பல வருஷங்களுக்கு முன்பு நடந்த உண்மைச்சம்பவம்.
இரண்டு இளைஞர்கள். அமெரிக்காவில் பிரபல ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தார்கள்.
(அமெரிக்காவில் கல்லூரிப்படிப்பு என்பது யானையைக் கட்டித் தீனி போடுவது போல் மிகுந்த செலவு வைக்கும் ஒரு நடவடிக்கை ஆகும். “இரண்டு பசங்களும் காலேஜ் போறாங்க. அதனால் வீட்டை வித்துட்டோம். வாடகை வீட்டிற்கு மாறிவிட்டோம்” என்று பல பெற்றோர்கள் சொல்வது எனக்குத் தெரியும்.)
இந்த இளைஞர்களுக்கு பண நெருக்கடி ஏற்பட்டது. கல்லூரி செலவை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தார்கள்.
ஏதாவது இசை நிகழ்ச்சியை நடத்தி அதில் கிடைக்கும் லாபத்தை, கல்லூரிச் செலவுக்கு வைத்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்தார்கள்.
அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த, போலந்தைச் சேர்ந்த பியானோ கலைஞர் Paderewski ( பெடெரெஃப்ஸ்கி) யின் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய முனைந்தார்கள். இரண்டாயிரம் டாலர் தந்தால் வருவதாக, அவருடைய மானேஜர் அந்த இளைஞர்களிடம் சொன்னார். அந்தக் காலத்தில் இது மிகப் பெரிய தொகை. இருந்தாலும், டிக்கெட் வசூல் அதற்குமேல் கிடைக்கும் என்று தங்களைத் தைரியப்படுத்திக் கொண்டு, அவர் கேட்ட தொகையைத் தர ஒப்புக்கொண்டார்கள்
அவரது நிகழ்ச்சியும் விமரிசையாக நடந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவு பணம் வசூலாகவில்லை. மொத்தம் 1600 டாலர்தான் வசூல்.
நிகழ்ச்சி முடிந்ததும் அந்த இளைஞர்கள் தயங்கித் தயங்கி Paderewski-யிடம் விஷயத்தைச் சொல்லியபடியே 1600 டாலரையும், 400 டாலருக்கு ஒரு பிரமாணப் பத்திரத்தையும் கொடுத்தார்கள். “நாங்கள் விரைவில் 400 டாலர் சம்பாதித்து உங்களுக்கு அனுப்பிவிடுகிறோம்.” என்றார்கள். படிப்புச் செலவுக்காக அவர்கள் நடத்திய நிகழ்ச்சி அவர்களுடைய படிப்பிற்கே முற்றுப்புள்ளி வைத்துவிடும் போலிருந்தது!
அந்த பியானோ மேதை அவர்களிடம் “பாய்ஸ்... இதெல்லாம் தேவையில்லை.” என்று சொல்லியபடி, பிரமாணப் பத்திரத்தை இரண்டாகக் கிழித்துவிட்டு, அந்த கிழிந்த காகிதங்களுடன், அவர்கள் கொடுத்த 1600 டாலரையும் அவர்களிடம் கொடுத்தார். இந்தப் பணத்தில் ஒவ்வொருவரும் 10 சதவிகிதம் உங்கள் உழைப்பிற்காக எடுத்துக்கொள்ளுங்கள். செலவு போக மீதிப்பணத்தை எனக்குக் கொடுத்தால் போதும்” என்றார்.
அந்த இளைஞர்கள் அப்படியே உருகிப் போனார்கள்.
+ + +
இதற்குப் பிறகு பல வருடங்கள் கழிந்தன. முதல் உலக யுத்தமும் வந்து போயிற்று.
இப்போது பெடெரெஃப்ஸ்கி போலந்து நாட்டின் பிரதம மந்திரியாகி விட்டிருந்தார். ஆனால் போலந்தில் கடுமையான பஞ்சம் நிலவியதால், மக்கள் பசியும் பட்டினியுமாகத் தத்தளித்துக் கொண்டிருந்தனர். இந்தப் பிரச்னையைத் தீர்த்துவைக்க Paderewski ஏதேதோ முயற்சிகள் எடுத்துக் கொண்டிருந்தார்.
அமெரிக்க அதிபர் ஹெர்பர்ட் ஹூவர் ஒருத்தர்தான் தனக்கு உதவி செய்வார் என்று அவரிடம் உதவி கேட்க நினைத்தார். ஹூவர் அப்போது அமெரிக்க உணவு மற்றும் நிவாரண அமைப்பின் பொறுப்பாளராகவும் இருந்தார். அவரிடம் உதவி கேட்டார். பெடர்வஸ்கியின் வேண்டுகோளை ஏற்று, டன் கணக்கில் உணவுப் பொருட்களை போலந்திற்கு அனுப்பி வைத்தார்.
ஓரளவு பஞ்சத்தை சமாளித்தபிறகு பெடர்வஸ்கி, பாரீஸுக்கு வந்திருந்த அதிபர் ஹூவரை, பாரீஸ் போய்ச் சந்தித்தார்; உணவுப் பொருட்களைப் போலந்திற்கு அனுப்பியதற்கு, போலந்து மக்கள் சார்பாக தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
“நன்றி தெரிவிக்கத் தேவையில்லை. மிஸ்டர் பெடர்வ்ஸ்கி...” என்று ஹூவர் நட்புடன் சொல்லிவிட்டு “உங்களுக்கு மறந்துபோய்விட்டது என்று நினைக்கிறேன். ஒரு சமயம் நீங்கள் எனக்கு உதவி செய்து இருக்கிறீர்கள். அப்போது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். படிக்கப் பணம் இன்றி தவித்துக் கொண்டிருந்தேன். நீங்கள்தான் உதவி செய்தீர்கள் உங்கள் பியானோ நிகழ்ச்சியை நடத்திக் கொடுத்து..” என்றார் ஹூவர். பழைய சம்பவங்களை நினவு படுத்தினார்.
இரு தலைவர்களும் அப்படியே நெகிழ்ந்து போனார்கள்.
ஆதாரம்: BITS & PIECES பத்திரிகை
சிறு குறிப்பு:
பெடரெஃப்ஸ்கி
உலகப் பிரபல பியானோ கலைஞர். போலந்து நாட்டின் பிரதமராக ஜனவரி 1919- நவம்பர் 1919 இருந்தார், பிறகு அவர் போலந்தின் பல உயர் மட்ட முக்கிய கமிட்டிகளின் தலைவராகவும் இருந்தார். 1941-ல் காலமானார். THE LION OF POLAND என்று அழைக்கப் பட்டவர்.
ஹெர்பர்ட் ஹூவர்
ஹெர்பர்ட் ஹூவர் அமெரிக்காவின் முப்பத்தியோராவது அதிபராக 1929-33 ஆண்டுகளில் இருந்தவர். பொறியியல் நிபுணர். அவரது சம்பளப் பணத்தை அப்படியே முழுவதுமாகத் தொண்டு நிறுவனங்களுக்குக் கொடுத்தவர். ஒன்பதாவது வயதில் தாயை இழந்தார். அப்பாவை அதற்கு முன் இழந்தார். அவர்கள் விட்டுவிட்டுப் போனது நிறைய கடன்களையும் ஏழ்மையையும்!
ஹெர்பர்ட் ஹூவர் 1964-ல் காலமானார்,
முக்கிய குறிப்பு: இந்தப் பதிவைத்
தட்டச்சு செய்து உதவியது: சகோதரி திருமதி எஸ். ஷோபனா.
அவருக்கு என் நன்றி.
அவருக்கு என் நன்றி.
நம்பமுடியுமா? ரொம்ப ஆச்சர்யமாக இருக்கிறது. அதிபராக இருந்தும் பழசை மறக்காமல் இருந்த ஹூவர் ஒரு ஆச்சரியம் என்றால், படிக்கும் மாணவர்கள் என்று உதவி செய்த பெடரொப்ஸ்கி இன்னொரு ஆச்சரியம். இன்னும் நம்ப முடியவில்லை.
ReplyDeleteGreat men!
ReplyDeleteஆச்சரியமான தலைவர்கள்.......
ReplyDeleteமதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,
ReplyDeleteவணக்கம்.
நல்லதை நினைத்து, நல்லதே செய்தால், நமக்கு தேவையான நேரத்தில் உதவிளும் நன்மையும் திரும்பி வரும் என்ற நம்பிக்கை பலப்படுகிறது.
நன்றி.
அன்புடன்
சீதாலஷ்மி சுப்ரமணியம்