வீட்டினுள் நுழைந்தபோதே சமையலறையிலிருந்து தொச்சுவின் குரல் கேட்டது.
என் முகத்தில் விழிக்காதே என்று சில வாரங்களுக்கு முன்பு அவனைக் கோபித்து
அனுப்பியிருந்தேன். அதனால்தானோ என்னவோ,
நான் இல்லாத சமயம் பார்த்து வீட்டிற்குள் (அதாவது சமையலறைக்குள்) படை
எடுத்திருக்கிறான். உள்ளே படையலும் நடந்து கொண்டிருக்கும்!
அருமை அம்மாவிற்கும் அக்காவிற்கும் சோப் போட்டு விட்டு. பையிலும் (தொப்’பை’யிலும்) நிரம்பிய பிறகு, கையிலும் வாங்கிக் கொண்டு போவான். ஆகவே என்ன சோப்
போடுகின்றான் என்றுகேட்க, பூனை போல் வீட்டிற்குள் நுழைந்தேன்.
என் மாமியார், “ஆமாண்டி, கமலா, உழைச்சாத்தான் லாபம்,
லாபம் மட்டுமில்லை, நமக்குக் கிடைக்கிற பொருளும் உசத்தியாக இருக்கும்.... அப்ப
என்னடா சொல்றே...நம்ப வீட்டிலேயே செய்யலாம்னு சொல்றியா?” என்று கேட்டாள்.
”வீட்ல செய்யக் கூடியது என்பதால்தானே டிவியிலே சொன்னாங்க...அக்கா
எல்லாத்தையும் குறிச்சுக் கொடுத்தாள். நானும் மார்க்கெட்டெல்லாம் அலைஞ்சு எல்லாச்
சாமானும் எங்கெங்கே கிடைக்கறதுன்னு கண்டு பிடிச்சுட்டு வந்தேன். ஆட்டோவிற்கே நூறு
ரூபாய்க்கு மேலே ஆயிடுத்தே?” என்றான் தொச்சு.
“நூறு ரூபாய்தானேடா... நான் தறேன்...” என்று கமலா
சொன்னதும்...
“போதும் அக்கா...இதுக்கெல்லாம் போய்
உன்கிட்ட பணம் வாங்கிப்பேனா?... போன வாரம் கூட பம்பாய்க்கு போன் பண்ணதுக்காக நூறு
ரூபாய் கொடுத்தே...”
தொச்சு சொல்வதைக் கேட்ட போது எனக்கு
ஒரே எரிச்சல். அதே சமயம் குழப்பம். இவர்கள் என்ன திட்டம் போடுகிறார்கள். என் அருமை
சதி, பதிக்கு எதிராக என்ன சதி செய்கிறாள் என்று புரியவில்லை.
”தொச்சு...இன்னும் ஒரே ஒரு தோசை போடறேண்டா...” என்று மாமியார் கெஞ்சலாகவும் கொஞ்சலாகவும் சொன்னதும், சமையலறையில்
நிசப்தம் நிலவியது. தொச்சுவின் வாய்க்கு வேறு வேலை கிடைத்து விட்டதே!
“என்ன கமலா...யாரு வந்திருக்கிறது, உன்
தம்பிக்காரனா?” என்று வார்த்தைகளைப் பாவக்காய் ஜூஸில் தோய்த்துக் கேட்டேன்.