October 20, 2013

காலம் மாறிப் போச்சு

நான் 1962-ல் - அதாவது 50 வருஷத்திற்கு முன்பு- டில்லிக்கு மாற்றாலாகிப் போனபோது அங்குள்ள பல விஷயங்கள் எனக்குப் புதுமையாகப் பட்டன. அவற்றைத் தொகுத்து ‘அரே டில்லிவாலா- என்று ஒரு கட்டுரையை எழுதி குமுதத்திற்கு அனுப்பினேன். அது குமுதத்தில் இரண்டு பக்கக் கட்டுரையாகப் பிரசுரம் ஆயிற்று. (எழுத்துத்  துறையில் நான் காலை வைத்ததற்கு அதுவே பிள்ளயார் சுழி போட்டது).
அந்த டில்லிப் புதுமைகள் பல இன்று காணாமல் போய்விட்டன.
சிலவற்றைப் பார்ப்போம்.
 நடமாடும் இஸ்திரி சேவை: தள்ளு வண்டியில் இஸ்திரி பெட்டியுடன் வீதிகளில் பலர்  வருவார்கள்.  நாம் கொடுக்கும் துணிகளுக்கு இந்த ‘பிரெஸ்வாலா’க்கள் நம் வீட்டு வாசலிலேயேஇஸ்திரி போட்டுக் கொடுப்பார்கள். நாளடைவில் ’நடமாடும்’ என்பதை எடுத்துவிட்டார்கள். ஆங்காங்கு மரத்தடி நிழலில் இஸ்திரி பெட்டியுடன் தொழிலை  நடத்த ஆரம்பித்தார்கள்.
அதன் பிறகு இஸ்திரி பெட்டியுடன் இன்னொரு பெட்டி சேர்ந்து கொண்டது. அது டிரான்சிஸ்டர்!. ‘தம்மாரே தம்’ ‘ மெஹ்பூபா மெஹ்பூபா’’’ஜூட்டு போலே கவ்வா காட்டே’ போன்ற பாடல்கள் ஹனுமான் சாலிஸா மாதிரி விடாமல் ஒலித்துக் கொண்டிருக்கும். சமீப காலத்தில் என்ன மாறுதல் வந்திருக்கிறது என்று தெரியவில்லை. டிவிடி பிளேயர் வந்திருக்கும் என்று நினக்கிறேன்!

டில்லி பிஸ்கெட்:
டில்லி  மார்க்கெட்களில் பிஸ்கெட் பண்ணித் தரும்  கடைகள் இருந்தன - நம் ஊர் வறுகடலைக் கடைகள் மாதிரி.. கோதுமை மாவு, பால், டால்டா  (இன்று டால்டா இருக்கிறதா என்று தெரியவில்லை!) முதலியவற்றைக் கொடுத்து விட்டு வந்து, இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு போனால் நாம் கொடுக்கும் மாவுக்கு எவ்வளவு வருமோ அவ்வளவு பிஸ்கெட்கள் தட்டு தட்டாக  ரெடியாக இருக்கும். ஒரு பிஸ்கெட் கூட  அவர்கள் எடுத்துக் கொள்ளமாட்டார்கள்.
சென்னை போகிறவர்கள் எல்லாரும், பெரிய எண்ணை டப்பா அளவு டின்னில் எடுத்துக் கொண்டு போவார்கள். நாளடைவில்  இந்த மாதிரி பிஸ்கெட்களை சிறு தொழில் நிறுவனங்கள்  சொந்தமாகத் தயாரித்து பிளாஸ்டிக் கவரில்  ’பேக்’செய்து விற்க ஆரம்பித்தார்கள். அதனால் மார்க்கெட்   பேக்கரிக்கடை    தொழில் நலிந்து போய்விட்டது.

சண்டே பஜார்
ஞாயிற்றுக் கிழமைகளில் டில்லி செங்கோட்டைக்கு எதிரே உள்ள சாந்தினி சௌக்கில் நடைபாதைக் கடைகள் நூற்றுக்கணக்கில்  முழுத்தெருவிலும் முளைத்துவிடும்.
செங்கோட்டைக்கு புது டில்லிப் பகுதிகளிலிருந்து போகிறவர்கள் தாரியாகஞ்ச் என்ற வீதி வழியாகத்தான் போகவேண்டும். தாரியாகஞ்ச்  தெருவின் ஒரு பக்கம்  நடைபாதைகளில்  பழைய புத்தகங்கள் பரப்பி இருக்கும். நான் அங்கு வாங்கிய புத்தகங்கள் ஏராளம்.
திடீரென்று அந்தக் கடைகளை அங்கு பரப்பக் கூடாது என்று துரத்தி விட்டார்கள்.  எல்லாரும் செங்கோட்டைக்குப் பின்னால் இருக்கும் மைதானத்தில் கடை வைத்துக் கொள்ளலாம் என்று அனுமதி கொடுத்தார்கள். அங்கு போக எனக்குப் பிடிக்க வில்லை.  அதற்கு ‘சோர் பஜார்: - (திருட்டுப் பொருள்கள் மார்க்கெட்!) என்று பெயர்.  இன்னும் அங்கு சண்டே மார்க்கெட் இருக்கிறதா என்று தெரியவில்லை. காரணம் டில்லியில் பேட்டைக்குப் பேட்டை ஒரு நாள் இப்படிப்பட்ட மார்க்கெட் வந்து விட்டது!

டில்லியில் மாறாததும் உண்டு
டில்லியில் மாறாதது பல விஷயங்கள் இருக்கலாம்.  நான் டில்லியை விட்டு வரும் வரை மாறாத  ஒன்றைச்  சொல்கிறேன்.
டில்லிக்குப் போன தினம் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளை பார்த்தேன். அதில் ஆசிரியர் கடிதத்தில் டில்லி பஸ்களைப் பற்றி  ஒரு கடிதம் வெளியாகி இருந்தது.   அந்த கால கட்டத்தில் டில்லி பஸ்களை  Delhi Transport Underaking   என்ற அமைப்பு நிர்வகித்து வந்தது. கடிதத்தில், இந்த டி.டி.யு பஸ்களில் ரூட் போர்டுகள் இருப்பதே இல்லை.   “ பஸ் எங்கே போகிறது? என்று கண்டக்டரைக் கேட்பதாக இருக்கிறது. பல சமயம் கண்டக்டரைக் கேட்பதற்குள் பஸ் புறப்பட்டுப் போய்விடுகிறது. எத்தனை தடவை புகார் எழுதினாலும் பயனில்லை” என்று யாரோ ஒருவர் புலம்பி இருந்தார். 2002-ல்  டில்லியை விட்டுச் சென்னை வரும் தினம், பேப்பரில் கிட்டதட்ட இதே ரீதியில் ஒரு கடிதம் வெளியாகி இருந்தது. என்ன வித்தியாசம்  DTU என்பது DTC   ( (டில்லி டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன்) என்று மாறிவிட்டது!
அந்த நாள் முதல் இந்த நாள் வரை வான்மதியும், மீனும், டில்லி பஸ்ஸும் மாறவில்லை என்பது உண்மை!

டில்லி கலியாணங்கள்
டில்லியில் பெரும்பாலான கலியாணங்கள் பிரம்மாண்டமான ஷாமியானா பந்தலில்தான் நடைபெறும். வீதியை அடைத்துக் கொண்டு  பந்தல் போட்டுவிடுவார்கள். குதிரை மீது அமர்ந்து அரும் மணமகனை பேண்ட் வாத்தியம் முழங்க டான்ஸ் ஆடி அழைத்து வருவார்கள். நுழைவாயிலுக்கு சுமார் 50 கெஜ தூரம் வந்ததும் மேலும் பலர் டான்ஸ் ஆடுபவர்களுடன் சேர்ந்து கொள்வார்கள். ”சாச்சி வா”, ”அத்தை வா”, ”அங்கிள் வாங்கோ” என்று பலரைக் கைபிடித்து  இழுத்து ஆடச் சொல்வார்கள். டிரம்காரர் சரக்கு போட்டவர் போல -  போல் என்ன? போட்டவர்தான்!- வெறியுடன் டிரம் அடிக்க அடிக்க, ஆடுபவர்கள் மாப்பிள்ளை மேலே போக விடாமல் ஆடிக்கொண்டு (தள்ளாடிக்கொண்டும்!)  இருப்பார்கள். நம்புங்கள், பல சமயம் இந்த 50 கெஜ தூரத்தைக் கடக்க ஒரு மணி நேரம் கூட ஆகிவிடும்.பந்தலுக்குள் நுழைந்ததும் 90 பங்கு கூட்டம் காணாமல் போவிடும். ஆம்,எல்லாரும் சாப்பிடப் போய்விடுவார்கள்!.கலியாணப் பெண், பிள்ளை, புரோகிதர் மற்றும் 7,8 பேர் தான்  மணமேடையில் இருப்பார்கள்!
டில்லிக்குப் போன புதிதில், கலியாண வீட்டார் ‘யாரும் நம்மைச் சாப்பிடக் கூப்பிடவில்லையே’ என்று காத்திருந்து விட்டு, சாப்பிடாமலேயே வந்திருக்கிறேன்.
டில்லிக் கலியாணங்களில் சீர் வரிசையில் நிச்சயம் இடம் பிடித்திருக்கும். ஒரு தையல் மெஷின். (டெய்லர் மாடல் அல்ல: கை மெஷின்!) எனக்குத் தையல் மோகம்  (இரண்டு அர்த்தத்திலும்!)  உண்டு என்பதால். சீர் வரிசையில் இருக்கும் மெஷின் கண்ணில் தவறாது படும்!

எல்லாருக்கும் தைத்துக் கொடுக்கிற வேலை‘நம் பெண் தலையில்  விழுந்துவிடக்கூடாது என்பதற்காக சமீப காலங்களில் பெண் வீட்டுக்காரர்கள் மெஷினை‘  அம்பேல் ஆக்கிவிட்டார்கள்!

சென்னையில்  மாறிப் போச்சு
தொடாதே!
டில்லியில் காய்கறி கடைக்குப் போனால் முதலில் ஒரு தகரத்தட்டை (பழைய பிலிம்ரோல் டப்பாக்கள்!) நம்மிடம் கொடுப்பார்கள். கறிகாய்களைப் நாம் பொறுக்கிக் கொடுக்கவேண்டும்.
இருபது வருஷத்திற்கு மேல் டில்லியிருந்துவிட்டுச் சென்னைக்கு மாற்றலாகி வந்தேன். நம் ஊர், நம்ம மொழியில் பேசலாம் என்று மனதில் ஒரே உற்சாகம்.  ( சர் வால்டர் ஸ்காட் பாடல் ஞாபகம் இருக்கிறதா? Breathes there the man with soul so dead /  Who never to himself hath said, /  This is my own, my native land!)

சென்னை வந்ததும்ஆவலாக சைனா பஜார் சென்றேன். நடைபாதையில் காய்கறி கடைகள் இருந்தன. வெண்டைக்காய் அழகிய  LADIES FINGER மாதிரி இருந்தது.(டில்லியில் அதற்கு  ‘பிண்டி’ என்று கரடு முரடான பெயர்!)
இரண்டு காயை எடுத்திருப்பேன்.  “இன்னா பொறுக்கறே?.நான் எதுக்குக் குந்திக்கினு இருக்கேன்.... பாத்தியாடி அருக்காணி, வெண்டைக்காயைப் பொறுக்க வந்துட்டாரு இவரு டில்லி பாதுஸா  மா(தி)ரி” என்றார்.

இப்போது சென்னையில் எல்லா காய்கறி கடைகளிலும் நம்மை டில்லி பாதுஷாவாக ஆக்கி விட்டார்கள். ஆம், இப்போதெல்லாம் பிளாஸ்டிக் தட்டை எடுத்துப் போடுகிறார்கள். நாமே பொறுக்கி கொள்ளலாம்.யாரும்  “பாத்தியாடி அருக்காணி” என்று குரல் கொடுப்பதில்லை!
நல்ல மாறுதல்!

இன்னும் நிறைய இருக்கின்றன. பின்னால் பார்க்கலாம்.

9 comments:

 1. கோதுமை மாவு கொடுத்தால் சப்பாத்தி சுட்டுக் கொடுப்பார்கள்.

  //தையல் மேல் காதல்//. ஆஹா, அருமையான சிலேடை.

  ReplyDelete
 2. ///கோதுமை மாவு, பால், டால்டா (இன்று டால்டா இருக்கிறதா என்று தெரியவில்லை!) முதலியவற்றைக் கொடுத்து விட்டு வந்து, இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு போனால் நாம் கொடுக்கும் மாவுக்கு எவ்வளவு வருமோ அவ்வளவு பிஸ்கெட்கள் தட்டு தட்டாக ரெடியாக இருக்கும்.///

  இந்த காலத்தில் நீங்கள் பணத்தை கொடுத்தால் பணம் கொடுக்கும் அளவிற்கு பிஸ்கட்டுகள் ரெடியாக கிடைக்கிறது 2 நிமிஷத்தில்

  ReplyDelete
 3. <> உண்மை. ஆனால் கலப்படம் இல்லாமல் இருக்கும் என்பதற்கு உத்தரவாதம் இருக்குமா ?
  ஊற வைத்த அரிசியையும் உளுந்தையும் கொடுத்து விட்டு, 2 மணி நேரத்திற்குப்
  பிறகு போய் வாங்கி வந்த காலமும் இருந்ததே!

  ReplyDelete
 4. உங்கள் டெல்லி அனுபவங்கள் எப்பவுமே ஸ்வாரசியமானவை! பகிர்வுக்கு நன்றி!

  மும்பையில் - அந்தக் காலத்தில் - ஒவ்வொரு பில்டிங் கீழேயும் மாடிப்படிக்கு அடியில் இஸ்திரி பண்ணுபவர் இருப்பார், பல இடங்களில் அங்கே குடித்தனமும் நடத்துவார்கள்!
  வால்ட்டர் ஸ்காட்டின் பாடல் தமிழிலும் உண்டு! எந்த ஊரு போனாலும், நம்மூரு போல வருமா!
  மும்பையிலும் பெயர் பெற்ற 'சோர் பஜார்' உண்டு! நீங்கள் திருட்டுக் கொடுத்த ஐடெம் அங்கே காசு கொடுத்து வாங்கிக் கொள்ளலாம்!
  டெல்லி சண்டே பஜார் - தரியா கஞ்ஜ் - 2 வருஷம் முன்னால் பார்த்தேன் - ஆட்டோவில் போய்க்கொண்டே! அந்த லின்க்: http://www.youtube.com/channel/UCL8-SjdzxORV_dKdw8blQQQ

  -ஜெ.

  ReplyDelete
 5. உங்கள் தாளிப்பு நன்றாக உள்ளது !

  ReplyDelete
 6. தாளிப்பு நன்றாக உள்ளது !

  ReplyDelete
 7. சோர் பஜார்..! பேரே வித்தியாசமா இருக்குது...! பிஸ்கட்டுகள் இப்படி சுடச்சுட(!) தயாரித்து நமக்குக் கிடைககறதுங்கறது நெனக்கறப்பவே இனிக்குது! நீங்க தி.நகர் மார்க்கெட் வந்து பாருங்கள்...! சக்கரவர்த்தி ஆக்கிடுவாங்க உங்களை... (அவங்களும் எடுத்துப் பாக்க மாட்டாங்க... உங்களையும் பாக்க விடமாட்டாங்க... அப்படியே அள்ளி எடைபோட்டுத் தந்து உங்களை விரட்டறதுலயே குறி!) டில்லி (கல்யாண) அனுபவங்கள் சூப்பர்!

  ReplyDelete
 8. சன்டே பஜார், ஃப்ரைடே பஜார், மன்டே பஜார் என்று முக்கிய பகுதிகளில் (ஆர்.கே.புரத்திலும்) கடை விரிக்கிறார்கள். மாலை 6 மணிக்கு கடை பரப்பி 9 மணிக்குள் மறுபடி அடுத்தநாளுக்காக வண்டியில் ஏற்றி...அசுர உழைப்பு அவர்களுடையது. மிக மிக மலிவான பொருட்கள் கிடைக்கும். 4 ஷர்ட் 100 ரூபாய் என்றெல்லாம் கிடைக்கிறது. சென்ற வருடம் அச்சகம் வைத்துள்ள என் உறவினர் தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்காக நிறைய வாங்கிக்கொண்டு போனார். டில்லி கல்யாணங்கள் அதேபோல் தான் நடக்கின்றன. ஜனவரி பிப்ரவரியில் ஒரே நாளில் 20000 திருமணங்கள் வரை நடக்கின்றன. ட்ராபிக் ஜாம் நிச்சயம்

  ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!