சென்னை ஜி.பி.ஓ.வில் நான் பணியாற்றிக்கொண்டிருந்த வருடங்களில் செங்கல்பட்டிலிருந்து தினமும் போய் வந்து கொண்டிருந்தேன்.
ஒருநாள் வேலை முடித்துவிட்டு வழக்கம்போல் பீச் ஸ்டேஷனி லிருந்து புறப்படும் காஞ்சிபுரம் பாசஞ்சரில் ஏறப் போனேன். எல்லாப் பெட்டியும் கிட்டத்தட்ட நிரம்பி விட்டிருந்தது. கல்யாண சீசன்களில் இப்படி கூட்டம் அதிகமாக இருப்பது சகஜம். ஏதோ ஒரு மூலையில், கிடைத்த இடத்தில் உட்கார்ந்து கொண்டேன். ரயில் கோட்டை ஸ்டேஷன் போயிற்று. அங்கு அலைமோதுகிற மாதிரி கூட்டம் பெட்டிகளில் ஏறியது. பூங்கா, எழும்பூர் ஸ்டேஷன்களில் மேலும் பயணிகள் ஏறினார்கள். பெரும்பாலும் குடும்பப் பெண்கள்.
“கல்யாணமுமில்லை, ஒண்ணுமில்லை. இன்னிக்கு ராத்திரி திருக்கழுக் குன்றத்தில் கோவிலில் லட்சதீபத் திருவிழா...ரொம்ப விசேஷம். 12 வருஷத்து ஒரு தபா வர்ற விழாவாச்சே! அதுக்குத்தான் அல்லாரும் போய்க்கிட்டு இருக்கோம்” என்றார்.