உலகிலேயே எனக்குப் பிடிக்காத விஷயம் இரண்டு, முதலாவது: பூகோள பாடம். (காரணம், கடந்த 25 வருஷங்களாக அந்த பாடங்களை மாணவர்களுக்குச் சொல்லிக் கொண்டிருப்பதால்.) இரண்டாவது: பள்ளிக்கூடத்தில் இரண்டாவது பீரியட். (காரணம், அந்த பீரியட்டில் எனக்கு எந்த கிளாஸும் கிடையாது. ஆகவே லேசாகத் தூக்கம் வரும். அந்த தூக்கத்தை அனுபவிக்க விடாமல் டீச்சர் ரூமுக்கு அடுத்த அறையில் உள்ள மியூசிக் கிளாஸிலிருந்து பலவித சங்கீதக் கதறல் வரும். அதுவும் அந்த மியூசிக் டீச்சர் கோகிலா இருக்கிறாளே... ஹூம்... அவங்க பேர் கோகிலாங்கறதுக்குப் பதிலா காக்கா என்று இருக்க வேண்டும்!)
அப்படித்தான் அன்று பூமத்திய ரேகையைப் பற்றியும் வடகிழக்குப் பருவமழையைப் பற்றியும் போதித்துவிட்டு, டீச்சர் ரூமிற்கு வந்து மூட்டைப்பூச்சிகளின் சாம்ராஜ்யமான ஒரு பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்து ஒரு மினி கொட்டாவி விட்டேன். கோகிலாவின் பாட்டு கிளாஸ் (அதாவது கூப்பாட்டு கிளாஸ்) துவங்குமுன் ஒரு கோழித் தூக்கம் போடலாம் என்று.
லேசாகக் கண் அயர்ந்தேன். "சார்... சாமுவேல் சார்... சார்...'' என்று யாரோ தீந்தமிழில் குரல் கொடுத்தார்கள். (உண்மையைச் சொல்லப்போனால் தீய்ந்த தமிழ்க்குரல் அது! அவ்வளவு கர்ண கடூரம்!) கண்ணை விழித்தேன். எதிரே, மியூசிக் டீச்சர் கோகிலா ஆசீர்வாதம்.
"என்னம்மா...'' என்றேன், மனதிற்குள் சபித்துக்கொண்டே.
"ஸ்கூல் ஆன்யூவல் வருதே. அதுக்குக் கலை நிகழ்ச்சி நடத்தப் போறோம். கமிட்டியில் நாம் இரண்டு பேரும் இருக்கிறோம்.''
"யார் இப்படி கமிட்டி போட்டது? இப்பதான் போன மாசம் ஸ்போர்ட்ஸ் கமிட்டியிலே, அதுக்கு முன்னே பிக்னிக் கமிட்டியிலே, சோஷல் சர்வீஸ் கமிட்டி, தேரடி கமிட்டி, தெருப்புழுதி கமிட்டி எல்லாத்துக்கும் இந்த சாமுவேல்தான் அகப்பட்டான்! ஹெட்மாஸ்டரை நானே போய் கேட்கறேன்.''
"எங்கேயும் போகவேண்டாம். நானே வந்துட்டேன். என்ன சாமுவேல், ரொம்ப கோபமாக இருக்கீங்க...'' - ஹெட்மாஸ்டர்தான்!
"கோபமும் இல்லை, பாபமும் இல்லை சார்... அடுத்த மாசம் இன்ஸ்பெக் ஷன் வருது. சிலபஸ் கம்ப்ளீட் பண்ணணும்.'' அசடு வழிந்தேன்.
"சாமுவேல், உங்கள் பூகோள பாடத்தைப் பற்றி எந்த இன்ஸ்பெக்டரும் கவலைப்பட மாட்டார்... பூகோளப் பாடம் ஒண்ணுதான் ரொம்ப வருஷமாக மாறாமல் இருக்கு, நம்ப கோகிலாவுக்கு ஹெல்ப் பண்ணுங்க. நீங்க ஒரு காரியத்தில் இறங்கினால் பிரமாதமாக நடத்திப்புடுவீங்க...''
ஹெட்மாஸ்டர் எபனேசர் காரியவாதி. அதனால்தான் எனக்கு ஐஸ் வைத்தார்.
"ஆமாம் ஸார்! நம்ம சாமுவேல் ஸார்தான் பசங்களை நல்லா கவனிச்சு சொல்லிக் கொடுப்பார்'' என்றாள் கோகிலா.
அந்த சமயத்தில் தமிழாசிரியர் பாண்டியன் உள்ளே வந்தார். "வேலும் மயிலும் துணைன்னு சொன்னவங்க எந்த வேலைச் சொன்னாங்க தெரியுமா, நம்ப சாமுவேலைத்தான்'' என்று சொல்லி கடகடவென்று சிரித்தார். ஜோக் அடித்தால் மற்றவர்கள் சிரிக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்க மாட்டார்!
"ஏன்யா, வேலு.. கலை நிகழ்ச்சிகளுக்கு ஏதாவது ஐடியா வெச்சிருக்கீரா...? "திருவள்ளுவர் - ஔவையார் உரையாடல்னு ஒரு அரைமணி நேர நாடகம் எழுதியிருக்கிறேன். தள்ளிவிடுகிறீரா?''