January 28, 2017

கமலாவோடு ‘டூ’!

ஒரு முன்னுரை
கோபம் இருக்கும்  இடத்தில்தான் குணம் இருக்கும் என்பதற்கு ஒரு உதாரணம் வேண்டுமென்றால், நான் ஊர் மொத்தம் அலையத் தேவையில்ல. கமலா இருக்கக் கவலை எதற்கு?

நேற்று கமலாவிற்குக் கோபம் வந்தது. தும்மல் மாதிரி, 

சட்டென்று முன்கோபம வரும். வந்த சுவடே தெரியாமல் போய்விடும். சில சமயம், லேசான சேதாரம் ஏற்படுத்தி விட்டுப் போகும் என்றாலும், சுவடே வெளியே தெரியாது.

நேற்று அவளுக்குக் கோபம் வந்தது. என்ன காரணம் என்று கேட்காதீர்கள்.. அது அவளுக்கே தெரியாது. ”உங்களுடன் இனிமேல் எந்தப் பேச்சையும் வைத்துக் கொள்ளப் போவதில்லை” என்றாள்  தீர்மானமாக.  


January 18, 2017

காப்பி அடித்து.........

காப்பி அடித்து வகையாக மாட்டிக் கொண்டது
 காப்பி அடிப்பது ஒரு கலை. கதையோ, கட்டுரையோ, இசையோ, திரைப்படக் கதையோ, காட்சியோ எதுவாக இருந்தாலும் காப்பி அடிப்பதற்குத் தனித்திறமை வேண்டும். இதைவிட அதிகத் திறமை, எங்கிருந்து காப்பி அடிமத்தது என்பது தெரியாமலிருக்கும்படி மறைக்க வேண்டும். ஒரு பிரபல பொன்மொழி ஒன்று உண்டு. Originality consists in concealing the original!
சில வருடங்களுக்கு முன்பு நடந்த விஷயம். ஒரு ஆன்மீகப் புத்தகத்தை ஒரு நிறுவனம் வெளியிட்டது. புத்தகத்திற்கு நல்ல வரவேற்பும் இருந்தது. இதைப் பார்த்த மற்றொரு பதிப்பகம், அந்த புத்தகத்தைத் தானும் வெளியிட்டது. அந்தப் புத்தகமும் நன்கு விற்கவே, முதலில பிரசுரித்த நிறுவனத்தின் புத்தக விற்பனை சற்றுச் சரிந்தது.
முதல் நிறுவனம், இரண்டாவது நிறுவனம் பிரசுரித்த புத்தகத்தை வாங்கிப் பார்த்தது. அதற்கு அதிர்ச்சி ஏற்பட்டது. தங்களது புத்தகத்தை அப்படியே காப்பி அடித்துப் போட்டிருந்ததைக் கண்டுபிடித்தது. காப்பிரைட் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுத்தது இரண்டாவது நிறுவனத்தின் மீது. இது பழைய சுலோக புத்தகம் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட சுலோகங்கள். இதன் காப்பிரைட் உரிமையை யாரும் கோர முடியாது என்று சொன்னது. வழக்கு தள்ளுபடி ஆனது (என்பது எனக்கு ஞாபகம்).

January 09, 2017

"நான் ரசித்த ஒரு வாசகம்" -- ஹிட்ச்காக்

A tale which holdeth children from play and old men from the chimney corner… . – Sir Philip Sidney.

சமீபத்தில் ஒரு வித்தியாசமான புள்ளிவிவரம் என் கவனத்திற்கு வந்தது. சற்று நம்ப முடியாததாக இருந்தது அது: ஒரு ஆண்டில் அமெரிக்க வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தத்திற்குச் சிகிச்சை பெற தூக்க மாத்திரை உட்கொள்ள டாக்டர்கள் எழுதிக்கொடுத்துள்ள மருந்து சீட்டுகளின் எண்ணிக்கை 40 கோடியாம். எந்த மருந்தைக் கொடுத்தார்கள் என்பதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. மருந்தை விட சிறந்த வேறொரு விஷயத்தை மருந்து சீட்டாகக் கொடுக்க என்னிடம் ஒரு யோசனை உள்ளது.
            ஒரு திகில் கதையை எடுத்துக் கொள்ளுங்கள். அதைக் குலுக்குங்கள். மனதில் மேலும் மேலும் குலுக்குங்கள்.
            துணிகரமான செயல்களைப் பற்றியும் பல மரணங்களைப் பற்றிய கதைகளையும் தெருப்பாடகர்கள் பாடிய அந்தக் காலத்திலிருந்து, திகிலும் மர்மமும் நிறைந்த கதைகள் மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டதுடன், அவர்கள் வாழ்வில் உள்ள பிரச்னைகளை சிறிது நேரமாவது மறக்கச்செய்து கட்டிப்போட்டன. ஒரு மணி நேரம் இப்படிக் கட்டுண்டவன், மர்மக்கதையின் கட்டுப்பாட்டிலிருந்து வெளியே வரும்போது புத்துணர்ச்சியுடன் நாளைய தினத்தை அணுகுகிறான். 
மர்மக்கதை உலகம் ஒரு கட்டுக்கதை உலகம்தான். விமர்சகர்கள் இதை பிரச்னைகளிலிருந்து தப்பிக்கும் வழி என்கிறார்கள். இது என்ன தீமையானதா? பலவித கேளிக்கைகள் உள்ளன – உங்களை உங்களிடமிருந்து வெளியே கொணர்ந்து நீங்கள் படிக்கும் கதை அல்லது பார்க்கும் திரைப்படம் காட்டும் கற்பனை உலகை உண்மை போல் சித்தரிக்கின்றன. படிக்கும்போது அல்லது படித்து முடித்தபின், குற்றவாளி பிடிபட்டதும், நீங்கள் உங்கள் உலகத்திற்கும் உங்கள் கவலைகளுக்கும் திரும்புகிறீர்கள். நீங்கள் மர்மக்கதை சுற்றுலா பயணத்திற்குப் பிறகு திரும்பும்போது உங்கள் மனதில் தெளிவும், உங்கள் உணர்வுகளில் அமைதியும், உங்கள் பிரச்னைகள் ஒன்றும் சமாளிக்க முடியாததல்ல என்ற தெம்பும் உண்டாகும்.
     பிரச்னைகள் உள்ள சிலருக்கு ஒரு மனோதத்துவ நிபுணரிடம் செல்வது அவசியம் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் மன அழுத்தம் உள்ள பெரும்பாலானவர்களை என்னுடைய மாயாஜாலக் கஷாயமே குணப்படுத்திவிடும்.
     ஒரு மர்மக்கதை அளிக்கும் தூய்மையான பொழுதுபோக்கை ரசிப்பது பற்றி உங்கள் மனதில் ஏதாவது குற்ற உணர்ச்சி இருந்தால் அதை நீக்கவே இந்த சிறிய உபதேச வரிகளை எழுதுகிறேன். இந்த மர்மக் கதைகள் தரும் ‘திக் திக்’ கணங்களையும் உற்சாகமூட்டும் தருணங்களையும் நீங்கள் ஹாயாக ரசிக்கலாம். மன அழுத்தம் போக இது ஒரு மருத்துவ யோசனை. இவை உங்கள் மனதிற்கு அமைதியையும் உற்சாகத்தையும் தந்து, மகிழ்ச்சிகரமான மனிதனாக ஆக்கினால், இந்த மர்மக்கதை உலகில் நான் ஆற்றிய பணிகள் வீண் செயல் அல்ல என்று நான் உணர்வேன்.
பி.கு.  இக்கட்டுரை  பல வருடங்களுக்கு முன்பு  எழுதப்பட்டது.

முக்கிய குறிப்பு: இந்தப் பதிவைத் தட்டச்சு செய்து உதவியது: சகோதரி திருமதி எஸ். ஷோபனா.  அவருக்கு என் நன்றி!