November 24, 2018

ஜார்ஜ் பெர்னாட்ஷா

 தெரிந்த பெயர் ; தெரியாத விவரங்கள்  
ஜார்ஜ் பெர்னாட்ஷா (26 July 1856 – 2 November 1950)

       ஜார்ஜ் பெர்னாட்ஷாவின் பெயர் தெரிந்த அளவு, அவரைப் பற்றிய பல தகவல்கள் பலருக்குத் தெரியாது.

     அவரைப் பற்றிய மூன்று துணுக்குகள் ஓரளவு பிரபலம். 
1. கிரிக்கெட்டைப் பற்றி அவர் சொன்ன ஒரு கருத்து.

  1. "Cricket is a game played by 11 fools and watched by 11,000 fools."  
    2.  My Fair Lady  அபாரமான திரைப்படம். அவர் எழுதிய PYGMALION   நாடகத்தின் திரை வடிவம்.
   
     3.அவரைப் பற்றிய ஒரு மாதிரியான’  துணுக்கும் சற்று பிரபலமானது. 
      ஒரு  பெண்மணி (Lady Astor ?) அவரிடம் காதல் வயப்பட்டு(!!) சொன்னாராம்: “நாம் இருவரும் திருமணம் செய்துக் கொள்ளலாம்.  நமக்கு பிறக்கும் குழந்தை, உங்களைப் போல் அறிவாளியாகவும் என்னைப் போல் அழகாகவும் இருக்கும்” என்றார்.
     “நீ சொல்வது சரிதான். ஒருக்கால், குழந்தை என்னைப் போல் ‘அழகாகவும்’, உன்னைப் போல் ‘அறிவாளி’யாகவும் பிறக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்” என்று சொன்னாராம் ஷா!
      இது ஒரு ரீல் துணுக்கு. இது மாதிரி சர்ச்சில், ஐன்ஸ்டீன் என்று பல பிரபலங்களின் பெயர்களிலும்  பல ஹாலிவுட் நடிகைகளின் பெயர்களிலும் இதே துணுக்கு வந்திருக்கிறது!)
 * ஷா எழுதிய நாடகங்கள் எல்லாம் 36 தொகுதிகளாக வெளியாகி உள்ளன.  
  *ஷா  முழுக்க முழுக்க சைவமாக இருந்தவர். 
*அவருக்கு ஆங்கில மொழியின் ‘ஸ்பெல்லிங்’-கை சீர்திருத்த வேண்டும் என்ற வெறி இருந்தது.  நோபல் பரிசுத்தொகயில்  ஒரு பகுதியை  இந்த பணியில் ஈடுபட்டுள்ள அமைப்புக்கு கொடுத்து விட்டார்.

 *ஒரு சமயம் பெர்னாட்ஷா அமெரிக்கா வந்திருந்தார். அப்போது ஒரு இளம் நாடக நடிகை, ஷாவை தனது நாடகத்திற்கு ஒத்திகைப் பார்க்க அழைத்தார். இது மாதிரி அழைப்புகளை ஷா சாதாரணமாக ஏற்பதில்லை.  ஆனால் இந்த அழைப்பை ஏற்று ஒத்திகைப் பார்க்கப் போனார். இடைவெளியில் அந்த நாடக ஆசிரியர் பெர்னாட்ஷாவிடம் அழாத குறையாக.. “நடிகர்களிடம் வேலை வாங்குவது கஷ்டமாக இருக்கிறது. பாருங்கள். இந்த சீனில் ஒரு நடிகர், சும்மா கொட்டாவி விடவேண்டும். அதைக் கூட சரியாக செய்யத் தெரியவில்லைஎன்றார்.  
     ”அப்படியா.. ஒன்று செய்யுங்கள். நீங்கள் எழுதிய நாடகத்தின் மீதிப் பகுதியையும் அவனுக்குப் படித்துக் காட்டுங்கள்.”  என்றார்.
      *ஷாவிற்கு தன்னைப் பற்றிய ஒரு கர்வம் உண்டு. ஒரு சமயம்  Claire Booth என்ற எழுத்தாளர் (பின்னால் தூதராக நியமிக்கப்பட்டவர்) ஷாவை லண்டனில் சென்று பார்த்தார்.  
  அவர் ஷாவிடம் “மிஸ்டர் ஷா… நான் இங்கு சந்திக்கும் முதல் நபர் நீங்கள் தான். இன்னும் யார் யாரை நான் பார்க்க வேண்டும் என்று சொல்கிறீர்கள்? ”.. என்று கேட்டார்.
      “அன்புள்ள மிஸ்டர் Booth! நீங்க பார்க்க வேண்டிய எல்லாரையும் பார்த்தாகிவிட்டது!” என்றார் கண் சிமிட்டியபடியே!
 * அவருடைய  MY FAIR LADY-க்கு, சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கார் பரிசு கிடைத்தது . அதைப் பெரிய கவுரவமாக அவர் எடுத்துக் கொள்ளவில்லை. பரிசைப் பெற்றுக் கொள்ள ஆர்வமும்  அவருக்கு இல்லை.  “அது அசல் தங்கத்தில் ஆன பரிசுஎன்று யாரோ அவரிடம் சொன்னார்கள். ‘தங்கமா?அப்படியானால் பரிசை அனுப்பச் சொல்லுங்கள்என்றாராம். பின்னால் பரிசு வந்தது. பார்த்தால் அது தங்கத்தில் செய்யப்பட்டிருக்கவில்லை!  
  *ஷாவின் நாடகங்களுக்கு நிறைய டிமாண்ட் இருந்த சமயம், பலர் அவரிடம் அனுமதி கேட்டு வருவார்கள். அவை நல்ல  வசூலைத்தரும் என்பது நிச்சயம்.
    Mrs, Warren’s Profession என்ற அவரது நாடகத்தைப் போட பென்சில்வேனியா
(அமெரிக்கா) விலிருந்து ஒருத்தர் கேட்டிருந்தார். 
 கவர்ச்சி நடிகை  MAE WEST நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்" என்றும் எழுதி இருந்தார்.
     அதற்கு ஷா எழுதிய பதில் “உங்கள் வேண்டுகோளுக்கு உடனடியாக சம்மதம் தெரிவிக்க முடியவில்ல. இங்கு வருமான வரி அதிகமாக உள்ளது. அது சற்று குறைந்ததும் பார்க்கலாம். அது வரை நான் காத்திருக்கிறேன். Mrs. Warren’s  காத்திருக்கட்டும். அது போல்  MAE WEST-ம் காத்திருக்கட்டும்என்று தந்தி அடித்து விட்டார்.
    * பெர்னாட்ஷாவின் வாழ்க்கையை திரைப்படமாகத் தயாரிக்க முயற்சி எடுக்கப்பட்ட போது, ஷாவாக நடிக்க   Monty Woolley என்ற நடிகரை யை நடிக்க வைக்கலாம் என்று நினைத்தார்கள். 
   “அவர் நடித்த படத்தைப் பார்த்த பிறகுதான் நான் சம்மதம் தெரிவிப்பேன்என்றார் ஷா. Woolley  நடித்த The  Pied Piper படம் அவருக்காகத் திரையிடப் பட்டது. அரைமணி நேரம் படம் ஓடியிருக்கும். “போதும். நிறுத்துங்கள் படத்தை. அவர் என் ’டைப் இல்லை’. அறிவாளியாகவும், இனிமையான குணம் படைத்தவராகவும் தோற்றம் அளிக்கிறார்.  பொருந்தாதுஎன்று சொல்லிவிட்டார் ஷா!
 * பிரபல நடிகர், டைரக்டர் ORSON WELLS  ஒருவர்தான் ஷாவின் நாடகத்தை எடிட் செய்ய அனுமதிக்கப்பட்டவர்.  ஷாவிற்கு ORSON WELLS ஃபோன் செய்து “உங்கள் Heartbreak House ’ நாடகத்தை சற்று எடிட் பண்ண உங்கள்அனுமதி வேண்டும்என்று கேட்டார்.
     “நான் எவருக்கும் அனுமதி வழங்கியதில்லை. ’தியேட்டர் கில்ட்’ கேட்ட போதே மறுத்து விட்டேன். அப்படியிருக்க உங்களுக்கு ஏன் சரி என்று நான் சொல்லவேண்டும்?” என்று கேட்டார்.
   “அதற்குக் காரணம் இருக்கிறது. ஏனென்றால் எப்படி ஒரு நாடகத்தை எடிட் செய்ய வேண்டும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இதற்கு முன்பு ஷேக்ஸ்பியரின் ஜூலியஸ் சீஸர் நாடகத்தை செய்தேன். திரைப்படம் அபார வெற்றி பெற்றதுஎன்றார்.
     “ஷேக்ஸ்பியருக்கு  ஓ.கே.  ஆனால் ஷாவுக்கு  ஓகே. யில்லைஎன்று சொல்லிவிட்டார்.
         Wells  விடவில்லை. ஒரு வாரம் கழித்து பெர்னாட் ஷாவிற்கு போன் செய்தார்.  “நீங்கள் சொன்னது சரிதான் உங்கள் நாடகத்தில் எங்கேயும் வெட்டு செய்ய முடியாது. ஒவ்வொரு வரியும் அபாரம் “ என்றார்.
    ”அப்படியா… அப்படியென்றால் உங்கள் இஷ்டப்படி எடிட் செய்ய என் சம்மதத்தைத் தருகிறேன்என்றாராம்!
  * எழுத்தார்வம் உள்ள ஒரு இளம் பெண்ணுமக்கு பெர்னாட் ஷாவிடம் பேச வாய்ப்பு கிடைத்தது. தனக்கு எழுத்தாளராக ஆக ஆர்வம் இருப்பதாக  சொன்னாள். அவளிடம் ஷா சொன்னார். இரண்டு வருஷம் நான் முயற்சி செய்து, ஒரு புத்தகம் எழுதினேன். எந்தப் பதிப்பகமும் நான் எழுதியதைப் போட முன் வரவில்லைஎன்றார்.
     “அடப் பாவமே! அத்தனை வருட முயற்சியும் விரயம் ஆகிவிட்டதா? என்று கேட்டாள் அவள்.
     “இல்லை எட்டு எட்டு வருஷம் விடாமல் முயற்சி பண்ணிய பிறகு அந்த பதிப்பக எடிட்டர்கள் புரிந்துக் கொண்டார்கள். நான் சரியான விடாக் கண்டன் என்று.  அதன் பிறகு அவர்கள் வழிக்கு வந்தார்கள்என்றார்.
     * 1947 மே மாதம், ஷாவைப் பார்க்க அவருடைய நண்பர் ஒருவர் வந்தார்.”  “உங்களுக்குக் கிடைத்த  நோபல் பரிசைப் பார்க்க விரும்புகிறேன். காட்டுங்கள்.”  என்று கேட்டார்.
  “இதோ கொண்டு வருகிறேன்என்று சொல்லிவிட்டு மாடிக்குப் போனவர் தன் அறையில் மேலும் கீழுமாகத் தேடினார். கிடைக்கவில்லை.    “ஸாரி..நோபல் பரிசை எங்கே வைத்தேன் என்று தெரியவில்லை”  என்று சாதாரணமாகக் கூறி விட்டார்..
  * நோபல் பரிசுத் தொகையைப் பற்றி ஷா சொன்னது. “நோபல் பரிசு பணம் எனக்கு கிடைத்ததும், பண உதவிக் கேட்டு ஏராளமான கடிதங்கள் எனக்கு வந்தன. ”என் பரிசுத் தொகை செக்கை திருப்பி அனுப்பி விடப் போகிறேன்என்று அறிவித்தேன். அதன் பலன் விபரீதமாகிவிட்டது.  பண உதவி கேட்டு பல ஏழைகள் எழுதினார்கள். “உங்களுக்கு பணம் தேவை இல்லை.சரி,  அதை திருப்பி அனுப்பும் அளவு நீங்கள் வசதி உள்ளவராக இருப்பதால், எங்களைப் போன்ற ஏழைகளுக்குக் கொடுத்து உதவலாமே!.எதற்குத் திருப்பி அனுப்ப வேண்டும்!என்று  எழுதினார்கள்.
     *1948 ம் ஆண்டு REX HARRISON-னுக்கு அவருடைய  மனைவி, ஷாவின் புகைப்படத்தைப் பரிசாக அளிக்க விரும்பினார். ஷாவின் பெரிய படத்தை அவருக்கு அனுப்பி அதில் கையெழுத்துப் போட்டுத் தருமாறு கேட்டுக் கொண்டார். படத்தை சிறிது நேரம் கவனமாக பார்த்து விட்டு ஷா அதன் மேல் பகுதியில் கையெழுத்துப் போட்டார். அதன் கீழே அவர் எழுதியது: ”இந்த படத்தின் ஒரிஜினல் ஆசாமிக்கு தொண்ணூறு வயதுதான் ஆகிறது. படத்தில் இருபது வயது குறைவாகவும், சற்று பளிச் என்றும் இருக்கிறார்!
     * கேப்ரியல் பாஸ்கல் என்ற திரைப்படத் தயாரிப்பாளர் ஷாவின் நண்பர். 1920- களில் ஷாவை சந்திக்க வந்தபோது பாஸ்கல் மிகவும் அல்லல்பட்டுக் கொண்டிருந்தார். ஷா என்ன செய்தார் தெரியுமா? தன்னுடைய எல்லா நாடகங்களையும் திரைப்படமாக்கும் உரிமையை அவருக்கு ஷா கொடுத்து விட்டார். பாஸ்கலுக்கு லாட்டரி பரிசு போல் அடித்தது யோகம். விரைவிலேயே அவர் பெரிய பணக்காரராக ஆகிவிட்டார்!
    *  ஒரு சமயம் ஹார்ட்விக் என்ற நடிகர் (பின்னால் சர்’ பட்டம் பெற்றவர்) ஷாவின் பிறந்த நாள் விழாவிற்குத் தன் 16 வயது மகன் எட்வர்டுடன் வந்திருந்தார். அவனை ஷாவிற்கு அறிமுகம் செய்து வைத்தார்.
அவன் கையைக் குலுக்கியபடியே ஷா சொன்னார். “நீ பெரியவனானதும் பலரிடம், ‘ நான் ஒரு சமயம் பெர்னாட் ஷாவிடம் கைகுலுக்கி இருக்கிறேன்என்று பெருமை அடித்துக் கொள்ளலாம். அப்போது அவர்கள் என்ன கேட்பார்கள் தெரியுமா? ”யாருடா அந்த பெர்னாட்ஷாஎன்று கேட்பார்கள்!என்றார்.
     * காலமாவதற்குப் பல வருடங்களுக்கு முன்னமேயே ஷா ஒரு நாடகத்தை எழுதியிருந்தார்.  ஆனால் அதைப்போட யாரும் முன் வரவில்லை. பத்து வருஷங்களுக்குப் முன்பு அவரால் நிராகரிக்கப்பட்ட  ஒரு தயாரிப்பாளர், அதைப் போட விரும்பினார். ஷாவிற்கு கடிதம் எழுதினார். அதற்கு ஷா எழுதிய பதில், No!...Better Never than Late!”
 * நோபல் பரிசையும் ஆஸ்கார் விருது  ஆகிய இரண்டையும் வாங்கிய ஒரே நபர் பெர்னாட்ஷா தான்.
 * கல்லூரிக்குள்  காலடி வைக்காதவர் ஷா.

6 comments:

  1. உண்மையிலேயே பல தகவல்களும் புதியது தான். மற்றபடி முதல் மூன்றும் ஓரளவு படித்துக் கேள்விப் பட்டிருக்கேன்.

    ReplyDelete
  2. நீங்கள் எழுதியிருப்பதுபோல் முதல் மூன்று தகவல்கள்தான் இதுவரை கேள்விப்பட்டிருந்தேன்.

    மற்றவற்றையும் படிக்க மிக ரசனையாக உள்ளது.

    ஓவியர் பிகாசோ பற்றியும் இதுபோன்று கேள்விப்பட்டிருக்கிறேன் (அவர் ஓவியங்களைப்பற்றி).

    ஒருவேளை பெரிய திறமைசாலிகள், கொஞ்சம் வியர்டாக இருப்பார்க்களோ? அதாவது எப்படி ரியாக்ட் செய்வார் என்று புரிந்துகொள்ளமுடியாதவாறு இருப்பார்களோ? ஜெயகாந்தனுடைய கதையைப் படமாக்கவேண்டி அவரைப் பலமுறை அணுகியவருக்கு, ஒரு கடிதத்தில், OK, JK. என்று பதிலெழுதினாராம்.

    ReplyDelete
  3. நீங்கள் சந்தித்த பிரபலங்களில் 'கொஞ்சம் மறை கழண்டதுபோல்' (ஆனால் புத்திசாலித்தனமான) பிஹேவ் பண்ணியவர்கள் இருந்திருக்கிறார்களா? (இருந்திருந்தாலும் நீங்கள் எங்கே சொல்லப்போகிறீர்கள் ஹா ஹா ஹா)

    ReplyDelete
  4. நெல்லைத் தமிழன் அவர்களுக்கு: நல்ல கேள்வி. நான் சந்தித்த பிரபலங்கள் யாவரும் மறை கழண்ட எழுத்தாளரைச் சந்தித்து இருக்கிறார்கள் என்று தான் சொல்ல முடியும்! -கடுகு

    ReplyDelete
  5. பெர்னாட்ஷாவின் நாடகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றனவா. அவ்வாறு இருப்பின் அந்நூல் குறித்த தகவல்களைத் தெரிவிக்க இயலுமா நண்பரே?

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!