October 15, 2016

சில சமர்ப்பணங்கள்

புத்தகங்கள் எழுதுவதைக் காட்டிலும் கடினமான வேலை, புத்தகத்திற்கு பெயர் வைப்பது! அடுத்து சமர்ப்பணம் எழுதுவது. அதுவும் நகைச்சுவைப் புத்தகமாக இருந்துவிட்டால் சமர்ப்பணமும் நகைச்சுவையாக இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத விதி காரணமாக அந்த வேலை கடினமானதாக ஆகிவிடும்.
சில சமர்ப்பணங்களை  வித்தியாசமான, நகைச்சுவையான, குயுக்தியானவற்றைப் பார்க்கலாம். புத்தகசாலைக்குச்   செல்லும்   போதெல்லாம் புத்தகங்களைப் புரட்டி சமர்ப்பணங்களை மட்டும் குறித்துக் கொள்வேன். இது பல வருடப் பழக்கம்.  சில சமயம் சூப்பர் கருத்துகள் கிடைக்கும்.!
*பிரபல நகைச்சுவை எழுத்தாளர் பி.ஜி. வோட்ஹவுஸ், ‘THE HEART OF A GOOF’ புத்தகத்திற்கு எழுதிய சமர்ப்பணம். (1926-ஆம் ஆண்டு வெளியான புத்தகம்).  
      “என் பெண் லியனோராவிற்கு: அவளுடைய தொடர்ந்த பரிவும், ஊக்கமூட்டிய சேவையும் இல்லாதிருந்தால் இந்தப் புத்தகத்தை எழுதி முடிக்க நான் எடுத்துக் கொண்ட காலம் பாதியாகக் குறைந்திருக்கும்.!” 
    குட்டிக் குறிப்புஇது வோட்ஹவுஸின் பழைய ஐடியாதான்.  1910-ஆம் ஆண்டு அவர் எழுதிய “A GENTLEMAN OF LEISURE”என்ற புத்தகத்திலும்
இதே சமர்ப்பணத்தை,  லியனோராவிற்கு பதில்வேறு ஒருவருடைய பெயரைப் போட்டுஒரு வார்த்தையும் மாறாமல் அப்படியே எழுதியிருக்கிறார்.
   
*எர்ல் வில்சன்  “PIKES PEAK OR BUST” என்ற 1946-ல்  எழுதிய புத்தகத்தில் அவர் எழுதியுள்ள சமர்ப்பணம்.
என் அருமை மனைவி இன்னும் ஏன் மனத்தாங்கலுடன் இருக்கிறார்இதற்கு முன் நான் எழுதிய I am gazing into my 8-ball புத்தகத்தின் சமர்ப்பணத்தைப் பார்த்து!அந்தப் புத்தகத்தில் அலட்டல் வாசகங்கள் இல்லாமல் நான் எழுதிய சமர்ப்பணம்: “என் உணவை சமைத்திடும், என் கால் சாக்சின் கிழிசலை சரி செய்திடும், என் குழந்தையை அக்கறையுடன் கவனித்துக்கொள்ளும் அந்த அற்புதமான பெண்மணிக்கு – அதாவது என் மாமியாருக்கு!”       
    இப்போது ஒத்துக் கொள்கிறேன். நான் அப்படி எழுதியது சற்று குறும்புத்  தனமானதுதான். ஆதலால் என் அ.ம. (அருமை மனைவி)யை இந்தப் புத்தகத்தின் சமர்ப்பணத்தின் மூலம் சமாதானம் செய்ய விரும்புகிறேன்.
 ஆகவே என் மீது பரிவு கொண்டுள்ள அந்த எளிய பெண்மணிக்கு:
 
என் காலை நேரங்களை மலர்ந்த புன்னகையுடன் துவக்குவதுடன், பகல் முழுதும் எனக்காகக் கவலைப்ப டுவதுடன், மாலை கடினமான அலுவலக வேலை முடிந்ததும்,  என் மடியில் அமரும் பெண்ணான என் செகரட்டரிக்கு சமர்ப்பிக்கிறேன்!

 ஒரு கட்டுரையே எழுதிவிட்டார்.


 * அமெரிக்கக் கவிஞர்  e.e. cummings (ஆம், அப்படித்தான் அவர் தன் பெயரை எழுதுவாராம். ’கேபிடல்’ எழுத்துகளை உபயோகிக்க மாட்டார்!) தான் எழுதி கவிதைகளைத் தொகுத்து வெளியிட விரும்பினார், தொகுப்பைப் பல பதிப்பகங்களுக்கு அனுப்பினார். பதிநான்கு பதிப்பகங்களும்  திருப்பி அனுப்பிவிட்டது. தன் அம்மாவிடம் 300 டாலர் வாங்கி, தானே சொந்தமாகப் பிரசுரித்தார். வருஷம் 1933.

‘70 கவிதைகள்’ என்று இருந்த புத்தகத்தின் பெயரை “NO THANKS”  என்று மாற்றி விட்டார். பதிப்பகங்கள் தனக்கு எழுதிய “NO THANKS” என்பதையே  பெயராக வைத்து விட்டார், அது மட்டுமல்ல, சமர்ப்பணப் பக்கத்தில். “NO THANKS” என்று போட்டுவிட்டு, அந்த பதிநான்கு பதிப்பகங்களின் பெயர்களையும் அச்சிட்டிருந்தார். அதுவும் எப்படி? இறந்தவர் சாம்பலை வைக்கும் அஸ்திக் கலசம் வடிவில் அச்சிட்டிருந்தார். (சாவு கிராக்கி என்பதை ‘சிம்பாலிக்’காகச் சபித்திருக்கிறார்.)  
* அமெரிக்க அதிபராக வுட்ரோ வில்சன் இருந்தபோது (1913-21) வைஸ் பிரசிடென்டாக இருந்தவர் தாமஸ் மார்ஷல். அவர் ஒரு புத்தகத்தில் இப்படி எழுதித் தந்திருக்கிறார்! “To President Wilson – From his only vice!”
* ‘லேடி சாட்டர்லீஸ் லவ்வர்’  ஒரு மாதிரியான புத்தகம் என்பதால் அது தடை செய்யப்பட்டது. அதை எழுதிய ஆசிரியர் D.H.லாரன்ஸ் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. அதில், அவரைக் குற்றமற்றவர் என்று, 12 ஜூரர்கள் கொண்ட   குழு விடுவித்தது. அதன்பின் அவரது அந்தப் புத்தகம் மறு பிரசுரம் ஆனபோது, அவர் அந்த ஜூரி குழுவினருக்கு சமர்ப்பணம் செய்தார்.  “நான் ’குற்றமற்றவன்’ என்று தீர்ப்பு சொன்ன மூன்று பெண் ஜூரர்களுக்கும் ஒன்பது ஆண் ஜூரர்களுக்கும்!”
* எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவரான BETTY MACDONALD எழுதிய புத்தகம்: முட்டையும் நானும். அதைத் தனது சகோதரி மேரிக்குச் சமர்ப்பணம் செய்துள்ளார். எப்படி?  “சமர்ப்பணம் என் சகோதரி மேரிக்கு. அவளுக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு, அவள் மனது வைக்கும் எதையும் என்னால் செய்து முடிக்க முடியும் என்று!” - அவள் மனது வைக்கும் எதையும் என்னால் செய்ய முடியும் என்று எப்போதும் நம்பும் என் சகோதரி மேரிக்கு சமர்ப்பணம்.
 *ஜேன் மாரிஸ் எழுதிய THE OXFORD BOOK OF OXFORD என்ற புத்தகத்தில் வந்துள்ள சமர்ப்பணம் சற்று வித்தியாசமானது:
 “ ஆக்ஸ்போர்ட் அன்டனி கல்லூரியின் வார்டனுக்கும் மற்றும் FELLOWS-களில் ஒருவர் நீங்கலாக மற்ற எல்லோருக்கும் சமர்ப்பணம்!
அந்த ஒருவர் மீது என்ன மனக் கசப்போ?
  * சல்மான் ரஷ்டி தனது “HAROUN AND THE SEA OF STORIES” புத்தகத்தில் எழுதியிருப்பது:
Zembla, Zenda, Xanadu:
All our dream-worlds may come true.
Fairy lands are fearsome too.
As I wander far from view
Read, and bring me home to you.”
இந்தக் கவிதை வரிகளின் முதல் எழுத்துக்களைச் சேர்த்தால் ZAFAR என்று வருகிறது அல்லவா? அது அவருடைய பிள்ளையின் பெயர்.

* ஐஸக் அஸிமாவ் தனது ஃபௌண்டேஷன் புத்தகத்தைத் தன் அம்மாவிற்குச் சமர்ப்பித்திருக்கிறார். (அஸிமாவ் 500 புத்தகங்கள் எழுதி இருக்கிறார்.)

“என் அம்மாவிற்கு! அம்மாவின் தலையில் உள்ள நரை முடியில் உள்ள சில நரைகளுக்குக் கூட நான் காரணமல்ல!” 
  *AYN RAND தனது 1000  பக்க நாவலான ATLAS SHRUGGED புத்தகத்தை இரண்டு பேருக்குச் சேர்த்து சமர்ப்பணம் செய்துள்ளார். ஒருத்தர் அவரது கணவர், மற்றவர் அவரது காதலர்!

 *VALLEY OF DOLLS என்ற புத்தகத்தை எழுதி மிகவும் பிரபலமாகிவிட்ட ஜேக்வலீன் சூஸன் தனது புத்தகத்தை இப்படி சமர்ப்பணம் செய்திருக்கிறார். “To Josephine, who sat at my feet, positive I was writing a sequel”
யார் இந்த ஜோசஃபின்? அவருடைய செல்ல  நாய்க்குட்டி!
 அவருக்கு நாயின் மேல் அவ்வளவு பாசமாம்!
(நாவலாசிரியராக ஆவதற்கு முன்பு சூஸன் டி.வி. விளம்பரங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது எம்ப்ராய்டரி போட்ட டிரஸ்ஸைத்தான் போட்டுக் கொள்வார்.  ஜோஸ்ஃபினுக்கும் அதே டிசைனில் எம்ப்ராய்டரி  டிரஸ்ஸைப் போட்டுத் தன்னூடன் வைத்திருப்பாராம்!)

* வில்லியம் அஸ்லம் என்பவர் தான் தொகுத்த ’லிமரிக் அன்லிமிடெட்’ புத்தகத்தைத் தன் மனைவிக்கு சமர்ப்பணம் செய்துள்ளது இப்படி:
 “In a round about sort of way, this book is dedicated to me because it is dedicated to my wife who is dedicated to me!” 
 *ராபர்ட் மெக்கல்ராய் தான் எழுதிய “கிளீவ்லாண்ட் வாழ்க்கை” என்ற புத்தகத்தில் எழுதிய சமர்ப்பணம். “என் மனைவிக்கு. அவளுடைய சிவப்புக் கலர் பென்சில், என் உன்னதமான பல வாக்கியங்களை உலகம் இழக்கச் செய்து விட்டது.” 
 * நகைச்சுவை எழுத்தாளர் ஆலன் ஸ்மித் எழுதியது “இந்தப் புத்தகத்தின் 10 சதவிகிதத்தை என் புத்தக ஏஜன்ட் ஹெரால்ட் மேட்சன்னுக்குச்  சமர்ப்பிக்கிறேன்.”

*மனைவி அமைவதெல்லாம்!

‘எலெக்ட்ரானிக் ப்ரின்சிபிள்’ என்ற 750 பக்கத் தலையணைப் புத்தகத்தை எழுதியுள்ள ஆல்பர்ட் மால்வினோ புத்தகத்தின் இரண்டாவது பதிப்பில் (1979) எழுதியுள்ள சமர்ப்பணம்.
 ‘இந்தப் புத்தகம் என்னுடைய அழகான மற்றும் கெட்டிக்காரியுமான என் மனைவிக்கு. அவள் இல்லாவிட்டால் நான் ஒன்றுமே இல்லை. அவள் எப்போதும் ஆறுதலாகவும், ஆதரவாகவும் இருப்பதுடன் எந்த சமயத்திலும் புகார் செய்யாமலும் எதையும் தனக்காகக் கேட்காமலும், என் வேலையில் தலையிடாமல் இருப்பதுடன், எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்வதுடன் என் புத்தகங்களுக்குச் சமர்ப்பணமும் எழுதித் தருகிறார்.’ – ஆல்பர்ட் மால்வினோ
  * மார்க் ட்வெயினின் எச்சரிக்கை
அமெரிக்க நகைச்சுவை எழுத்தாளர் மார்க் ட்வெயின் தான் எழுதிய “Adventures of Huckleberry Finn” புத்தகத்தில் சமர்ப்பணத்திற்குப் பதில் ஒரு எச்சரிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
 “  இந்தப் புத்தகத்தின் நோக்கத்தைக் கண்டுபிடிக்க முயற்சி செய்பவர்கள் மீது வழக்குத் தொடுக்கப்படும். இதில் நீதிக்கருத்தைக் கண்டு பிடிக்க முயற்சி செய்பவர்கள் நாடு கடத்தப்படுவார்கள்; இதில் கதையைக் கண்டுபிடிக்க முயல்பவர்கள் சுட்டுத் தள்ளப்படுவார்கள்-ஆசிரியரின் ஆணைப்படி!”
  *குல்தீப் நய்யார் ஒரு பத்திரிகை யாளர். எழுத்தாளர். அவர் எமர்ஜென்சியைப் பற்றி 78ல் ஒரு புத்தகம் எழுதினார். அதை யாருக்கு சமர்ப்பணம் செய்தார் தெரியுமா? டில்லி - ஃபரீதாபாத் செல்லும் சாலையில் உள்ள ஒரு டீக்கடைகாரருக்கு என்பதுடன் அந்த டீக்கடைக்காரரின் அரசியல் ஞானம் பற்றி  பாராட்டாக ஒரு வரியும் சேர்த்திருந்தார். அந்தக் காலத்தில் இந்த சமர்ப்பணம் பரபரப்பை ஊட்டியது.
    *ஓரளவு நினைவில் இருக்கும் ஒரு வித்யாசமான சமர்ப்பணம்: “இந்தப் புத்தகத்தை என் மகள்yyy க்கும் மகன் xxx க்கும் ஆங்கில மொழியின் 26 எழுத்துகளுக்கும் சமர்ப்பிக்கிறேன்.”
  * ரிச்சர்ட் ஆர்மரின் குறிப்பு
நகைச்சுவை எழுத்தாளர் ரிச்சர்ட் ஆர்மரின் புத்தகங்கள் முன் அட்டையிலிருந்து பின் அட்டை  வரை நல்ல உயர்தர நகைச்சுவைதான். ஆங்கில நடையும் அற்புதம். அமெரிக்கன் லிட்-ரீலிட் (American Lit Relit) புத்தகத்தில் ஆசிரியரின் குறிப்பு: “There are no half truths in this book but the reader may occasionally come upon a truth and half. – R.A.”
  *அம்மாவுக்கு 
தாங்கள் எழுதிய புத்தகத்தை எழுத்தாளர்கள் அம்மாவுக்கு சமர்ப்பணம் செய்வது புதிதல்ல. எழுத்தாளர் கே.ஜி. ஜவஹர்லால் தன் ‘சிலப்பதிகாரம்’ புத்தகத்தை இப்படி சமர்ப்பணம் செய்திருக்கிறார்.
 “சமர்ப்பணம்: தொண்ணூற்றி ஏழாம் வயதிலும் படிப்பதில் ஆர்வம் குறையாத என் தாயார் திருமதி ராஜலக்ஷ்மி கோபாலன் அவர்களுக்கு.”
 மேலும்  சில சமர்ப்பணங்களையும்   பார்க்கலாம்.
* ALAN KING என்ற நகைச்சுவை எழுத்தாளர் தனது “I’m a prisoner in a Chinese Bakery” என்ற அட்டகாசமான புத்தகத்தில் எழுதியிருப்பது. “என் அப்பா BERNARD அவர்களுக்கும் (வீட்டில் 17 வருஷங்கள் வாயை ஒரு தரம் கூட திறக்காதவர்) என் அம்மா MINNIEக்கும் (என் அப்பா 17 வருஷங்களாக வாயைத் திறந்ததே இல்லை என்பதே தெரியாமல் இருந்தவர்!)

* BENNETT CERF, தான் எழுதிய OUT ON A LIMERICK புத்தகத்தின் சமர்ப்பணத்தை ஒரு லிமெரிக் பாடலாகத் தந்துவிட்டார். அந்த லிமெரிக் :
There was a young lady from Fife
Whom I never have seen in my life.
So the devil with her;
Instead I prefer
To dedicate this to my wife. 
    * Harold Fry தனது புத்தகம் “How to survive matrimony”யில் எழுதியுள்ள சமர்ப்பணம்.
“என் மனைவி சிந்தியாவிற்கு. அவர் மட்டும் இல்லாதிருந்தால், இந்தப் புத்தகத்தை எழுத அவசியமே இருந்திருக்காது!”
* Prudence Shen என்பவர் சிறுவர்களுக்காக எழுதிய புத்தகம்,
“Nothing can possibly go wrong".  அதைத் தன் பெற்றோருக்கு சமர்ப்பணம் செய்துள்ளார். எப்படி? 
“என் பெற்றோருக்கு. அவர்கள் எனக்கு ஒரு ‘ரோபோ’ வாங்கிக் கொடுக்கவே இல்லை என்ற போதிலும்!
 BONUS:

நீண்ட பின்குறிப்பு: சுமார் 30 வருஷங்களுக்கு  முன்பு எழுதி வைத்த குறிப்பு இப்போது கிடைத்தது. அதிலிருந்து  சிலவற்றைச் சேர்க்கிறேன்
 * Charles Creed dedicates hhis book 'Maid to Measure' to E.Grant  "who wrote it for me!"
+ Louis Safian's dedication of his book '2000 Insults for all occasions to his wife" 'who always laughs at my jokes not because they are always clever but because she is."
The famous one-liner ad-libber Henny Youngman offers his book 'How do you like me sofar' to his wife 'whom I have abused to our benefit!'
American Comedian Joey Adams dedicates his book of Jokes to "Cindy, who spent her days and nights writing this book with me and spent the royalties before I received them."
Comedian Jack Paar dedicated his book to his daughter " who knew what Jack Paar is like. -- With love and gratitude for not telling!"

7 comments:

 1. எதையும் வித்தியாசமான கோணத்தில் அணுகுகிறீர்கள். புத்தக சமர்ப்பணத்தை இவ்வளவு கூர்ந்து நோக்குவார்கள் என்று ஆசிரியர்கள் ஒருவேளை நினைத்திருக்கலாம். ஆனால் அதனையும் ஒருவர் ரசித்துத் தொகுப்பார் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.

  தொகுப்பை ரசித்தேன். இப்போது, உங்கள் புத்தகங்களுக்கு என்ன மாதிரி 'சமர்ப்பணம்' செய்துள்ளீர்கள் என்றும், மற்றவர்கள் என்ன மாதிரி எழுதியுள்ளார்கள் என்றும் என்னைக் கவனிக்க வைத்துவிட்டீர்கள்.

  ReplyDelete
 2. நன்றி.
  THE HUMOROUS WORLD OF DEDICATIONS என்ற தலைப்பில் சுமார் 40 வருடங்களுக்கு முன்பு ILLUSTRATED WEEKLY-ல் எழுதி இருக்கிறேன். துரதிர்ஷ்டம் ‘ச்லிப்பிங்க்’ என்னிடம் இல்லை. - கடுகு

  ReplyDelete

 3. அருமையான தகவல்
  தொடருங்கள்

  ReplyDelete
 4. Awesome compendium on Book dedication - enjoyed.

  ReplyDelete
 5. Aahaa, what a collection! Seems reading the dedications sometimes will be more interesting than reading the books themselves. And almost all quoted ones are humourous!

  ReplyDelete
 6. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

  வணக்கம்.

  எத்தனை அருமையான தகவல்கள், படிக்கிறவர்களின் ரசனையை உயர்த்தும் உங்கள் பகிர்வு, வாசகர்களுக்கு மிகப் பெரிய பரிசு.

  நன்றி.

  அன்புடன்

  சீதாலஷ்மி சுப்ரமணியம்

  ReplyDelete
 7. மிக்க நன்றி. உங்களிப் போன்ற் எழுத்டர்வமுமம் படிக்கும் ஆர்வமும் உடையவர்களின் பாராட்டு, பொற்கிழிக்கு சமம்-கடுகு

  ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!