February 27, 2014

அமெரிக்கா - இங்கும் அங்கும்

மூன்று பெண்மணிகள்
* உலகின் மிகப் பிரபலமான   இதழ் TIME வாரப்  பத்திரிகை.  சுமார் ஐந்து கோடி வாசகர்களைக் கொண்டது அமெரிக்காவின் புகழ் பெற்ற  இதழ்  அதற்கு 90 வயது  ஆகிறது.   முதன் முறையாக சமீபத்தில் ஒரு பெண்மணி (NANCY GIBBS ) அதன் ஆசிரியராக நியமிக்கப்பட்டிருக்கிறார். 1988-முதல்  ஆசிரியர் இலாகாவில் இருந்த அவர் இது வரை 174 அட்டைப்படக் கட்டுரை எழுதியுள்ளார்.

பொறுப்பை ஏற்றதும் அவர் ஒரு ஒரு புதிய துவக்கம் என்ற தலைப்பில் ‘ஆசிரியர் குறிப்பு எழுதியிருந்தார். அதன் அழகான கருத்தும்,  சிநேக பாவத்துடன் எளிமையான ஆங்கில நடையில் எழுதப்பட்டிருந்ததும் என்னைக் கவர்ந்தது. மொழிபெயர்த்துப் போடலாம் என்று நினைத்து முயற்சியில் இறங்கினேன்.சில வரிகளைத் தமிழாக்கம் செய்தேன். திருப்தியாக வரவில்லை.(ஆங்கிலக் கட்டுரையைப் படிக்க,மேலே உள்ள
’ஒரு புதிய துவக்கம்’ என்பதைச் சொடுக்கவும்.)


* புகழ் பெற்ற READERS' DIGEST  இதழிற்கும்   ஒரு பெண் தான் ஆசிரியராகி இருக்கிறார்.  LIZ 
VACCARIELLO பல புதிய மாற்றங்களைச் செய்து கலகலப்பாக்கி வருகிறார்.  .

* இதையெல்லாம் மிஞ்சும் தகவல்: நம் நாட்டில்  உள்ள ரிசர்வ் பாங்க் கவர்னர் பதவி போன்றது .அமெரிக்காவில்  ஃபெட்ரல் ரிசர்வ்  சேர்மன் பதவி. முதல் முறையாக   ஜேனட் எல்லன்  என்ற ஒரு பெண்மணி சேர்மனாக பொறுப்பேற்று இருக்கிறார். 
ஜேனட்டின் கணவர்: ஜார்ஜ்  அகெர்லாஃப் 2001-ம்  ஆண்டு பொருளாதாரத் திற்கான  நோபல் நினைவுப் பரிசைப் பெற்றவர்.
பஸ்ஸில் வந்த பிரதமர்.
இது பிரிட்டிஷ் பிரதமர் பற்றிய தகவல். சிலமாதங்ககளுக்கு முன்பு பிரிட்டிஷ் பிரதமர்   டேவிட் கேமரூன் அமெரிக்கா வந்திருந்தார். தனது பல வேலைகளுக்கிடையே  மன்ஹாட்டனில் (நியூயார்க்)  இங்கிலாந்து  சுற்றுலாதுறை ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள     இளவரசர் ஹாரியுடன் பஸ்ஸில் வந்திறங்கினார்.

இதற்காக லண்டனிலிருந்து சுற்றுலாதுறையின் டீலக்ஸ் பஸ் ஒன்றை இறக்குமதி செய்திருந்தார்கள். “ எங்கள் சுற்றுலாதுறையை மேம்படுத்த எடுக்கப்பட்ட  சிறிய முயற்சியாகும்” என்றார் கேமரூன்.

டாவின்சி கோட்
டாவின்சி கோட் எழுதிய பிரபல எழுத்தாளர்  DAN BROWN ன் புதிய புத்தகம் சமீபத்தில் வெளியாயிற்று. புத்தகத்தின் பெயர்: பை  (PI) கணிதத்தில் வரும் PI. .புத்தகத்தை ஒரு விசேஷமான தேதியில் வெளியிட்டிருக்கிறார்கள். தேதி: மே 14, 13.
அமெரிக்காவில் இந்த தேதியை 5-14-13 என்றுதான் எழுதுவார்கள். (முதலில் மாதம், அடுத்து நாள், கடைசியில் வருஷம்). இந்த தேதியில் ஒரு விசேஷம் இருப்பதைக் கண்டுபிடிக்க முடியுமா என்று பாருங்கள். 51413 என்பதற்கும் ‘பை’யின் மதிப்பிற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. 5-14-13 என்பதைப்  பின்பக்கத்திலிருந்து எழுதினால்  31415 வருகிறதல்லவா, அதுதானே ’பை’யின் மதிப்பு?

கார் பேரம்
 எனக்குத் தெரிந்த வரையில்  பொதுவாக அமெரிக்காவில் பேரம் என்பது கிடையாது. ஆனால் வீடு வாங்கும்போதுப், புது கார் வாங்கும் போதும் மட்டும் பேரம் பேசப்படுகிறது.  லேபர் டே (LABOR DAY)  அன்றுதான் நிறைய கார்கள் விற்பனை ஆகிறதாம். விற்பனையாளர்கள் அதிக அளவில் தள்ளுபடி கொடுத்தாலும் பேரமும் தீவிரமாக நடக்கிறது. கார் வாங்கியதும் இந்தியர்கள்,  புதியகாரைக் கோவிலுக்கு எடுத்துச் சென்று  ’கார் பூஜை’ செய்கிறார்கள். கோவில் பார்க்கிங்க் இடத்தில், பூஜைக்கு வரும் கார்களுக்கு என்று இடம் ரிசர்வ் செய்து வைத்திருக்கிறார்கள். 

நியூ ஜெர்சியில் பிரிட்ஜ் வாட்டர் என்னும் இடத்தில் அழகான, பெரிய வெங்கடேஸ்வரா கோவில் உள்ளது.  சென்ற லேபர் டே அன்று கோவிலுக்குப் போனபோது அங்கு பூஜைக்கு வந்த கார்  கியூவைப் பார்த்தேன்!    பூஜைக்கு 15 நிமிஷம் நேரம் பிடிக்கிறது. கட்டணம்  31 டாலர்!
 

நியூயார்க் பென் ஸ்டேஷன்
அது என்னவோ தெரியவில்லை நியூயார்க்கின் பிரம்மாண்டமான ரயில் நிலையத்திற்கு பென் ஸ்டேஷன் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். (ஏன் நியூ யார்க் என்று பெயர் வைக்கவில்லை என்று தெரியவில்லை!) இரண்டு மூன்று ‘லெவல்’களில் ரயில்கள் வந்து போகின்றன. ரயில் நிலையத்தின் பல
சுவர்களில் தேர்ந்தெடுத்தப் பொன்மொழிகளை அழகாக எழுதி இருக்கிறார்கள். ( கொசுறு:  நியூயார்க்கை ஒட்டி இருக்கும் நகரம் NEWARK.
நுவர்க் என்று உச்சரிக்கிறார்கள்.  இங்குள்ள ரயில் நிலையத்தின் பெயர் : நுவர்க் பென் ஸ்டேஷன்!
 நியூ யார்க் தலைமைத் தபால் நிலையம்

எட்டாவது அவென்யூவில் இருக்கிறது. மிகப் பிரம்மாண்டமான கட்டடம். 1912-ல் கட்டப்பட்டது. உள்ளே போய்ப் பார்க்க விரும்பினேன். ஆனால் நேரம் கிடைக்கவில்லை. அந்த கட்டடத்தின் முகப்பில் பெரிய  எழுத்தில் பொறிக்கப் பட்டிருந்த வாசகத்தைப் படித்து பூரிப்படைந்தேன். (50-களில்  சென்னை ஜி.பி.ஓ வின் ஒரு அங்கமாக இருந்தவன் நான்!)
"Neither snow nor rain nor heat nor gloom of night stays these couriers from the swift completion of their appointed rounds."

குட்டித் தகவல்:  ஈ-மெயில் வந்த பிறகு தபால் துறை சற்று க்ஷீணமடைந்து வருகிறது.  இதை ஈடுகட்ட அமெரிக்கத் தபால்துறை அடிக்கடி பல்வேறு விதமான தபால் தலைகளை வெளியிடுகிறது. அது மட்டுமல்ல,
FOREVER STAMP   என்று  ஒரு தபால் தலையை வெளிட்டுள்ளார்கள்..  ஒரு கவரைத் தபாலில் அனுப்ப அதை  ஒட்டினால் போதும். இன்றைய தபால் கட்டண விலையில் விற்கிறார்கள். பின்னால் கட்டணங்கள் எவ்வளவு உயந்தாலும் கவலை இல்லை இந்த தபால் தலையின் மதிப்பும்  அதே அளவு உயர்ந்து விடும்.   இந்த தபால் தலைகளை நிறைய வாங்கி ஸ்டாக் செய்து கொள்ள பலரைத் தூண்டும் என்பது தபால் துறையின் கணிப்பு. 

10 comments:

  1. வடகிழக்கு மாகாணங்கள் பலவற்றில் இருக்கும் நகரங்களை இணைக்க பல்வேறு ரயில்வே நிறுவனங்கள் இருந்தன. அவற்றில் ஒன்று பென்சில்வேனியா ரெயில் ரோட். இவர்களுடைய தடங்களில் இருந்த ஸ்டேஷன்கள் பென்சில்வேனியா ரயில்ரோட் ஸ்டேஷன்கள் என்பதைக் குறிக்க பென் ஸ்டேஷன் என வழங்கப் பெற்றன.

    தாங்கள் நியூஜெர்சியில் தற்பொழுது இருக்கிறீர்களா? சந்திக்க முடியுமா? தங்கள் நேரம் கிடைத்தால் ஒரு வாரயிறுதியில் பதிவர்கள் சிலரோடு சந்திக்க ஏற்பாடு செய்ய பார்ப்பேன்.

    ReplyDelete
  2. Forever Stamp நல்ல முயற்சி. நம் நாட்டைப் போல் அங்கும் தபால் துறை ஷீனமடைந்து வருகிறது. சென்ற வருடம் தீபாவளி க்கு என்று ஒரு தனி ஸ்டாம்ப் வெளியிட்டால், அந்த ஸ்டாம்பை இந்தியர்கள் வாங்கினால் எவ்வளவு பணம் கிடைக்கும் என்று அங்குள்ள டி.வி.களில் பேசப்பட்டது. இந்த வருடம் வெளி இடுவார்கள் என எண்ணுகிறேன். இங்கும் சில பல புது முயற்சிகள் செய்ய வேண்டும்.

    ReplyDelete
  3. சிறப்பான கருத்தை சொல்லியுள்ளீர்கள்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. இலவசக்கொத்தனார் அவர்களுக்கு.
    உங்கள் ஈமெயில் ஐடியை எனக்கு எழுதவும். பதில் போடுகிறேன். வலைப்பூவில் வெளியாகாது.-கடுகு

    ReplyDelete
  5. நான் நியுஜெர்சி வரும்போது நீங்கள் அங்கு இருப்பீர்களா? chellappay@gmail.com

    ReplyDelete
  6. செல்லப்பா அவர்களுக்கு.
    நீங்கள் எப்போது நியூஜெர்சி வர உத்தேசம்?
    உங்கள் ஈமெயில் ஐடியை எனக்கு எழுதவும். பதில் போடுகிறேன். வலைப்பூவில் வெளியாகாது.-கடுகு

    ReplyDelete
  7. படித்தேன்... ரசித்தேன்!

    ReplyDelete
  8. பின்பக்கத்திலிருந்து எழுதினால் 310245 வருகிறதல்லவா, அதுதானே ’பை’யின் மதிப்பு?
    தவறு.
    3.14285……

    ReplyDelete
  9. நன்றி.
    புத்தகம் வெளியான தேதி மே 14,13 சரிதான். பின்பக்கத்திலிருந்து எண்ணைத் தட்டச்சு செய்யும் போது தவறாக அடித்துவிட்டேன். 31415 என்பது சரி.

    ReplyDelete
  10. சவுதி அரேபியாவில கூட முதல் முதலாக ஜபார்த்தி என்ற பெண் சவுதி கெஜட் என்ற ஆங்கில பத்திரிகைக்கு ஆசிரியராக பொறுப்பு ஏற்றிருக்கிறார் சுடு மணலின் மீது ஒரு சொட்டு நீர்!!

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!