கடை கண்ணிகளில், முக்கியமாக சூப்பர் பஜார், டிபார்ட்மெண்டல் ஸ்டோர்கள் ஆகியவைகளில் பொருள்களை ‘கடத்திப்’ போவது சற்றுச் சுலபம். இப்போது கண்காணிப்பு காமிராக்கள் வந்துள்ளதால் ஓரளவு குறைந்திருக்கக் கூடும்.
புத்தக சாலைகளில் இப்படி நடப்பதும் சகஜம். ஆனால் புத்தகத்தை அபேஸ் செய்பவர்கள் சற்றுப் படித்தவர்கள் என்பதால் இது ஒரு கௌரவமான திருட்டாக (அவர்களால்) கருதப்படுகிறது.
அமெரிக்கா வந்த புதிதில் ஒரு பல்கலைக்கழகப் புத்தக சாலையில் உறுப்பினராகச் சேர்ந்தேன். எனக்குப் பிடித்த சில புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, அவற்றை ‘இஷ்யூ’ பண்ணுவதற்குக் கொடுத்தேன்.
அதில் ‘பார் கோடு’கள் ஒட்டப்பட்டிருந்ததால் அவற்றை சர் சர்ரென்று தேய்த்து வைத்தார். அவற்றை எடுக்கப் போனேன். ‘ஒரு நிமிஷம் இருங்கள்’ என்று சொல்லி, அவற்றை எடுத்து புத்தகம் ஒவ்வொன்றையும் மணை மாதிரி இருந்த ஒரு பலகையின் மீது ஒரு செகண்டு தேய்த்துவிட்டுக் கொடுத்தார்கள்.