March 27, 2014

ஆ! அமெரிக்கா

பாஸ்டன் நகர் விஜயம்

சில மாதங்களுக்கு முன்பு நியூஜெர்சியிலிருந்து பாஸ்டன் நகருக்குப் போக  வேண்டியிருந்தது. அங்கு ஒரு பரத நாட்டிய அரங்கேற்றத்திற்கு  என்னை அழைத்திருந்தார்கள்,

பாஸ்டன் நகருக்குப் போகும் விரைவு ரயிலில் டிக்கட் முன் பதிவு செய்தேன். நிகழ்ச்சிக்கு ஒரு வாரம் முன்னதாகப் போனால், பிரபல ஹார்வர்ட் பல்கலை கழகம்அமெரிக்காவின் மிக மிக பழமையான பிரம்மாண்டமான  1895-ல் நிறுவப்பட்ட  பாஸ்டன் நூலகம்,   அபாரமான அக்வேரியம் ஆகியவை களையும் சுற்றிப் பார்க்கலாம் என்பது என்  எண்ணம்.   பாஸ்டன்  நூலகத்தில், மாதம் ஒரு நாள் பழைய புத்தகங்கள் விற்பனை இருக்கும் என்றும், ஏராளமானப் புத்தகங்கள்  அரை டாலருக்கும்,  ஒரு டாலருக்கும்  கிடைக்கும் என்பதும் ஒரு காரணம்.
அதனால் ஒரு வாரம் முன்னேயே போக பதிவு செய்தேன். ரயில் டிக்கட்  : போய் வர  300 டாலர்! ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால்  பயண தேதியை 5,6 நாள் தள்ளி மாற்ற வேண்டியிருந்தது.  வாங்கிய டிக்கட்டைப் புது தேதிக்கு மாற்றினேன். டிக்கட் பதிவு ஆனதும் ஒரு குட்டித் தகவல் வந்தது: “ டிக்கட் கட்டணம் 200 டாலர் போக 100 டாலர்  திருப்பி அனுப்பப்படுகிறது!”  ’இதென்னடா கூத்து’ என்று சந்தோஷமாகத்  துள்ளிக் குதித்து விட்டு, விசாரித்தேன். அமெரிக்காவில்  ரயில் கட்டணங்கள்  பயணத் தேதியை பொருத்து இப்படி மாறுவது உண்டு என்றும், எவ்வளவுக்கெவ்வளவு முன்னதாகப் பதிவு செய்கிறோமோ  அதற்கேற்றார்போல் கட்டணம் குறைவாக இருக்கும் என்றார்கள்!
குறிப்பிட்ட தினம் எடிஸன் பகுதியில் உள்ள மெட்ரோ பார்க் ரயில் நிலையத்தை அடைந்தேன். பாஸ்டன் ரயில் வருவதற்கு இரண்டு நிமிஷத்திற்கு முன்பு ஒரு அறிவிப்பு செய்தார்கள். “ ரயிலில்  ‘QUIET கம்பார்ட்மெண்ட்’ கடைசியில் இருக்கிறது” என்று. அதென்ன QUIET கம்பார்ட்மெண்ட்  என்று விசாரித்தேன். “ அந்த கம்பார்ட்மென்ட்டில் யாரும்  சப்தம் போடமாட்டார்கள். படிப்பார்கள் அல்லது  தங்கள்   ஆபீஸ் வேலையை பார்ப்பார்கள். யாரும் பேச மாட்டார்கள். ரயிலில்  இன்டர்நெட் ( WI-FI)  வசதி உண்டு” என்றார்கள்.


ரயிலில் ஏறி உட்கார்ந்ததும் பையிலிருந்து ஒரு புத்தகத்தை  எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.  அப்படியே மற்ற பயணிகளைப் பார்த்தேன். அவர்களும் படித்துக்  கொண்டிருந்தார்கள். ஆனால் ஒருத்தர்  கையிலும்கூட அச்சடித்தப் புத்தகம் இல்லை. எல்லாம் லேப்டாப்,  ஐ-பேட். கிண்டில், டேப்ளெட்தான்!   

பாஸ்டன் நகர் ஸ்டேஷனுக்கு   முந்தைய ஸ்டேஷனில் இறங்கச் சொல்லியிருந்தார்கள். அந்த ஸ்டேஷன் பெயர் சற்று விசித்திரமானது:  ரூட் 128!

பாஸ்டன்வாசிகளைப் பற்றிய ஒரு நையாண்டி கவிதையைப்  பல வருஷங்களுக்கு முன்பு படித்திருக்கிறேன்.   அதை என் நோட்டுப் புத்தகத்தில் தேடினேன்.  அகப்பட்டது. இதோ தருகிறேன். கவிதை 1910-ம் ஆண்டில் எழுதப்பட்டது.

"Boston Toast" by Harvard alumnus John Collins Bossidy.

    And this is good old Boston,
    The home of the bean and the cod,
    Where the Lowells talk only to Cabots,
    And the Cabots talk only to God
அமெரிக்காவில் ஒரு நாட்டிய அரங்கேற்றம்  என்பது. கிட்டத்தட்ட  கலியாணம் பண்ணுவது மாதிரி. அத்தனை செலவு! ஹால் வாடகை, அலங்காரம்,சுமார் 400, 500 பேருக்கு நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன் ஸ்னாக்ஸ், இடைவேளையில் டீ, ஸ்னாக்ஸ், கடைசியில் பலமான சாப்பாடு, குருவிற்கு தடிமனான சம்பாவனைக் கவர் , பாடகர், பக்க வாத்தியக்காரர்களுக்கும் சன்மானம். (அதில் சிலருக்கு விமான டிக்கட் கட்டணமும் சேர்த்து!)

சமீபத்திய டைம்  இதழில் வந்த துணுக்குகள்:

அம்மாடி-1
அபுதாபியில் ஒரு மொபைல் போன்  கம்பெனி ஒரு குறிப்பிட்ட மொபைல் போன் எண்   ஏலம் மூலம் தரப்படும் என்றும்,  ஏலத் தொகை அப்படியே ஒரு தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக அளிக்கப்படும் என்று அறிவித்தது.  அந்த  போன் எண்: 777 7777.  அதை ஒருவர்  ஏலத்தில் எடுத்தார். எவ்வளவு தொகைக்கு? 21 லட்சம் டாலருக்கு!

 அம்மாடி-2:
ஹிட்லரின்   MEIN KAMPF  புத்தகத்தைப் பற்றி சில வாரங்களுக்கு முன்பு ஒரு பதிவில் எழுதி இருந்தேன். அவருடைய   புத்தகம் ( 2 பாகங்கள்) -1923-ல் வெளியானது-  சமீபத்தில் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் ஏலம் விடப்பட்டது. ஹிட்லர் அதில் கையெழுத்திட்டிருந்தார். அதை ஒருவர் ( பெயர் வெளியிடப்படவில்லை)  64,850 டாலருக்கு  (கிட்டத்தட்ட 19 லட்ச ரூபாய்!) ஏலம் எடுத்தாராம். 

 அம்மாடி-3:
பாஸ்டன் ரயிலில்  ஒரு பத்திரிகை எல்லா சீட்டிலும் இருந்தது. அது ஃபிலடெல்ஃபியா  நகர நிர்வாகத்தின்  பிரசுரம்.   அதில்  அந்நகரத்தில்  உள்ள மியூரல்கள் ( கட்டடச் சுவர் சித்திரங்கள்)  பற்றிய பெரிய கட்டுரை
இருந்தது.  அதில் இருந்த ஒரு தகவல்:  ஃபிலடெல்ஃபியா  நகரத்தில் 3800  மியூரல்கள் உள்ளன.
 வருடா வருடம் 100 மியுரல்கள் கூடிக் கொண்டிருக்கின்றன!

 IKEA -  இலவசம் தந்த பரவசம்
உலக பிரசித்த பெற்ற வீட்டு உபயோகப் பொருட்கள் அபாரமாக வடிவமைத்துத் தயாரித்து விற்பனை செய்யும்  நிறுவனம் IKEA.  ஸ்வீடன் நாட்டுக் கம்பெனி.

 

Ikea logo.svgஉலகெங்கும் கிளைகள் உள்ளன. ஸ்பூனிலிருந்து சோபா செட்கள், மேஜைகள் வரை இங்கு கிடைக்கும். பெரிய ஷோ கேஸ் ஆக இருந்தாலும் அடக்கமாக அட்டைப்பெட்டியில்  ’பேக்’  பண்ணி     விற்கிறார்கள்.அவற்றை நாம் ஜோடித்துக்
கொள்ள வேண்டும்.  ஜோடிக்கும் முறையை விளக்கும் குட்டிப் பிரசுரம்  அத்துடன் வரும்.  வார்த்தைகள் எதுவும் கிடையாது, வெறும் படங்கள் தான்.  படங்களைப் பார்த்து நாமே ஜோடித்துக் கொள்ளலாம். அளவுகள் படு துல்லியம். ஒரு மில்லிமிட்டர்  கூட அதிகமாவோ குறைவாகவோ இருக்காது. ஒரு கண்ணாடி ஷோ-கேஸ் கதவுகள், டிராயர்களுடன் நானே ஜோடித்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!



சமீபத்தில் தொழிலாளர் தினத்தன்று நியூ ஜெர்சியில் உள்ள ஒரு   ஐக்கியா கடைக்குப் போனோம். ஐந்து மாடி கட்டடம்.  அதை ஒட்டி இன்னொரு  ஐந்து மாடிக் கட்டம். இது கார்  பார்க்கிங்கிற்கு!

புத்தக ஷெல்ஃப், மேஜை, நாற்காலி என்று சிலவற்றை த் தேர்ந்தெடுத்தோம். தரை  தளத்தில் பொருட்களை டெலிவரி எடுத்துக் கொண்டு பில் தொகையைக் கொடுத்துவிட்டு போவதற்கு முன் காபி சாப்பிடலாம் என்று கான்டீனுக்குப்  போனோம். அங்கு பெரிதாகப் போர்டு போட்டிருந்தது: “ இன்று கான்டீனில் எல்லாம் இலவசம். இஷ்டமான அளவு சாப்பிடுங்கள். பில்லை செலுத்திவிடுங்கள்.  பிறகு, ஐக்கியாவில் நீங்கள் வாங்கிய பொருட்களுக்குப் பணம் செலுத்தும் போது இந்த பில் தொகை கழித்துக் கொள்ளப்படும். ஒரு சின்ன நிபந்தனை: உங்கள் ஐக்கியா பில்  தொகை 150 டலாராவது இருக்க வேண்டும்.”

நாங்கள்  வாங்கிய மேஜை முதலியவை 150 டாலருக்கு மேல் ஆகி இருந்ததால், காண்டீனில்  சில ஸ்னாக்ஸ் சாப்பிட்டோம். கிட்டத் தட்ட 25 டாலர் பில்.  மேஜை  நாற்காலி பில் செலுத்தும் போது 25 டாலரைக் கழித்துக் கொண்டார்கள்! 
இனிமேல் தொழிலாளர்   தினத்தன்று நியூ ஜெர்சியில் நான் இருந்தால் ஐக்கியாவில்தான் என்னைச் சந்திக்க  முடியும்!

பின் குறிப்பு:  சென்னையிலும் ஐக்கியா  ஸ்டோர்  வரப்போகிறதாம்.

LIFE  பத்திரிகையின் கடைசி பக்க சிரிப்பு


ஸ்டெப்னி டயரை எடுத்து
வைக்க மறப்பியாடா, படுபாவி!

அறுபதுகளில்   லைஃப் பத்திரிகை, சயண்டிஃபிக் அமெரிக்கன், சாடர்டே ரிவ்யூ போன்ற பத்திரிகைகளைப் படிப்பதற்கு, அமெரிக்கன் லைப்ரரிக்கு வாரத்தில் இரண்டு நாள்  போவேன்.   லைஃப் பத்திரிகையில் கடைசிப்  பக்கத்தில்  ஒரு சிரிப்புப் புகைப்படம் இருக்கும்.
அந்த படங்களை எல்லாம் தொகுத்து LIFE SMILES BACK, LIFE LAUGHS LAST என்று இரண்டு புத்தகங்கள் பின்னால் வெளிவந்தன.  

அந்த இரண்டு புத்தகங்களையும்  (தோராயமாக 200 + 200 பக்கங்கள்!) சில வருடங்களுக்கு முன்பு,  தேடிப் பிடித்து வாங்கி விட்டேன். அதிலிருந்து ஒரு படத்தை இங்கு தருகிறேன். அவ்வப்போது பிற படங்களையும் போடுகிறேன்.





10 comments:

  1. ஐகியா ஷாப் ...ஆச்சர்யம். மெயின் காம்ப் ...வியப்பு. லைஃபின் கடைசி பக்க சிரிப்பு சூப்பர். அமெரிக்காவுக்கு செல்ல வாய்ப்பில்லாத என் போன்றவர்கள் உங்களுடன் இணைந்து சுற்றிய உணர்வு.

    ReplyDelete
  2. எத்தனை எத்தனை தகவல்கள்.....

    ஐகியா கடை, ஹிட்லரின் கையொப்பத்திற்கு அத்தனை விலை கொடுத்த நபர் என பல தகவல்கள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  3. நானும் என் மனைவியும் நியூ ஜெர்சியில் இருக்கும் ஒரு ரயில் நிலையம் மெட்ரோ பார்க்கில் இருந்து பாஸ்டனுக்கு பிசினஸ் கிளாஸ் வகுப்பில் சென்றோம். சென்ற வருடம் ஜூலை மாதம். . ரயில் பிரயாணம் ஐந்து மணி நேரம் சென்றதே தெரியவில்லை. நீங்கள் சொல்லும் wi fi வசதி ரயிலில் மட்டும் அல்ல, பெரிய மால்களிலும் கடைகளிலும் கூட இருக்கிறது. இருப்பினும் நமது பர்சனல பக்கங்களைத் திறக்கும்போது கவனம் தேவை. அதன் ஸ்க்ரீன் ஷாட்டை நமது அருகில் இருப்பவர் உடனடி யாக பார்த்து விடலாம். நமது கை ஓட்டங்களை நிதானித்து பாஸ் வார்டு எளிதாக தெரிந்துகொள்ளலாம்.

    நியூ ஜெர்சியில் இருக்கும் ஒரு லைப்ரரிக்கு சென்றபோது நிறைய புத்தகங்கள், 1 டாலர் 1/2 டாலர் என்று கொடுத்தார்கள். ஒரு பத்து புத்தகங்கள் வாங்கினேன். அதன் விலை 30 டாலர் 40 டாலர் என்று மேலட்டையில் போட்டு இருக்கிறது. எப்படி இது சாத்தியம் என்று கேட்டபோது, புத்தகத்தை வாங்கி படித்து முடித்தவர்கள், அதை பக்கத்தில் உள்ள வாசகசாலைக்கு நன்கொடையாக தந்து விடுகிறார்கள். அவர்கள் இதை விற்று வாசகசாலையின் அன்றாட செலவினங்களுக்கு உபயோகிக்கின்றனர். இது போன்று இங்கும் செய்யலாம். பல வீடுகளில் மலை போல் குவிந்து கிடக்கும் புத்தகங்கள் யாருக்கும் உபயோகம் இல்லாமல் இருக்கும் பல வீடுகளை பார்த்து நொந்து போய் இருக்கிறேன். ஆனால், ஒன்று சொல்லவேண்டும். புத்தகத்தை இரவல் கொடுத்தால் திரும்பி வராது.

    பாஸ்டனில் மோட்டார் கப்பல் சென்று பார்த்தீர்களா ?

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  4. நானும் இரண்டு மாதம் ஹூஸ்டனில் இருந்தேன். எனக்கு இது ஒன்றும் கண்ணில் படவில்லை.கற்றோருக்குத் தான் லைப்ரரி தெரியும் போலும்!

    ReplyDelete
  5. அம்மாடி- என்று வியக்கவைக்கும்
    அபூர்வ தகவல்கள்...!

    ReplyDelete
  6. இங்கு லைப்ரரிகளில் இன்னொரு விதமான சேலும் வழக்கமான ஒன்று. ஒரு பெரிய காகிதப் பையில் அதில் எவ்வளவு கொள்ளுமோ அவ்வளவு புத்தகத்தை எடுத்துக்கொள்ளலாம். அதற்க்கு மொத்தமாக ஒரு விலை.. $10 இல்லையேல் $5 என இருக்கும்.. அதில் பல முத்தான புத்தகங்களை எடுத்துவிடலாம்!

    ReplyDelete
  7. A small correction: IKEA is a Swedish company (now incorporated in the Netherlands). It is not a SWITZERLAND company as mentioned in your pages. The contents of the article are very appealing.

    ReplyDelete
  8. எங்கள் ஊரில் (Grand Rapids, Michigan) எல்லா நூலகங்களிலும் மாதமொருமுறை Book Sale நடைபெறும். 10 புத்தகங்கள் வாங்கினாலும் $2 / $3 தான் ஆகும்.

    முரளி.

    ReplyDelete
  9. கொடுத்து வைத்தவர் நீங்கள்.
    -கடுகு

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!