உலகத்தின் முதல் இருதய மாற்று ஆபரேஷனை வெற்றிகரமாகச் செய்த தென் ஆப்பிரிக்க டாக்டர் கிரிஸ்டியான் பர்னார்ட் ‘ஒன் லைஃப்’ என்ற தலைப்பில் தன் சுயசரிதத்தை எழுதியிருக்கிறார். அதில் ‘ஹார்ட் ட்ரான்ஸ்ப்ளான்ட்’ என்ற பாகத்திலிருந்து ஒரு சில பகுதிகள்
:
‘‘லாயி வாஷ்கான்ஸ்கியின் இதயம் மோசமடைந்திருந்தது. தகுந்த மாற்று இருதயம் கிடைத்தவுடன் அவருக்கு புதிய இதயத்தைப் பொருத்த காத்துக் கொண்டிருந்தோம்.
கார் விபத்தில் அகப்பட்டுக் கொண்ட டெனிஸ் டார்வல் என்ற 24 வயதுப் பெண்ணின் இருதயம் எங்களுக்குக் கிடைத்தது. இதோ டெனிஸின் தந்தை கூறுவதைக் கேளுங்கள்:
‘‘புதிய கார் வாங்கியிருந்தோம். நான், என் மனைவி, பெண் டெனிஸ், பையன் கீத் எல்லாரும் கடைத் தெருவுக்குச் சென்றோம். கேக் வாங்க என் மனைவியும் டெனிஸும் சென்றார்கள். நாங்களிருவரும் காரில் உட்கார்ந்து இருந்தோம்.
‘‘என்ன இன்னும் வரக் காணோமே?’’ என்று சொல்லிக் கொண்டே கீத் காரிலிருந்து இறங்கிப் பார்த்தான்.
‘‘தூரத்தில் வருகிறார்கள்’’ என்றான். அவன் சொன்ன சில செகண்ட்கள் கழித்து பலத்த ஓசை கேட்டது. டயர்கள் கிரீச்சிட்டன.
‘‘அப்பா... ஏதோ ஒரு கார் ஆக்சிடெண்ட் ஆகிவிட்டது... அப்பா, நம் டெனிஸும் அம்மாவும்தான் அகப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்...’’
அடுத்த கணம் அங்கு சென்றோம். ரோடு நடுவில் ரத்த வெள்ளத்தில் என் மனைவி கிடந்தாள். என் பெண்ணும் மயங்கிக் கிடந்தாள். அவள் முகத்தில் பலத்த காயங்கள். வாய், காது வழியாக ரத்தம் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. ஆம்புலன்ஸ் வந்துசேர்ந்தது.
ஆஸ்பத்திரிக்கு நான் போனபோது என் மனைவி இறந்து விட்டாள் என்று கூறினார்கள். அவள் ஆம்புலன்ஸில் செல்லும் போதே இறந்து விட்டிருந்தாள்.