August 13, 2016

ராணி-ராஜா-மந்திரி-ஜோக்கர்


ராணி
1.    எழுத்துக்கு மரியாதை
ராணி விக்டோரியா இங்கிலாந்து ராணியாக இருந்த காலகட்டத்தில்தான் எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ் இருந்தார்.  விக்டோரியா ராணி அவரைப் பார்த்துப் பேச விரும்பினார். அவருக்கு அழைப்பு அனுப்பினார். பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அவர் சென்றார். இங்கிலாந்து நாட்டு வழக்கப்படி, அவர் ராணியின் முன் உட்காரக்கூடாது. அதனால், டிக்கன்ஸின் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த விக்டோரியா ராணியும் உட்காராமல் நின்றுகொண்டே பேசினாராம். எவ்வளவு நேரம்? ஒன்றரை மணி நேரம்!

 2.   எலிசபெத் ராணியின் வாழ்த்து
இங்கிலாந்தில் வாழும் குடிமகன்கள், 100-வது பிறந்த நாளை எட்டிவிட்டால்,வர்களுக்கு ராணி பிறந்த நாள் வாழ்த்துக்களை அனுப்புகிறார். சமீபத்திய புள்ளி விவரம்: இங்கிலாந்தில் 100 வயதானவர்கள் 7500 பேர் இருக்கிறார்கள். 100 வயதைக் கடந்தவர்களுக்கு அவர்களது ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ராணி வாழ்த்து அனுப்புகிறார்.
            அறுபதாவது திருமண நாளைக் கொண்டாடும் தம்பதிக்கும் ராணி வாழ்த்து அனுப்புகிறார்- ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 9000 தம்பதிகளுக்கு.!
ராஜா
3.    ஓரங்கட்டுங்க சார்
பிரிட்டிஷ் அரசியின் கணவர் பிரின்ஸ் பிலிப், (ட்யூக் ஆஃப் எடின்பரோ). எலிசபெத் ராணிக்கும் இவருக்கும் 1947-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி திருமணம் விமரிசையாக நடந்தது.
         
அதற்கு முன் தினம், அதாவது 18-ம் தேதி, பிரின்ஸ் பிலிப், லண்டனில் தானே காரை ஓட்டிக்கொண்டு போனார். வேகக் கட்டுப்பாடு அறிவிப்புகளைக் கவனிக்காமல் அதிவேகத்தில் சென்றார். காரில் வேறு யாரும் இல்லை. போக்குவரத்தைக் கவனித்துக் கொண்டிருந்த ஒரு போலீஸ்காரர் விசில் ஊதி, கையைக் காட்டிக்  காரை நிறுத்தி ஓரம் கட்டச் சொன்னார். பிரின்ஸ் பிலிப்பை அவர் அறிந்திருக்கவில்லை.
            “அவசரமாக நான் காண்டர்பரி ஆர்ச் பிஷப்பைச் சந்திக்கப் போய்க் கொண்டிருக்கிறேன்.” என்று கூறிவிட்டு, தான் யார் என்பதைச் சொல்லி, அபராதம் எதுவும் இல்லாமல் தப்பிச் சென்றார்.
            மறுநாள் திருமண நிகழ்ச்சி ஒத்திகைக்காக அவசரம் அவசரமாகப் போனாராம். மறுநாள் ராணியைக் கல்யாணம் செய்து கொண்டு ‘ராஜா’வாக ஆனார்.
---------------------------------------------
ஒரு ஜம்பத் தகவல்

சமீபத்தில் என் பெயருக்கு  ஃபிலிப் பிரின்ஸின் பிரைவேட் செக்ரட்டரியிட மிருந்து  BUCKINGHAM PALACE  லெட்டர் ஹெட்டில் ஒரு கடிதம் வந்தது. இது பற்றி பின்னால் ஒரு பதிவு போடுகிறேன். :)
அதுவரைக் காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டு இருக்கிறேன்!!
---------------------------------
மந்திரி
4.    மந்திரி தாட்சர்
வின்ஸ்டன் சர்ச்சிலுக்குப் பிறகு, மிகவும் திறமை மிக்க பிரதமராகத் திகழ்ந்தவர் மார்க்கரெட் தாட்சர் எனலாம். 
அவர் 1990- ல் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு சார்லஸ் மூர் என்ற எழுத்தாளர் தாட்சரின் வரலாற்றை எழுத நினைத்தார். தாட்சரிடம் தன் விருப்பத்தைக் கூறிவிட்டு, புத்தகத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று கேட்டார். வரிசையாக மூன்று பொதுத்தேர்தல்களில் வெற்றி பெற்றவர் தாட்சர். ஒரு வினாடி கூட யோசிக்காமல் தாட்சர் சொன்னது: UNDEFEATED (தோல்வியுறாதவர்).
            பின்னால் புத்தகம் வெளியாயிற்று,  ஒரு சவசவ தலைப்புடன்: THE DOWNING STREET YEARS.

ஜோக்கர்
5 . மிஸ்டர் பீன்
சமீப வருடங்களில், மிஸ்டர் பீன் (Mr. Bean) என்ற தலைப்பில் காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ரோவன் அட்கின்ஸன். 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் துவக்க விழாவில் இவரது குட்டி நிகழ்ச்சியும் கூட இடம்பெற்றது.
            
ரோவன் 1997-ஆம் ஆண்டு மிக மிக விலை உயர்ந்த காரான மெக்லாரன் – F1 காரை சுமார் 6 லட்சம் பவுண்டுக்கு வாங்கினார். இந்தக் கார் வருஷத்திற்கே ஐம்பதே ஐம்பதுதான் தயாரிக்கப்
டுகிறதாம். 250 மைல் வேகத்தில் பறக்கக் கூடியது. 

ரோவன் 1999-இல் இந்தக் காரை வெகுவேகமாக ஓட்டிச் சென்று, இன்னொரு காரோடு மோதி விபத்துக்குள்ளானார். கார் பலத்த சேதமடைந்தது; ரோவனுக்கு அதிகமாக அடிபடவில்லை. இதை ரிப்பேர் செய்ய ஒரு லட்சம் பவுண்ட் செலவாயிற்றாம்.
திரும்பவும் 2011-இல் விபத்து ஏற்பட்டது. சமீபத்தில் அந்தக் காரை விற்றுவிட்டார். எவ்வளவுக்கு? பன்னிரண்டு லட்சம் பவுண்டுக்கு! சுளையாக ஆறு லட்சம் பவுண்டுக்கு மேல் லாபம் !
           
 சில Mr. Bean ஜோக்குகள்

1*நிருபர்: உங்கள் பிறந்த தேதி என்ன?
மிஸ்டர் பீன் : அக்டோபர் 13.
நிருபர்: வருடம்?
பீன்: ஒவ்வொரு வருஷமும் அதேதான்.
    *  கேள்வி: கிட்டத்தட்ட 100 லெட்டர்கள் உள்ள ஒரு வார்த்தையைச் சொல்ல முடியுமா?
பீன்: POSTBOX
* வெளிநாட்டுப்பயணம் போய்விட்டுத் திரும்பிய மிஸ்டர் பீன், தன் மனைவியிடம் கேட்டார். “என்னைப் பார்த்தால் வெளிநாட்டு ஆசாமி மாதிரி இருக்கிறதா?”
       மனைவி: இல்லையே.... ஏன் கேட்கிறீர்கள்?
   பீன்: இல்லை.... டில்லியில் ஒரு பெண் என்னிடம் “நீங்கள் வெளிநாட்டுக்காரரா?” என்று கேட்டாள்.


*   ஆசிரியர்: மிஸ்டர் பீன்,  காந்தி ஜெயந்தி – சிறு குறிப்பு எழுது.
மாணவன் பீன்: காந்தி மிகப்பெரிய மனிதர். ஜெயந்தி யார் என்று எனக்குத் தெரியாது.
5.    பீன்: அந்தப்பெண்ணுக்குக் காது கேட்காது என்று நினைக்கிறேன்.
நண்பன்: எப்படித் தெரியும்?
பீன்: அவளிடம் போய் “ஐ லவ் யூ” என்று சொன்னேன். அவள் அதற்கு “என் செருப்பு புதுசு” என்றாள்.

 ஆசிரியர்: ஏசுநாதர், ராமர், கிருஷ்ணர், காந்தி, புத்தர் – இவர்களுக்குள் பொதுவானது என்ன?
  பீன்: எல்லாரும் அரசு விடுமுறை தினத்தில் பிறந்தவர்கள்!

முக்கிய குறிப்பு: இந்தப் பதிவைத் தட்டச்சு செய்து உதவியது: சகோதரி திருமதி எஸ். ஷோபனா.  அவருக்கு என் நன்றி!

10 comments:

  1. // 250 மைல் வேகத்தில் பறக்கக் கூடியது. //

    ஓ...
    பறக்கும்
    காரா?

    ReplyDelete
  2. //இந்தக் கார் வருஷத்திற்கே ஐம்பதே ஐம்பதுதான் தயாரிக்கப்
    படுகிறதாம். //

    52 தயாரித்தாலாவது வாரம் 1 கார் என்று கணக்கிடலாம்!
    ஆனால், அது ஏன் "50"???

    ReplyDelete
  3. //ஒரு வார்த்தையைச் சொல்ல முடியுமா?
    பீன்: POST BOX//

    சாரி சார்!
    'போஸ்ட் பாக்ஸ்' என்பது
    'ஒரு' வார்த்தையல்ல!
    'இரு' வார்த்தைகள்!!!

    ReplyDelete
  4. Awaiting to know details of reasons for your 'jambam'! Pl don't delay it!
    Mr Bean some jokes already in circulation with no credit to him!
    The other pieces of the post are quite interesting - as ever.

    ReplyDelete
  5. அருமையான கண்ணோட்டம்
    தொடருங்கள்

    ReplyDelete
  6. 'நல்லா இருந்துச்சு. அதுவும் மிஸ்டர் பீன்ஸ்..

    ReplyDelete
  7. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

    வணக்கம்.

    தலைப்பைப் பார்த்ததும், சீட்டுக் கட்டு சம்பந்தமான பதிவோ என்று நினைத்தேன்.

    வழக்கம் போலவே ரசனையான பதிவு.

    பகிர்வுக்கு நன்றி.

    அன்புடன்

    சீதாலஷ்மி சுப்ரமணியம்

    ReplyDelete
  8. All your previous postings was also very very nice and humorus.
    K.Ragavan
    Bengaluru

    ReplyDelete
  9. பக்கிங்ஹாம் அரண்மனை லெட்டர் ஹெட்டிலிருந்து கடிதம் வந்த குஷியா? ஒரே அக்கரை செய்திகளாக தாளித்திருக்கிறீர்களே..?

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!