September 25, 2014

நெகிழ்ந்து போனேன் -2.

அவர்  என் உறவினர். ஆனால் அவர் ஓய்வு பெற்று சென்னைக்கு  வந்த சில வருடங்களுக்குப் பிறகுதான் அவரை முதல் முறையாகச் சந்தித்தேன்.அவர் கல கல ஆசாமி. என் எழுத்திற்கு ரசிகர். நகைச்சுவைப் பிரியர்.   அவ்வப்போது நீலாங்கரை வந்து  என்னை சந்தித்து அரட்டை அடிப்பார்.

அவர் பிள்ளை, பெண்கள் எல்லாம் வெளிநாட்டில் இருக்கின்றனர். அதனால் காடாறு மாதம்; நாடாறு மாதம் என்று இருந்தார்.

இப்படி இரண்டு, மூன்று வருஷங்கள் பழகி  இருப்போம்.

அவர் திடீரென்று நோய்வாய்ப் பட்டார். மருத்துவரைப் பார்க்க  அடையாறு வருவார். அப்போது சில சமயம் நீலாங்கரைக்கு வந்து  என்னுடன் அரட்டை அடித்து விட்டுப் போவார்.

“நோயினால் வலி ஏற்படும்போது உங்கள் புத்தகத்தை எடுத்துப் படிப்பேன். அந்த சமயத்தில் வலி தெரியாது”என்பார்.  என் மேல் உள்ள அன்பால் அப்படிச் சொல்கிறார் என்று  அதை எடுத்துக் கொள்வேன்.

இரண்டு வருஷங்களுக்கு முன்பு நான் அமெரிக்கா சென்றிருந்த சமயம், அவருடைய  நோய் உக்கிரம் அடைந்ததன் காரணமாக அவர் காலமானார்.

எனக்கு உடனே  செய்தி வந்தது.

இரண்டு தினங்களுக்குப் பிறகு என் ஆறுதலை தெரிவிப்பதற்கு அவருடைய மகனுக்குப் போன் செய்தேன், (வெளிநாட்டில் உலகப் பிரபல கம்பெனியில் உயர் பதவியில் இருப்பவன்.)

அவனிடம் “ உங்கப்பா காலமானது மிகவும் துயரத்தைக் கொடுத்தது. உனக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை....” என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே--
அவன் இடைமறித்து....
“ இல்லை....உங்கள் ஆறுதல் எங்கள் துயரத்தைச் சிறிதளவு குறைக்கும் என்பதில் சந்தேகமில்லை... நானே உங்களுக்குப் போன் செய்து ஒரு தகவலைச் சொல்ல நினைத்துக் கொண்டிருந்தேன். அப்பாவைத் தகனம் செய்த பிறகு சாம்பலை எங்கு கரைக்கலாம், அந்த இடமா, இந்த இடமா  என்று நாங்கள் யோசிக்கவே இல்லை. நீலாங்கரை பீச் என்று தீர்மானித்தோம். அப்பாவிற்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்று உங்கள் வீட்டிற்குப் போய் உரையாடுவதுதான். ஆகவே உங்கள் வீடு இருக்கும் நீலாங்கரைக் கடலில் சாம்பலைக் கரைத்து விட்டு வந்தோம். உங்கள் வீட்டிற்கு வந்து விட்டுப் போன மாதிரி அவருடை ஆத்மாவிற்கு மன நிறைவு ஏற்படும் என்று நாங்கள் எண்ணினோம்” என்றான்.

அப்படி அவன்  துக்கத்துடன் சொன்னபோது அவன் அழவில்லை.
என் கண்கள் கலங்கின.
இப்போது இதை எழுதும்போதும்!


சிறு குறிப்பு-1: சென்ற பதிவில் போடுவதற்குத் திட்டமிட்டிருந்தேன். தனிப் பதிவாகப் போடுவதுதான்  அவருக்கு நான் செய்யக்கூடிய அஞ்சலி என்று கருதி, தனியாக வெளியிடுகிறேன்.
சிறு குறிப்பு-2: இந்தப் பதிவை அவரது மகனின் அனுமதியுடன் வெளியிடுகிறேன்.

September 17, 2014

நெகிழ்ந்து போனேன்;

 பல வருஷங்களுக்கு முன்பு அமெரிக்கா வந்தபோது நடந்த நிகழ்ச்சி.
அப்போது மிசூரி மாநிலத்தில் இருந்த  ST LOUIS  என்ற நகருக்குச் சென்று என் மைத்துனியின் பெண்ணுக்குக் கலியாணம் நடத்திக் கொடுக்கும் பொறுப்பை ஏற்று கொண்டிருந்தேன். கலியாணத்திற்கு முதல் நாள் பகல், NEWARK-கிலிருந்து   MEMPHIS போய், அங்கு விமானம் மாறி ST LOUIS போகவேண்டும்.பகல் இரண்டு மணிக்கு NEWARK விமான நிலையம் போனோம்.

சில நிமிடங்கள் கழித்து பயங்கர புயல் காற்று வீசத் தொடங்கியது. அதனால் விமானம் புறப்படத்  தாமதம் ஆகும் என்று அறிவித்தார்கள். “ முக்கால் மணிக்கு மேல் தாமதம் ஆகிவிட்டால் MEMPHIS விமானத்தைப் பிடிக்க முடியாது என்பதால்  பதைபதைப்புடன் காத்திருந்தோம். அரை மணிக்குப் பிறகு விமானம் புறப்பட்டது. MEMPHIS அடைந்ததும்  அவசரம் அவசரமாக இறங்கி வேகமாகப் போனோம்.  “ST LOUIS போகும் விமானத்தில் ஏற எந்த கேட்டிற்குப் போக வேண்டும்” என்று கேட்டோம். 32- மாதிரி ஒரு எண்ணைச் சொன்னார்கள். நாங்கள் இறங்கியது 4-ம் எண் கேட்.   அடப் பாவமே. அவ்வளவு தூரம் பெட்டியைத் தூக்கி கொண்டு பத்து நிமிஷத்தில் எப்படி   போகப் போகிறோம் என்ற திகிலுடன் வேகமாக நடந்தோம். ஒரு நிமிஷம் கூட நடந்திருக்க மாட்டோம்,  என் மனவிக்கும் எனக்கும் மூச்சு வாங்கியது. முதல் தடவை தனியாக அமெரிக்காவில் பயணம் செய்கிறோம். விமானத்தைத் தவறவிட்டால் அடுத்து எப்போது விமானம் என்றும் தெரியாது. ஒருக்கால் மறுநாள் காலையில் தான் விமானம் என்றால் என்ன செய்வது? ராத்திரி எங்கு தங்குவது? சாப்பிடுவது?” என்று கலவரம் தனி டிராக்கில் போய்க் கொண்டிருந்தது. 
அப்போது நாங்கள் வந்த விமானத்தில் வந்த ஒரு அமெரிக்கர் எங்களிடம் வந்து. “ உங்களுக்கு நான் ஹெல்ப் பண்ணுகிறேன்.. பெட்டியை நான் எடுத்து வருகிறேன். உங்கள் மனைவி நிதானமாக வரட்டும். நாம் சற்று வேகமாகப் போய், அந்த கேட்டில் இருக்கும் பணியாளர்களிடம் “விமானத்தை சில நிமிடங்கள் காத்திருக்க வையுங்கள்” என்று கேட்டுக் கொள்ளலாம்” என்றார்.
 (அவருக்கு 40,45 வயது இருக்கலாம். ஒரு கம்பெனியின் உயர் அதிகாரி மாதிரி இருந்தார்.)
 நாங்கள் இருவரும் கேட்டிற்குப் போனோம். “ ஸாரி, விமானம் நகர்ந்து விட்டது, டேக்-ஆஃபிற்கு ” என்று சொல்லி விட்டார்கள்.

September 04, 2014

ஜில்லு விட்ட காற்றாடி


ஞாயிற்றுக்கிழமை. என் வீட்டு டி. வி. அறையில் 
மஹாபாரத குருக்ஷேத்திரம்  நடந்து கொண்டிருந்தது.
டி. வி. யில் இல்லை, டி. வி அறையில்!
தொச்சு, தன் பரிவாரங்களுடன் வந்திருந்தான். அவை வியூகம் அமைத்து சண்டை போட்டுக் கொண்டிருந்தன. (ஒவ்வொன்றும் உள்ளே தள்ளிய டஜன் இட்லிகள் பின் எப்படி ஜீரணமாகுமாம்?)
       தொச்சு வீட்டில் டி.வி. ரிப்பேராம். அதை சாக்காக வைத்துக் கொண்டு ஞாயிற்றுக் கிழமைகளில் என் வீட்டிற்கு வரத் துவங்கினான். டி.வி. யில் காலை 9 லிருந்து 10 வரை ஒளிப்பரப்புவதால், அரை மணி முன்னதாக வந்து ("லைட்டாக டிபன் இருந்தால் போதும், அக்கா''), அரை மணி நேரம் பின்னதாகப் போய் ("ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சாப்பிட மாட்டேன் என்றால் விடமாட்டேன் என்கிறாயே அக்கா!'') கொண்டிருந்தார்கள். 
இதனால் எனக்குப் பலரின் மீது கோபம் கோபமாக வந்தது. வியாஸரில் ஆரம்பித்து டெலிவிஷன் கண்டுபிடித்தவர், பி. ஆர். சோப்ரா என்று பலரை சபித்தேன். சீரியல் சீக்கிரமே முடிய வேண்டுமே என்று பல தெய்வங்களை வேண்டிக் கொண்டேன். அது மட்டுமல்ல ராமாயணம் முடிந்த பிறகு உத்தர ராமாயணம் வந்த மாதிரி, இதற்கும் ஒரு உத்தர பாரதம் வந்து விடக் கூடாது என்றும் வேண்டிக்கொண்டேன்.

"ஏண்டா.... சனியன்களே.... இப்படி கத்தறீங்க....! எங்கேயாவது கண்காணாத இடத்துக்கு ஒழிஞ்சு தொலையுங்கோ.... அத்திம்பேர் கதை எழுதறாரே.... இப்படி தொந்திரவு பண்ணினா கற்பனை எப்படி ஓடும்! ..அடியே, அங்கச்சி!  உன் பிள்ளைங்களை அடக்கேன்'' என்று தொச்சு கத்தினான். ''ஏன் உங்க பசங்க தானே? நீங்க  தான் அடக்குங்களேன்? என் மேலே  ஏன் பாயறீங்க....''
"நான் நாய்டி, அதனால தான் பாயறேன். வாயைப் பாரு........ உன்னை என் தலைல கட்டினாங்களே, அவங்களைத் தான் சொல்லணும். .பசங்களையா பெத்திருக்கே? பேய்.... பூதம்.... பிசாசு....என்று இருக்குதுங்க.''
மகாபாரத யுத்தத்தில் ஒரு கிளைக் கதைபோல் இந்த வாக்குவாத யுத்தம் நடந்து கொண்டிருந்தது. திடீரென்று அங்கச்சி "ஓ' என்று அழ ஆரம்பித்தாள். "இப்படித் தான் அவர் எப்பவும் திட்டித் தீர்க்கறார்'' என்று  கேவலுக்கிடையே சொல்ல --
என் மாமியார், "ஏண்டா தொச்சு அவளைத் திட்டறே....? அங்கச்சி நீ உள்ளே போம்மா.... ஏய். பசங்களா சத்தம் போடாமே சண்டை போடுங்கடா.... சேச்சே .... சண்டை, சத்தம் எதுவும் வேண்டாம், மொட்டை மாடிக்குப் போய் விளையாடுங்கடா.'' என்று சொல்லி அனுப்பினாள், அப்படி சொல்லிக் கொண்டே அவள், தொச்சுவின் பிரஜைகளுக்கு கைமுறுக்கோ, சீடையோ கொடுத்திருக்க வேண்டும். ஏனென்றால் அடுத்த கணம் பல்லாவரம் குவாரி மாதிரி கடகட கொடகொடவென்று வானரங்களின் வாய் மிக்ஸியாகி சீடையை அரைத்துக் கொண்டிருந்த சத்தம் கேட்டது.