January 30, 2019

காதலியா? அரச பதவியா?


காதலியா?  அரச பதவியா? இப்படி ஒரு கேள்வி பல வருஷங்களுக்கு முன்பு இங்கிலாந்து மன்னருக்கு  முன்னே தோன்றியது. இந்தக் கேள்வியைக் கண்டு அவர் கலங்கவில்லை; இருதலைக்கொள்ளி எறும்பாக தவிக்கவில்லை. காரணம் அவர்  காதல் அவ்வளவு தீவிரமாகவும், உண்மையாக இருந்தது. அதனால் அவர் – எட்டாம் எட்வர்ட்- தன்னுடைய அரச பதவியைத் துறக்க முடிவு செய்தார்.


  அன்றைய காலகட்டத்தில், இங்கிலாந்து மன்னராக வரப் போகிறவர் அரச குடும்பத்தில் உள்ள ஒருவரைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது விதி. வேறு எவரையாவது மணந்தால் அவர் அரச  வம்சத்திலிருந்து நீக்கப்படுவார்; அது  மட்டுமல்ல அரச பதவியும் பின்னால் கிடைக்காது.
 தன்னுடைய குடும்பத்தாரிடமும் மதகுருமார்களும் அரசியல் தலைவர்களுடனும் தன்னுடைய காதலைப் பற்றி கூறியதுடன், வாலிஸைத் திருமணம் செய்து கொள்வதற்கு அவர்கள் சம்மதிக்க வேண்டும் என்றும் கேட்டுப் பார்த்தார். ஆனால் எல்லோரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.            ஏற்கனவே இரண்டு தடவை திருமணமாகிஇரண்டாவது திருமணம் விவாகரத்து வழக்கில் நிலுவையில் இருந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக உலகெங்கும் எல்லா பத்திரிகைகளும் இதை செய்திகளும் பின்னணியும் காதல் விவகாரம் ஆகியவை பற்றி பத்தி பத்தியாக எழுதின ஆனால் எதற்கும் கலங்கவில்லை. தன் காதலிலிருந்து சிறிதளவும் அவர் விலகவில்லை. அதில் உறுதியாக இருந்தார்.

January 18, 2019

லால்பகதூர் சாஸ்திரி


 நேருவிற்கு பிறகு யார் என்ற பெரிய கேள்வி அறுபதுகளில் எழுந்தது.   'AFTER NEHRU, WHO? 'என்ற தலைப்பில் ஒரு புத்தகம் கூட வெளியாயிற்று.
நேரு 1964-ம் ஆண்டு  காலமானதும், எந்தவித குழப்பமும் இல்லாமல் லால்பகதூர் சாஸ்திரி பிரதமர் ஆனார். எளிமையே உருவானவர்.



அவரை எப்படியாவது சந்தித்து, ஒரு சின்னக் கட்டுரையாவது எழுத வேண்டும் என்று என் மனம் துடித்தது.  டெல்லி போய் இரண்டு வருடங்களே ஆகி இருந்ததால், அவரை சந்திக்க அனுமதி வாங்குவது எப்படி என்பதெல்லாம் எனக்குத் தெரியவில்லை.

அவரைப் பற்றியச் செய்திகளை எல்லாம் விழுந்து விழுந்து படித்தேன். அப்போது எனக்கு ஒரு சின்னத் தகவல் கிடைத்தது. சாஸ்திரியின் மூத்த மகன்  ஹரி கிருஷ்ணா டெல்லியில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆயிரம் தயக்கத்திற்கு பிறகு துணிச்சலை வரவழைத்துக் கொண்டு. அந்தக் கம்பெனி டெலிபோன் எண்ணைக் கண்டுபிடித்து, அவருக்குப் போன் செய்தேன்.  அவரிடம் என்னைப் பற்றியும், குமுதம் பத்திரிகையைப் பற்றியும் கூறிவிட்டு, என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். என் கோரிக்கையைச் சொன்னேன்.

January 10, 2019

நெப்போலியனின் பேச்சின் வீச்சு!


முன்குறிப்பு: பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேண்டும் என்று மகாகவி பாரதி பாடினார். அதில் வெற்றியும் பெற்றார். பேச்சு திறத்தாலே வையத்தைப் வென்றுள்ளார்கள், ஆட்சிகளைப்  பிடித்துள்ளார்கள்: தக்க வைத்துள்ளார்கள்.
இரண்டாவது உலகப் போரில் சர்ச்சில் தனது வீரமிக்க   உரைகளாலேயே போரில் வென்றார் என்பார்கள். 
   மறக்க முடியுமா, 1947 ஆகஸ்ட் 15 அன்று  இரவு செங்கோட்டையில் நேருஜி நிகழ்த்திய  TRYST WITH  DESTINY உரையை? 
   மார்ட்டின் லூதர் கிங்கின் I HAVE A DRAEM, உரை, ஆப்ரகாம் லிங்கன்  கெட்டிஸ்பர்க் போர்க்களத்தில் நிகழ்த்திய அற்புதமான உரை ஆகியவை சரித்திரத்தில் செதுக்கப்பட்டுள்ளன.

நெப்போலியன்  மாவீரன் மட்டுமல்ல; வீரம் செறிந்த பேச்சும் அவருக்கு கைவந்த கலை. நெப்போலியனைப் பற்றிய சிறு குறிப்பை முதலில் தருகிறேன்.  

இத்தாலியில் 1769 ஆம் ஆண்டு ஆண்டு, ஆகஸ்ட் 15ஆம் தேதி நெப்போலியன் பிறந்தார். 16 வயதில் ராணுவத்தில் சேர்ந்தார். படிப்படியாக முன்னேறி 1804-ம் ஆண்டு மன்னரானார்.  அவருடைய ஆட்சிக் காலத்தில் ஐரோப்பாவில் ஒரு வல்லரசாகப் பிரான்சு ஆனது.