குறிப்பு: எனக்கு வரும் கேள்விகளில் ஒரு குறிப்பிட்ட கேள்வி திரும்பத் திரும்பப் பலரால் கேட்கப்படுகிறது. அதற்குப் பதில் அளித்தால் ரொம்ப நீண்டுப் போய்விடும் என்ற காரணத்தால் பதில் கூறாமலேயே தள்ளிப் போட்டு வந்தேன். ஆனால் பல்லாயிரக்க ணக்கான வாசகர்கள் (எண்ணிக்கை பல்லாயிரக் கணக்கான அளவு மிகை என்ற உண்மையைக் கூறிவிடுகிறேன்.!) ஓர் ஆர்வத்துடன் கேட்கும்போது பதில் சொல்லாவிட்டாலும் நன்றாக இருக்காது. ஆகவே இங்கு பதில் சொல்லிவிடுகிறேன்.
கேள்வி இதுதான்; நீங்கள் ஏன் முதலமைச்சர் ஆகக் கூடாது?
பதில்: ஒரே வார்த்தையில் சொல்வதானால் ‘வேண்டாம்’ என்று சொல்ல வேண்டும் விளக்கமாகக் கூறாவிட்டால் திருப்தி ஏற்படாது. (எனக்குத்தான்!)
* *
* *
முதல் அமைச்சர் என்றால் தினந்தோறும் அலுவலகம் போகாவிட்டாலும், பேட்டி காண வரும் எம்.எல்.ஏ.
க்களையும் பார்க்காமல் இருக்க முடியாது. அதற்காகக் காலையிலேயே எழுந்திருந்து (கஷ்டமான காரியம்) ஷேவ் பண்ணி (ரொம்பக் கஷ்டமான காரியம்) குளித்து (ரொம்ப ரொம்பக் கஷ்டமான காரியம்) தயாராக வேண்டும் !
உதவி கேட்டு வரும் பிரமுகர்களைப் பார்த்து சிரிக்க வேண்டும். ஒரே ஒரு வேலை காலியாக உள்ள இடத்தில் “நம்ப ஆளை போடணும்” என்று கேட்டுக் கொண்டு தனித்தனியாக ஏழு எம்.எல்.ஏக்கள் வந்து கேட்பார்கள். “கட்டாயம் போட்டுடறேன்” என்று ஏழு பேருக்கும் மனதறிந்து பொய் சொல்ல வேண்டும். ( பொய் சொல்வது லட்டு மாதிரி என்றாலும், ஒரு நாளைக்கு ஆயிரம் லட்டு சாப்பிட முடியுமா?). ஏழு பேரையும் விரோதித்துக் கொண்டு என் மைத்துனியின் பிள்ளைக்கு அந்த வேலையைக் கொடுக்க வேண்டும், (யாரை விரோதித்துக் கொண்டாலும் என் மைத்துனியை விரோதித்துக் கொள்ள முடியாது!)
அலுவலகத்துக்கு சென்றால் எனக்குப் புரியாத, தெரியாத, தெரிந்துக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லாத ஆயிரம் விஷயங்களை பற்றித் தீவிர ஆலோசனைக்குப் பிறகு (!) முடிவு எடுத்து, ஃபைல்களில் எழுதி அனுப்ப வேண்டும்.
கவர்மென்ட் ஆபீஸில் யாரும் சரியாக வேலை செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு உண்மை என்பது எனக்குத் தெரியும். எல்லா கோப்புகளையும் முதல்வருக்கு அனுப்பிவிடுகிறார்களே! ஏதாவது ஒரு ஃபைலில் “இதற்கு காம்பவுண்ட் வரி ஒரு சதவிகிதத்திலிருந்து ஒன்றே கால் சதவீதமாக மாற்றலாம்’என்று அதிகாரி எழுதியிருப்பதைப் படித்து, இதனால் சர்க்காருக்கு வருவாய் என்று எண்ணிச் சம்மதம் தெரிவித்துவிடுவேன். (காம்பவுண்ட் என்றால் வீட்டைச் சுற்றி எழுப்பப்படும் சுவர் வரி என்றுதான் புரிந்து கொள்வேன்!)