March 01, 2020

ரஸ்ஸல் என்பவரின் வரலாறு


யார் இந்த  ரஸ்ஸல்?  கேள்விப்படாத பெயராக இருக்கிறதே, அவருடைய  வரலாற்றை எழுத வேண்டிய அவசியம் என்ன என்று நீங்கள் கேட்பதற்கு முன் கூறிவிடுகிறேன். 
சாதனை படைத்தவர்கள், நெகிழ்ச்சியூட்டும்  வரலாற்று நாயகர்கள், அசகாய சூரர்கள், ஏன் அட்டகாசமான தில்லுமுல்லு செய்தவர்களைப் பற்றிய விவரங்கள் போன்ற பதிவுகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், ரஸ்ஸலின் வரலாற்றை இங்கு தருகிறேன்.
ரஸ்ஸல் ஒரு ஹாலிவுட் நடிகர் என்று ஒரு வரி அறிமுகத்துடன் கட்டுரையை ஆரம்பிக்கிறேன்.  ஹாலிவுட் வார்த்தைக்கு ஒரு காந்த சக்தி இருப்பதும் காரணம்.
ரஸ்ஸல் ஒரு ராணுவ வீரன். கனடா நாட்டில் 1914-ல் பிறந்தவர். இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மாநிலத்தில் இருந்த ராணுவ முகாமில் பாரசூட் வீரர்களுக்குப் பயிற்சி   கொடுத்துக் கொண்டிருந்தான்.
 அவன்   டி. என். டி.  எனும் பயங்கர குண்டுகளைக் கையில் வைத்துக் கொண்டு பாடம் சொல்லிக் கொண்டிருந்தான். அப்போது ஒரு டி.என். டி. குண்டு என்ன காரணத்தினாலோ  தானாக வெடித்துவிட்டது.  
 ஏதோ சின்ன தவறு நிகழ்ந்துவிட்டது   டி. என். டி. ஒரு பயங்கர குண்டு என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.   அடுத்த செகண்ட் நினைவிழந்தான்.  நினைவு திரும்பியபோது மருத்துவ மனையில் இருந்தான்.  மெதுவாக  சுதாரித்து சுற்றுமுற்றும் பார்த்தான். கைகள் இரண்டிலும் கட்டு போடப்பட்டிருந்தது.    இரண்டு கைகளிலும் மணிக்கட்டும் ஐந்து விரல்களும் போய் விட்டதை உணர்ந்தான். டி.என்.டி அவற்றை பலி வாங்கி இருந்தது.  
  முப்பதாவது வயதில் கைகளை இழந்த அவன், தன்னுடைய வாழ்க்கையே அதலபாதாளத்திற்குச் சென்று விட்டது போல் உணர்ந்தான்.   வாழ்க்கையே இருண்டுவிட்டது. வருத்தப்பட கூட அவனுக்குத்  திராணியில்லை. இனி உயிருடன் இருப்பதைவிட   செத்துப் போவதே மேல்  என்று எண்ணினான் ரஸ்ஸல்.