இந்தப் பதிவிற்கு மிகவும் பொருத்தமான தலைப்பு இது என்று, பதிவைப் படித்து முடித்த பறகு நீங்கள் நிச்சயம் சொல்வீர்கள். லாட்டரியில் அதிக தொகையைப் பரிசாகப் பெற்றவர்களின் கதையைத் தர உள்ளேன்.
1970-களில் திடீரென்று இந்தியாவில் ஒரு பயங்கர தொற்று நோய் பரவியது.
எல்லா மாநில அரசுகளையும் அது பிடித்துக் கொண்டது. அவை அவை லாட்டரி டிக்கெட்டுகளைப் போட ஆரம்பித்தன. ‘டிக்கெட் விலை ஒரு ரூபாய்; பரிசு ஒரு லட்சம்’ என்று இருந்தாலும், அன்றைய கால கட்டத்தில் ஒரு லட்சம் என்பது பெரிய தொகை. (இன்று வேண்டுமானால் ஒரு லட்சம் ரூபாயை லஞ்சமாகக் கூட வாங்கமாட்டார்கள். “ஹும் …ஒரு லட்சத்திற்கு நாலு பாப்கார்ன் பொட்டலம் கூட வராது”
என்று சொல்லி வாங்க மறுப்பார்கள்.!)
உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அந்த கால கட்டத்தில் தமிழ்நாடு அரசும் லாட்டரி திட்டத்தைக் கொண்டு வந்தது. லாட்டரி டிக்கெட் விற்கும் கடைகளில் கூட்டம் அலை மோதியது. சட்டம், ஒழுங்கு குலைந்து விடுமோ என்று கருதி. லாட்டரி டிக்கட்டுகள் சில சமயம் காவல் நிலையங்களில் விற்பனை செய்தார்கள்!).
ஒன்றிரண்டு வருஷங்கள் கழித்து, டில்லி, ஸ்டேட்ஸ்மென் பத்திரிகையில், லாட்டரியில் பரிசு பெற்றவர்களைப் பேட்டி கண்டு,
அவர்கள் அனுபவத்தைத் தொடர் கட்டுரையாக வெளியிட்டார்கள்.. (அவற்றிலிருந்து சில தகவல்களைத் திரட்டி, தமிழில் நான் எழுதிய கட்டுரை
தினமணி கதிரில் ஒரு இணைப்பு அளவிற்கு, ஏழு, எட்டு பக்கங்களில் வந்தது.)
தினமணி கதிரில் ஒரு இணைப்பு அளவிற்கு, ஏழு, எட்டு பக்கங்களில் வந்தது.)
பரிசு பெற்றவர்கள் யாரும் மன நிம்மதியோ சந்தோஷமோ அடைய வில்லை. உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பல ‘திடீர்’ நண்பர்கள் பணம், பணம் என்று பிய்த்ததையும்,
பலர் கோபித்துக் கொண்டு உறவையே துண்டித்து விட்டதையும் வருத்தத்துடன் சொல்லி இருந்தார்கள்.
சரி, இதெல்லாம் பழைய கதை. நாற்பது, ஐம்பது வருஷத்திற்கு முந்தையது என்று தள்ளிவிடலாம்.
சமீப ஆண்டுகளில் பரிசு பெற்றவர்கள் அனுபவம் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள விரும்பினேன்.
முக்கியமாக, அமெரிக்காவில் ஒரு பிரம்மாண்ட லாட்டரியில் 314.9 மில்லியன் டாலர் பரிசு பெற்ற விட்டேகர் என்பவரைப் பற்றி எழுத கொஞ்சம் வலை போட்டேன். TIME இதழில் சில வருஷங்களுக்கு முன்பு வெளி வந்த தொடர் கட்டுரையும் கிடைத்தது. அப்போது வேறு சில லாட்டரி வெற்றியாளர்களைப் பற்றியும் தகவல் கிடைத்தது.
முதலில் என் கவனத்தைக் கவர்ந்தது இங்கிலாந்தில் ஒரு லாட்டரியில் வெற்றி பெற்ற MICHAEL CARROL என்பவரின் ‘கதை’. முதலில் அதைப் பார்த்துவிடலாம்.
பிறகு விட்டேகர் கதைக்குப் போகலாம்.
கேரல் என்ற 19 வயது இளைஞனுக்கு தேசிய லாட்டரியில் 2002’ம் ஆண்டு சுமார் 18 மில்லியன் டாலர் பரிசு கிடைத்தது. முனிசிபல் குப்பை லாரியில் சென்று குப்பையை எடுத்துக் கொட்டும் வேலையில் கேரல் இருந்தான்.
“ ஏராளமான தொகைப் பரிசாகக் கிடைத்தும், அவன் அதை எந்த ஹோட்டலிலும் கொண்டாட முடிவில்லை. காரணம், அவன் அந்த வயதிலேயே ஏகப்பட்டச் சில்லறை குற்றங்கள செய்து பல தடவைக் கைதாகி இருக்கிறான்.
“அவன் எந்த கேளிக்கை விடுதிக்குள் நுழையவதற்கும் நீதிமன்றம் தடைவிதித்துஇருந்தது. குடித்து விட்டு அவன் செய்த கலாட்டாவிற்கு அவனுக்கு கிடைத்த பரிசு இது. சரி, லாட்டரியில்தான் ஏகப்பட்ட பணம் வருகிறதே, கார் வாங்கலாம் என்று அவன் நினைக்கவில்லை. காரணம், அவனுக்குக் கார் ஓட்டவும் நிரந்தர தடையை நீதிமன்றம் விதித்திருந்தது.
2004 –ம் ஆண்டு அவன் போதை மருந்துடன் கையும் களவுமாக பிடிபட்டான். மருத்துவ சோதனைக்கு வருமாறு அவனுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்கள். ஆனால் அவன் போகவில்லை. அப்படி வராதது ஒரு குற்றம் என்பதால் அவனுக்கு ஐந்து மாத சிறைத் தண்டனையை கோர்ட் விதித்தது
லாட்டரியில் வந்த பணத்தை முழுதுமாக எட்டு வருஷங்களில் குடி, சூதாட்டம், போதை மருந்துகள்(தினசரி 3000 டாலர் மதிப்பு), போதாதற்கு ஏதாவது காரணத்தைச் சொல்லி அட்டகாசமான பார்ட்டிகள், 5 லட்சம் டாலர் மதிப்பு வீடு என்று செலவழித்து அம்பேல் ஆக்கிவிட்டான். வேலையும் இல்லை, வருவாயும் இல்லை. மொத்த பணத்தையும் பந்தாடிவிட்டான்,
இவ்வளவு பெரிய (முன்னாள்! ) செல்வந்த னுடன் வாழப் பிடிக்காமல் அவனுடைய மனைவியும் பெண்ணும் அவனை விட்டுப் பிரிந்து போய் விட்டனர்.
பணமெல்லாம் தீர்ந்து போனதால் இரண்டு தடவை தற்கொலை செய்து கொள்ளவும் முயன்றிருக்கிறனாம்!
வருவாயும் இல்லை; வேலையும் இல்லை வேலை இல்லாத நபர்களுக்கு இங்கிலாந்தில் சிறிய உதவித் தொகையாக மாதாமாதம் 40 பவுண்ட் தருகிறார்கள். அதற்கு அவன் மனு போட்டான்.
2010 வருஷம் அவன் மறுபடியும் குப்பை லாரி ஊழியன் வேலைக்கு மனு போட்டான். “இதில் எனக்கு எந்த வித கவுரவக் குறைவும் இல்லை” என்று பத்திரிகை பேட்டியில் சொல்லி இருக்கிறான். அந்த வேலை கிடைக்கவில்லை. இப்போது ஒரு பிஸ்கட் ஃபேகக்டரியில் எடுபிடியாக வேலை செய்கிறானாம்!
அவனைப் போல் லாட்டரியில் மிகப் பெரிய பரிசைப் பெற்றிருந்தவரைப் பற்றித் சில தகவல்கள் வந்திருந்த சமயம், ஒரு பத்திரிகை நிருபர் மைக்கேலைப் பேட்டி கண்டார்.
“லாட்டரி பரிசை வென்ற அவருக்கு என்ன அறிவுரை வழங்க விரும்புகி றீர்கள்?” என்ற கேள்விக்கு அவன் சொன்ன பதில்: “பரிசு பெற்ற அவர் பத்திரிகைகளுக்குக் கொடுத்த பேட்டியைப் பார்த்தேன். அவருடைய மகள் ஆஸ்திரேலியாவில் இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்… அவர் இங்கிலாந்தை விட்டே அங்கு போய்விட வேண்டும். பரிசுப் பணத்தை அனுபவிக்கவும் முடியும். பயமில்லாமல் வாழவும் முடியும்.”.
பாவம், மைக்கேல் கேரல்!
விட்டேகர் ஜேக்
உலகிலேயே எந்த லாட்டரியிலும் யாரும் பெறாத அளவு மிக மிக அதிகமான தொகையை பரிசாகப் பெற்றவர் ஜேக் விட்டேகர். வருஷம் 2002. தொகை? அதிர்ச்சி அடையத் தயாரா? 315 மில்லியன் டாலர். பல மாநிலங்கள் சேர்ந்து நடத்திய ‘பவர்பால் லாட்டரி’யில் ஒருவரே மொத்த பரிசையும் பெற்றார்.
மேற்கு வர்ஜினியா என்ற (அமெரிக்க) மாநிலத்தில் அவர் ஒரு கட்டட கான்டிராக்டர். ஏற்கனவே அவர் பெரிய செல்வந்தர்.
பரிசுத் தொகையைத் தவணை முறையிலும் வாங்கி கொள்ளலாம். மொத்தமாகவும் வாங்கிக் கொண்டால் பல லட்சம் டாலடர்கள் வரியாகப் பிடித்துக் கொண்டு மீதியைத் தான் கொடுப்பார்கள். இவர் மொத்தமாக வாங்கிக் கொண்டார். அவருக்குக் கிடைத்தது: சுமார் 1134 லட்சம் டாலர்.
பரிசுத் தொகையைத் தவணை முறையிலும் வாங்கி கொள்ளலாம். மொத்தமாகவும் வாங்கிக் கொண்டால் பல லட்சம் டாலடர்கள் வரியாகப் பிடித்துக் கொண்டு மீதியைத் தான் கொடுப்பார்கள். இவர் மொத்தமாக வாங்கிக் கொண்டார். அவருக்குக் கிடைத்தது: சுமார் 1134 லட்சம் டாலர்.
பரிசுத் தொகையில் பத்து சத விகிதத்தை பல தொண்டு நிறுவனங் களுக்குக் கொடுத்தார்.
பரிசு விழுந்த டிக்கெட்டை எங்கு வாங்கினாரோ, அந்த உணவு விடுதியின் மானேஜருக்கு (அவர் ஒரு பெண்மணி) ஒரு வீடு மற்றும் ஒரு கார் வாங்கி கொடுத்தார். அத்துடன் சுமார் 45,000 டாலர் ரொக்கமும் கொடுத்தார்.
இவரிடமிருந்து பணத்தைக் கொள்ளையடிக்கப் பல கில்லாடித் திருடர்கள்,
தக்க சமயத்திற்காகக் காத்திருந்தார்கள். சில மாதங்கள் சென்றன. அவர் ஒரு நாள் ஒரு இரவு விடுதி நிகழ்ச்சியைப் பார்க்கப் போனார். பைத்தியக்கார ஆசாமி, கையில் 5 லட்சம் டாலரை எடுத்துக் கொண்டு போனவர், அதைக் காரிலேயே வைத்து விட்டு, நிகழ்ச்சியைப் பார்க்கப் போனார்.
‘நல்ல சமயமடா’ என்று சொல்லி, அதை நழுவ விடாமல், திருடர்கள் காரிலிருந்த பணப் பெட்டியை எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள்.
அவர் வழக்கமாகப் போகும் கிளப்பின் மானேஜரும், அங்கு நடனமாடும் ஒரு பெண்ணும் சதி தீட்டினார்கள். அவரது மதுபானத்தில் மயக்க மருந்து போட்டு, அவரைக் கொள்ளை அடிக்கத் திட்டமிட்டார்கள். ஆனால் அவர்கள் திட்டம் எப்படியோ வெளியே தெரிந்து விட அவர்களைக் கைது செய்தது காவல் துறை.
பணம் வந்தால் அறிவு அழிந்து போகும் என்பது மட்டுமல்ல, உடனே திமிர் வரும். மறுபடியும் காரில் பணத்தை வைத்து விட்டு ஏதோ, ஒரு கடைக்குப் போன போது, அதை சுருட்டிக் கொண்டு போய் விட்டார்கள். எவ்வளவு தொகை எட்டு லட்சம் டாலர்கள். (பின்னால் போலீஸ் திருடர்களைக் கண்டுபிடித்துப் பணத்தைத் தக்க வைத்து விட்டதாம்.
சில மாதங்கள் கழித்து, அவருக்கு மற்றொரு ‘ஷாக்’ ஏற்பட்டது. அவருடைய பேத்தியின் காதலன் (வயது 18;) விட்டேக்கர் வீட்டில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டான். அதிக அளவு போதைப் பொருட்களை அவன் சாப்பிட்டிருந்தான். அப்பாடா, நம் மேல் பழி விழவில்லை’ என்று அவர் பட்ட சந்தோஷம் சில வாரங்களில் ‘பொசுக்’ கென்று போகச் செய்துவிட்டது. மற்றொரு சம்பவம்.
அவரது பேத்தி போதைப் பொருட்களை அதிகமாக உட்கொண்டதால், இறந்து போனாள்.
அவரது பேத்தி போதைப் பொருட்களை அதிகமாக உட்கொண்டதால், இறந்து போனாள்.
இரண்டு வருஷங்களுக்கு முன்பு குடித்து விட்டு காரை ஓட்டிச் சென்ற போது போலீஸ் அவரைப் பிடித்தது. அவருக்கு கோர்ட் நோட்டீஸ் அனுப்பியது. அந்த வழக்கு, இவரது பெண் இறந்து போன சில மாதங்கள் கழித்து விசாரணைக்கு வந்தபொது, “என் பேத்தியின் மரணம் தொடர்பாக யாரையும் கைது செய்யக் காணோம்…என்னைப் போய் படாதபாடு படுத்துகிறீர்கள் ‘என்று’ அரற்றினார்.
இத்தனை தொல்லைகள் போதாதென்று அவர் ஒரு சூதாட்ட விடுதியில், பெரிய அளவில் சூதாடி சுமார் 15 லட்சம் டாலர் நஷ்டப்பட்டு, அந்தத் தொகையைச் ‘செக்’காக விடுதிக்குக் கொடுத்தார். வங்கியில் பணம் இல்லாமல் போகவே, ‘செக்’ திரும்பிவிட்டது.
அவருடைய பேத்தி இறந்த சில மாதங்களுக்குப் பிறகு அவருடைய பெண் (பேத்தியின் தாய்) திடீரென்று இறந்து போனார்.
போதாதற்கு, அதற்கு அடுத்த வருஷம் அவருடைய வீடு தீ பிடித்து சாம்பலாகி விட்டது. (நல்ல காலம், தீ பிடித்த போது வீட்டில் இருந்த அவருடைய மனைவி தப்பித்து விட்டார்!) பின்னால் அவர் பிரிந்து விட்டாராம்!
லாட்டரி பரிசு என்ற அதிர்ஷ்டம் அவரைப் பொறுத்தவரை பயங்கரக் கனவாக அமைந்து விட்டது.
ஒரு பத்திரிகை பேட்டியில் அவர் சொன்னது; “என் நண்பர்கள் யாவரும் என்னிடமிருந்து பணத்தைக் ‘கடனா’க கேட்பதிலேயே குறியாக இருந்தார்கள். பணத்தைக் கடனாக பெற்றவுடன், நட்பு முறிந்து விடுகிறது.”
இந்த லாட்டரி பரிசு கிடைப்பதற்கு முன்பே அவர் ஒரு பெரிய செல்வந்தராக இருந்தார். பரிசு பெற்ற போது அவருக்கு வயது 55. பல்வேறு தொழில்களைச் செய்து வந்தார். அவரது நிறுவனத்தில் கடைநிலை ஊழியரின் சம்பளம் (2002-ல்) ஒரு மணி நேரத்திற்கு 36 டாலராம்!
ஆனால் அவருடைய குடிப் பழக்கம், இரவு விடுதி விஜயங்கள், தாறுமாறான நடத்தைகள் காரணமாக பல்வேறு விதமான வழக்குகளைச் சந்திக்க வேண்டிய வந்தது. சுமார் 460 வழக்குகள் அவர் சந்திக்க வேண்டி வந்தது. ஏறக்குறைய 90 சதவிகிதம் வழக்குகள் பணம் பறிப்பதற்காக போடப்பட்ட வழக்குகளாம்..
“பத்திரிகைகள் என்னைப்பற்றிக் கற்பனையாகப் பல விஷயங்களை எழுதி வருகின்றன… நான் குடிப்பதை விட்டு விட்டேன். ‘விட்டேகர் டிரஸ்ட்’ மூலம் இரண்டு தேவாலயம் கட்டிக் கொடுத்து இருக்கிறேன், கிட்டதட்ட 230 லட்சம் டாலர் செலவில்! போகட்டும். என்னைப் பற்றி எல்லோரும், ‘லாட்டரியில் பரிசு அடித்த பைத்தியக்காரன்’ என்றுதான் ஞாபகத்தில் வைத்துக் கொள்வார்கள். நான் செய்த ஏராளமான உதவிகளை யாரும் நினைத்துக் கூட பார்ப்பதில்லை. ’பரிசு விழுந்த லாட்டரி டிக்கெட்டை நான் கிழித்துப் போடாதது என் முட்டாள்தனம்” என்று பல்வேறு சமயம் சொல்லி இருக்கிறார்!
இதைச் சொன்னவர், உலகிலேயே அதிகத் தொகையை லாட்டரியில் பரிசாகப் பெற்றவர் என்பதை
நம்பமுடிகிறதா?
முக்கிய குறிப்பு: இந்தப் பதிவைத் தட்டச்சு செய்து உதவியது: சகோதரி திருமதி . சுமதி ராஜா. அவருக்கு என் நன்றி
முக்கிய குறிப்பு: இந்தப் பதிவைத் தட்டச்சு செய்து உதவியது: சகோதரி திருமதி . சுமதி ராஜா. அவருக்கு என் நன்றி
ஒழுக்கமா இருந்தா லாட்டரிச் சீட்டில் பரிசு விழாதோ? அல்லது, ஒருவர் பரிசு பெற்றவுடன் மற்றவர்களின் வயிற்றெரிச்சல், பரிசு பெற்றவருடைய வாழ்க்கையை அழித்துவிடுகிறதோ?
ReplyDeleteபொதுவா, அளவுக்கு அதிகமா எது வந்தாலும் (புகழோ, பணமோ எதுவானாலும்), உடனே அவர்களால் நிலைகொள்ள முடியாது. கடைசியில் அது அவர்களின் அழிவில் கொண்டுபோய் விடுகிறது. அதீத அரசியல் வெற்றிகளும் உடனே மமதையில் கொண்டுபோய்விடுகிறது.
எதுவுமே அளவுக்கு அதிகமாகக்கூடாதோ?
உண்மை தான். பணம் அதிகம் இருந்தால் நிம்மதி போய் விடும் என்பது முழுக்க முழுக்க உண்மையே! ஆனால் எனக்குத் தெரிந்து தமிழக அரசு நடத்திய லாட்டரியில் பணம் கிடைத்த இரு குடும்பங்கள் பின்னால் மகிழ்ச்சியாகவே வாழ்க்கை நடத்தினார்கள். இருவரும் வாடகை வீட்டில் ஒண்டுக் குடித்தனம். அதில் ஒரு குடும்பம் பக்கத்து வீட்டில் சமைத்துச் சாப்பிட்டது போக மீதம் இருப்பதை வாங்கிக் கொண்டு சாப்பிடும் அளவுக்குக் கஷ்டப்பட்ட குடும்பம். நான்கு, ஐந்து குழந்தைகள். லாட்டரியில் ஒரு லட்சம் விழுந்ததும் அவங்க வாழ்க்கையே திசை மாறியது. இரு குடும்பங்களுமே சொந்த வீடு கட்டிக் கொண்டு போனார்கள். மீதப் பணத்தை டெபாசிட் செய்து வட்டியைச் சிக்கனமாகச் செலவு செய்து குழந்தைகளைப் படிக்க வைத்தார்கள். சிறுகக் கட்டிப் பெருக வாழ் என இதைச் சொல்ல முடியாது! ஏனெனில் அடிப்படையே அந்த ஒரு லக்ஷம் ரூபாய் தானே!
ReplyDeleteஅதிக பணம், அதுவும் திடீர் பணம் சுற்றி உள்ள பலருக்கும் வயிற்றெரிச்சலை உண்டாக்கும். ஆனால் நீங்கள் உதாரணமாக காட்டியிருக்கும் இருவருக்கும் இருந்த தீய பழக்கங்கள்தான் அவர்களை கீழே தள்ளி விட்டதோ என்று தோன்றுகிறது.
ReplyDeleteஎன் அக்கா வீட்டில் டிரைவராக இருந்தவருக்கு லாட்டரியில் பரிசு விழுந்தது. அவர் அந்த பணத்தில் இரண்டு சொந்த கார்களை வாங்கி, அதன் மூலம் சம்பாதித்து, வீடு வாங்கி, இரண்டு மகள்களையும் நன்கு படிக்க வைத்தார்.
பணம் இருந்தாலும் பிரச்சனை இல்லா விட்டாலும் பிரச்சனை தான். பரிசு தொகை சிறிய அளவில் இருந்தால் சிலபேர் மட்டுமே பரிசு சீட்டு வாங்குவர், பரிசு கிடைத்தாலும் பிரச்சனை வராது. அல்லது பரிசு பணத்திற்கு பதிலாக வீடு, கார், சுற்றுலா டிக்கட் போன்றவற்றை பரிசாக கொடுக்கலாம்.
ReplyDeleteஎன்ன சார்... ரொம்ப நாளாயிடுத்தே... அடுத்த இடுகை வரலயே. நாலாயிரம் வேலைல பிஸியாகிட்டீங்களா?
ReplyDeleteDear Kadugu: It is not that easy to write "humor", especially a humorous short story. You have done a fine job in your published books. I have bought a few of them from Amazon.com for my kindle, and they will help me in my efforts to write Tamil humor. I wish you the very best. I came to know about you from Pas Pasupathy (Facebook). Ananth Sundararajan, Norman, Oklahoma, U.S.A.
ReplyDelete