இந்தப் பதிவிற்கு மிகவும் பொருத்தமான தலைப்பு இது என்று, பதிவைப் படித்து முடித்த பறகு நீங்கள் நிச்சயம் சொல்வீர்கள். லாட்டரியில் அதிக தொகையைப் பரிசாகப் பெற்றவர்களின் கதையைத் தர உள்ளேன்.
1970-களில் திடீரென்று இந்தியாவில் ஒரு பயங்கர தொற்று நோய் பரவியது.
எல்லா மாநில அரசுகளையும் அது பிடித்துக் கொண்டது. அவை அவை லாட்டரி டிக்கெட்டுகளைப் போட ஆரம்பித்தன. ‘டிக்கெட் விலை ஒரு ரூபாய்; பரிசு ஒரு லட்சம்’ என்று இருந்தாலும், அன்றைய கால கட்டத்தில் ஒரு லட்சம் என்பது பெரிய தொகை. (இன்று வேண்டுமானால் ஒரு லட்சம் ரூபாயை லஞ்சமாகக் கூட வாங்கமாட்டார்கள். “ஹும் …ஒரு லட்சத்திற்கு நாலு பாப்கார்ன் பொட்டலம் கூட வராது”
என்று சொல்லி வாங்க மறுப்பார்கள்.!)
உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அந்த கால கட்டத்தில் தமிழ்நாடு அரசும் லாட்டரி திட்டத்தைக் கொண்டு வந்தது. லாட்டரி டிக்கெட் விற்கும் கடைகளில் கூட்டம் அலை மோதியது. சட்டம், ஒழுங்கு குலைந்து விடுமோ என்று கருதி. லாட்டரி டிக்கட்டுகள் சில சமயம் காவல் நிலையங்களில் விற்பனை செய்தார்கள்!).
ஒன்றிரண்டு வருஷங்கள் கழித்து, டில்லி, ஸ்டேட்ஸ்மென் பத்திரிகையில், லாட்டரியில் பரிசு பெற்றவர்களைப் பேட்டி கண்டு,
அவர்கள் அனுபவத்தைத் தொடர் கட்டுரையாக வெளியிட்டார்கள்.. (அவற்றிலிருந்து சில தகவல்களைத் திரட்டி, தமிழில் நான் எழுதிய கட்டுரை
தினமணி கதிரில் ஒரு இணைப்பு அளவிற்கு, ஏழு, எட்டு பக்கங்களில் வந்தது.)
தினமணி கதிரில் ஒரு இணைப்பு அளவிற்கு, ஏழு, எட்டு பக்கங்களில் வந்தது.)
பரிசு பெற்றவர்கள் யாரும் மன நிம்மதியோ சந்தோஷமோ அடைய வில்லை. உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பல ‘திடீர்’ நண்பர்கள் பணம், பணம் என்று பிய்த்ததையும்,
பலர் கோபித்துக் கொண்டு உறவையே துண்டித்து விட்டதையும் வருத்தத்துடன் சொல்லி இருந்தார்கள்.
சரி, இதெல்லாம் பழைய கதை. நாற்பது, ஐம்பது வருஷத்திற்கு முந்தையது என்று தள்ளிவிடலாம்.
சமீப ஆண்டுகளில் பரிசு பெற்றவர்கள் அனுபவம் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள விரும்பினேன்.
முக்கியமாக, அமெரிக்காவில் ஒரு பிரம்மாண்ட லாட்டரியில் 314.9 மில்லியன் டாலர் பரிசு பெற்ற விட்டேகர் என்பவரைப் பற்றி எழுத கொஞ்சம் வலை போட்டேன். TIME இதழில் சில வருஷங்களுக்கு முன்பு வெளி வந்த தொடர் கட்டுரையும் கிடைத்தது. அப்போது வேறு சில லாட்டரி வெற்றியாளர்களைப் பற்றியும் தகவல் கிடைத்தது.
முதலில் என் கவனத்தைக் கவர்ந்தது இங்கிலாந்தில் ஒரு லாட்டரியில் வெற்றி பெற்ற MICHAEL CARROL என்பவரின் ‘கதை’. முதலில் அதைப் பார்த்துவிடலாம்.
பிறகு விட்டேகர் கதைக்குப் போகலாம்.
கேரல் என்ற 19 வயது இளைஞனுக்கு தேசிய லாட்டரியில் 2002’ம் ஆண்டு சுமார் 18 மில்லியன் டாலர் பரிசு கிடைத்தது. முனிசிபல் குப்பை லாரியில் சென்று குப்பையை எடுத்துக் கொட்டும் வேலையில் கேரல் இருந்தான்.