December 30, 2017

வேண்டாம் முதல்வர் பதவி


       குறிப்பு:  எனக்கு  வரும் கேள்விகளில் ஒரு குறிப்பிட்ட கேள்வி திரும்பத் திரும்பப் பலரால் கேட்கப்படுகிறது. அதற்குப் பதில் அளித்தால் ரொம்ப நீண்டுப் போய்விடும் என்ற காரணத்தால் பதில் கூறாமலேயே தள்ளிப் போட்டு வந்தேன். ஆனால் பல்லாயிரக்க ணக்கான வாசகர்கள் (எண்ணிக்கை பல்லாயிரக் கணக்கான அளவு மிகை என்ற உண்மையைக் கூறிவிடுகிறேன்.!) ஓர் ஆர்வத்துடன் கேட்கும்போது பதில் சொல்லாவிட்டாலும் நன்றாக இருக்காது. ஆகவே இங்கு பதில் சொல்லிவிடுகிறேன்.
     கேள்வி இதுதான்; நீங்கள் ஏன் முதலமைச்சர் ஆகக் கூடாது?
     பதில்: ஒரே வார்த்தையில் சொல்வதானால்வேண்டாம்என்று சொல்ல வேண்டும் விளக்கமாகக் கூறாவிட்டால் திருப்தி ஏற்படாது. (எனக்குத்தான்!)
           *                *
     முதல் அமைச்சர் என்றால் தினந்தோறும் அலுவலகம் போகாவிட்டாலும், பேட்டி காண வரும் எம்.எல்.. க்களையும் பார்க்காமல் இருக்க முடியாது. அதற்காகக் காலையிலேயே எழுந்திருந்து (கஷ்டமான காரியம்) ஷேவ் பண்ணி (ரொம்பக் கஷ்டமான காரியம்) குளித்து (ரொம்ப ரொம்பக் கஷ்டமான காரியம்) தயாராக வேண்டும் !
     உதவி கேட்டு வரும் பிரமுகர்களைப் பார்த்து சிரிக்க வேண்டும். ஒரே ஒரு வேலை காலியாக உள்ள இடத்தில்நம்ப ஆளை போடணும்என்று கேட்டுக் கொண்டு தனித்தனியாக ஏழு எம்.எல்.ஏக்கள் வந்து கேட்பார்கள். “கட்டாயம் போட்டுடறேன்என்று ஏழு பேருக்கும் மனதறிந்து பொய் சொல்ல வேண்டும். ( பொய் சொல்வது லட்டு மாதிரி என்றாலும், ஒரு நாளைக்கு ஆயிரம்  லட்டு சாப்பிட முடியுமா?). ஏழு பேரையும் விரோதித்துக் கொண்டு என் மைத்துனியின்     பிள்ளைக்கு அந்த வேலையைக் கொடுக்க வேண்டும், (யாரை விரோதித்துக்   கொண்டாலும் என் மைத்துனியை விரோதித்துக் கொள்ள முடியாது!)
     அலுவலகத்துக்கு சென்றால் எனக்குப் புரியாத, தெரியாத, தெரிந்துக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லாத   ஆயிரம் விஷயங்களை பற்றித்  தீவிர ஆலோசனைக்குப் பிறகு (!) முடிவு எடுத்து,  ஃபைல்களில் எழுதி அனுப்ப வேண்டும்.
     கவர்மென்ட் ஆபீஸில் யாரும் சரியாக வேலை செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு உண்மை என்பது எனக்குத் தெரியும். எல்லா கோப்புகளையும் முதல்வருக்கு அனுப்பிவிடுகிறார்களே! ஏதாவது ஒரு ஃபைலில்இதற்கு காம்பவுண்ட் வரி ஒரு சதவிகிதத்திலிருந்து ஒன்றே கால் சதவீதமாக மாற்றலாம்என்று அதிகாரி எழுதியிருப்பதைப் படித்து, இதனால் சர்க்காருக்கு வருவாய் என்று எண்ணிச் சம்மதம் தெரிவித்துவிடுவேன். (காம்பவுண்ட் என்றால் வீட்டைச் சுற்றி எழுப்பப்படும்  சுவர் வரி என்றுதான் புரிந்து கொள்வேன்!) 


இப்படி கால் சதவீதம் உயர்த்தினால் உண்மையிலேயே வரி வசூல் குறையக் கூடும். இப்படி நஷ்டத்தைத் தரும் யோசனையை நான் ஏற்றது பற்றி எதிர்க் கட்சித் தலைவர் சாடுவார். மக்கள் நன்மைக்காக இதைச் செய்தேன் என்று பொய் (மறுபடியும் பொய்!) சொல்ல வேண்டும்.
     சரி, அதுவே அதிக வருவாய்க்கு வழி வகுக்கும் என்றால், எதிர். கட்சித் தலைவர் சாடுவார். ”மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக, மக்கள் இந்தத் தியாகத்தைச் செய்ய வேண்டும்” என்று அப்போது சொல்ல வேண்டும். .

     காட்டாங்குளத்தூரில் மழையால் ஒரு குடிசை வீடு சரிந்து, ஒரு எருமைக் கன்று இறந்துவிட்டால், மனுநீதிச் சோழனைப் போல் கன்றுக்காகக் கதறி அழுது .. தலைவரும் அவரது பத்திரிகைகளும்ஐயகோ இவருடைய ஆட்சியில் எருமைகளை, எருமை வாகனக்காரன் இழுத்துச் செல்கிறான். தாய்மார்களே! உங்கள் பிள்ளை எருமைக் கன்றாக இருந்து, இப்படி இறந்தால், உங்களின் உயிர் எப்படி துடிக்கும்? இவருக்கா வோட்டு? எருமைய்கை  கொன்ற பாதகன்!” என்று மூன்று வர்ணப் போஸ்டர் போட்டு,எல்லாவற்றையும் என் வீட்டு வாசலிலேயே ஒட்டுவார்கள் (காட்டாங்குளத்தூரில் ஒரு போஸ்டர் கூட இருக்காது!)

     மழை பெய்வதற்கு முன்பே, நன் குடையை எடுத்துக் கொண்டு காட்டாங்குளத்தூருக்குச் சென்று, எந்தக் குடிசை இடிந்து விழ வாய்ப்பிருக்கிறது என்று பார்த்து, அதன் மேல் குடையைப் பிடித்துக் கொண்டு நிற்க முடியுமா? முடியாது சாமி. எனக்குக் கல்யாணம் ஆனபோது என் மாமனார் ஒரு குடையைக்தான் கொடுத்தார். இத்தனை வருஷங்களில் நைந்து போய்விட்டது. இன்னொரு கல்யாணம் பண்ணிக் கொண்டால்தான் எனக்கு இன்னொரு குடை கிடைக்கும். ஓர் எருமைக் கன்றை காப்பாற்றுவதற்காக இன்னொரு மாமியாரை சம்பாதித்துக் கொள்வதா! நினைத்தாலே நடுங்குகிறது
     முதல்வர் என்றால் தினமும் ஏதாவது விழாவுக்குத் தலைமை தாங்கும்படி கூப்பிடுவார்கள். யாரையாவது பாராட்ட வேண்டும். உதாரணமாக, எழுத்தாளர், ஏகாம்பரத்தின் முதல் துணுக்குப் பிரசுரமானதற்காகப் பாராட்டு விழா என்று வைத்துக் கொள்ளுங்கள். அதில் நான் பேசும்போதுஏகாம்பரம் போன்ற மாபெரும் இலக்கியவாதிகளைப் பாராட்டுவதில் நான்  பெருமை அடைகிறேன். சிறு வயது முதலே அவரது கதைகளையும், நாவல்களையும் படித்து ரசித்திருக்கிறேன்” என்று கூறிவிடுவேன். இதனால் என் இலக்கிய  “அறிவுவெளியாகும். அதைப் பற்றிக் கூடக் கவலை இல்லை. மறு நாள் ஏகாம்பரமே என்னிடம் வந்துஇந்த வருஷ மாநில இலக்கிய விருது எனக்குக் கொடுங்களேன்என்று கேட்பாரே!
     நகரில் நடக்கும் நாடகங்களுக்குத் தலைமை வகிக்க வேண்டும். இசைக் கச்சேரியில் உட்கார்ந்து,  ஒளரங்கசீப்பான நான் தலையை ஆட்ட வேண்டும்ஜூலு மொழியில் உள்ள புரியாத கவிதைகள்என்பது போன்ற  இலக்கிய உரை நிகழ்ச்சிகளுக்குத் தலைமைத் தாங்க வேண்டும்.
      இதையெல்லாம் சமாளித்துவிடுவேன். சினிமா விஷயத்தில்தான் எனக்குச்  ச்ங்டம்.
     நிம்மதியாகத் ’தரை’ டிக்கட்டில் உட்கார்ந்து சீன்களுக்கு ஏற்றபடி விசில் அடித்துக் கொண்டும்,  20 பைசாவுக்கு விற்கும் அசல்  ’நெய்” முறுக்குகளை விடாமல் மென்று கொண்டும் பார்த்தால்  தான் சினிமா எனக்கு ரசிக்கும். சர்ட், முதல்வராகிவிட்டால் இந்தச் சொர்க்கம் எனக்கு எட்டாக் கனி அல்லவா?
     சாதாரணமாக வேஷ்டியை டப்பா கட்டுக் கட்டிக் கொண்டால்தான் நடப்பதற்கு எனக்குச் செளகரியம். டப்பாக்கட்டு முதல்வராக நான் இருக்க உங்களுக்குச் சம்மதமா?

     ஆக மேலே கூறிய பல காரணங்களால்தான் முதல்வர் பதவியின் மேல் எனக்கு நாட்டம் ஏற்படவில்லை!
     பின் குறிப்பு: பல வருஷங்களுக்கு முன்பு எழுதப்பட்டது. இப்போது யாராவது கேட்டால் ஒரே வார்த்தையில் பதில் கூறி விடுவேன், “ரெடி” என்று!

6 comments:

  1. ஹாஹாஹா, நல்ல காரணங்கள் என்றாலும் "நச்"சென்று உண்மையைச் சொல்லி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  2. நாங்களும் ரெடி சாற் - இந்த முதல்வருக்கு :))

    ReplyDelete
  3. அருமையான பதில்
    சிந்திக்கத் தூண்டுகிறது!

    இந்தப் புத்தாண்டு இனிய புத்தாண்டாய்
    எந்த உறவுக்கும் அமைய வேண்டுமென
    அந்த இறைவனை வேண்டி நிற்கிறேன்!

    ReplyDelete
  4. நகைச்சுக்காக இருந்தாலும், இதுவும் உண்மையல்லவா? அமைச்சர்களுக்குத்தான் 'சேர்க்க முடியும்'. முதல்வருக்கு, கண்காணிப்பதிலேயே நேரம் போய்விடுமே. அதைவிட்டால், மற்ற பிஸி வேலைகள். இதை நினைத்தால்தான் எனக்கு 'அமைச்சர்' பதவியில் உள்ள ஆசைபோல் முதல்வர் பதவியில் ஆசை வரவில்லை. நீங்க முதலமைச்சர் ஆகிவிட்டால், எது பசையுள்ள பதவியோ, அதற்கு என்னைப் போட்டுவிடுங்கள். (நீங்கள் முதல்வராகட்டும் என்று ப்ரார்த்திப்பதற்கு எனக்கு இந்தப் பலன் கூட இல்லைனா எப்படி சார்?)

    ReplyDelete
  5. ஹாஹாஹா! முதல்வர் தரையில் உட்கார்ந்து படம் பார்க்க விரும்பினால் எல்ல சீட்டுகளும் தரை டிக்கெட்தான். வெள்ளையும்,சொள்ளையுமாக ஒரு கூட்டம் தரையில் அமர்ந்து படம் பார்க்கும் கற்பனை காட்சியே பரவசமூட்டுகிறதே..!

    ReplyDelete
  6. Thank you for all the info and your blog. My friend showed me your blog and I have been reading it ever since Tamil Books

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!