December 21, 2013

புத்தகங்களும் நானும்-1

புத்தகங்களும் நானும்
(பல பகுதிகளாக நிறைய எழுத உத்தேசம்.)

எனக்கு எப்போது புத்தகப் பைத்தியம் பிடித்தது என்பது தெரியாது. என் அப்பாவிற்குப் பலதரப்பட்ட புத்தகங்கள் மிது ஈடுபாடு உண்டு, இசை, மொழி, வான சாஸ்திரம்.  தெலுங்கு. சமஸ்கிருத புத்தகங்கள், நிகண்டு, நாலாயிரம் என்பவை மட்டுமல்ல, அந்த காலத்தில் TIMES OF INDIA-வின் ஹோம் லைப்ரரி கிளப்பில் சேர்ந்து  Worlds Best Short Stories  போன்ற பல தடிமனான புத்தகங்களையும், அமெரிக்காவிலிருந்து வெளியாகும்  POPULAR SCIENCE  போன்ற பத்திரிகைகளையும்  வரவழைத்தார்; இத்துடன் தியாகராஜர் கீர்த்தனைகள், திலகர் கீதை, அயினி அக்பரி என்று பலதரப்பட்ட புத்தகங்கள். அவற்றையெல்லாம் புரட்டிப் பார்ப்பேன். ‘
எதிர் வீட்டிலிருக்கும் என் நண்பன்  வெங்கடேசன் வீட்டில்.வடுவூர்  ‘திகம்பரசாமியார், ஜே. ஆர். ரங்கராஜு நாவல்கள் இருந்தன. அவைகளை கடன் வாங்கி விழுந்து விழுந்து படிப்பேன்.

விகடன், கல்கி வார இதழ்களைத் தேடித் தேடி படிப்பேன். தீபாவளியன்று விடிகாலையில் தீபாவளி மலர்களை படித்தால்தான் பண்டிகை முழுமையடையும்.
அதனால், பணத்தைச் சேர்த்து, செங்கற்பட்டு ரயில் நிலையத்திலிருந்த சுதேசமித்திரன் புக் ஸ்டால்’  நாராயணனிடம் முன்பணம் கட்டி விடுவேன். பாவம், நாராயணன், அவசரம் அவசரமாகத் தன் வீட்டில் தீபாவளியை கொண்டாடிவிட்டு, தீபாவளி மலரை வீடு வீடாகப் போய்ப் போடுவார். விடிகாலை ஐந்தாவது மணிக்குள் மலரை என் வீட்டிற்குக் கொண்டு வந்து கொடுத்து விடுவார்.
எனக்கு நாராயணன் மீது கொஞ்சம் பொறாமையும் உண்டு. எத்தனைப் புத்தகங்களுக்கு மத்தியில் அவருடைய பொழுது கழிகிறது! காசு செலவில்லாமல் அவர்  எல்லா பத்திரிகைகளையும் படிக்கலாம்.

அட்வான்ஸ் கொடுக்கும் சாக்கில் அவருடைய ஸ்டாலில் உள்ள தமிழ்ப் புத்தகங்களை மேய்வேன். சில சமயம் மாலை வேளைகளில் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய் அவருடைய ஸ்டாலில் புத்தகங்களைப் புரட்டிப் பார்ப்பேன்.

என் பொறாமை வளையத்திற்குள் இருந்த மற்றொருவர் வாசு(?) என்பவர். வாசு எங்கள் ஊர்க்காரர், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள ஹிக்கின்பாதம்ஸ் புத்தக ஸ்டாலை நிர்வகித்து வந்தார். அது சற்று பெரிய ஸ்டால். பல மொழிப் பத்திரிகைகளும், வீக்லி, பிளிட்ஸ், காரவன். போன்ற பத்திரிகைகளும் இருக்கும். எனக்கு சென்ட்ரல் ஸ்டேஷன் போக வேண்டிய வேலை வந்தால், சற்று முன்னதாகப் போய்,  பத்து பதினைந்து நிமிஷம் ஸ்டாலில்  இருப்பேன்.

  சென்னை ஜி,பி. ஓ.வில் வேலைக்குச் சேர்ந்த பிறகு பீச் ஸ்டேஷனில் இருந்த சுதேசமித்திரன் புக் ஸ்டாலில் வாரம் ஒரு புத்தகமாவது வாங்கி விடுவேன். புலியூர் கேசிகனின் தமிழ் இலக்கிய புத்தகங்கள் (இரண்டு ரூபாய்தான்!), மர்ரே ராஜம் புத்தகங்கள் (ஒரு  ரூபாய்தான்!), சின்ன அண்ணாமலையின் தமிழ்ப் பண்ணை, அரு. ராமநாதனின் வெளியீடுகள், அமுத நிலையம் வெளியீடுகள் என்று வாங்கி விடுவேன். ( ஒரு ரூபாய் என்பதே அதிக விலைதான். சென்னை-செங்கல்பட்டு பஸ் கட்டணம் 75 பைசா என்று இருந்த காலம்!)

டில்லி வந்த பிறகு என் அலுவலகத்திலிருந்து மூன்றாவது கட்டடத்தில் பிரிட்டிஷ் கவுன்சில் நூலகம் இருந்ததை பார்த்த எனக்கு லாட்டிரி பரிசு அடித்த மாதிரி மகிழ்ச்சி ஏற்பட்டது, சில வருஷங்கள் உறுப்பினர் சந்தா எதுவும் இல்லை. பிறகு 15 ரூபாய் என்று வைத்தார்கள்.
சுமார் பத்து நிமிஷ நடை தூரத்தில் சென்ட்ரல் செக்ரடேரியட் நூலகமும் இருந்தது. அது ஒரு சுரங்கம். . பல அரிய புத்தகங்கள், பழைய இதழ்கள் எல்லாம் மண்டிக் கிடந்தன. புத்தகங்கள் படிந்திருந்த தூசு. எல்லா புத்தகங்களையும் ‘கனமான’  புத்தகங்களாக ஆக்கி விட்டிருந்தன! அங்கிருந்து  ஒரு சமயம் இரண்டு புத்தகங்கள் தான் எடுத்து வரமுடியும்.

இந்த சமயத்தில் யாரோ ஒரு புண்ணியவான், “ ஞாயிற்றுக் கிழமைகளில் பழைய டில்லியில் இருக்கும் தாரியாகஞ்ச் தெருவிற்குப் போயிருக்கிறாயா? தெரு முழுதும் நடைபாதையில் பழைய புத்தகங்கள்தான்” என்றார். முதன் முதலில் போனபோது பிரமித்துப் போனேன்.  டில்லி கேட் எனப்படும் இடத்திலிருந்து துவங்கி ஜம்மா மசூதி வரை போகும்  வீதி. ஒரு பக்க நடைபாதையில் தான் கடைகள் இருக்கும். எதிர்ப்பக்கம் பரிதாபமாகக் காலியாக இருக்கும். 
இந்த புத்தக பஜாரில் ஆங்கில புத்தகங்கள் ஏராளமாகக் கிடைத்தன. பழைய ரீடர்ஸ் டைஜஸ்ட்களை 4 அணா விலையில் டஜன் டஜனாக வாங்கினேன். ரீடர்ஸ் டைஜஸ்ட் Condensed Books  மட்டும் 150 புத்தகங்கள் வாங்கி இருப்பேன். என்னிடம் உள்ள 125+  MAD Magazines  அங்கு வாங்கியவைதான். (ஐம்பது பைசா, ஒரு ரூபாய் என்று வாங்கின அந்த பழைய  MAD  இதழ்கள் இன்று 5 டாலர், 10 டாலர் என்று இன்டர்நெட்டில் விற்பனை ஆகின்றன!)
அடிக்கடி ஆசிரியர் சாவி என்னிடம்: “நீ லண்டனுக்குப் போய்  FOYLES  புத்தக ஷாப்பிற்குப் போய் வரவேண்டும். அது பழைய புத்தகங்களின் சொர்க்கம்” என்று சொல்வார்.
 நந்தனார் பாணியில் “லண்டனுக்குப்  போகாமல் இருப்பேனோ,..” என்று பாடிக் கொண்டிருந்தேன். அதுதான் என்னால் செய்ய முடிந்தது.

சில வருஷங்களுக்கு முன்பு கடவுளின் கடைக்கண் பார்வை என் மேல் விழுந்தது.. அமெரிக்காவில் அட்லாண்டிக்  நகரில் உள்ள எமரி சர்வகலாசாலை  மாணவர் குடியிருப்பில் ஐந்து மாதங்கள் தங்க  வாய்ப்பு கொடுத்தார். அது உண்மையிலேயே 22 காரட் தங்க வாய்ப்பு! 

சர்வ கலாசாலையைச் சுற்றிப் பார்த்தபோது. லைப்ரரி எங்கு இருக்கிறது?” என்று கேட்டேன். ”எதிரே இருக்கிறதுதான் உட்ராஃப் லை ப்ரரி” என்றாள் என் பெண். பிரம்மாண்டமான ஐந்து மாடிக் கட்டடம். உள்ளே போய்ப் பார்த்தேன். மலைப்புதான் வந்தது. புத்தகசாலயில் போய் நான் படிக்க முடியுமா? என்று கேட்டேன். “போய் கேட்கலாம். தேவையானால் அனுமதி வாங்கி விடலாம்: என்றாள் என் பெண்.
போய்க் கேட்டாள். “ அதுவா? அது வந்து.. அதாவது..” என்று  யாரும் தலையை சொரியவில்லை.”நிச்சயமாக வந்து படிக்கலாம். வீட்டிற்கு எடுத்துப் போக லைப்ரரி டிக்கட் இருக்க வேண்டும்?.. உங்கள் டிக்கட்டில் உங்கள் அப்பா எடுத்துப் போகலாம்: என்றார்கள்.
நேரே நகைச்சுவைப் புத்தகங்கள் இருந்த ஷெல்ஃபுகளுக்குப் போனேன். திக்கு முக்காடிப்  போனேன்.  கேட்லாக்கைப் பார்த்தேன். 1700 நகைச்சுவைப் புத்தகங்கள். என் அபிமான எழுத்தாளர்கள் எழுதிய பல புத்தகங்கள். இரவு பகலாகப் படித்தேன். சில சிறிய புத்தகங்களை நோட்டுப் புத்தகங்களில் எழுதிக் கொண்டேன். (போட்டோ காபி எல்லாம் கட்டுப்படியாகாத சமாசாரம்!)

அட்லாண்டாவில் உள்ள BOOK NOOK  என்ற பழைய புத்தகக் கடையைப் பற்றி கேள்விப் பட்டோம். புத்தகங்கள் 40 சென்ட்தான். போகலாம் என்றால் பஸ் கட்டணம் பயமுறுத்தியது. போய் வர மூன்று டாலர் ஆகும். ஒரு நாள்,  பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒரு மாணவ நண்பர்  புக் நூக் போகப் போவதாகச் சொன்னார். அவரிடம் கார் இருந்தது. போனேன். சில புத்தகங்கள் வாங்கினேன். புஷ்பா தங்கதுரைக்காக பல பழைய ELLERY QUEEN MYSTERY MAGAZINES வாங்கினேன். ஐந்து மாதங்கள் நிறையப் படித்தேன்.

சில வருஷங்களுக்குப் பிறகு  நார்த் கரோலினா சர்வகலாசாலை இருந்த சேப்பல் ஹில் என்ற நகருக்கு இரண்டு தடவை போக வாய்ப்பு கிடைத்தது. அங்கு 5, 6 புத்தகசாலைகள் இருந்தன. போதாகுறைக்கு சேப்பல்ஹில் ஊரில் பொது நூலகம் வேறு இருந்தது. அதில் மூன்று மாதத்திற்கு ஒரு தரம் ’இரண்டு நாள்  BOOK SALE’  இருக்கும்.  முதல் நாள்
பைண்ட் செய்யப்பட்ட புத்தகங்கள் 1 டாலர், PAPER BACK புத்தகங்கள் 50 சென்ட்.  இரண்டாம் நாள்  BAG SALE.  ஒரு பெரிய காகிதப் பையைக் கொடுப்பார்கள். எத்தனைப் புத்தகம் வேண்டுமானாலும் பையில் நாம்  நிரப்பிக் கொள்ளலாம்! 3 டாலர் தான்! இந்த BOOK SALE’ அனுபவங்கள் சுவையானவை. அடுத்த பதிவில் பார்க்கலாம்.
 ஒரு குட்டிக் கட்டுரை:
பெங்குவின் புத்தக கம்பெனிக்கும் அடி சறுக்கும்!
என் அபிமான எழுத்தாளர்களில் ஒருவர்  HUMPHREY F ELLIS. நகைச்சுவை எழுத்தாளர்.  PUNCH  பத்திரிகையின் துணை ஆசிரியாராக இருந்தார். பின்னால் அமெரிக்கா வந்து NEW YORKER  பத்திரிகையில் கட்டுரைகள் எழுதினார்.  அவரது சில புத்தகங்கள்” BEE IN THE KITCHEN, TWENTY FIVE YEARS HARD, SWAN SONG, THE PAPERS OF A.J WENTWORTH B.A, THE VEXATIONS OF A.J WENTWORTH
நியூயார்க்கர் பத்திரிகை பழைய இதழ்களில் வந்த 30-35 கட்டுரைகளை எல்லாம் தேடிப்பிடித்து  DOWNLOAD செய்து பிரிண்ட் எடுத்து தைத்து வைத்திருக்கிறேன்,  அந்த  அளவுக்கு அவர் விசிறி நான்.
1964-ல் எல்லிஸ் எழுதிய கதைகளை THE WORLD  OF A.J WENTWORTH என்ற தலைப்பில் பெங்குவின் நிறுவனம் வெளியிட்டது.
 ஒரு பேட்டிக் கட்டுரை எழுத  Jeremy Louis என்ற பத்திரிகையாளர் எல்லிஸைச்   சந்திக்கச் சென்றார். எல்லிஸின் முகவரியைக் கேட்டு,  லண்டனில் இருந்து சற்று தள்ளி இருந்த பகுதியில் பல குறுகிய வீதிகளைக் கடந்து குறிப்பிட்ட முகவரியை அவர் அடைந்தார். வீட்டு வாயிலில்   ஒல்லியான ஒருவர் நின்று  கொண்டிருந்தார்.
பெங்குவின் புத்தகத்தில் அச்சடிக்கப்பட்டிருந்த வாட்டசாட்டமான எல்லிஸின் வட்டமுக படத்திற்கும் இந்த நபருக்கும் சம்பந்தம் இல்லாதிருக்கவே “ நான் எல்லிஸ் அவர்களைப் பார்க்கணும். அவர் வீடு ...” என்று இழுத்தார்
“ எல்லிஸ் நான்தான்.. உங்கள் பார்வையில் சந்தேகம் தெரிகிறது... பெங்குவின் புத்தகத்தில் தவறான  படத்தை அச்சடித்து விட்டார்கள். அதுவும் ஒரு எல்லிஸின் படம்தான். அவர் ஒரு டாக்டர்.. புகழ் பெற்ற குழந்தைகள் மனோதத்துவ மருத்துவர்” என்றார்.
பன்ச் ஆசிரியராக இருந்தவரின்  படத்தையே தவறாகப் பிரசுரித்துவிட்டது பெங்குவின். அச்சுப் பிழையில் இது சிகரம் வைத்த பிழை!

ஒரு சொந்த பிரலாபம்: என்னுடைய புத்தகத்தை ஒரு நிறுவனம் வெளியிட்டது. பக்கத்திற்கு இரண்டு அச்சுப்பிழையை இலவசமாகப் போட்டிருந்தார்கள். எல்லிஸை நான் மிஞ்சி விட்டேன்!

7 comments:

  1. சுவையான புத்தக அனுபவங்கள்..!

    ReplyDelete
  2. It is astonishing to read what all you have read and with so much interest and efforts. It may take 4 births for many of us even to browse the books you have read. I also note that you have 'studied' in so many foreign Universities. My humble salutations to you. - R. J.

    ReplyDelete
  3. It is astonishing to read what all you have read and with so much interest and efforts. It may take 4 births for many of us even to browse the books you have read. I also note that you have 'studied' in so many foreign Universities. My humble salutations to you. - R. J.

    ReplyDelete
  4. It is astonishing to read the blog and note how much you have read. I greatly admire your interest in reading and efforts to go to any length to read books and take notes / collect them. You are an inspiration and I am sure all youngsters who have the good fortune to know you in person will benefit a lot from the association.It may take 4 janmams for people like me to read so much! I also note that you have 'studied' in so many foreign Universities. - R. J.

    ReplyDelete
  5. Sri RJ:
    Thank you Sir. I read books with single minded devotion.I lay your salutations at the feet of 'Kalki' who had done untold miracles for me.
    -Kadugu

    ReplyDelete
  6. This is one blog which I read with keen interest as I am also an avid book lover. Love your sense of humour and admire your knowledge about varying book collections. Please share your book
    experiences for the benefit of the readers.
    -Bharath Kumar

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!