மாங்கு, மாங்கு என்று முந்நூறு பக்கத்தில் மாத நாவலுக்கு ஒரு கொலைக் கதையை எழுதி முடித்து விட்டேன். தலைப்பு என்ன வைப்பது என்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தேன்.
பின்னால் யாரோ பெரிதாக ஏப்பம் விடும் ஓசை கேட்டது. திரும்பிப் பார்த்தேன். என் அருமை மனைவி கமலாவின் அருமைத் தம்பி தொச்சுதான். வயிற்றில் அடையாக இருக்கும்! அதனால்தான் ஏப்பம் சைரன் மாதிரி ஒலிக்கிறது.
தலைப்புக்குத் தவித்துக் கொண்டிருந்த அவஸ்தையில் தொச்சுவைக் கண்டதும் எரிச்சல்தான் வந்தது.
“தொச்சு... முக்கியமான விஷயம் எதுவும் இல்லை என்றால் அப்புறம் பேசலாம். இந்த நாவல் வேலை அவசரமா முடிக்கணும்'' என்றேன்.
“அத்திம்பேரே... ஸாரி... உங்களைத் தொந்தரவு பண்றதுக்கு வரலை. திடீரென்று ஒரு ஐடியா வந்தது. சொல்லிவிட்டுப் போகலாமே என்று வந்தேன்.''
“ஐடியா தேவையாக இருக்கிற போது உனக்குச் சொல்லி அனுப்பறேன். அப்படியே ஐடியாவில் ஊறின பரம்பரை... தொச்சு... கொஞ்சம் என்னைச் சும்மா விடு'' என்றேன்.
"பரம்பரை' என்று நான் சொன்ன வார்த்தையைக் கேட்டுக் கமலா, “எங்க பரம்பரை ஒண்ணும் உங்க பரம்பரைக்குத் தாழ்ந்து போகவில்லை. உங்க பரம்பரை அழகு தெரியாதாக்கும்...'' என்று ஆரம்பித்தாள்.
“கமலா... எதுக்கு இப்படி நாக்குல நரம்பில்லாமல் பேசறே? அவரானால் மண்டையைக் கசக்கிக் கதை எழுதறார். உனக்குக் கதை எழுதத் தெரியுமா? இல்லை, உன் தம்பிக்குத்தான் கதை எழுதத் தெரியுமா...? கதை எழுதத் தெரிஞ்சவாளுக்கு இல்லாத ஐடியாவா உன் தம்பிக்கு வரப் போறது...?'' என்று என் மாமியார் என்னை மட்டம் தட்டும் அர்த்தத்தில் பேச, அருமைப் பெண்ணிற்கு எடுத்துக் கொடுத்தாற்போல் ஆகியது.