February 06, 2012

ஜி.பி.ஓ. வாழ்க்கை

முக்கிய குறிப்பு: 
தொடர்ந்து வராது. ஆனால்அவ்வப்போது தொடர்ந்து வரும்!

அறுபது வருஷத்திற்கு முந்தைய ஜெனரல் போஸ்டாபீஸில் நான் வேலைக்குச் சேர்ந்தேன். பீச் ஸ்டேஷனில் இறங்கினதும் பிரம்மாண்ட கல் கட்டிடம் பிரமிப்பைத் தந்தது. உள்ளே போனேன். பெரிய ஹாலில் நிறைய தபால்காரர்கள் தபால்களைப் பிரித்து அடுக்கிக் கொண்டிருந்தார்கள். வெளியே ஹாலில் வரிசையாக 15, 16 கவுன்டர்கள். மணியார்டர், ரிஜிஸ்தர், தபால் தலை, போஸ்டல் ஆர்டர் என்று. இந்த கவுன்டர்கள் சற்று உயரமாக இருக்கும். ஆகவே நாற்காலிகளில் உட்காருவது பரணில் ஏறுவது மாதிரி இருக்கும். (ஒன்று சொல்ல மறந்து விட்டேன். அந்த நாற்காலிகள் ஒவ்வொன்றும் ஒரு இரும்பு சிம்மாசனம் மாதிரி பயங்கர சுமையாக இருக்கும். சுலபமாக நகர்த்தக்கூட முடியாது!)
எங்கு பார்த்தாலும் ஒரே சளசள ஒசைதான். போதாததற்கு டமால் டமால் என்ற முத்திரை குத்தும் ஓசை. (சமீபத்தில்தான் ஓசைப்படுத்தாத ரப்பர் ஸ்டாம்புகளைக் கொண்டு வந்திருக்கிறார்கள் தபால் நிலையங்களில்!) எங்கு பார்த்தாலும் தபால் கார்டுகள், ரிகார்டுகள். தபால் பைகளை லேபிள் வைத்துக் கட்டி அரக்கு சீல் வைத்துக் கொண்டிருந்தார்கள். சின்ன மின்சார ஹீட்டரில் சாம்பார் கொதிப்பது போல் அரக்கு உருகி  தளதளத்துக் கொண்டிருந்தது. எங்கும் அரக்கு நெடி, புகை. (மாசுக் கட்டுப்பாடு என்ற வார்த்தையை யாரும் கேள்விப்பட்டிராத காலகட்டம்)

உயரமான கூரைகளில் உள்ள சாரங்களில் நிறையப் புறாக்கள். அவை குமுகுமு என்று தங்கள் மொழியில் ஓசைப்படுத்தின. மத்திய அரசில் வேலை என்று பெருமிதத்துடன் வந்தால் ஒரு மினி கொத்தவால் சாவடியாக இருக்கிறதே ஆபீஸ்!

‘‘உங்களை ரிஜிஸ்ட்ரேஜன் டிபார்ட்மெண்டிற்குப் போட்டிருக்கிறேன். ஏம்பா... இவரை  ஹெட்கிளார்க்கிட்ட அழைச்சிட்டு போ. புதுசா வேலைக்குச் சேர்ந்திருக்கார்’’ என்றார் ஸ்டாஃப் செக் ஷனில் இருந்த உதவி பிரசிடென்ஸி போஸ்ட் மாஸ்டர் அங்கு போனேன். நிறைய பேர் ரிஜிஸ்தர் தபால்களை பீட் படி பிரித்துக கொடுத்தார்கள். வேறு சிலர் பீட் வாரியாக அந்த தபால்களின் எண்கள், எந்த ஊரிலிருந்து வருபவை போன்ற விவரங்களை டெலிவரி ஷீட்டில் கார்பன் பேப்பர் வைத்து எழுதிக் கொண்டிருந்தார்கள்.

என்னிடம் கொடுத்து எழுதச் சொன்னார். ‘‘87 மதுரை, 105 பெங்களூர், 27 அரக்கோணம், 25 மண்ணடி’’ என்று வரிசையாக எழுதினேன். ‘‘சீக்கிரம். வேகமாக எழுதுங்க. டெலிவரிக்கு டைம் ஆயிடுத்து. மணி அடிச்சுடுவாங்க சரியா பதினொண்ணரைக்கு’’ என்று ஒருத்தர் சொன்னார். ‘‘சரி, மொத்தமாக எத்தனை லெட்டர்னு எழுதுங்க... இந்தாப்பா 17’ம் நம்பர்  பீட் யாருய்யா... வேலு, வாய்யா, இந்தா எண்ணிப் பார்த்து கையெழுத்து போட்டு எடுத்துக்கிட்டுப் போ. 17ம் பீட்டுக்கு இன்ஷுரன்ஸ் தபால் ஒண்ணு இருக்குதாம். உள்ளே கூண்டிலே போய் வாங்கிக்கோ’’ என்றார். (இவர் சூபர்வைசர் என்று பின்னால் தெரிந்தது)
திடீரென்று மணி அடித்தது. யாரோ மந்திரக்கோலைச் சுழற்றியது போல், சட்டென்று நிசப்தம் ஏற்பட்டது. தபால்காரர்கள் அத்தனை பேரும் சடசடவென்று மேல் மாடிக்குப் போய் விட்டார்கள். எனக்கு எல்லாமே பிரமிப்பாக இருந்தது. ‘‘புதுசா.. ஜாயின் ஆகியிருக்கிங்களா?’’ என்று ஒருத்தர் கேட்டார்.

‘‘ஆமாம்... ஒரு மணிக்கு இத்தனை ரிஜிஸ்டர் தபால்களா?’’

‘‘ஆமாம்... மத்தியானம் ஒரு மணியிலிருந்து கவுன்டரில் கியூ நின்று கொண்டே இருக்கும். ரிசர்வ் பாங்க், பாரி அண்ட் கோ, பெஸ்ட் அண்ட் கோ, ஸ்டேட் பாங்க், கர்டன் அண்ட் வுட்ரஃப் என்று பல கம்பெனிகளிலிருந்து 50, 60 என்று ரிஜிஸ்டர் தபால்களைக் கொண்டு வருவார்கள். ரிஜிஸ்தர் தபால்களை கணக்குப் பண்ணி வாங்க வேண்டும். அப்புறம் அவைகளைப் பிரித்து வெவ்வேறு டெஸ்பாட்ச் மேஜைக்குக் கொடுக்க வேண்டும். எண்ணிக் கொடுத்து கையெழுத்து வாங்கிக் கொள்ள வேண்டும். சாயங்காலம் கவுன்டரை மூடியதும் நீங்கள் வாங்கிய மொத்த ரிஜிஸ்டர் தபால்களின் எண்ணிக்கையும் நீங்கள் கொடுத்துக் கையெழுத்து வாங்கிக் கொண்ட தபால்களின் எண்ணிக்கையும் ஒத்துப்போக வேண்டும். ஒன்று குறைந்தாலும் ஆபத்துதான்...’’

‘‘அப்படியா?’’ என்றேன். என் முகத்தில் லேசான பயத்தின் அறிகுறி தோன்றி இருக்க வேண்டும்
(தொட..........ரும்!)

7 comments:

  1. //அறுபது வருஷத்திற்கு முந்தைய ஜெனரல் "ஹாஸ்பிடலில்" நான் வேலைக்குச் சேர்ந்தேன்//
    Intentional error? :-)

    ReplyDelete
  2. நாற்காலிகளி் ஏறுவது பரணில் ஏறுவது மாதிரி இருக்கும், (அப்படியா?) குமுகுமு என்று கிசுகிசுத்த புறாக்கள்... (இப்பவும் இருக்கா என்ன?) சாம்பார் கொதிப்பது மாதிரி அரக்கு கொதித்துக் கொண்டிருந்தது... இப்படி உங்களின் வாக்கியங்களை மிக ரசித்தேன். சுஜாதாவின் தொடர்கதை மாதிரி ஒரு ‘பெப்’புடன் தொடரும் போட்டு விட்டீர்களே... சீக்கிரம் தொடருங்கள். மீ வெய்ட்டிங்!

    ReplyDelete
  3. இதுவரை உங்கள் போஸ்ட் ஆஃபீஸ் அனுபவங்களை இவ்வளவு டீடைலாக எழுதியதில்லை என்று நினைக்கிறேன்! (பொதுவாக அரசு அலுவலகங்களைப் பற்றியும், நீங்கள் போஸ்டல் டிபார்ட்மென்டில் பணி புரிந்த்தையும் மட்டும் எழுதியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.) தொடருங்கள். இளைஞர்கள் இதைப் படித்தால் அவர்களுக்கு உங்கள் அனுபவங்கள் உதவும். - ஜெ.

    ReplyDelete
  4. சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னால், நானும் ஜி பி ஓ வில் அடிக்கடி நுழைந்தது உண்டு. அப்பொழுதும் ஓயாது முத்திரை குத்தும் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். அருகிலேதான் எங்கள் அசோக் லேலண்ட் சிட்டி ஆஃபீஸ். ஒவ்வொரு வாரமும் ஜி பி ஓ வில் தபால் வாங்கி, அப்பாவுக்கு கடிதம் எழுதி அனுப்புவேன்.

    ReplyDelete
  5. ஒரு விறு விறு நாவலுக்கு உண்டான அனைத்து அம்சங்களும் உள்ளடங்கியதாக இக்கட்டுரை இருக்கிறது.

    ReplyDelete
  6. முதலில் உங்க சதாபிஷேகத்துக்கு என் இனிய வாழ்த்து(க்)கள்.

    கணேஷ் பதிவின் மூலமாக இங்கே வந்தேன்:-)

    நீங்க சொல்லி இருக்கும் அதே தபாலாபீஸ் கட்டிடத்தில் நானும் ஒரு காலத்தில் வேலை செஞ்சுருக்கேன்.

    உங்கள் பதிவு கொசுவத்தி ஏத்திருச்சு:-))))

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!