ஒரு சின்ன முன்னுரை: சில வருடங்களுக்கு முன்பு
அமெரிக்கா சென்று, சுமார் இரண்டரை வருஷங்கள் இருந்துவிட்டு சென்னை திரும்பினேன். விமானத்தில்
சில சாக்லேட்டுகளைக் கொடுத்தார்கள். அதை அப்படியே
எடுத்து வந்தேன்.

இரண்டரை வருடம் ‘பாலைவனமாக’ இருந்த
வீட்டின் மாடியில், திடீரென்று சாக்லெட்டுகள் வைக்கப்பட்டதை எறும்புகளுக்கு யார் தகவல்
கொடுத்திருப்பார்கள்? அலமாரிக்கு வரும் வழியை எந்த
Google map-ல் அவை பார்த்திருக்கும்? அதுவும் இரவு 11
மணிக்கு, முதல் மாடி அலமாரிக்குள் இருப்பதை அவைகளுக்கு யார் whatsup ல் தகவல் கொடுத்திருப்பார்கள்? வியப்புக்குரிய விஷயம்.
கிட்டத்தட்ட இதேமாதிரி அனுபவம் இஸ்ரேல் எழுத்தாளர் Ephraim Kishon-க்கு ஏற்பட்டிருக்க வேண்டும் ஒரு அனுபவக் கட்டுரையை
எழுதியுள்ளார். அதற்கு ‘வேஷ்டி, ஜிப்பா’
போட்டுத் தமிழ்க் கதையாக்கித் தருகிறேன்.
எங்கள் வீட்டு எறும்பே!

ஒவ்வொரு நாள் காலையிலும், கறுப்பு சாக்கால் கோடு போட்டது போல் ஒரு எறும்பு வரிசை என் வீட்டிற்குள் நுழையும். தினமும் அவைகளைப் பார்த்துப் பார்த்துப் பழகி விட்டதால் பல எறும்புகளை பத்தடி தூரத்திலிருந்து பார்த்தாலே பரிச்சயமான எறும்புகள்தான் என்பதைத் தெரிந்துக் கொண்டு விடுவேன். மற்ற மாதங்களை விட கோடைக் காலத்தில் எறும்புகள் அதிகம் வரும். (ஊரிலிருந்து ’சம்மர்-வெக்கேஷனி’ல் உறவினர்கள் வந்திருக்கக் கூடும் என்று எண்ணிக் கொள்வேன்!)