February 11, 2015

முன்யோசனை- யோசனை -ஐடியா- உத்தி

1. அமிதாப்பச்சனுக்கு அடிபட்டபோது...

    சில ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் ஒரு படப்பிடிப்பின் போது அமிதாப்பச்சனுக்கு அடிபட்டது நினைவிருக்கும்.
    அவரை பம்பாய் எடுத்துச் செல்லத் தீர்மானிக்கப்பட்டது. ஏர்போர்ட் வரை அவரை ஆம்புலன்ஸில் எடுத்துச் செல்ல வேண்டும்.
    அந்தப் பாதை ஒரு  நோயாளியை எடுத்துச் செல்வதற்கு உகந்ததாக இருக்குமா    என்பதைக் கண்டறிய வேண்டும் என்று டைரக்டர் மன்மோஹன் தேசாய் தீர்மானித்து, ஒரு ஆம்புலன்ஸில் தானே படுத்துக் கொண்டு, விமான நிலையம் வரை ஓட்டச் சொன்னார்.
    இரண்டு, மூன்று பாதைகள் வழியாகச் சென்று திரும்பி, எந்த வழியில் அதிக மேடு பள்ளம் இல்லையோ அந்தப் பாதையில் அமிதாப்பச்சனை எடுத்துச் செல்ல முடிவெடுத்தார்.
    இப்படி அலுங்காமல் குலுங்காமல் எடுத்துச் சென்றதும், அமிதாப் உயிர் பிழைக்க ஒரு காரணமாக இருந்தது.
    இது தான் முன் யோசனை, திட்டமிடுதல்.

யோசி, யோசி.
    எதையும் யோசிக்காமல் செய்வது பல சமயம் இழப்புக்கு வழி வகுக்கும்.
    யோசி, யோசி.
    உலகப் புகழ் பெற்ற கம்ப்யூட்டர் கம்பெனியான ஐ.பி.எம்.மின் தாரக மந்திரமும் இதுதான். யோசித்தால் தானாகத் திட்டமிடுவீர்கள்
1950-ல் மர்லீன் டீட்ரிச் என்ற அமெரிக்க நடிகைக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது.
    அவர், விழா நிர்வாகிகளிடம் ஒரே ஒரு தகவல் கேட்டார்: "விழா மேடையில் படுதாக்களும், செட்களும் போடுவீர்களே அவை  எந்த வர்ணங்களில் அமைக்க இருக்கிறீர்கள்?''
    அவர்கள் தந்த விவரத்தைப் பின்பற்றி, விழாவன்று, தான் அணிய வேண்டிய உடைகளின் வண்ணங்களைத் தீர்மானித்தார். அதனால் பரிசு பெற மேடைக்கு வந்த போது அவருடைய உடைகள் , மேடைப் படுதா வர்ணங்களுக்கு இசைவாக அமைந்து, அனைவரையும் கவர்ந்தன.
    முன்பே யோசனையுடன் திட்டமிட்டதன் பலன் இது!

 ராஜாஜியின் ஐடியா

 ராஜாஜியைப் பற்றி ஒரு துணுக்கு உண்டு. விமானப் பயணம் செல்லும்போது சுயவிலாசமிட்ட கவர் ஒன்றை எடுத்துக் கொண்டு போவாராம். விமான நிலையத்தில் பயண இன்ஷ்யூரன்ஸ் எடுத்துக் கொள்வார். அந்த ரசீதை (பாலிஸி?) கவரில் போட்டு, தன் வீட்டுக்குப் போஸ்ட் செய்து விட்டு, விமானத்திற்குள் செல்வாராம்.

இது உண்மையோ, கற்பனையோ தெரியாது. முன் யோசனைக்கும் திட்டமிடுதலுக்கும் இது ஒரு நல்ல உதாரணம்.
  நண்பரின் உத்தி 
என் நண்பர் குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார். நாலைந்து மாதங்கள் தங்கிவிட்டு வர திட்டம். அமெரிக்க கிளம்புமுன் வீட்டின் அறைகளை, பீரோக்களை நன்றாகப் பூட்டினார்.
 சாவிகளை யார் கண்ணிலும் படாதபடி  பத்திரமாக அரிசி டப்பா, பருப்பு டப்பா என்று பல இடங்களில் ஒளித்து வைத்து விட்டுப் போனார். ஆறு மாதங்கள் கழித்துத் திரும்பி வந்தார். வீட்டைத் திறந்தார். அறைக் கதவுகள், ஸ்டீல் பீரோக்கள் முதலியவற்றின் சாவிகளை எங்கெங்கு வைத்தோம் என்பது சுத்தமாக மறந்து விட்டிருந்தது.

    வீட்டைத் தலைகீழாகப் புரட்டி இரண்டு மணி நேரம் அலசிய பிறகு இரண்டொரு சாவிகள் கிடைத்தன. பணப் பெட்டியின் சாவி மட்டும் ஒரு வாரம் கிடைக்கவில்லை. அவர் பட்ட அவதி கடவுளுக்குத்தான் தெரியும்.
    அவர் என்ன செய்திருக்க வேண்டும்? மறந்து விட்டால் என்ன செய்வது என்று முன்யோசனையுடன் தன் டைரியில் அவர் சாவி வைத்துள்ள  இடங்களை எழுதி வைத்திருக்க வேண்டும்.
அதன்பின் அப்படிச் செய்ய ஆரம்பித்தார். இப்போதெல்லாம் அவர் ஒரு புது உத்தியைக் கடைப்பிடிக்கிறார். தனக்கே ஒரு ஈ-மெயில் அனுப்பி விடுகிறார். அதில்   சாவியை வைத்த இடங்களைத் தெளிவாக எழுதி விடுகிறார்.
ஆதலால்---
யோசிப்போம். திட்டமிடுவோம். தொல்லைகளைத் தவிர்த்திடுவோம். 

3 comments:

  1. ரொம்பச் சிரிப்பா இருக்கு நண்பரின் முன் முன் யோசனை. நிறைய சைட்டுகளுக்கு பாஸ்வேர்ட் கொடுத்து அதை மறப்பதுபோல் இருக்கிறது.

    இந்த பிளாக்குகள் 20-25 வருடங்களுக்குமுன்பே வந்திருந்தால், நீங்களும் இன்னும் இளமைத் துள்ளலோடு தினம் ஒரு பதிவாக எழுதுவீர்கள். எல்லாச் செய்திகளும் நன்றாக உள்ளன.

    ReplyDelete
  2. This time all are thinking write ups.Good work.Continue your Great Humorus Write Ups.

    ReplyDelete
  3. முன் யோசனை..... நல்ல செய்திகள்.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!