறை, புகைக்கறை பட்ட துணிகளையெல்லாம்
அகற்றிவிட்டோம். பல துணிமணிகள் பாழாகிப் போயிருந்தன. ”பாழாய்ப் போ”
என்று ’வில்லன்’ சிரிப்பு சிரித்தபடியே எல்லாவற்றையும் தூக்கிப் போட்டோம்.
”முதலில் நாளைக்கு ஸ்டோருக்குப் போய் எல்லாருக்கும் டிரஸ் வாங்கி வரலாம்”
என்றேன்.
”வெரிகுட்” என்றான் அமீர். * * * *
வெகு நாட்களாகக் கேட்டுக் கொண்டிருந்த மயில்கழுத்து கலர் டிரஸ்சை
என் மனைவி வாங்கிக் கொண்டாள். (அதற்குள், மேலும் பல கலர்களில் வாங்கிக்கொண்டதை நான் விவரிக்கப் போவதில்லை.)
என் மனைவி வாங்கிக் கொண்டாள். (அதற்குள், மேலும் பல கலர்களில் வாங்கிக்கொண்டதை நான் விவரிக்கப் போவதில்லை.)
அமீர் தன் பங்கிற்கு அரை நிஜார், முழு நிஜார், பைஜாமா, செட் என்று வாங்கிக் கொண்டான்.
மறுதினம் பள்ளிக்கூடம் போய் வந்தபோது அமீர் ஒரேகுஷியாகக் குதித்துக் கொண்டே வந்தான்.
“டாடி.. என் யானை பெயின்டிங்கிற்கு டீச்சர்
முதல் பரிசு கொடுத்தார். உங்கள் ஐடியாவினால் எனக்குப் பரிசு கிடைத்தது” என்றான்.
ஆமாம், அப்படி
என்ன ஐடியா நான் கொடுத்தேன் தெரியுமா?
மழைத் தண்ணீரில் நனைந்து, பெயின்ட் லேசாகக் கரைந்து
அரைகுறையாக இருந்த யானைப் படத்திற்கு ஒரு தலைப்புப் போடச் சொன்னேன். நான் சொன்ன தலைப்பு:
“மழையில் நனைந்த யானை!”
செம
ReplyDeleteசிரிச்சு முடியலை! அருமைனு வெறும் வார்த்தைகளால் பாராட்டினால் போதாது. :))))))))))))
ReplyDeleteமொழிபெயர்ப்பு மாதிரியே சொல்ல முடியாது!
ReplyDeleteஹாஹா! இதைப்போல ஒரு நகைச்சுவை கதையைப் படித்து எத்தனை நாட்களாகி விட்டன?
ReplyDeleteமொழிபெயர்ப்பு மாதிரியே தெரியலை. இயல்பா செம நகைச்சுவையா இருந்தது.
ReplyDelete1. முதல் இரண்டு பாரால ரெபெடிஷன் இருக்கு
2. கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம். நீளம் ஜாஸ்தினால திகட்டலா இருந்தது.
பேசாமல், கடுகு, கமலா பெயரை உபயோகித்திருந்தாலும் பெரும்பாலும் வித்தியாசம் தெரிந்திருக்காது
படம் யார் வரைந்தது? அல்லது படத்தை வைத்துக் கதையா?
ReplyDeleteநெல்லைத் தமிழன் அவர்களுக்கு, பின்னூட்டத்திற்கு நன்றி.
ReplyDeleteமுதல் இரண்டு பாரால ரெபெடிஷன் இருப்பதைச் சரி பண்ணிவிட்டேன்.
அடுத்தது: “நீளம் ஜாஸ்தி”. இரண்டு பாகமாகப் போட நினைத்தேன். ஆனால் போடவில்லை
படம் பற்றி: அவை என் டிஜிட்டல் கைவண்ணம்.
- கடுகு
படம் நல்லா இருக்கு, பொருத்தமா. பல்துறை வித்தகர் (வித்தவர் னு எழுதலை). உங்க எனெர்ஜியைப் பாராட்டறேன் கடுகு சார்.
Deleteநெ.த அவர்களுக்கு: பல்கலை wit-டகர் என்று எழுதி இருந்தால் இன்னும் சந்தோஷப்பட்டிருப்பேன்! - கடுகு
ReplyDelete