November 06, 2016

ஹலோ பிரிசிடெண்ட்: ஹலோ வைஸ் பிரிசிடெண்ட்

 ### அமெரிக்க அதிபரின் பதவி ஏற்பு விழா. ###

முன்னுரை: இப்போது AL ROKER, DEBORAH ROKER என்ற இருவர் (தம்பதியர்) எழுதிய BEEN THERE, DONE THAT புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்துள்ளேன்.
          இவர்கள் இருவரும் மீடியா உலகில் பிரபலமானவர்கள். இருவரும் சேர்ந்து 16 EMMY AWARDS என்ற விருதைப் பெற்றிருப்பவர்கள்.
 ரோக்கர் NBC-யின் TODAY SHOW நடத்தி வருகிறார். கிட்டத்தட்ட 30 மில்லியன் பேர் பார்க்கும் நிகழ்ச்சியாம் இது. அவருடைய மனைவி டெபோரா, ABC என்ற நிறுவனத்தின் செய்தியாளர். TALK SHOWக்களும் நடத்தி உள்ளவர். உலக நாடுகள் பலவற்றிற்கும் பயணம் செய்திருப்பவர். GOOD MORNING AMERICA போன்ற பல பிரபல நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராகப் புகழ் பெற்றவர்.
          தங்கள் அனுபவங்களையும், அதில் கற்ற பாடங்களையும், இன்றைய கால கட்டத்திற்குத் தேவையான குடும்பப் பாங்கான பல அறிவுரைகளையும் சுவையாக, நம்மிடம் நேரில் பேசுவது போல் இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறார்கள்.   நாற்பது கட்டுரைகள். (ரோக்கர் இருபது , டெபோரா இருபது.)  
மறக்க முடியாத அதிபர் பதவி ஏற்பு விழா என்ற தலைப்பில் ரோக்கர் எழுதிய கட்டுரையை சற்று சுருக்கி, தமிழ்ப்படுத்தித் தருகிறேன்.
றக்க முடியாத அதிபர் பதவி ஏற்பு விழா
என்னுடைய ரேடியோ, டிவி ஷோக்களில் பெற்ற 37 வருட அனுபவங்களில், எத்தனையோ மறக்க முடியாத பல நிகழ்ச்சிகளை விவரித்து இருக்கிறேன். பல சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்கள், மக்கள் புரட்சிகள், பயங்கரமான SANDY புயல் எனப் பலப்பல.
          ஆறு அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு விழாக்களில் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால், முதன்முதலாக, ஒரு கறுப்பர் அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்றுக் கொண்ட விழாவை வாழ்நாளில் நான் காண்பேன் என்று நினைத்துக்கூடப் பார்த்திராத எனக்கு, அப்படி ஒரு விழாவைப் பார்க்கும் வாய்ப்பு வந்தது என்னை அசத்தி விட்டது என்பது உண்மை.
 பேரணி நடக்கும் இடத்திற்குச் செல்லும்போது லிங்கன் நினைவுச் சின்னத்தைக் கடந்து போனேன். இதற்கு முன் பலமுறை அந்த வழியாகச் சென்றிருக்கிறேன் என்றாலும், இந்த முறை என் கண்கள் கண்ட காட்சி என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்து விட்டது. இதுவரை நான் பார்த்த எந்த பதவி ஏற்பு விழாவிலும் இவ்வளவு ஜனத்திரளைப் பார்த்ததில்லை. இதற்கு முன்பு மார்டின் லூதர் கிங் ஜூனியரின் சரித்திரப்புகழ் பெற்ற உரையைக் கேட்க இத்தனை கூட்டம் வந்திருந்தது. என் அம்மா இந்தக் கூட்டத்தைப் பார்க்கவில்லையே என்று என் மனது ஏங்கியது. அவர் எவ்வளவு உற்சாகத்தில் ஆழ்ந்திருப்பார் என்று என்னால் ஓரளவு ஊகிக்க முடிந்தது. ஒபாமாவும், ஹிலாரி கிளிண்டனும் விவாதம் நடத்தியதைப் பார்த்ததும் என் அம்மா உறுதியாகச் சொன்னது என் நினைவில் இருக்கிறது. ‘அந்த மனிதன்தான் அடுத்த அதிபராக இருப்பான்’ என்று சொன்னாள். அவள் சொன்னது உண்மையாயிற்று. ஆனால், துரதிர்ஷ்டம் அவள் தான் கண்ட கனவு நிஜமானதைப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை. இறைவனடி சேர்ந்துவிட்டார். ஆனால் அவர் சார்பாகவும், அவருடைய நினைவாகவும் நான் பார்த்தேன்.
          பதவிப் பிரமாணம் அதிபர் எடுத்துக் கொண்ட பிறகு பேரணியை ஒலிபரப்ப பென்சில்வேனியா அவென்யூவில் எனக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்குப் போய்ச்சேர்ந்தேன். இதற்கு முன்பு பல தடவை போன இடம்தான். இப்போது நெஞ்சில் பெருமிதமும் அளவு கடந்த மகிழ்ச்சியும் நிறைந்திருந்தன. ஒரு கறுப்பர் இனத்தவனாகவும், அமெரிக்கன் என்னும் கர்வமுடையவனாகவும் இருந்ததால்.
 சாதாரணமாக, இத்தகைய அணிவகுப்பில், அதிபரும் அவரது மனைவியும் கடைசி கால் மைல் தூரத்தை காரிலிருந்து இறங்கி நடந்தே கடப்பார்கள். நான் எப்போதும் அதிபர் மாளிகைக்கு எதிரே இருந்துகொண்டு நேரடி வர்ணனை செய்துகொண்டிருப்பேன். புதிய அதிபரையும், அவர் மனைவியையும் பார்த்ததும் என் மனதில் உற்சாகம் பொங்கி வழிந்தது. அவர்கள் நான் இருக்கும் இடம் நோக்கி வந்துகொண்டிருந்தார்கள். அவர் நெருங்க நெருங்க எனக்குத் தலைகால் புரியவில்லை. மலங்க மலங்க அவர்களைப்பார்த்துக் கொண்டிருந்தேன்.
          திடீரென்று உரத்த குரலில், “மிஸ்டர் ப்ரெசிடெண்ட்” என்று அவரைப் பார்த்துக் கத்தினேன்.
          உடனே மிஸஸ் ஒபாமா, அதிபரிடம் என்னைச் சுட்டிக்காட்டி ஏதோ சொன்னதைக் கவனித்தேன்.
          அதிபருடன் பேச இது ஒரு அரிய வாய்ப்பு என்று எனக்குத் தெரிந்தது. அந்த சமயத்தில் அவரைக் கேட்க ஒரே ஒரு கேள்விதான் என்னால் நினைக்க முடிந்தது.
          அவரைப் பார்த்து “உங்கள் மன நிலை இப்போது எப்படி உள்ளது?” (How does it feel now?) என்று கேட்டேன்.
          உடனே ஒபாமா “மிக மிகப் பிரமாதமாக இருக்கிறது” என்று சொல்லியபடியே வேகத்தைக் குறைக்காமல் கடந்து சென்றார்.
          ஆகவே மக்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், புதிய அதிபரை முதன்முதலில் பேட்டி கண்டவன் நான்தான் என்பதை.
          நான் மறக்க முடியாத கணம் அது. அன்றைய தினம் நமது நாடு ஒரு புதிய நம்பிக்கையில் ஒற்றுமையாகவும், புதிய துவக்கத்தில் உறுதியாகவும் செயல்பட முனைந்தது.
          “ஆம், நம்மால் முடியும்” என்பது தாரக மந்திரம் ஆயிற்று. அமெரிக்க மக்களுக்கு புதிதான மன உறுதியையும், ஜெயிப்பது உறுதி என்ற திடமான மனதையும் தந்தது,
          வெள்ளை மாளிகையை நோக்கி அதிபர் அந்த ஜனவரி மாதக் குளிரில் செல்வதைப் பார்த்த போது நான் சுற்றுமுற்றும் எல்லாரையும் பார்த்தேன். இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காகத் திரண்டிருந்த மக்கள் கட்சி ரீதியாகத் தங்களுக்குள் இருந்த சில்லறை வித்தியாசங்களை மறந்துவிட்டு, புதிய அதிபருக்கு உரிய மரியாதை செலுத்துவதைக் கவனித்தேன். இப்படி ஒரு நிகழ்வு நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. அதிபர் சொன்னார். “நாம் சிவப்பு மாநிலங்கள் அல்ல, நீல நிற மாநிலங்கள் அல்ல. நாம் ஒன்றுபட்ட நாடு (UNITED STATES) என்று. அப்படித்தான் அந்த கணம் என் மனதிலும் தோன்றியது.
          ஒபாமா தேர்தல் முடிவுகளை டிவியில் நான் பார்த்துக்கொண்டிருந்தேன். என் மனைவி டெபோரா ஏதோ வேலையாக வெளியே போயிருந்தாள். டிவியைப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு அவ்வப்போது சந்தேகம் வந்தது; ‘இதெல்லாம் உண்மையா? அல்லது நான் கற்பனை செய்துகொண்டிருக்கிறேனா? கடைசி நிமிஷம் யாராவது ‘எல்லாம் ரீல்’ என்று சொல்லிவிடப்போகிறார்கள் என்ற பயம் மனதினடியில் இருந்தது.
          நல்ல காலம் அப்படி எதுவும் நடக்கவில்லை.
          முடிவுகள் வரிசையாக வந்துகொண்டிருந்தன. பராக் ஒபாமா அமெரிக்காவின் நாற்பத்து நாலாவது அதிபராகிறார்.
          என்னவோ இந்தத் தகவல் என் உணர்ச்சிகளைத் தூண்டிவிடவில்லை. நான் மனம் நெகிழ்ந்து அழவில்லை. மறுநாள் நான் நடத்திய ‘டுடே’ ஷோவின் போதும் உணர்ச்சிவசப்படாமல்தான் இருந்தேன். ஆனால் அதிபர் பதவி ஏற்பு விழா அணி வகுப்பைப் பார்த்ததும் – கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் திரண்டு இருந்ததைப் பார்த்ததும், அதுவும் கறுப்பு இனத்தவரை முதன் முதலாக அதிபராகத் தேர்ந்தெடுத்ததைப் பார்த்ததும் என் உணர்வுகளைக் கட்டுப்படுத்த இயலவில்லை.
          நாட்டில் எத்தனை குறைபாடுகள் இருந்தாலும், நீங்கள் யாராக இருக்கவும், எந்த மாதிரி கனவு காணவும் எவ்விதத் தடையும் இல்லை.
          ஆம், நம்மால் முடியும்.

        நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, மறுபடியும் ஒரு அணிவகுப்புப் பாதையில் நான் நின்றுகொண்டிருந்தேன். தேர்தல் முடிவுகளைப் பலர் வரவேற்கவில்லை. நாட்டின் எதிர்காலம் பற்றி ஐயமும், பயமும் பலரிடம் இருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன், SANDY புயல் கிழக்குக் கரை மாநிலங்களைப் புரட்டிப் போட்டுவிட்டது. அதன் விளைவிலிருந்து இன்னும் பல ஊர்கள் மீண்டு எழுந்திருக்கவில்லை. 
ஒபாமா முதல் தடவை தேர்ந்தெடுக்கப்    பட்டபோது இருந்த மகிழ்ச்சியும், குதூகலமும் இப்போது  குறைவாகவே இருந்தன. பதவி ஏற்பு விழா உரைகளை, கனத்த மனதுடன்தான் கேட்டுக்கொண்டிருந்தேன். அடுத்த நான்கு ஆண்டுகள் ஒரு கறுப்பர் அதிபராக இருப்பார் என்று தெரிந்தும், நாட்டில் அபரிமிதமான ஒற்றுமையும், நல்லுணர்வுகளும் இல்லாமல் போய்விட்டது போல் உணர்ந்தேன்.
   இருந்தும், அந்த அணிவகுப்பு அபாரமாகவும், துடிப்பு மிக்கதாகவும், ஜனநாயகக் கொண்டாட்டமாகவும் எனக்குப் பட்டது. அணிவகுப்புப் பாதையில் வழக்கமான என் இடத்தில் போய் நின்று கொண்டேன். என் சக ஊழியர் BRIAN WILLIAMS என்னைப் பார்த்து ஒரு கேள்வியை வீசினார். “ஏய் ரோக்கர், இந்த அணிவகுப்பின் போதும் அதிபரிடம் இன்னொரு முறை கேள்வி கேட்கப் போகிறாயா? அவர் முதல் தடவை பதவி ஏற்க வந்தபோது கேள்வி கேட்டு, முதன்முதலில் அதிபரைக் கேள்வி கேட்டேன் என்று பெருமை அடித்துக் கொள்வாயே, இப்போது என்ன செய்யப் போகிறாய் என்று பார்க்கக் காத்திருக்கிறேன்!”
          சவால் என்று வந்தால், அதிலிருந்து நழுவி ஓட மாட்டேன். ஆகவே ஒபாமாவும், அவரது மனைவியும் வந்ததும், “மிஸ்டர் ப்ரெசிடெண்ட்” என்று உரக்கக் குரல் கொடுத்தேன்.
          இந்தத் தடவையும் அதிபரின் மனைவி. அதிபரிடம், என்னைச் சுட்டிக்காட்டினார்.
          உடனே ஒபாமா என்னைப் பார்த்து, ‘AL, இன்று ‘வெதர்’ சூப்பராக இருக்கிறது’ என்றார்.
          உடனே என்னிடம் வில்லியம்ஸ், ‘மறுபடியும் சாதித்துவிட்டாய்’ என்றார்.
          இருங்கள். கதை இன்னும் இருக்கிறது.‘வெயிட், வெய்ட், வைஸ்-ப்ரெசிடென்ட் BIDEN காரிலிருந்து இறங்குகிறார் பார்... ரோக்கர், அவரிடமும் நீ கேள்வி கேட்க முடியுமா?” என்று வில்லியம்ஸ் மீண்டும் சவால் விடுத்தார்.
          நான் உடனே, “மிஸ்டர் வைஸ் ப்ரெசிடென்ட்...இங்கே வாங்க... இங்கே வாங்க..” என்று சொல்லியபடியே, நான் இருக்கும் இடத்திற்கு வரும்படி சைகை செய்தேன்.
          அவர் என்னைப் பார்த்து “நான் அங்கு வந்தால் சீக்ரட் சர்விஸ் காவலர்கள் என்னைக் கொன்று விடுவார்கள்” என்று சொல்லியபடியே வேகமாக என்னை நோக்கி வந்து என்னிடம் கை குலுக்கினார்.
          “ஆஹா...சாதித்து விட்டேன்!” என்று கூறியபடி, கையிலிருந்த ‘மைக்’கை நழுவ விட்டு விட்டு நடையைக் கட்டினேன்.
          எங்கள் நிறுவனத் தயாரிப்பாளர்கள் நான் ஏதோ குறும்பு செய்வதாக எண்ணினார்கள். உண்மையில் திடீரென்று ஒரு மெய்சிலிர்க்கச் செய்த உணர்ச்சியில் மூழ்கிப்போனேன்.
          நியூயார்க் ‘க்வீன்ஸ்’ பகுதியில் இருந்து வந்த கறுப்புச் சிறுவன் நான். அமெரிக்காவின் முதல் கறுப்பு அதிபர் என்னிடம் பேசினார். துணை அதிபர் என்னிடம் கை குலுக்கினார். என் பெற்றோர்கள் உயிருடன் இருந்து இந்தக் காட்சியைப் பார்த்திருந்தால் என்ன சொல்லி இருப்பார்கள் என்று யோசித்துப் பார்த்தேன். என் வாழ்க்கையின் உன்னதமான கணம் அது, என் பணியில் எனக்குக் கிடைத்த அரிய பரிசு. இந்த மகிழ்ச்சிகரமான, வெற்றிகரமான சமயம், என் குடும்பம் என்னோடு இல்லையே என்ற இலேசான வருத்தம் ஏற்பட்டது. இந்த வெற்றியும் கொண்டாட்டமும் எனக்கு  மட்டும் சொந்தமல்ல;  நமது மக்களின் ஒன்று திரண்ட சாதனை! 

8 comments:

  1. அவர்கள் (அமெரிக்கா) ஜன'நாயகத்தில் வெகுவாக முன்னேறிவிட்டார்கள். அடிமன ஆழத்தில் நிறவெறியினால் ஏற்பட்ட களங்கம் இருந்தாலும், பெரும்பான்மையான மக்கள் அதிபராகத் தேர்ந்தெடுப்பதற்கு நிறம் ஒரு தடையல்ல என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.

    நம்ம ஊரில் கவுன்சிலர்களையே, மிஸ்டர் கவுன்சிலர் என்று பத்திரிகையாளர்கள் கூப்பிடமுடியுமா?

    "அமெரிக்கன்" என்ற நாட்டுப்பற்றைச் சமயம் கிடைக்கும்போதெல்லாம் அமெரிக்கர்களும் அவர்களின் தலைவர்களும் பொதுவெளியில் காண்பிக்கிறார்கள். ரொம்ப முன்னேறிய ஜன'நாயகம்.

    உங்கள் பகிர்வுகள் எப்போதும்போல் சிந்தனைக்கு விருந்து.

    ReplyDelete
  2. The thrill is in the chase but not in the game.Likewise the difficulties Broker endure to win is challenging.And we realize your compilation ability is magnificent;Thks,sir.

    ReplyDelete
  3. It is nice the reporter thought of his mother on this occasion! Can see how much he was delighted and excited! Such memories will always remain fresh. Thanks for sharing.

    ReplyDelete
  4. நெல்லைத் தமிழன் மற்றும் Godavari Sri அன்பர்களுக்கு,
    மிக்க நன்றி.
    - கடுகு

    ReplyDelete

  5. சிந்திக்க வைக்கும் சிறந்த பகிர்வு

    ReplyDelete
  6. J Y K அவர்களுக்கு,
    நன்றி.
    - கடுகு

    ReplyDelete
  7. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

    வணக்கம்.

    திரு ரோக்கர் அவர்களின் மன உணர்வுகள், ஜனாதிபதியிடம் அவர் பேச எடுத்துக் கொண்ட முயற்சிகளின் திரில், ஒரு சமுதாயத்தின் மொத்த பிரதிநிதியாக தன்னை அவர் உணர்ந்த விதம், எல்லாமே மிகவும் அருமை.

    மொழிபெயர்ப்பில் இவை அத்தனையையும் நீங்கள் அப்படியே கொண்டு வந்து தந்திருக்கும் அற்புதத்துக்கு எங்கள் பிரமிப்பு கலந்த நன்றி.

    அன்புடன்

    சீதாலஷ்மி சுப்ரமணியம்

    ReplyDelete
  8. ரோக்கரின் கட்டுரையைப் படிப்பவர்கள் எவரும் சுலபமாக மொழிபெயர்த்து விடலாம்.
    கையில் பேனா இருந்தால் போதும்.-
    கடுகு

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!