August 19, 2015

கிணறு வெட்ட....

 முன் குறிப்பு: துப்பறியும் கதை எழுதினால் விரைவில் மிகப் பிரபலம் ஆகிவிடலாம் எனும் ஆசையினால் நான் சில துப்பறியும் கதைகள் எழுதினேன். அவற்றிலிருந்து ஒன்று. 
குற்றவாளியை கண்டு பிடிப்பது உங்கள் வேலை. எல்லா க்ளூவும் கதையிலும் படத்திலும் இருக்கும். ஐந்து தினங்களுக்குப் பிறகு விடையைப் போடுகிறேன்.
=================================
                 அந்த படுக்கை அறையின் எந்த சுவரைத் தட்டினாலும் பணம், பணம் என்ற எதிரொலி கேட்கும்.
    அவ்வளவு செல்வச் செழிப்பு.


    மகாபலிபுர சிற்பக் கோயில்களுக்கு நடுவே ஒரு நவநாகரிகக் கட்டடம் எழுப்பினாற்போல் அந்த சின்ன கிராமத்தின் ஏழைக் குடிசைகளின் சூழ்நிலையில், பரிதாபமான ஓட்டு வீடுகளுக்கு மத்தியில் பளபளவென்று இருக்கும் அவ்வீட்டின் சொந்தக்காரர் மாரப்ப பூபதி, தன் படுக்கை அறையில் தன் ஆசை மனைவியுடன் சல்லாபித்துக் கொண்டிருக்கிறார்.
    அவருக்கு நரைத்தது மீசை, தலை முடி எல்லாம். நரைக்காதது ஆசை!
    அவருக்கு வயது அறுபத்திரண்டு.
    சர்வாலங்கார பூஷிதையாய் அவர் மேல் சாய்ந்து கொஞ்சிக் கொண்டிருப்பவள் அவரது இரண்டாம் மனைவி சித்ராங்கி. அவர்களின் காதல் போஸில் இருந்த கவர்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஜெயராஜே திணறிப் போவார், அந்த மாதிரி ஓவியம் வரைய!
                         *                                  *                                *
சித்ராங்கிக்கு வயது இருபத்திரண்டு. வாரிசு இல்லாத லட்சாதிபதியான பூபதி, "புத்' என்னும் நரகத்தில் விழாதிருக்க ஒரு புத்திர சந்தானம் பெற்றுத் தர சித்ராங்கியை மணம் புரிந்தார்.
    தானே அந்த வாரிசாக ஆக வேண்டும் என்ற ஆசை உண்டு சித்ராங்கிக்கு.

    "சித்ராங்கி... கண்ணே... பயாஸ்கோப்லே என்னென்னமா டயலாக் பேசறாங்க. அது மாதிரி பேசேன். கொஞ்சேன்."
"போங்க. .. அவங்க தோட்டம் துறவுலே கூட வெட்கமில்லாமல் ஓடியாடிப் பாடறாங்க... நாம அப்படி எல்லாம் செய்ய முடியுமா?"
   " நீ சொல்றதும் வாஸ்தவம்தான். இந்தக் காலை வெச்சுகிட்டு நான் ஓடறதா?" என்றார்  பூபதி. அவரது வலது காலின் முழங்காலுக்குக் கீழே மரத்தால் செய்யப்பட்ட கால்தான் இருந்தது.
    "அய்யோ... அத்தான். அதை மனசிலே வெச்சு நான் சொல்லலை.
   " சித்ராங்கி, அந்த விஷயத்தை விடு. உனக்கு ஒரு வைர நெக்லஸ் வாங்கப் போறேன். எப்போ தெரியுமா?”- குறும்பாகக் கண் சிமிட்டினார்.
   ”சின்ன பூபதி குவாகுவான்னு குரல் கொடுத்ததும்தானே? இந்தாங்க பாதாம் பருப்பு, பால்.”
   ”எனக்கெதுக்குடி அதெல்லாம். உன்னையே கடிச்சு சாப்பிடப் போறேன்” என்று சொல்லிக்கொண்டே வெறியுடன் அவளை இழுத்து அணைத்துக் கொண்டார்.
                                   *                                              *
    ”சித்ராங்கி நாள் ஆகிக்கிட்டே போறது. சீக்கிரமா ஏதாவது செய்தால் தான் ஆச்சு. இருக்கிறதைப் பார்த்தால் அந்தக் கிழவன் மண்டையைப் போட மாட்டான் போல இருக்கு.
 ”ஆமாம். தெனக்கும் குளந்தை குளந்தைன்னு சொல்லுது. தூக்க மாத்திரை போட்டுக் கொடுத்துப்புடறேன் பாலிலே.”
   சித்ராங்கி, தன் காதலன் அம்பிகாபதியுடன் ஆற்று மதகினருகில் பேசிக் கொண்டிருந்தாள்.
   ”சரி, கிழவன் கணக்கைத் தீர்த்தால் தான் சொத்து பத்தெல்லாம் வரும். நீ என்ன சொல்றே?”
    ”வெஷம் கொண்டா ராவிக்குப் பாலில் கலந்து கொடுத்துடறேன். உயில் என் மேலே எழுதியாயிட்டது.”
  ”சீ! வெஷம் கிஷமெல்லாம் கொடுத்தால் உன் கழுத்துக்குக் கயிறு வந்துரும். நான் ஒரு பிளான் வெச்சிருக்கேன். கிழவனுக்கு ராத்திரியில் தூக்கத்திலே நடக்கிற வியாதி உண்டுன்னு சொன்னியே, அது டாக்டருக்குத் தெரியுமா?”
    ”தெரியும். போன வாரம் டவுன் டாக்டர்கிட்டே போய் சொன்னார். அவர் கூட ஏதோ மாத்திரை கொடுத்தாரு. ஆனால் அதே சமயம் இந்த வியாதிக்கு மருந்து கிடையாதுன்னும் சொன்னாரு.”
   ”போவட்டும். என் பிளான் இதுதான். ராத்திரி தூக்க மாத்திரை கொஞ்சம் அதிகமாகக் கொடுத்துடு. கிழம் பொணம் மாதிரி தூங்கிப்புடும். அப்படியே குண்டுகட்டாகத் தூக்கிக் கொண்டு போய் வூட்டுக்குப் பின்னாலே இருக்கிற மொட்டைக் கிணத்திலே போட்டுருவோம். ’தூக்கத்தில் நடந்து போயிருக்காரு. இருட்டிலே கிணத்திலே விழுந்துட்டார்’னு, சொல்லிப்புடுவம்.”
   ”என் மேலே சந்தேகம் வந்தால்?”
    ”அதெப்படி வரும். நீ காலைல எழுந்திருக்கிறே. அவரைத் தேடறே. கெணத்தடி போற வழியில் தரையில் அவர் காலடி தெரியுது. நேரே கெணத்துக்குப் போய் பாக்கறே. உள்ளே ஆளு செத்துக் கிடக்கான். நீ குய்யோ, முறையோன்னு கத்தறே. அழுவறே. கூட்டத்தைக் கூட்டிப்பிடறே.”
   ”உம்.. சரி.. அளுவறேன், என்ன செய்யறது சொத்து வருதே.
    ” அப்புறம் ஒரு விஷயம். கிணத்தடியில் ஒரு பக்கமாக கொஞ்ச இடத்திலே தண்ணியைக் கொட்டி ஈரமாக்கி வெச்சுடு. கிழவன் காலடிங்க மாதிரி நாலைஞ்சை ஈர மண்ணில் அமுக்கிடலாம்.”
   ”அந்த ஆளுக்கு ஒரு கால்தானே?”
    ”சித்ராங்கி  அவ்றோட மரக்காலின் அளவு எடுத்துக் கொடு. அதுமாதிரி ஒண்ணு செஞ்சு அதையும் நம்ப பாதத்தையும் மாத்தி மாத்தி வெச்சு மண்ணிலே பதிச்சுட்டால், கிழவன் நடந்து போய் விழுந்துட்டான்னு ஸ்திரமாயிடும். நிறைய இடத்தை ஈரமாக்கிடாதே. அப்புறம் நம்ப காலடி விழுந்துடும்.
   ”சரி... அப்படியே செஞ்சுறலாம்... சீச்சி... விடு இப்படியா இழுத்துப் பிடிக்கிறது. மூச்சுத் திணறது. ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறேன்.”

                        *                                        *
    சித்ராங்கி கிட்டத்தட்ட சந்திரமதியைத் தோற்கடிக்கும் வகையில் பயங்கரமாக ஒப்பாரி வைத்து, தலையைக் கலைத்துக் கொண்டு, மூக்கைச் சிந்திக் கண்ணைக் கசக்கி,மார்பில் (லேசாக) அடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தாள்.
 ”யாரும் கெணத்தடிக்குப் போவாதீங்க. இன்ஸ்பெக்டர் வந்து அல்லாத்தையும் பாக்கட்டும். இந்த மாதிரி கேஸுகளில் எதையும் யாரும் தொடப்படாது. ”கர்ணம் உத்தரவிட்டுக் கொண்டிருந்தார். அவர் துப்பறியும் கதைகள் படித்திருப்பவர்.
    மாரப்ப பூபதியின் ஈர, உயிரற்ற உடல் கிணற்றுக்கு வெளியே கிடத்தப்பட்டு இருந்தது. வாரிசு இல்லாமலேயே இறைவன் திருவடியை அடைந்து விட்டிருந்தார்.
    இன்ஸ்பெக்டர் சிவா வந்திறங்கினார். அந்த சமயம்.
    விசாரித்தார்.
    வீட்டை ஆராய்ந்தார்.
    காலடித் தடயங்கள் கிணற்றை நோக்கிச் செல்வதைப் பார்த்தார்.
 ”பாவம். இப்படிப்பட்ட வியாதிக்காரங்களை ராத்திரியில், சாதாரணமாக கட்டி வெப்பாங்க... அனாவசியமா செத்துப்...”
    முடிக்கவில்லை.
    ஏதோ யக்ஷிணி கூறிற்று.
    ”சித்ராங்கி, உங்க கணவர் தற்செயலாகக் கிணற்றில் விழுந்து சாகலை. யாரோ கொன்னுட்டிருக்காங்க... இது நிச்சயம்! ”என்றார் சிவா.
    அவர் எப்படிக் கண்டுபிடித்தார்?

விடை: ஐந்து நாளைக்குப் பிறகு போடப்படும்!

19 comments:

 1. காலடித்தடங்கள் மாறியுள்ளன! விடை கரெக்டான்னு தெரிஞ்சிக்க அஞ்சு நாள் கழிச்சி வரேன்!

  ReplyDelete
 2. The foot prints give the clue.
  The footprints show the left leg as wooden leg, while actually his right leg is wooden

  ReplyDelete
 3. இறந்தவருக்கு வலது கால்தான் மரக்கால். ஆனால் படத்தில் உள்ள கால்தடத்தில் இடது கால் மரக்கால் ஆகப் பதிந்திருக்கிறது

  ReplyDelete
 4. //சித்ராங்கி, உங்க கணவர் தற்செயலாகக் கிணற்றில் விழுந்து சாகலை. யாரோ கொன்னுட்டிருக்காங்க... இது நிச்சயம்!//

  - ஆமாம்... ஏனென்றால், மாரப்ப பூபதிக்கு வலது கால்தான் மரக் கட்டைக் கால்;
  ஆனால், கிணற்றடி ஈரத்தில் இருப்பதோ இடது கால்! அப்புறம் என்ன இன்ஸ்பெக்டர் சிவா புடிச்சிட்டார்-கண்டு!

  ReplyDelete
 5. //ஜெயராஜே திணறிப் போவார், அந்த மாதிரி ஓவியம் வரைய!//

  கதையில் ஓவியர் ஜெயராஜ் பெயர் வந்தாலும் படம் வரைந்த ஓவியர் என்னவோ திரு. ராமுதான்!
  *

  ReplyDelete
 6. இது எந்த பத்திரிகையில் வந்த கதை சார்?

  ReplyDelete
 7. கிணற்றடியில் இருந்தவை வலது கால் தடயங்கள்?

  ReplyDelete
 8. குற்றவாளி இடது காலை மரக்காலாக உபயோகித்து உள்ளான்.

  ReplyDelete
 9. As per the crimspot, left leg is wooden where as in reality his right leg is wooden. Vertical symmetry error from the murderers.

  ReplyDelete
 10. ஆஹா... ஓவியத்துலயே க்ளூ இருக்குதே... அவருக்கு வலது கால் கட்டைக் கால். இவங்க இடது காலைக் கட்டைக் காலா வெச்சு தண்ணில நடந்து தடம் பதிச்சிருக்காங்க. அதான் புத்திசாலி இனிசுபெக்டரு கண்டுக்கினாரு.செம்ம கதை ஸார்.

  ReplyDelete
 11. வலது கால்தான் கட்டை கால். ஆனால் அவர்கள் செட் அப் செய்தது (சேற்றில் புதைத்து வைத்தது) வலது காலை.

  ReplyDelete
 12. அம்பிகாபதி கால மாத்தி பதிச்சிட்டான் .. சரியா சார் ... A கிளாஸ் கதை ... :-) :-)

  ReplyDelete
 13. இறந்தவருக்கு வலது கால் தான் மரத்தில். இடது கால் நன்றாக இருக்கிறது. தடம் பதித்திருப்பது மாற்றி இருக்கிறது....இதை வைத்து தான் கண்டுபிடித்தார் என நினைக்கிறேன்.....

  ReplyDelete
 14. இந்த கதையை படித்தவுடன் தாங்கள் என்மனதில் எங்கேயோ போய்விட்டிர்கள். சிரிப்பு கதைகளை ,அள்ளிவிட்ட தாங்கள்,இன்று சிருங்கார துப்பறியும் கதையை சொல்லி கலக்கிவிட்டிர்கள் .உங்களுக்கு என் மனபூர்வ பாராட்டுகள்.
  கே.ராகவன்.
  பெங்களுரு

  ReplyDelete
 15. சிம்பிள். படத்திலிருந்து மாரப்ப பூபதியின் வலது கால் மரக்கால். காலடி தடங்களிலோ இடது கால் மரக்கால். :)

  ReplyDelete
 16. wrong foot mark is the obvious clue

  ReplyDelete
 17. நலமுடன் வந்ததறிந்து மிகவும் மகிழ்ச்சி. சற்றே நீளமான கதையை டைப் செய்துள்ளீர்கள். ஏன் குழந்தைகளுக்கு உரிய கதைகளை (அவர்களுமே இப்போதெல்லாம் கண்டுபிடித்துவிடுவார்கள்) எழுதி எங்களைக் கண்டுபிடிக்கச் சொல்கிறீர்கள்? வலதுகால் மரக்கால், நடக்கும்போது, இடதுபக்கம் மரக்காலாகத் தடம் பதித்துள்ளார்கள்.

  அது இருக்கட்டும். இதுமட்டும் ஜெயராஜாக இருந்தால், இந்தப் பக்கமே நனைந்திருக்கும். படத்தின்மூலம் கண்டுபிடிக்க வேண்டுமென்பதால், வேண்டா வெறுப்பாக இந்தப் படத்தை வரைந்திருப்பார். அவருக்கு மிகவும் பிடித்தமான படம் வரையும் பகுதி, நீங்களே சாரி...கொஞ்சம் ஓவர் என்னும்படியாக, "வெறியுடன் அணைத்துக்கொண்டார்' என்ற பகுதிதான்.

  ReplyDelete
 18. Sir,
  காலை மாற்றி போட்டுவிட்டான்!!

  ReplyDelete
 19. சிறந்த கண்ணோட்டம்

  புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
  இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
  http://www.ypvnpubs.com/

  ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!