June 13, 2016

சாவியும் சத்யசாயியும்

ஒரு வியப்பூட்டும் தகவல்.

       ஆசிரியர் சாவி என்மேல் அளவு கடந்த அபிமானம் கொண்டவர். நீங்கள் என் ‘CONSCIENCE KEEPER’ என்று கடிதத்தில் எழுதியது மட்டுமல்ல, எத்தனை எத்தனையோ விஷயங்களில் என் ஆலோசனைகளைக் கேட்டிருக்கிறார். மகிழ்ச்சிகரமான விஷயங்களை எல்லாம் சொல்லி மகிழ்ந்திருக்கிறார்; சோகம், ஏமாற்றம், கஷ்டம், நஷ்டம் போன்றவற்றையும் என்னிடம் பகிர்ந்துகொண்டு ஆறுதல் அடைந்திருக்கிறார். அவர் என்னிடம் என்ன கண்டார் என்று எனக்குத் தெரியாது.
அவரைப் பற்றிய நினைவுகள் எப்போதும் என் மனதில் அலைமோதிக் கொண்டிருக்கின்றன.  அவர் என்னிடம் சொன்ன ஒரு வியப்பூட்டும் தகவல்.

       சாவி அவர்களுக்கு சத்ய சாயிபாபா மீது அளவற்ற பக்தி. வீட்டில் பூஜை அறையில் பெரிய படம் வைத்திருப்பார். அவர் வீட்டிற்கு எப்போது நான் சென்றாலும் பூஜை அறைக்கு அழைத்துச் செல்வார்.

     பாபாவின் வரலாறை. ஸ்ரீவேணுகோபாலனை எழுதச் சொல்லி சாவியில் தொடராகப் போட்டதுடன், புத்தக வெளியீட்டையும் விழாவாகக் கொண்டாடினார். பாபாவின் புகைப்படங்கள், ஓவியங்கள் என்று ஒரு கண்காட்சியையும் (மியூசிக் அகாடமி ஹாலில் என்று நினைவு)  நடத்தியிருக்கிறார்.

அதில் ஒரு பெரிய படம் -- பெங்களூர் ஓவியர் வரைந்தது -- அற்புதமாக இருந்தது; அனைவரையும் கவர்ந்தது. (இந்தக் கால கட்டத்தில் நான் டில்லியில் இருந்தேன்.)  ந்தப் படத்தைப் பார்த்ததும் சாவி மேலும் தீவிர சாயி பக்தராகி விட்டார்.

சாவி காலமாவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு என் மனைவியும் நானும்  சென்னை வந்தோம்.  சாவியை அவர் வீட்டில் சந்தித்தோம்.

அப்போது அவர் சத்ய சாயியின்  இந்த ஓவியத்தைப்ப ற்றி ஒரு அரிய அனுபவத்தைக் கூறினார். சிற்சில குட்டி விவரங்கள் மறந்துபோய் விட்டன.  நினைவில் உள்ளதைக் கூறுகிறேன்.


சாவி சொன்னது:
“சாயியின் பிரம்மாண்டமான ஆளுயரப் படம் வரைந்த பெங்களூர் ஓவியரிடம், சத்ய சாயியின் படம் வரைந்து தரும்படி, என் ஆடிட்டருக்காக நான் கேட்டேன். ‘ரொம்பப் பெரிய சைஸில் வேண்டாம். ஒரு அடி, இரண்டடி உயரம் இருந்தால் போதும்’ என்றார் ஆடிட்டர்.  அவர் சொன்னதை நான் ஓவியரிடம் சொன்னேன். ‘அப்படியே போட்டுத் தருகிறேன்’ என்றார் ஓவியர்.

ஒரு பத்து நாள் கழித்து ஓவியருக்கு போன் செய்தேன். “இல்லை ஸார்...ரெடியாகவில்லை. இரண்டு தடவை போட்டேன். எனக்கே திருப்தியாக இல்லை...எனக்கு ஒரு உத்வேகம் வரும். அப்போது சூப்பராக என்னால் படம் வரைய முடியும்...நிச்சயமாக வரைந்து தருகிறேன். படம் வரைந்து முடித்தவுடன் நான் தகவல் தெரிவிக்கிறேன். பாபா படம் வரைவது என் பாக்கியம்” என்றார்.
“சரி.. உங்களை நான் தொந்தரவு பண்ண மாட்டேன். நீங்கள் வரைந்து முடித்தவுடன், படத்தை எடுத்துக்கொண்டு வந்துவிடுங்கள். நீங்கள் வரும் ரயில் விபரத்தைத் தெரிவித்தால், நான் ஸ்டேஷனில் சந்திக்கிறேன்” என்றேன். ஆடிட்டரும் பொறுத்துக் கொள்வதாகச் சொன்னார்.
சுமார் ஒரு மாதம் ஆகியிருக்கும். பெங்களூர் ஓவியர் டெலிபோன் செய்தார். “இன்னும் இரண்டு நாள் கழித்து, பாபா படத்தை எடுத்துக்கொண்டு சென்னைக்கு வருகிறேன். படத்தை ‘கிரேட்’ பண்ணிக்கொண்டு வருகிறேன். காருக்குள் வைப்பது சிரமம். ஆகவே சின்ன டெம்போ ஏற்பாடு செய்துகொண்டு வாருங்கள்.” என்றார்.
“என்னடா... டெம்போ என்கிறாரே” என்று யோசித்தேன். பத்திரமாக கொண்டு வர, மரச்சட்டங்களால் பெட்டி மாதிரி ஏதாவது பண்ணி இருப்பார்” என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டேன்.
அவர் குறிப்பிட்ட தினம் ஸ்டேஷனுக்கு ஆடிட்டருடன் போனேன். ரயில் வந்தது. ஓவியர் இறங்கினார். இரண்டு போர்ட்டர்களைக் கூப்பிட்டார். கம்பார்ட்மென்டில் நடைவழியில் வைக்கப்பட்டிருந்த ‘CRATE’-ஐ எடுக்கச் சொன்னார். அதைப் பார்த்ததும் எங்களுக்குத் தூக்கிவாரிப்போட்டது; ஆறு, ஏழு அடி நீளமும், நான்கு, ஐந்து அடி அகலமும் இருந்தது அந்த CRATE.
“என்ன சார்...ரொம்பப் பெரிய ஓவியமாக வரைந்துவிட்டீர்கள் போலிருக்கிறதே..” என்று கேட்டேன்.
“கொஞ்சம் பெரிசுதான். இதைவிடச் சின்னதாக வரைய முடியவில்லை. பல்வேறு சைஸ்களில் ஸ்கெட்ச் பண்ணினேன். ஹூம்... எனக்குத் திருப்தியாகவில்லை. கடைசியில் இப்போது பண்ணியிருக்கிற சைஸில் சூப்பராக வந்துள்ளது. இது எல்லாம் பாபாவின் ஏற்பாடு. அவருக்குத் தெரியும் யார் வீட்டில் எந்த அளவு படம் இருக்க வேண்டும் என்று.” எண்று சொன்னார்.
ஆடிட்டர் இதைக் கேட்டு உருகிவிட்டார்.
“பாபா சொன்ன அளவு எதுவாக இருந்தாலும் அது எனக்குச் சம்மதமே” என்றார்.
ஆடிட்டர் பாபாவின் படத்தை எடுத்து டெம்போவில் வைத்து  வீட்டிற்குக் கொண்டுபோய், தன் வீட்டு ஹாலில் வைத்தார். ஒரு பெரிய பெஞ்சைப் போட்டு அதன் மேல் பாபா படத்தை வைத்தார். படத்திற்குப் போட அவர் வாங்கி வைத்திருந்த மாலை மிகவும் சிறியதாக இருந்ததால் பெரிய மாலை வாங்கி வரும்படி ஆளை அனுப்பினார்.
மாலை வந்தது. முழு படத்தையும் அலங்கரிக்கும் அளவு பெரியதாக இருந்தது.
பாபாவை வணங்கிவிட்டு வீட்டுக்கு வந்தேன்.
+                                   +                           
இரண்டு நாள் கழித்து ஆடிட்டரிடமிருந்து போன் வந்தது. “சார்.. ஆர்ட்டிஸ்டுக்குப் பணம் கொடுத்து விட்டேன். அவரும் ஊருக்குப் போய்விட்டார். பாபா படத்திற்கு அற்புத சக்தி இருக்கிறது.... சொன்னால் நம்ப மாட்டீர்கள்...வந்து பார்த்தால்தான் தெரியும்.” என்றார்.
போய்ப் பார்த்தேன். நமஸ்கரித்தேன். ‘என்ன அற்புதம்’ என்று சட்டென்று தெரியவில்லை.
ஆடிட்டர், “இதோ பாருங்கள். நேற்று காலை போட்டபோது பூமாலை கணுக்கால் வரைதான் வந்தது. இப்போது படத்தின் frame வரை நீண்டுவிட்டது.” என்றார்.
நான் கவனித்துப் பார்த்தேன். அவர் சொன்னது சரியென்று பட்டது. பாபாவை வணங்கிவிட்டு வந்தேன்.” என்று கூறி முடித்த சாவி மேலும் சொன்னார். “இருங்கள்..இன்னும் கொஞ்சம் இருக்கிறது..அடுத்த ஒரு வாரம் வரை தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருந்தது மாலை. ஐந்தாறு அங்குலம் வளர்ந்து படம் வைத்திருந்த பெஞ்சையே தொட்டுவிட்டது... வாருங்கள்... நாளைக்கு உங்களை அவர் வீட்டிற்கு அழைத்துப் போகிறேன்” என்றார்.
“சார்..நான் நாளைக்கு டில்லிக்குப் போகிறேன். அடுத்த தடவை வரும்போது கட்டாயம் போய் தரிசிக்கலாம்..” என்றேன்.
“ஓ.கே.” என்றார்.
+                           +                
என் துரதிர்ஷ்டம், அடுத்த இரண்டு மாதங்களிலேயே சாவி காலமாகிவிட்டார்.

முக்கிய குறிப்பு:  இந்தப் பதிவைத் தட்டச்சு செய்து உதவியது:  சகோதரி திருமதி எஸ். ஷோபனா.
அவருக்கு என் நன்றி.

9 comments:

  1. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

    வணக்கம்.

    எழுத்தாளர் சாவி அவர்களுடனான தங்கள் அனுபவங்களை எத்தனை முறை படித்தாலும் அலுப்பதில்லை.


    சாவி அவர்களின் தெய்வீக அனுபவமும் அதை உங்களுடன் அவர் பகிர்ந்து கொண்டதும், அவரைப் பற்றிய எண்ண அலைகளை எழுப்பி விட்டது.

    நன்றி,

    அன்புடன்

    சீதாலஷ்மி சுப்ரமணியம்

    ReplyDelete
  2. சாயியின் மகிமை அளவிட முடியாதது என்பதைத்தான் இது உணர்த்துகிறது. ஜெய் சாய் ராம்!

    ReplyDelete
  3. Shall I share this in our family Whatsapp group?

    ReplyDelete
  4. தாரளமாகச் செய்யுங்கள்
    -கடுகு.

    ReplyDelete
  5. ரொம்ப ஆச்சர்யமானதுதான். சத்ய சாயி பாபா... மறக்க முடியாதவர். அவரை நேரில் தரிசித்ததில்லை. ஆனால் நம்ப இயலாத சம்பவங்கள் எனக்கு நடந்துள்ளன. நிறைய எழுதுங்கள்.

    ReplyDelete
  6. எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்களில் சாவியும் ஒருவர். எங்கள் வட ஆர்காட்டுக்காரர் எனபதும் கூடுதல் சுகம். -இராய செல்லப்பா

    ReplyDelete
  7. செல்லப்பா அவர்களுக்கு,
    என் பதிவுகளைப நீங்கள் பார்ப்பதே எனக்குப் பாராட்டு.
    -கடுகு

    ReplyDelete
  8. என் குருநாதர் சாவி அவர்களைப் பற்றி யார் எப்போது எழுதினாலும் ஆர்வத்தோடு படிப்பேன். வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி அவரின் 100-வது பிறந்த நாள். அவரின் மகள் உமா ஒரு கெட்டுகெதருக்கு ஏற்பாடு செய்துள்ளார். சென்னை வந்தால் சந்திக்க இயலுமா, சார்?

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!