சுய விசார கேள்விகளுக்கு
எனக்குப் பதில் தெரியாது என்பதாலேயே அத்தகைய கேள்விகள் என் மனதில் தோன்றாதவாறு
பார்த்துக் கொள்வேன்! உதாரணமாக, ’எனக்குஏன்
முழுக்கைச் சட்டை பிடிக்கிறது’, ’நான் ஏன்
இட்லிக்கு மிளகாய்ப் பொடியும், தோசைக்கு சட்னியும் போட்டுக் கொள்கிறேன்’, ’பால் பேனாவை விட இங்க் பேனாதான் எனக்கு ஏன் பிடிக்கிறது’ என்பது போன்ற பல கேள்விகளுக்கு
எனக்கு விடை தெரியாது. ‘நான் ஏன்
எழுதுகிறேன்?’ என்று கேள்வி என் மனதில்
இதுவரை தோன்றியதே இல்லை.
என்னைப் பார்த்துதான் பலர் "நீ ஏன்
எழுதுகிறாய்? ஏன் எழுதுகிறாய்"
என்றும், இதைவிட சலிப்புடனும் கேள்விகள் கேட்டி
ருக்கிறார்கள். சமயத்திற்குத் தகுந்த மாதிரியும், ஆளுக்குத் தகுந்த மாதிரியும் பதில் சொல்லி இருக்கிறேன். இப்போது அந்த மாதிரியும் பண்ண முடியாது
என்பதால், மாற்று விடையைக் குடைந்துப் பார்த்தேன். அதன்
பலன் தான் இந்தக் கட்டுரை. “நீங்கள்
மண்டையைக் குடையாமல் இருந்திருக்கலாம். ’திருப்பரங் குன்றத்தில் சிரித்தால்
திருத்தணியில் எதிரொலிக்கும்’ என்பார்கள். அதுபோல் நீங்கள் மண்டையைக் குடைந்து அது
எங்கள் மண்டையில் எதிரொலித்து குடை குடையென்று குடையப் போகிறதோ? என்று நீங்கள் சொல்ல மாட்டீர்கள் என்று நம்புகிறேன்!