January 28, 2018

நான் ஏன் எழுதுகிறேன்?



சுய விசார கேள்விகளுக்கு எனக்குப் பதில் தெரியாது என்பதாலேயே அத்தகைய கேள்விகள் என் மனதில் தோன்றாதவாறு பார்த்துக் கொள்வேன்! உதாரணமாக, ’எனக்குஏன் முழுக்கைச் சட்டை பிடிக்கிறது’, ’நான் ஏன் இட்லிக்கு மிளகாய்ப் பொடியும், தோசைக்கு  சட்னியும் போட்டுக் கொள்கிறேன்’, ’பால் பேனாவை விட இங்க் பேனாதான் எனக்கு ஏன்  பிடிக்கிறது’ என்பது போன்ற பல கேள்விகளுக்கு எனக்கு விடை தெரியாது.  ‘நான் ஏன் எழுதுகிறேன்?’ என்று கேள்வி என் மனதில் இதுவரை தோன்றியதே இல்லை.
என்னைப் பார்த்துதான் பலர் "நீ ஏன் எழுதுகிறாய்? ஏன் எழுதுகிறாய்" என்றும், இதைவிட சலிப்புடனும் கேள்விகள் கேட்டி ருக்கிறார்கள். சமயத்திற்குத் தகுந்த மாதிரியும், ஆளுக்குத் தகுந்த மாதிரியும் பதில் சொல்லி இருக்கிறேன்.     இப்போது அந்த மாதிரியும் பண்ண முடியாது என்பதால், மாற்று விடையைக் குடைந்துப் பார்த்தேன். அதன் பலன் தான் இந்தக் கட்டுரை.  “நீங்கள் மண்டையைக் குடையாமல் இருந்திருக்கலாம். ’திருப்பரங் குன்றத்தில் சிரித்தால் திருத்தணியில் எதிரொலிக்கும்’ என்பார்கள். அதுபோல் நீங்கள் மண்டையைக் குடைந்து அது எங்கள் மண்டையில் எதிரொலித்து குடை குடையென்று குடையப் போகிறதோ? என்று நீங்கள் சொல்ல மாட்டீர்கள் என்று நம்புகிறேன்!
 எழுதுவது என்பது என்னைப் பொருத்தவரையில்  இனிமையான மகிழ்ச்சி தரும் பொழுதுபோக்கு. ஒரு கதையோ, கட்டுரையோ எழுதி கொடுக்கும்போது ஏற்படும் மன நிறைவிற்கு அளவே கிடையாது. அப்பாடா இப்படி இப்படி என்று எழுதி முடித்து விட்டேன். என்று ஒரு நாளும் நான் நினைத்ததில்லை.  காரணம், பணம் கிடைக்கும் என்று எண்ணிக் கொண்டு எழுதியதில்லை. மாமரத்தில் உள்ள மாம்பழத்தைப் பார்த்து கல்லால் எறிகிறோம். எல்லா சமயமுமா பழத்தின் மீது கல்பட்டுபழம் விழுகிறது? அது மாதிரி சில சமயம் கட்டுரைகளுக்கு பணம் கிடைக்கும். சில சமயம் பணம் கிடைக்காது. எழுதுவதால் கிடைக்கும் ஒரு மனநிறைவே சன்மானமாகக் கருதி கொள்வேன். நான் எழுதும் நகைச்சுவைக் கட்டுரையைப் படிப்பவர்களில் நூற்று க்குத் தொண்ணூற்று ஒன்பது பேர் ”…ஹும்.. இதெல்லாம் நகைச்சுவையா?” என்று உதட்டைப் பிதுக்கினாலும், ஒரே ஒரு நபர், ஏதோ ஓர் ஊரில் உள்ள ரசிகர், மிகவும் ரசிக்கக்கூடும். அவர் ரசிப்பதாகவும் நான் பாவித்து மகிழ்ச்சி அடைகிறேன்.     வாழ்க்கையில் ஏற்படும் சின்னச்சின்ன தடங்கல்களுக்கும் இடைஞ்சல்களுக்கும் அல்லது ஏமாற்றங்களுக்கும் நாம் அதிக முக்கியத்துவம் கொடுத்து, தலைவிதியை நொந்துக் கொள்கிறோம். ஆனால் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் ஏற்படும் போது தலைவிதி என்று ஏன் சொல்வதில்லை? மகிழ்ச்சியான கணங்களை விட  சோகமான நேரங்கள்தான் நம் மனதில் ஆழமாக ஊன்றி விடுவதுடன், உளைச்சலையும் ஏற்படுத்துகின்றன. அப்படிப்பட்ட உளைச்சலை நீக்க என் நகைச்சுவைக் கட்டுரைகள் நிச்சயமாக உதவிக் கொண்டிருக்கின்றன என நான் நம்புவதால், என் எழுத்துப் பணியை ஒரு சேவையாகக் கூட கருதுகிறேன். ஆகவே எழுதுவது ஒரு உற்சாகமான பொழுது போக்கு. சற்றும் அலுப்பு ஏற்படாத பணி:  யாரோ, எங்கோ ஒருவருக்குச் சில நிமிடங்களாவது தன் கவலையை மறக்க என் கதை, கட்டுரைகள் உதவுகின்றன என்பதே பெரிய சன்மானம்..   நான் பெரிய சிந்தனை சிற்பியும் அல்ல. நகைச்சுவை மேதையும் அல்ல. ஆனால், பல்வேறு, செய்திகளைப் பற்றி, பல நபர்களைப் பற்றி, பல பழக்க வழக்கங்களைப் பற்றி நகைச்சுவையாகப் பேச எனக்கு ஆர்வம் உண்டு. நான் பேசினால் கேட்பவர்கள், ‘போதும் உன் போர்’ என்று சொல்லிவிட்டு போய்விடுவார்கள். எழுதினால் அதைப் படிப்பதும், படிக்காததும் அவர்கள் விருப்பம். (எல்லாரும் ரசித்துப் படிப்பார்கள் என்று நான் கற்பனை பண்ணிக் கொண்டு, பூரிப்பு அடைவதை யாரும் தடுக்க முடியாது!) என்னைப் பொறுத்தவரை நான் சொல்ல வேண்டியதை எழுத்து மூலமாகத் தெரிவிக்கிறேன். என் கதைகட்டுரையை ப்படித்து ரசித்த பலர் என்னைப் பாராட்டியது மட்டுமல்ல, அவைகளைத் திரும்ப திரும்பத் படிப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். மனதில் ஏதாவது கவலை, அழுத்தம் வரும்பொது இரண்டு கட்டுரையைப் படிப்பேன்.  “மனதில் ஒரு உற்சாகம் ஏற்படும். நிம்மதியும் ஏற்படும் ” என்று கூறி இருக்கிறார்கள். முன்பின் தெரியாதவர்கள் இப்படிக் கூறுவதால், நான் எழுதுவது எனக்கு மட்டுமல்ல, வேறு சிலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்பதால், என் மனதில்  பூரிப்பு ஏற்படுகிறது.
  தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளுக்கு மேலாக, தரமான இதழாக வெளிவரும் ஒரு பத்திரிகையின் ஆசிரியர் சென்ற வருடம் உடல் சுகவீனம் ஏற்பட்டு மருத்துவமனையில் டுத்து இருந்தார். அப்போது அவரைச் சந்திக்கச் சென்ற ஒருவர் சில புத்தகங்களை ஆசிரியரிடம் கொடுத்தார். மருத்துவமனையில் ஏதாவது படிக்கத் தோன்றும் போது இவை உதவும் என்று சொல்லிக் கொடுத்தார். அந்த புத்தகத்தில் ஒன்று நான் எழுதிய  'கமலாவும் கத்தரிக்காய் கூட்டும்' என்ற புத்தகம். ஆசிரியர் என் கதை கட்டுரைகள் சிலவற்றை அதற்கு முன்பு படித்திருக்கக்கூடும் என்றாலும் ஒட்டு மொத்தமாகப் படித்தபோது என் நகைச்சுவை அவரை மிகவும் கவர்ந்துவிட்டது. ஆகவே அந்த வருட தீபாவளி மலரில்  என்னைப்பற்ற்ய ஆறு பக்க பேட்டிக் கட்டுரையை வெளியிட்டார். அந்த ஆசிரியரை இதுவரை நான் சந்தித்தது கூட இல்லை. என் எழுத்தே எனக்கு சிபாரிசு செய்துவிட்டது.     என் பெருமையைப் பீற்றிக் கொள்வதற்காக  இதை இங்கு குறிப்பிடவில்லை. நான் ஏன் எழுதுகின்றேன் என்பதற்கு இதுபோன்ற சம்பவங்களைத்தான்   சன்மானமாக எடுத்துக் கொள்கிறேன். தொடர்ந்து எழுத வேண்டும் என்பதற்கு இவையே ஊக்க சக்தியாக விளங்கும் என்பதிலும் சந்தேகமில்லை.
முக்கிய குறிப்பு: இந்தப் பதிவைத் தட்டச்சு செய்து உதவியது: சகோதரி திருமதி . சுமதி  ராஜா.  அவருக்கு என் நன்றி  
   


8 comments:


  1. உங்களது எழுத்துகளை நான் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.... எதையும் மிகைப்படுத்தாமால் மிக தெளிவாக நறுக்கென்று இருக்கிறது உங்களது நகைச்சுவை பதிவுகள். இந்த வயதிலும் தொடர்ந்து எழுதும் உங்களுக்கு எனது பாராட்டுக்கள் வாழ்க வளமுடன்

    ReplyDelete
  2. உண்மை! மனம் சோர்ந்திருக்கும் சமயங்களில் உங்கள் கட்டுரைகள், எஸ்.வி.வியின் கட்டுரைகள், தேவன் அவர்களின் கதைகள் மனதுக்கு ஆறுதலும் உற்சாகமும் அளித்து வருகின்றன. இதை நான் கண்கூடாகக் கண்டு வருகிறேன்.

    ReplyDelete
  3. //என் பெருமையைப் பீற்றிக் கொள்வதற்காக இல்லை. நான் ஏன் எழுதுகின்றேன் என்பதற்கு இதுபோன்ற சம்பவங்கள்தான் சன்மானமாக எடுத்துக் கொள்கிறேன். தொடர்ந்து எழுத வேண்டும் என்பதற்கு இவையே ஊக்க சக்தியாக விளங்கும் என்பதிலும் சந்தேகமில்லை.// முழுக்க முழுக்க உண்மை. கமலாவையும் தொச்சுவையும் படித்தால் சிரிக்காதவரும் உண்டோ!

    ReplyDelete
  4. சீரியஸ் எழுத்தாளர்களைவிட, நகைச்சுவை எழுத்தாளர்கள், நடிகர்கள், வாழ்க்கையில் பிறருடைய டென்ஷனைக் குறைக்கிறார்கள். ஒவ்வொரு காரியத்துக்கும் காரணம் இருந்தாலும் பலன் என்பது வேறு. (பொதுவா நகைச்சுவை நடிகர்கள், மீடியா என்பதால் நிறைய பணம் சம்பாதிக்கலாம். நகைச்சுவைக் கட்டுரை, கதை மட்டும் எழுதி யாரும் வீடு கூட கட்டியிருக்கமுடியாது. ஆனானப்பட்ட பெரிய இலக்கியவாதிகளே, எழுதி பணம் சம்பாதித்ததாகத் தெரியவில்லை). மனிதன் ரிலாக்ஸ் ஆகவும், கொஞ்சம் மன மகிழ்ச்சி பெறவும் நகைச்சுவை கதைகள், கட்டுரைகள் மிகவும் உதவுகின்றன.

    மனித இயல்பு என்பதால், அத்தகைய எழுத்தாளர்களையும் நடிகர்களையும் நாம் நெருக்கமாக உணர்வோம். நான் அப்போல்லாம், கல்கி தீபாவளி மலரில், 'கடுகு' கதையைத்தான் முதலில் படிப்பேன். ஆனால், இப்படி வாசகர்கள் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு நேரடியாகத் தெரிய வாய்ப்பே இல்லை. சாவியை, விசிறி வாழைக்காகவோ, நவகாளி யாத்திரைக்காகவோ நினைவுகூறுபவர்களைவிட, அவரது 'வாஷிங்டனில் திருமணம்' கதைக்காகத்தான் அனேகமா எல்லோரும் நினைவுகூறுவார்கள். தேவன் போன்றவர்களும் அப்படியே.

    'நீங்களா சார் அந்த எழுத்தாளர்... எனக்கு உங்க கதைகள்தான் ரொம்பப் பிடிக்கும். படித்து மன மகிழ்ச்சி அடைவேன்' என்று சொல்லக்கூடிய வாய்ப்பு எத்தனை வாசகர்களுக்குக் கிடைக்கும்?

    தொடருங்கள் உங்கள் பயணத்தை.

    ReplyDelete
  5. நீங்கள் போட்டிருக்கும் அந்த ஓவியத்தில் உள்ள பெண் யார்? தெரியவில்லையே.

    தலைப்பில் இருக்கும் உங்கள் புத்தகங்களில் பல, நான் படித்ததில்லை. சமயம் கிடைக்கும்போது வாங்கிப் படிக்கவேண்டும்.

    ReplyDelete
  6. Even though I don't post comments, I do read your posts every day and they give me so much happiness. We owe you a lot Sir!

    ReplyDelete
  7. கடுகு ஆசிரியருக்கு,

    நான் உங்கள் வலைதளத்தை படிக்க காரணம் மிக எளிய (அ) இயல்பான உரைநடைகள் மற்றும் தங்களின் கதைகள் அனைத்தும் நம்மை சுற்றியே நடப்பது போன்ற உணர்வு. அதிலும் கமலா, தொச்சு கதைகள் நமது வீட்டிலேயே நடப்பது போன்று இருக்கும், அந்த கதைகள் வீட்டில் நடக்கும் நிகழ்வுடன் பொருந்தி போகும். அப்பொழுதெல்லாம் நான் கதையின் தலைப்பை மட்டும் சொல்வேன் என் மனைவி அது புரிந்து சிரிப்பாள்(கமலாவும் கத்தரிக்காய் கூட்டும் போன்று பல).

    மிக முக்கியமாக தாங்கள் எந்தவித சொற்பிழை மற்றும் வாக்கிய பிழைகளும் இல்லாமல் எழுதுவது. மிக மிக அரிதாக சில எழுத்துப்பிழை மட்டுமே. அதுவும் கணிப்பொறி தட்டச்சு செய்யும் பொழுது Tamil/English font பிரச்சனையால் ஏற்படுவது அது உங்கள் தவறில்லை.

    உங்கள் எழுத்துப் பணி மேலும் பற்பல ஆண்டுகளுக்கு தொடரவேண்டும். நன்றி

    ReplyDelete
  8. அப்படிப்பட்ட உலைச்சலை(உளைச்சலை)

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!