September 27, 2013

ஆ, அமெரிக்கா-2

ஐயோ சிக்கடாஸ்
  
“கொசுத் தொல்லை தாங்கலையேடா, நாராயணா” ( என்று   எல்லா வலைப்பதிவுகளிலும் ((என் வலைப்பதிவுகளுக்கு நீங்கலாக!?) பின்னூட்டம் போடும் அன்பர்களுக்கு ஒரு சிறப்புச் செய்தி, 

அமெரிக்காவில் கிழக்குக் கரையோரம் உள்ள மாநிலங்களில் ஒரு படையெடுப்பு 17 வருஷங்களுக்கு ஒரு முறை  ஜூலை- ஆகஸ்ட்
மாதங்களில் தவறாமல் நடந்து வருகிறது. கிட்டதட்ட கரப்பான் பூச்சி மாதிரி இருக்கும் சிக்கடாஸ் (CICADAS)  மில்லியன் கணக்கில் -- இல்லை, இல்லை பில்லியன் கணக்கில் - வந்து வீதியில் உள்ள  மரங்களையெல்லாம் அப்பிக் கொள்கின்றன. அவை போடும்  இரைச்சல்  (கோஷ்டிகானம்!) கிட்டதட்ட வயல் வெளிகளில் வைக்கப்படும் தண்ணீர் பம்புகளைத் தூக்கிச் சாப்பிட்டு விடும்!

இந்த வருடம் படையெடுப்பு வருஷம். சுமார் 300 வருஷங்களாக இது நடைபெற்று வருவதாகச் சொல்கிறார்கள். 17 வருஷம் அவை அங்கு இருக்கிறதாம்? மண்ணுக்குள்!

இந்த வருடம் சிக்கடாஸின் எண்ணிக்கை  அந்தந்த  பகுதி மக்கள் எண்ணிக்கையைப் போல்  தோராயமாக 600 மடங்காக  இருந்ததாம்!
ஐயோ, சிக்கடாத் தொல்லை தாங்கலையேடா, நாராயணா” என்று பின்னூட்டம் போடவிரும்புபவர்கள் 2030 வரை காத்திருக்க வேண்டும்!
 2030-ல் அவை விஜயம் செய்யும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை!

ரயிலில் கவிதை
அமெரிக்காவில் விமானம், ரயில், பஸ். கார், சொந்த ஹெலிகாப்டர் என்று பல வேறு வாகனங்களில் ஊருக்குள்ளும், ஊர் விட்டு ஊரும் சளைக்காமல் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
அமெரிக்காவில் நான் அதிகம் ரயிலில் பயணம் செய்ததில்லை. சமீபத்தில் நியூயார்க் நகரத்திற்குப் போக வேண்டி இருந்தது. நம் ஊர் மின்சார ரயில் மாதிரி உள்ள மெட்ரோ ரயிலில்  போனேன். ரயிலில் உட்கார இடம்
கிடைக்கவில்லை.  ரயில் பெட்டியின் உள்ளே பல அழகான போஸ்டர்களைக் கண்ணாடி போட்டு மாட்டி வைத்திருக்கிறார்கள். நான் நின்று  கொண்டிருந்த இடத்தில் இருந்த போஸ்டரில் ஒரு கவிதை அச்சாகி இருந்தது.

 இரண்டு மூன்று தரம் படித்து ரசித்தேன். எழுதிக் கொள்ள முடியவில்லை. கவிதை எழுதியவரின்  பெயரை நினைவில் வைத்துக் கொண்டேன். பிறகு  இன்டர்நெட்டில்  அந்தக் கவிதையைத்  தேடிக் கண்டு பிடித்தேன், கவிதையை எழுதியவர் 40 வயது நிரம்பியப் பெண்மணி.

இதோ  கவிதை:
“The Good Life”
Tracy K. Smith
 ========
When some people talk about money
They speak as if it were a mysterious lover
Who went out to buy milk and never
Came back, and it makes me nostalgic
For the years I lived on coffee and bread,
Hungry all the time, walking to work on payday
Like a woman journeying for water
From a village without a well, then living
One or two nights like everyone else
On roast chicken and red wine.
=============

 சைக்கிள் ரி க் ஷா’ டாக்சி!
நியூயார்க் நகரின் 42-வது தெரு பயங்கர பிசியான வீதி. கடையின் போர்டை உற்றுப் பார்த்தாலே 10 டாலர் கேட்பார்களோ என்று பயம் ஏற்படுகிறது!  இந்த வீதியில் தான் நியூயார்க் பப்ளிக் லைப்ரரி  (NYPL) இருக்கிறது. ”நியூயார்க் போய் விட்டு NYPL போகாமல் இருப்பேனோ..என் ஜன்மத்தை வீணாகக் கழிப்பேனோ” என்று மனதிற்குள் பாடிக்கொண்டே,  பராக்குப் பார்த்துக் கொண்டு, பொடி நடையாக சுமார் ஒரு மைலுக்கு மேல்  நடந்து போனேன்.லேசாகக் கால் வலித்தது.
அப்போது வீதியில் ஒருசைக்கிள் ரி க் ஷா’ டாக்சி போய்க்கொண்டிருந்தது.  என்னது, அமெரிக்காவில் சைக்கிள் ரிக் ஷாவா? 
அது லெக்ஸஸ், டொயோட்டா அல்லது  B M W தயாரித்ததோ என்று வியப்புடன் உற்றுப் பார்த்தேன். அதில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரில் அச்சடிக்கப்பட்டிருந்ததைப் பார்த்ததும் ஷாக் அடித்தது,.
கட்டணம்: 1 நிமிஷத்திற்கு டாலர் 2.99.” என்று இருந்தது.
அதைப் பார்த்ததும் என் கால் வலி பறந்து போய்விட்டது! ( நியூயார்க் நகரின் பிரபலமான  ‘சென்ட்ரல் பார்க்’கை ஒரு மணி நேரம் சுற்றிவரக் கட்டணம் 50 டாலராம்!)

ரயில் நிலையத்தில் ‘அம்மா தாயே!
நியூயார்க் 42-வது தெரு ரயில்  நிலையத்தில் இறங்கியதும் யாரோ ஒருவர்   பாட்டு பாடுவது உரக்கக் கேட்டது. சுற்று முற்றும் பார்த்தேன்.
ரயில் நிலையத்தில், பேட்டரி  மைக், ஸ்பீக்கருடன், கிதார் மாதிரி ஒரு வாத்தியத்தை மீட்டிக் கொண்டு  ஒருவர் மெல்லிசைப் பாடலைப் பாடிக் கொண்டிருந்தார். ஒலிபெருக்கி அதை வல்லிசையாக ஆக்கிக் கொண்டிருந்தது.
”அம்மா தாயே, மகராசி”: என்று அவர் சொல்லாமலேயே புரிந்து விட்டது. ஆம், பணம் கொழிக்கும் அமெரிக்காவில் இதுவும் ஒரு அங்கம்!

3 comments:

  1. சிக்காடாஸ் எந்த மருந்துக்கும் சிக்காஆஆடாஸ் போலருக்குது! கவிதையை நீங்க தமிழில் பெயர்த்தும் தந்திருந்தால் இன்னும் ரசிச்சிருக்கலாம்னு தோணிச்சு. சைக்கிள் ரிக்ஷா மேட்டரைப் படிச்சதும்... நம்ம ஊர் ஆட்டோ(கொள்ளைக்)காரங்களே தேவலைன்னு தோணிருச்சு ஸார்...! கடைசி விஷயத்துல மட்டும் அமெரிக்காக;ட இந்த விஷயத்துல விதிவிலக்கில்லைன்னு நெனச்சு ஒரு (அல்ப) சந்தோஷமே ஏற்பட்டுருச்சு! ஹா.. ஹா...

    ReplyDelete
  2. 2030 வரை சிக்கடா தொல்லையில்லாமல் அக்கடா என்று இருக்கலாம்

    ReplyDelete
  3. 2030 வரை சிக்கடா தொல்லையில்லாமல் அக்கடா என்று இருக்கலாம்

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!