October 04, 2013

கேட்ட ஞாபகம் இல்லையோ!
அந்த காலத்தில் கேட்ட சில வசனங்கள், கேட்டவர்களுக்கே  மறந்து போயிருக்கும்.  புதிய தலைமுறையினர் கேட்டிருக்கவே மாட்டார்கள். அவற்றை இப்போது புதிய  தொழில் நுட்பத்தில் - அதாவது டிஜிட்டலில்- தருகிறேன்.

1968-ல் கேட்டது
 அடப்  பாவமே, பெட்ரோல் விலையை லிட்டர் ஒரு ரூபாயிலிருந்து ஒரு ரூபாய் 15 நயா பைசாவாக  ஏத்திட்டாங்களே... மோபெட்டிற்குப் பெட்ரோல் போட்டுக் கட்டுப்படியாகாது. இனி மேல் நடை ராஜாதான்!

1970 களில் சொன்னது.
என்ன அமெரிக்கா வேண்டி கிடக்குது, கலியாணம் பண்ணிக்கறதுக்கு முன்னேயே டைவர்ஸுக்குத் தயாராகி விடுகிறார்கள்.. விவாகரத்துக்குன்னு பல வக்கீல்கள் இருக்காங்களாம்....அந்தக் கலாசாரம் எல்லாம்  எல்லாம் நம்ம  ஊர்ப்பக்கம் தலைகாட்ட முடியாது.

 60 களில்
ஏம்பா பழைய பேப்பர் கிலோ ஆறணாவுக்குத்  எடுக்கிறேன்னு  சொல்றியே,.. ஊரெல்லாம் விலைவாசி எப்படி ஏறிண்டே இருக்குது, நீ மட்டும் குறைச்சுண்டே வர்றே?

60 களில்
என்னடி ஜயா, உன் நாட்டுப் பொண்ணு இப்படி செய்யறா? ஆம்பிளைக் குழைந்தைக்கு பூ போட்ட சட்டை, பெண் குழைந்தைக்கு பேண்ட்.. நன்னாவா இருக்கு?. நாளைக்கு பெரிவங்களா போனால்கூட இப்படிதான் போடுவா.. போ.. கலி முத்திப் போச்சு!

1962-ல்
லட்சுமி, கிளம்பலையா, மவுண்ட் ரோட் இந்தியா காஃபி ஹவுஸுக்கு? காபிக் கொட்டை வாங்கிண்டு வர வேண்டாம்? ஆளுக்கு ஒரு கிலோ தர்றங்களாம்.

1958-ல்
என்ன சம்பந்தியோ! .. பிள்ளை வீட்டுக்காராளை “ சாப்பிட வாங்கோ”ன்னு அழைக்கவேண்டாமோ.. நாமே போய் உட்கார்ந்து சாப்பிட அவ்வளவு கதி கெட்டா கிடக்கிறோம்?
1945-ல்
டாக்டரை எதுக்கு வீட்டுக்கு வரச்சொல்லணும்?. 5 ரூபாய் பழுத்து விடும். நாமே அவர் வீட்டுக்குப் போயிடலாம். இரண்டு ரூபாயுடன் முடிந்துவிடும்.
1953-ல்
“ இந்த கிட்டு,750 ரூபாய் கொடுத்து ராயல் என்ஃபீல்ட் மோட்டார் சைக்கிள் வாங்கிட்டானாம்.. தலைகால் புரியலை!”

1944-ல்    
 “ டேய், ராமு. போடா, சீக்கிரம். கடைத்தெரு மணிகண்டன் ஷாப்லே ஸ்டாண்டர்ட் கிளாத் தர்றாங்களாம். இந்தா அஞ்சு  ரூபாய் .. அஞ்சு கெஜம் துணி வாங்கிண்டு வா. ஓடு.”

1950-ல்
சைக்கிளில் லைட் இல்லாம போயிட்டேன். போலீஸ்காரன் பிடிச்சுட்டான். ஒரு ரூபா அழுதேன்.
--------------------
ஆர். ஜகன்னாதன் அவர்களின்  உபயம்:
'70 களில் - 
என்னமோ போன் வந்துடுத்தாம், ஆத்திர அவசரத்துக்கு ஒரு போன் பண்ணிக்கலாமான்னு கேட்டா அலட்டிக்கிறா!

7 comments:

 1. 750 ரூபாய்க்கு ராயல் என்பீல்ட் மோட்டார் பைக்! :)))

  ReplyDelete
 2. '70 களில் - என்னமோ போன் வந்துடுத்தாம், ஆத்திர அவசரத்துக்கு ஒரு போன் பண்ணிக்கலாமான்னு கேட்டா அலட்டிக்கிறா!

  ReplyDelete
 3. எழுபதுகளில், ஆட்டோ கட்டணம் 40 பைசா. பேருந்தில் 10 பைசா. நாங்கள் எஙு சென்றாலும் ஆட்டோவில்தான் செல்வோம். ஐஸ் அவுசிலிருந்து தேவி திரை அரங்கிற்கு 40 பைசாதான். 3 அல்லது நால்வர் பயணம் செஇவோம். ஆட்டோவிற்கு 10 பைசா ‘டிப்’ சேர்த்து 50 பைசா கொடுத்தால், ஆட்டோகாரர் நமக்கு சலாம் போடுவார். ‘73 ல் BOBBY, YAADONKI BAARAAT இந்திபடங்கள் வெளியாயின. இரண்டு படங்களிலும் அனைத்து பாடல்களும் செம ஹிட். டிக்கட் 85 பைசா. இரண்டு படங்களையும் எத்தணை முறை பார்த்தேன் என்று எனக்கே தெரியாது!

  ReplyDelete
 4. 30 பைசவுக்குக் கல்லுரி போய் வரலாம்.
  25 பைசாக்கு இரண்டு பூரி உருளைக்கிழங்கு.
  1965.
  ஒரு ரூப்பாய்க்கு ஒரு ஜோடி செருப்பு.
  ரவிக்கைத் துணியும் ஒரு ரூபாய்.தைக்கும் கூலி நாலணா.

  ReplyDelete
 5. 50 களில் கிலோக் கணக்கு இருந்ததா.?

  ReplyDelete
 6. 1955-ல் கிலோ வந்தது.

  ReplyDelete
 7. <>
  1960-ல் 200 ரூபாய்க்குத் தையல் மெஷின் வாங்கினேன். தைக்கும் ஆர்வம் காரணமாக என் மனைவியும் நானும் 30 பைசாவிற்குத் ரவிக்கை தைத்து கொடுத்தோம். சரியாக முப்பது நிமிஷத்தில் துணியை வெட்டி, தைத்து முடிப்போம்!

  ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!