January 19, 2018

சிரிப்புக் கட்டுரைகள்: (1. மேட் இன் அமெரிக்கா 2, மேட் இன் ரஷ்யா)

    நான் செய்த தவறு - ஆர்ட் பக்வால்ட்         அமெரிக்கத் தயாரிப்பு               -            

     ஒரு விஷயத்தை உங்களிடம் மறைக்கப் போவதில்லை. எவ்வளவுக்கெவ்வளவு சீக்கிரமாக அதைச் சொல்கிறேனோ அவ்வளவுக்கவ்வளவு எனக்கு நிம்மதி. எனக்குக் கார் ஓட்டத் தெரியாது.

அமெரிக்கர்கள் பரந்த மனப்பான்மை உடையவர்கள். ஒருத்தன் குடிகாரனாக இருப்பதை ஏற்றுக் கொள்வார்கள். கடத்தல்காரனாக இருக்கலாம். ஏன், எழுத்தாளனாகக் கூட இருக்கலாம். ஆனால் கார் ஓட்டத் தெரியாதவன் என்றால் அவனிடம் ஏதோ குறை இருக்கிறது என்று கருதுவார்கள்.
   என் குறையை பல வருடங்களாக வெளியில் சொல்லாது இருந்தேன். என் நண்பர்கள் என்னைச் சந்தேகத்துடன், அலட்சியத்துடன் பார்க்க ஆரம்பித்தார்கள்.
     எனக்கு எப்போது தொல்லை ஏற்பட்டது என்றால், ஸ்டோருக்குப் போய் ஏதாவது சாமான்களை வாங்கி, ‘செக்கொடுக்கும் போதுதான்.
  சென்ற வாரம் பெரிய சூப்பர்மார்க்கெட்டுக்குச் சென்றேன். ஒரு டைப்ரைட்டர் வாங்கப் போனேன்.
சேல்ஸ்மேன் பல மாடல்களைக் காட்டினார். ஒரு மெஷினைத் தேர்ந்தெடுத்தேன். “விலையைச் செக்காகக் கொடுத்து விடட்டுமா?” என்று கேட்டேன்.
     “தாராளமாக...ஆனால் உங்களிடம் அடையாளக் கார்டு ஏதாவது இருக்கிறதா?”
     “இதோ அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பாங்க் கார்ட், டைனர்ஸ் கிளப் கார்ட், டெலிபோன் இலாகா தந்த அடையாளக் கார்ட், ஜனாதிபதி மாளிகை செல்ல விசேஷ பாஸ் எல்லாம் இருக்கின்றன.
     சேல்ஸ்மேன் எல்லாவற்றையும் பார்த்தார். “உங்களுடைய கார் டிரைவிங் லைசென்ஸ் எங்கே?” என்று கேட்டார்.
     “என்னிடம் கிடையாது.”
     “ஏன் தொலைந்து போய்விட்டதா?”
     “இல்லை….இல்லைநான் கார் ஓட்டுவதே இல்லை.”
     பேசிக் கொண்டே ஏதோ பட்டனை அழுத்தினார் அவர். சில செகண்டுகளில் உதவி மானேஜர் அங்கு வந்தார்.
     “சார் இந்த ஆள் ஒரு செக் கொடுக்கிறேன் என்கிறார். இவரிடம் கார் டிரைவிங் லைசென்ஸ் இல்லை. நம் வாட்ச்மேனைக் கூப்பிடட்டுமா?” என்று கேட்டார்.
     “அவசரப்படாதேஅவரை நான் விசாரிக்கிறேன்ஆமாம், உங்கள் டிரைவிங் லைசென்ஸை ஏதாவது ஆக்சிடெண்ட் காரணமாகப் போலீஸ் பறித்துக் கொண்டுவிட்டதா?”
     “இல்லை நான் கார் ஓட்டுவது கிடையாது. எனக்குக் கார் ஓட்டப் பிடிக்காது.”
     “யாருக்குத்தான் கார் ஓட்டப் பிடிக்கிறது? மிஸ்டர் உண்மையை ஒப்புக் கொள்ளுங்கள். டிரைவிங் லைசென்ஸ் இல்லாத போது எப்படித்  துணிந்து செக்கை மாற்ற முயற்சி செய்கிறீர்கள்?” என்று இரைந்தார்.
    “மற்ற அடையாளக் கார்டுகள் போதும் என்று நினைத்தேன். ஜனாதிபதி மாளிகைப் பாஸ் சுலபமாகத் தரமாட்டார்கள். ரகசிய போலீஸ் விசாரணைகளுக்குப் பிறகுதான் கிடைக்கும்.”
     “ரகசிய போலீஸ் எத்தனையோ பேருக்கு அனுமதி வழங்கியிருக்கிறது... அதிருக்கட்டும், டிரைவ் செய்யத் தெரியாத ஆசாமி எப்படி மார்க்கெட்டுக்கு வந்தீர்கள்?”
     “டாக்ஸியில்.”
     “ஆஹாபிரமாதமான ஜோக்.”
     இந்தச் சமயம் எங்களைச் சுற்றிச் சிறிய கூட்டம் கூடிவிட்டது.
     “என்னவாம்?”
     “இந்த மனுஷனிடம் டிரைவிங் லைசென்ஸ் கிடையாதாம்?”
     “கார் ஓட்டியதே இல்லையாம்!”
     “என்ன சொன்னான். ஆளைப் பிளந்துக் கட்டுங்கள்!”
     “பிளக்கிறதா? இன்ச் இன்சாக வெட்டணும்.”
     “நம் அமெரிக்காவுக்கே இவனால் அவமானம். நம் எதிரி இவன்.”
     இந்தச் சமயத்தில் ஸ்டோரின் மானேஜர் அங்கு வந்தார். நல்ல காலம் அவருக்கு என் பெயரைத் தெரிந்திருந்தது. ‘செக்’ வாங்கிக் கொள்ளச் சொன்னார்.
     இப்படி நடந்து விட்டதே  என்று அவருக்குச் சிறிது வருத்தம். “போகட்டும்வாருங்கள் கொஞ்சம் ஒயின் சாப்பிடலாம்என்றார்.
     “நான் குடிப்பது இல்லையேஎன்றேன்.
 இதைக் கேட்டதும் அவர் முகம் கடுகடுத்தது, கதவினருகில் என்னைத் தள்ளினார். “போய்யா வெளியேஇனி இந்தப் பக்கம் தலையைக் காட்டாதேஉங்களால் அமெரிக்காவின் இமேஜே நாசமாகிவிடும்என்றார்!
###############

குழந்தை, நானும் சினிமாவுக்கு வரேன்! (ரஷ்ய தயரிப்பு)

     ஒரு நாள் திடீரென்று எனக்கு ஒரு ஐடியா தோன்றியது. உலகில் எல்லா விஷயங்களும் தலைகீழாக மாறினால் எப்படி இருக்கும்.? உதாரணமாக, எல்லா விஷயங்களிலும் குழந்தைகள் சொல்கிறபடி பெரியவர்கள் நடந்தால் என்ன? உதாரணமாக, எல்லோரும் டைனிங் ஹாலில் சாப்பிட உட்கார்ந்ததும், அம்மாவைப் பார்த்துக் கத்துவேன்: “என்ன இவ்வளவு குறைவாக சாப்பிடுகிறாய்! கண்ணாடியில் பார்த்துக் கொள், ஒட்டடைக்குச்சி மாதிரி இருக்கிறாய். சரியாக சாப்பிடவில்லை என்றால் நானே கலந்து வாயில் ஊட்டப் போகிறேன்… என்ன டயட்டோ மண்ணாங்கட்டியோ… எங்க காலத்தில் இது மாதிரி எதுவும் கிடையாது.”


     அம்மா தலையைக் கவிழ்ந்தபடியே அள்ளி அள்ளிப். போட்டுக் கொண்டு சாப்பிடுவாள்.
     “இப்படி அவசர அவசரமாக  தின்றால் உடம்புக்கு ஒட்டாது…. பக்கத்து வீட்டுக்கார மாமியுடன் அரட்டை அடிக்க நாழி ஆகிவிட்டதா?... நான் சொல்கிறது காதில் விழுந்தால் தானே… எங்கேயோ பராக்குப் பார்த்துக் கொண்டு தின்கிற வழக்கம் சுலபத்தில் போகாது!... நாற்காலியை ஆட்டாமல் உட்கார்ந்து சாப்பிடு.”
     இந்த சமயம் அப்பா ஆபீஸிலிருந்து வருவார். அவர் கோட்டைக் கழட்டுவதற்கு முன்பே : “என்ன ஐயோ இவ்வளவு லேட்? ஆபீஸ் விட்டால் நேரே வீடு வருகிறது கிடையாது. கை, கால்களில் எவ்வளவு அழுக்கு… சேற்றில் வேலை செஞ்ச மாதிரி இருக்கு. நேரே போய் நன்றாக தேய்த்து அலம்பு. சோப்புக் கரையறதுதான் மிச்சம். அழுக்குப் போனால் ஆஸ்தி ஒன்றும் போய் விடாது…. அதிருக்கட்டும், விரலைக் காட்டு. நகத்தை இவ்வளவு நீளமாகவா வளர்க்கிறது?  நெயில் கட்டர் எங்கே? … ஒரு இடமாக வைக்கிற வழக்கம் இருந்தால் தானே…? என்ன  இத்தனை ஃபைல்கள்? ஆபீஸ் நேரத்தில் வம்பு பேசிக் கொண்டிருந்தால் இப்படி வேலையை வீட்டுக்கு கொண்டு வரவேண்டியதுதான். சரி… சாப்பிட உட்கார்”.
     அப்பா பயந்தபடியே உட்காருவார்.
அம்மா,“ நான் சொன்னேனே ஃப்ரிட்ஜ் பார்த்தீங்களா?” என்று ஆரம்பிப்பாள்.   ”ஃப்ரிட்ஜா… வந்து…” என்று அப்பா துவங்கும் போது,  “சாப்பாட்டுத்  தட்டு முன் உட்கார்ந்துக் கொண்டு ஒரு பேச்சும் பேசக்   கூடாது. பார்த்து சாப்பிட்டால் தான் உடம்பில் ஒட்டும்.” என்று

நான் கத்த அவர்கள் கப்சிப். இந்த சமயம் பாட்டி வருவாள். “பாட்டி, வாயை வெச்சிண்டு சும்மா இருக்கியா? இல்லாத   வேலையெல்லாம் இழுத்துப் போட்டுக்கறே, மூட்டுவலி, இடுப்புவலின்னு பின்னாலே என் கையிலேதானே வந்து அழறே. இனிமே ராத்திரியில்  ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு விட்டுதான்
தூங்கப் போகணும்… “என்று அதட்டுவேன்.
சாப்பிட்ட பிறகு, “ எல்லோரும் டி.வி. பார்த்துக் கொண்டிருங்க. நான் என் ஃப்ரண்ட்ஸுடன் சினிமா போய்விட்டு வரப் போறேன்…. என்னது நீங்களும் வர்றீங்களாநேற்று ஏதோ பிறந்த நாள்  விழா என்று போய்விட்டு வந்தீங்க. ஞாயிற்றுக்கிழமை சர்க்கஸுக்கு அழைத்துக் கொண்டு போனேன். தினமும் வெளியே போகிறது கூடாது… இந்தாங்க, காசு. ஆளுக்கு ஒரு ஐஸ்கிரீம் வாங்கிச் சாப்பிடுங்க “ என்பேன்.   பாட்டி, “ ஏண்டா குழந்தை.  ஒவ்வொரு குழந்தையுடன் ஒரு பாட்டி இனாமாக படம் பார்க்க வரலாம் என்று சொல்றாங்களே. என்னை அழைத்துக் கொண்டு போ” என்று கெஞ்சுவாள்.

     அதற்கு நான், “இந்தப் படம், 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் பார்க்கக் கூடாது. தெரியுமா? சும்மா வீட்டிலேயே இரு…. என்ன முனகல்?”என்று சொல்லிவிட்டுப் புறப்படுவேன்.
       ஆ! அந்தத் தலைகீழ் உலகம் எப்போது வரும்!

      (ரஷ்ய எழுத்தாளர் விக்டர் ட்ராகன்ஸ்கி எழுதியது.)  



  

4 comments:

  1. இரண்டு கட்டுரைகளையும் ரசித்தேன். பக்வால்ட் (இதுவரை புச்வால்ட் என்றே நினைவில் இருத்தியிருந்தேன்) கட்டுரை இன்னும் நல்லா இருந்தது. இரண்டையும் நல்லா தமிழ்ப்படுத்தியிருக்கீங்க.

    பக்வால்டுக்கு உங்களின் கைவண்ணப்படம் நல்லா இருந்தது. மற்ற தேர்ந்தெடுத்துப் போட்டிருந்த படங்கள் (ஓவியர் ராமு, நடனம்?) பொருத்தமா இருந்தது.

    ReplyDelete
  2. இரண்டும் மிக அட்டகாசம் படித்து ரசித்து மகிழ்ந்தேன் உங்கள் எழுத்து மிக அருமை பாராட்டுக்கள்

    ReplyDelete
  3. மிக அருமையான கட்டுரைகள், இரண்டுமே நன்றாக இருந்தாலும் குழந்தைகள் அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொள்வது என்பதைக் கற்பனையில் கண்டு ரசிக்க நன்றாகவே இருக்கிறது. உண்மையில் இப்படி நடந்தால் என்றும் நினைத்துப் பார்த்துக் கொண்டேன். ஆனால் இப்போதெல்லாம் வளர்ந்த எங்கள் குழந்தைகள் உண்மையிலேயே எங்களை அதிகாரம் செய்வதோடு இல்லாமல் ஆலோசனைகள், புத்திமதிகளும் கூறுகின்றனர்! :) அதிலும் பெண்ணுக்கு அவள் சொல்வதை மட்டுமே கேட்கணும்! பையருக்கு அவர் சொல்வதை மட்டுமே கேட்கணும்! :)))) இரண்டையும் கேட்டுக் கொண்டு எங்கள் இஷ்டப்படி நடப்போம். :))))))

    ReplyDelete
  4. மிக்க ள்ன்ற.எழுதாலரின் ,படித்ல்தா?இதெல்லாம் என்ன?

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!