August 02, 2016

கை கொடுத்த மினி பாபு

டில்லியில் பணிபுரிந்த காலத்தில் எனக்கு அரசு குடியிருப்பு மின்டோ ரோடில் கிடைத்தது. மின்டோ ரோடு, கன்னாட் பிளேஸ் பகுதியை மிகவும் ஒட்டியிருந்த இடம்.
என் அலுவலகம் பாராளுமன்றத்தை ஒட்டியிருந்த Parliament Street-ல் இருந்தது. அந்த காலகட்டத்தில் மெதுவாக சைக்கிளிலிருந்து ஸ்கூட்டருக்கு மாறியிருந்தேன்,
நான் பணிபுரிந்த செக் ஷனில் மட்டும்  50 பேர் இருந்தனர். அதில் ஜகதீஷ் பிரசாத் என்ற ஒரு டைப்பிஸ்ட் இருந்தார். வயதில் குறைந்தவர் மட்டுமல்ல; உயரத்திலும் குறைந்தவர். மகா மகா குறைந்தவர் என்று சொல்லலாம். அலுவலகத்தில் அவருக்கு மினி பாபு என்று பெயரிட்டுவிட்டோம்.
நான் மின்டோ ரோடுக்குக் குடிபெயர்ந்த சில நாட்களுக்குப் பிறகு, மினி பாபு என்னிடம் வந்து  “நீங்கள் சாயங்காலம் வீட்டுக்குப் போகும்போது நானும் உங்கள் ஸ்கூட்டரில் வரலாமா?” என்று கேட்டார். 

“வாங்களேன். உங்கள் வீடு எங்கே இருக்கிறது?”
“உங்கள் வீட்டிலிருந்து சிறிது தூரம் போக வேண்டும். அஜ்மீரி கேட் பகுதியில் உள்ளது.” என்றார்.
 “ தாரளமாக வாங்களேன்” என்றேன்
தினமும் மாலை அவரை  ஏற்றிக்கொண்டு போனேன். கிட்டத்தட்ட பத்து வருஷங்கள்!
சில நாள் அவர் தாமதமாக வந்தாலும் காத்திருந்து அழைத்துப்போவேன். ஆபீசிலிருந்து வீட்டுக்குப் போகாமல் வேறு எங்காவது போகவேண்டியிருந்தால், மினி பாபுவுக்காக  கூடியவரை அதைத் தவிர்த்து விடுவேன்.


சில வருடங்கள் கழித்து  டெல்லி வீட்டு வசதி வாரியத்தில் எனக்கு ஒரு வீடு ஒதுக்கப்பட்டது. அது கிட்டத்தட்ட லாட்டரி பரிசு மாதிரிதான்.
நான் மனு செய்யும்போது தரைத்தள வீடு வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன். வீடுகளுக்கான குலுக்கலில் உங்கள் பெயர் வந்தாலும் அது தரை தள வீடாக இருந்தால்தான் கிடைக்கும். வேறு தள வீடாக இருந்தால் கிடைக்காது. அதுதான் நிபந்தனை.
எனக்கு லாட்டரியில் வந்த வீடு இரண்டாவது தளம். இடம்: கரோல்பாக். அந்த வீட்டைப் போய்ப் பார்த்தேன். பிரமாதமான பகுதியில் இருந்தது. ஆகவே இந்த வீட்டை விட்டுவிட எனக்கு மனமில்லை. விதிப்படி அந்த வீட்டை எனக்கு ஒதுக்குவதற்கு இடமில்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை.

இந்த சமயத்தில் ஒரு நாள் வீட்டுக்குப் போகும்போது மினி பாபுவிடம், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போவதை விவரமாகச் சொன்னேன். “DDA வைஸ் சேர்மனுக்கு மனு செய்யலாம் என்றிருக்கிறேன்” என்றேன்.
“நீங்கள் கவலைப்படாதீர்கள். நான் சொல்வதைக் கேளுங்கள். DDA ஹவுஸிங் செக் ஷனில் என் உறவினன் வேலை செய்கிறான். அவன் டைப்பிஸ்ட்தான். இருந்தாலும் அவன் வழி கூறுவான்.” என்றார்.
“மினி பாபு... குலுக்கல் சென்ற வாரம்தான் நடந்தது. விரைவில் யாரையாவது பார்த்தால் நல்லது. வேறு ஒருவருக்கு இதே வீட்டை ‘அல்லாட்’ செய்துவிட்டால் யாராலும் உதவ முடியாது” என்றேன்.
“சரி... நாளைக்கே போகலாம்” என்றார்.
மறுநாள் போனோம். ஹவுஸிங் செக் ஷனுக்குப் போனோம். அங்கு அவரது உறவினரை  மினிபாபு எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
“அங்கிள்.. இவர்தான் என் ரிலேடிவ். இவர் பெயர் ஜகதீஷ் பிரசாத்....” என்றார்.
“அட... உங்கள் பெயரேதான்...” என்றேன். பிறகு அந்த ஜகதீஷிடம் விஷயத்தைச் சொன்னேன்.
“வைஸ் சேர்மனை எல்லாம் பார்ப்பதை விட ஹவுஸிங் கமிஷனரைப் பார்க்கலாம். அவர் செக்ஷனில்தான் நான் இருக்கிறேன்... ஏதாவது பெட்டிஷன் எழுதிக்கொண்டு வந்திருக்கிறீர்களா?” என்று கேட்டார்.
“கொண்டு வந்திருக்கிறேன் வைஸ் சேர்மன் பெயருக்கு.” என்றேன்.
“அது பரவாயில்லை....வாருங்கள்....என் ஆபீசரைப் பார்க்கலாம்.” என்றார்.
போனோம். அறை வாசலில் அவர் பெயரின் (மறந்துவிட்டது) பின்னால் I.A.S. என்று போட்டிருந்தது.
ஜகதீஷும் நானும் போனோம். இளைஞராக இருந்தார். விஷயத்தைச் சொன்னோம்.
“அதெப்படிச் செய்ய முடியும்? இப்போது குலுக்கலில் வந்துள்ள வீடு உங்களுக்குப் பிடித்திருக்கவே வீட்டை ஒதுக்கச் சொல்கிறீர்கள். அதுவே பிடிக்காத பகுதியில் பிடிக்காத தளத்தில் இருந்து, நாங்கள் ஒதுக்கி இருந்தால், அப்போது “நான் தரைத் தளம்தான் கேட்டிருந்தேன். ஆகவே எனக்கு வேண்டாம்.” என்று சொல்லியிருப்பீர்கள். உங்கள் பதிவு எண்ணும் கேன்ஸல் ஆகாது. அதாவது இரண்டு விதத்திலும் உங்களுக்கு சாதகமான வழியாகிவிடும்” என்று லேசான புன்னகையுடன் சொன்னார்.

“சார்... என் அதிகப்பிரசங்கித்தனத்தை மன்னித்துவிடுங்கள். D.D.A.வின் கொள்கை, நோக்கம் என்ன? அனைவருக்கும் வீடு ஒதுக்குவதுதான்; சிறிய தவறைச் சுட்டிக்காட்டி அவர்களுக்கு ஒதுக்காமல் இருந்துவிடுவது அல்லவே.?  என் பெயரைப் பதிவு செய்து ஆறு வருஷமாகக் காத்திருக்கிறேன்.” என்றேன்.
“சரி...மனு ஏதாவது கொண்டு வந்திருக்கிறீர்களா?.. இல்லாவிட்டால் எழுதிக்கொடுத்துவிட்டுப் போங்கள்.... உங்களை மாதிரி நிறையப்பேர் இந்த மாதிரி கோரிக்கையை எழுப்பியிருக்கிறார்கள்...” என்றார்.
தயாராக எடுத்துக்கொண்டு போயிருந்த மனுவைக் கொடுத்துவிட்டு வந்தேன்.
இரண்டு ஜகதீஷுக்கும் நன்றி கூறிவிட்டு வீடு திரும்பினேன்.

ஒரு மாதம் கழித்து D.D.A.விலிருந்து கடிதம் வந்தது. “குலுக்கலில் உங்கள் பெயர் வந்தாலும் நீங்கள் கேட்ட தளம் வரவில்லை. குலுக்கலில் வந்த தளத்தையே ஏற்றுக்கொள்வதாக தாங்கள் மனு செய்துள்ளீர்கள். அது ஏற்கப்படுகிறது. உங்களுக்கு வீடு ஒதுக்கப்படுகிறது. விரைவில் முறையான ‘ALLOTMENT LETTER’ உங்களுக்கு அனுப்பப்படும்” என்று இருந்தது.

ஆஹா... ஒரு ஜகதீஷுக்குச் செய்த உதவிக்கு இன்னொரு ஜகதீஷின் மூலமாக எனக்குப் பலன் தர ஏற்பாடு செய்த இறைவா...  உன் அருள் உள்ளத்திற்கு எவ்வாறு நன்றி தெரிவிப்பேன் !

முக்கிய குறிப்பு: இந்தப் பதிவைத் தட்டச்சு செய்து உதவியது: சகோதரி திருமதி எஸ். ஷோபனா.  அவருக்கு என் நன்றி!


6 comments:

 1. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

  வணக்கம்.

  ’மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது’ என்று புரிய வைத்திருக்கிறார் மினி பாபு.

  உங்களுடைய டெல்லி பதிவுகளை மீண்டும் மீண்டும் படிப்பேன். டெல்லிக்குப் போய் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் ஆசையாக இருக்கும்.

  மிண்டோ ரோடு, கரோல் பாக், பார்லிமெண்ட் தெரு, கன்னாட் ப்ளேஸ் இவற்றையெல்லாம் என்றாவது ஒரு நாள் பார்க்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

  நன்றி.

  அன்புடன்

  சீதாலஷ்மி சுப்ரமணியம்

  ReplyDelete
 2. பிறர்க்குதவி முற்பகல் செய்யின் தனக்குதவி பிற்பகல் தாமே வரும். எதிர்ப்பார்ப்பில்லாமல் (அதுவும் 10 வருடம்.. ஏ... அப்பா) உதவி செய்யும்போது எதிர்பாரமல் உதவி எப்போதும் வரும்.

  ReplyDelete
 3. Today's date - 2²/2³/24 (2 to the power 4).

  ReplyDelete
 4. அபாரம்.
  இப்படி தேதி வந்தது ஒரு அற்புத
  COINCIDENCE. I am sure more people will be inspired. -Kadugu

  ReplyDelete
 5. //அறை வாசலில் அவர் பெயரின் (மறந்துவிட்டது) பின்னால் I.A.S. என்று போட்டிருந்தது.//

  சார், சுவாரஸ்யமான விஷயம்தான்...
  ஆனால்,
  அந்த அதிகாரியின் பெயரை ஞாபகமாக மறந்துவிட்டீர்களே,
  அது எப்படி?

  ReplyDelete
 6. அதிகாரியின் பெயரை மறந்துவிட்டேன் என்ற தவறை ஒப்புகொள்ளாமல் , “ அவர் பெயர் ”தீபக் பாண்டே" என்று கற்பனையாகc சொல்லாமல் உண்மையை எழுதியதற்கு ஒரு GOOD போடுங்கள்! - கடுகு

  ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!