August 27, 2014

நாலு விஷயம்...

கல்கி: அதிக விலை அரிசி 
கல்கி அவர்களின் பிறந்த தினம் 9 - 9- (18) 99. 

என்றும் என் நினைவில் உள்ள கல்கி  அவர்களைப் பற்றிய குட்டித்  துணுக்கு.
ஒரு சமயம் கல்கி அவர்களைச் சந்திக்க  அடையார் காந்திநகரில் இருந்த அவருடைய வீட்டிற்குச் சென்ற, செங்கற்பட்டு  சேவா சங்கத்தின் தலைவர்  திரு எம். ஈ. ரங்கசாமி அவர்கள் என்னையும் அவருடன் கூட வரச் சொன்னார். 

 நாங்கள் சென்ற சமயம் கல்கி அவர்கள் வெளியில் கிளம்புவதற்குத் தயார் செய்து கொண்டிருந்தார். “என்னுடைய வயலைப் போய்ப் பார்த்துவிட்டு வரப் போகிறேன். நீங்களும் வாங்களேன்” என்றார். நாங்கள் ஒட்டிக் கொண்டோம்.
மகாபலிபுரம் போகும் வழியில் உள்ள ஒரு கிராமத்தில் அவருடைய வயல் இருந்தது. அங்கு போனோம். பசுமையான வயல். நெற்கதிர்கள் காற்றில் லேசாக ஆடிக் கொண்டிருந்தன. (62 வருடம் ஆகிவிட்டது. இருந்தும் அந்தக் காட்சி அப்படியே படம் பிடித்த மாதிரி நினைவுத்  திரையில் தெரிகிறது!)
முண்டாசு கட்டிய விவசாயியுடன் சாகுபடி பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார். (விவரங்கள் மறந்து விட்டன.) அப்போது கல்கி ஏதோ சொன்னார். உடனே அந்த குடியானவர்   சிரித்துக் கொண்டே, “ சும்மா சொல்லிடுவீங்க.. உங்களுக்கு இன்னா தெரியும்?’ என்று கேட்டார்.  கல்கியும் சிரித்துக் கொண்டே
 “ எனக்குத் தெரியாததாலதான் வயலை உன் கிட்டே கொடுத்து இருக்கிறேன்..  இந்தா பணம்” என்று சொல்லி 50 ரூபாயோ, 100 ரூபாயோ கொடுத்தார். பிறகு சென்னை திரும்பினோம்.

காரில் வரும்போது கல்கி சொன்னார்: “இந்த வயலில் அறுவடை ஆகி, அரிசி என் வீட்டிற்கு வந்தால், உலகிலேயே அதிக விலை கொடுத்து வாங்கிய அரிசியாக அது இருக்கும். .. ஆமாம், ஒவ்வொரு தடைவை இங்கு வரும்போதும் ஏதாவது சொல்லி பணம் வாங்கி விடுகிறான் இந்த ஆள்” என்று சிரித்துக் கொண்டே சொன்னார்!

வேட்டி கட்டிய தமிழன்
வேட்டி கட்டிய தமிழனில் ஆரம்பித்து ’வேஷ்டிக்குத் தடையா?’ என்ற கேள்வி வரை வந்து, தமிழக சட்டசபையில் சட்டமாக வந்து ஓய்ந்துள்ள நிலையில், 1962-ல் நடந்த விஷயம் என்பதால், பிரச்னை எதுவும் எழுப்பாத வேஷ்டிப் பதிவாக இது இருக்கும். 

டில்லிக்கு மாற்றலாகி நான் போனபோது, எனக்கு முதலில் தோன்றிய பிரச்னை: டில்லி அலுவலகத்தில் வேஷ்டி கட்டிக் கொண்டு போகமுடியுமா?’ என்பதுதான்.  காரணம், எனக்குப் பேன்ட் போட்டுப் பழக்கமில்லை. டில்லியிலிருந்த என் நண்பர்களுக்குக் கடிதம் எழுதினேன்.

August 16, 2014

தெரிந்த பெயர்; தெரியாத தகவல்கள்: அணுகுண்டு


என்ன, திடீரென்று அணுகுண்டைக் கையில் எடுத்துக் கொண்டீர்கள் என்று யாராவது கேட்கும் முன் நானே கூறிவிடுகிறேன்.
அணுகுண்டு பற்றிய சில தகவல்கள் என் நினைவுக்கு வந்ததன் காரணம் சமீபத்திய மூன்று விஷயங்கள் . 
  1.         ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் முதலில் 1945-ல் ஹிரோஷிமாவில் போடப்பட்டது.
2.         ஆகஸ்ட் 9-ம் தேதி (1945)  இரண்டாவது அணுகுண்டு   நாகசாகியில் போடப்பட்டது
3.         நாகசாகியில் அணுகுண்டைப் போட்ட   விமானப்படை வீரர்களில்   ஒருவரான. THEODORE "DUTCH" VAN KIRK -NAVIGATOR  கடந்த மாதம் ஜுலை 28’ம் தேதி, தனது 93-வது வயதில் அமெரிக்காவில் காலமானார்.  (மற்றவர்கள் யாவரும் இவருக்கு முன்பே காலமாகி விட்டார்கள்.)

 
இனி அணுகுண்டு  பற்றி சில தகவல்கள்.
 1996’ ஆண்டு அமெரிக்கா செல்ல எனக்கு ஒரு வாய்ப்பு வந்தது. அப்போது, வாஷிங்டன் நகருக்குப் போய், சுற்றிப்  பார்த்தேன். பிரபல ஸ்மித்ஸோனியன் அருங்காட்சியகத்தில் ஒரு அரை நாள் செலவழித்தேன். அங்கு ஒரு கூடத்தில் ஒரு விமானத்தின் மூக்குப்பகுதி மட்டும் வைக்கப்பட்டிருந்தது.
அதுதான்  அணுகுண்டைப்  போட்ட, விமானத்தின் மூக்குப்பகுதி என்று ’போர்ட்’ வைத்திருந்தார்கள். அதன் பின்னால், சுவரில் 10, 12 அடி  அளவு பெரிய புகைப்படம் இருந்தது. அதில் 12 விமானப்படை வீரர்கள், ஒரு ராணுவ விமானத்தின் முன் நின்று கொண்டிருந்தார்கள்.
அணுகுண்டு LITTLE BOY

*அணுகுண்டு போட்ட விமானத்தின் பெயர்:  ENOLA GAY ( இந்த வித்தியாசமான பெயரின் பின்னே சுவையான விவரம் இருக்கிறது. அது பின்னால்!)

*1970 வருஷ வாக்கில் ஒரு TIME  இதழில்  ‘25 வருஷத்திற்குப் பிறகு’ என்கிற மாதிரி தலைப்பில் ஒரு குட்டிக் கட்டுரை வெளிவந்தது. அணுகுண்டு போட்ட விமானிகளைத் தேடிக் கண்டுபிடித்து, பேட்டி கண்டு  எழுதி இருந்தார்கள். அப்போது ஒரு சில வீரர்கள், தாங்கள் போட்ட  அணுகுண்டு  செய்த பயங்கர அழிவைப் பார்த்த நினைவால் மனப்பிரமை பிடித்தவர்கள் போல் ஆகிவிட்டார்கள்  என்கிற மாதிரி எழுதி இருந்தது. இந்தத் தகவலை தினமணி கதிரில் துணுக்காக எழுதி இருந்தேன். ( ஆனால் அப்படி எதுவும் இல்லை என்கின்றன  இப்போது சில வலைப் பதிவுகள்.)

August 05, 2014

தெரிந்த பெயர், தெரியாத தகவல்கள்: பென் குரியன்

ஒரு முன்குறிப்பு:
 சில வருஷங்களுக்கு முன்பு என் பெண் கூறிய ஒரு சுவையான அனுபவம். அவள் அப்போது AIIMS மருத்துவக் கல்லூரி மாணவி.ஒருநாள் கல்லூரி நூலகத்தில் ‘மூளை’யை ப்பற்றி ஒரு பெரிய புத்தகத்தில் படித்துக் கொண்டிருந்த போது  அதில் ஒரு இடத்தில் “ மேலும் விரிவான தகவல்களுக்கு  ’ A HANDBOOK OF  CLINICAL NEUROLOGY’ புத்தகத்தைப் பார்க்கவும்”   என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நூலகத்தில், அந்த புத்தகம் இருக்கிறதா  என்று கேட்டாள். “இல்லை” என்றார்கள்.
தொடர்ந்து படித்துக் கொண்டிருந்த போது பல இடங்களில் இந்த ’HANDBOOK-கை பார்க்கவும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஒரு  தலையணை அளவுப் புத்தகத்தில் இருப்பதைவிட  அதிக தகவல்கள்   கையடக்கப் புத்தகத்தில் (HANDBOOK !) இருக்கும் என்றால், அது மிகவும்  சிறப்பானதாக இருக்க வேண்டும்; எப்படியாவது அதைத் தேடிப் பிடித்துப் படிக்க வேண்டும் என்று தீர்மானித்தாள்.  பல இடங்களில் வேட்டை ஆடினாள். டில்லியில்  NATIONAL MEDICAL LIBRARY என்ற நூலகம் இருக்கிறது. மிகப் பழமையான நூலகம்.( தூசு அகம் என்றும் சொல்லலாம்!) அங்கு போய்க் கேட்டாள்.
“ ஓ, இருக்கிறதே.. முதல் மாடியில் ஷெல்ஃப்கள் ’எம்’,  ‘என்’னில்  இருக்கிறது” என்றார்கள்.
‘ என்னது..நாம் ஹேண்ட்புக் தானே கேட்டோம். இரண்டு ஷெல்ஃப்கள் என்று சொல்கிறார்களே?” என்று யோசித்தபடியே மேலே சென்றாள்.  ஷெல்ஃப்களைப் பார்த்தபோது அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது.காரணம், வரிசையாக 26 ஹேண்ட்புக் புத்தகங்கள் இருந்தன;  A முதல்  Z வரை 26 வால்யூம்கள்! ( இப்போது 123 வால்யூம்கள்!)

சரி, திடீரென்று இந்த விஷயம் இப்போது என் நினைவுக்கு வந்ததற்குக் காரணம், இஸ்ரேல் நாட்டின் முதல் பிரதம மந்திரியாக இருந்த DAVID BEN GURION-ஐப் பற்றி ஒரு சுவையான தகவலை ஒரு புத்தகத்தில் பார்த்ததுதான்!
========================
DAVID BEN GURION (1886 –1973) இஸ்ரேல் நாட்டு முதல் பிரதமர்.. பயங்கரப் புத்தகப்  பிரியர்.அவ்வப்போது அமெரிக்காவில் இருக்கும் ஒரு நண்பருக்குக் கடிதம் எழுதுவார். அதில் அவருக்குத்  தேவையான புத்தகங்கள் பட்டியல் இருக்கும். பட்டியல் சற்று நீளமாக இருக்கும். நண்பரும், நியூயார்க்கில் உள்ள ஒரு புத்தகக் கடைக்குச் சென்று புத்தகப் பட்டியலைக் கொடுப்பார். கடைக்காரர் பல இடங்களில்  புத்தகங்களைத் தேடிப்பிடித்து சப்ளை செய்வார்.
  ஒரு சமயம் (அக்டோபர் 1952) அந்த நண்பருக்கு பென் குரியனிடமிருந்து கடிதம் வந்தது. புத்தகப் பட்டியலில் ஏழே ஏழு புத்தகங்கள் தான் இருந்தன.
“பரவாயில்லை, ஏழு புத்தகங்கள்தான் ..அப்பாடி. அதிக அலைச்சல் இல்லை”என்று எண்ணியபடி, நியூயார்க் சென்று பட்டியலைப் புத்தகக் கடைக்காரரிடம் கொடுத்தார். அவர் ஐந்தே நிமிஷத்தில் 6 புத்தகங்களைக் கொண்டு வந்து கொடுத்தார். பட்டியலில் ஏழாவதாக இருந்தது: “ A COLLECTION OF CASTILLION LITERATURE.”
”ஏழாவது புத்தகத்தை எப்படி எடுத்துப் போவீங்க? காரில் பிடிக்காது.மொத்தம் 134 வால்யூம்கள்!” என்றார் கடைக்காரர்.
நண்பருக்குத் தலை சுற்றியது.
*       *       *
 இந்த சுவையான தகவலுடன்  BEN GURION-ஐப் பற்றிஇன்னும் சில தகவல்கள்
இருந்தன. அவைகளையும் இங்கு போடுவதில் தப்பில்லை.