November 20, 2016

இப்படியா படம் எடுப்பாங்க?

நான் எழுதியதா?
எந்த எழுத்தாளரும் தான் எழுதிய கதை, திரைப்படமான பிறகு அதைப் பார்த்து திருப்தியோ, மகிழ்ச்சியோ அடைய மாட்டார்கள். காரணம் அவர் விவரித்த கதாபாத்திரங்களைப் பற்றி அவருடைய கற்பனையில் தோன்றிய மாதிரி திரையில் இல்லை என்று ஏமாற்றம் அடைவார்கள். படத்தின் இயக்குனர் கதையைப் படித்தபோது எந்த மாதிரி கற்பனை கதாசிரியரின் எழுத்து உண்டாக்குகிறதோ அதைப் பின்பற்றி திரையில் உருவாக்குகிறார்கள். இரண்டு பேருடைய கற்பனையும் ஒத்துப் போகவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. ஆனால், தான் நினைத்தபடி கதாபாத்திரம் திரையில் வராதது பற்றி ஏமாற்றம் அடையலாம்; ஆனால் திரைப்பட இயக்குனர் மீது கோபம், வெறுப்பு, எரிச்சல் கொள்ளக்கூடாது.
          தங்கள் கதை படமானபிறகு அதைப் பார்த்துவிட்டுக் கூறிய சில கசப்புக் கருத்துகளை நான் குறித்து வைத்திருக்கிறேன்.
  சிலவற்றை இப்போது பார்க்கலாம்.
ஹெமிங்க்வேயின் பாராட்டு
          ஹெமிங்க்வே எழுதிய ‘The snows of Kilimanjaro’ (1952) புத்தகத்தைத் திரைப்படமாக ஆக்கினார்கள். கிரிகோரி பெக் நடித்திருந்தார். படம் தயாரானதும் ஹெமிங்க்வேக்குத் திரையிட்டுக் காட்டினார்கள். படத்தைப் பார்த்ததும் தான் அபிப்பிராயத்தை ஒரே வரியில் ஹெமிங்க்வே கூறியது “படத்தில் பிடித்த இரண்டு விஷயங்கள் ”AVA GARDNER மற்றும் கழுதைப்புலி !”

அழியாப்புகழ் பெற்ற படம்
   சில திரைப்படங்கள் காலங்களைக் கடந்து நிற்குமளவு புகழ் பெற்றுள்ளன. எல்லா நாட்டிலும் அப்படிப்பட்ட ஒன்றிரண்டு திரைப்படங்களாவது இருக்கும்.
          ஆங்கிலத்தில் சிரஞ்சீவி வரம் பெற்றுள்ள சில திரைப்படங்கள்: SOUND OF MUSIC, MARY POPPINS, CLEOPATRA,  டென் கமாண்ட்மென்ட்ஸ் என்று பல உள்ளன.
          மேரி பாப்பின்ஸ் திரைப்படம் P.L. TRAVERS என்ற 65 வயதான பெண் எழுத்தாளர் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் வால்ட் டிஸ்னியால் தயாரிக்கப்பட்டது. வசனங்கள் எழுதப்பட்டபிறகு, ட்ரேவரிடம் காட்டப்பட்டது. அவர் அதைப் படித்து பல திருத்தங்களைச் செய்தார். ஆனால் படம் தயாரிக்கப்பட்டபோது அவர் செய்த திருத்தங்களை டிஸ்னி கண்டுகொள்ளவில்லை. படத்தில் வந்த கார்ட்டூன் காட்சிகள் ட்ரேவருக்குப் பிடிக்கவே இல்லை. பலத்த வாக்குவாதத்திற்குப் பிறகு வேண்டா வெறுப்பாக படத்திற்கு ஓ.கே. சொன்னார் ட்ரேவர். படத்தைப் பார்த்தபோது “நாசம் பண்ணிட்டாங்களே” என்று வருந்திக் கொண்டு கண்ணீர் விட்டபடியே இருந்தாராம். தனது மற்ற புத்தகங்களைப் படமாக்கத் தரமாட்டேன் என்று கூறிவிட்டாராம். ஆனால் படத்தை மக்கள் மிகவும் ரசித்தார்கள். எத்தனை வருடங்கள் ஆனாலும் குழந்தைகள் மிகவும் ரசிக்கும் படமாக ஓடிக் கொண்டிருக்கிறது,

STEINBECK-ஹிட்ச்காக்
1944-ஆம் ஆண்டு பிரபல நாவலாசிரியர் ஜான் ஸ்டைன்பெக் ஒரு நாவலை ஹிட்ச்காக்கிற்கு எழுதிக் கொடுத்தார். ஹிட்ச்காக் கேட்டுக் கொண்டதன்பேரில் அவர் எழுதித் தந்ததை ‘LIFE BOAT’ என்ற பெயரில் திரைக்கு ஏற்றபடி சில பல மாற்றங்களைச் செய்து கொடுத்தார். படம் முடிந்தவுடன் ஸ்டைன்பெக்கிற்குப் போட்டுக் காண்பித்தார். படம் அவருக்குத் திருப்தி அளிக்கவில்லை. சில கதாபாத்திரங்களை சரியாக அமைக்கவில்லை என்று கருதினார். LIFE BOAT படத்தின் கதை தாறுமாறாக மாற்றப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் தொடர்பாக என் பெயர் எதிலும் வரக்கூடாது என்று எழுதிவிட்டார். ஆனால் தயாரிப்பு நிறுவனம் (ட்வெண்டியத் செஞ்சுரி ஃபாக்ஸ்) ஸ்டைன்பெக்கின் கடிதத்தை முழுதுமாய் அலட்சியப்படுத்திவிட்டது.

ஆர்.கே. நாராயணின் GUIDE
ஆர். கே. நாராயண் GUIDE என்ற அபார நாவலை எழுதினார். அது மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அதைப் படித்த தேவ் ஆனந்த் தானே நடிக்கும்  திரைப்படமாக தயாரிக்க விரும்பினார், ஆர். கே. நாராயணைச் சந்தித்து அனுமதி கோர, அவருடைய இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முயற்சி செய்ய ஆரம்பித்தார்.
          மிகுந்த பிரயாசைக்குப் பிறகு, அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். பிறகு நேரில் சந்தித்து, படமெடுக்க அனுமதியையும் பெற்றார். ஆங்கிலம், ஹிந்தி என்று இரண்டு மொழிகளிலும் படமாக்கினார். ஆங்கிலப் படத்திற்கு ஹாலிவுட் இயக்குனரை ஒப்பந்தம் செய்தார் தேவ் ஆனந்த். வசனம் எழுத யாரைப் பிடித்தார் தெரியுமா? நோபல் பரிசு பெற்ற PEARL BUCK! ஹிந்தி படத்தை தேவ் ஆனந்தே இயக்கினார்.
          படம் தயாரானதும் ஆர்.கே. நாராயனுக்குத் திரையிட்டுக் காண்பித்தார்கள். அவருக்கு சிறிதும் பிடிக்கவில்லை. தான் எழுதிய கதை மாதிரியே படம் இல்லை என்று கோபப்பட்டார். அதே கோபத்துடன் MISGUIDED என்ற தலைப்பில் காரசாரமான விமர்சனத்தை LIFE பத்திரிகையில் எழுதினார்.
ஆனால் GUIDE (ஹிந்தி) திரைப்படம் பிய்த்துக்கொண்டு ஓடியது. தேவ் ஆனந்திற்குப் பணத்தையும், புகழையும் குவித்தது.

“நான் எழுதியது – 1”
ஜார்ஜ் காஃப்மென்
ஜார்ஜ் காஃப்மென் என்று ஒரு நாடகாசிரியர், நகைச்சுவை எழுத்தாளர் அமெரிக்காவில் இருந்தார். You Can't Take It with You, The Man Who Came to Dinner, Once in a Lifetime ஆகியவை அவர் எழுதியவைதான்
   ஒரு சமயம் அவருடைய கதையைத் திரைப்படமாக எடுக்க ஒரு தயாரிப்பாளர், அவரிடம் உரிமையை வாங்கித் தயாரித்தார். படம் தயாரானதும் காஃப்மெனுக்குத் திரையிட்டார். காஃப்மென் தன் கதைக்கும் படத்திற்கும் தொடர்பே இல்லாதது மாதிரி உணர்ந்தார். படம் ஓடிக்கொண்டிருந்தது. சட்டென்று எழுந்து உரத்த குரலில் “இது...இது....இந்த இரண்டு வரிகளும் நான் எழுதிய வசனம்” என்றாராம்.

“நான் எழுதியது – 2”
  இதில் நான் என்பது என்னைக் குறிக்கும். நான் எழுதிய ‘கமலா தொச்சு’ கதைகள் ‘கமலா ...கமலா...’ என்ற தலைப்பில் தூர்தர்ஷனில் சுமார் 20 வருஷத்திற்கு முன்பு சீரியலாக ஒளிபரப்பாயிற்று. காத்தாடி ராமமூர்த்தி அதில் நடித்திருந்தார். ஆகவே ஓரளவு தப்பித்தது. மற்றபடி எனக்குத் திருப்தி அளிக்கவில்லை. தொச்சுவை வில்லனாக உருவாக்கிவிட்டார்கள். இருந்தும் நல்ல ரேட்டிங் பெற்றதாகச் சொன்னார்கள். ‘லோகோ பின்ன ருசி’ என்று சம்ஸ்கிருதத்தில் சொல்வார்கள். அதை நினைத்துக் கொண்டு என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன்.

11 comments:

  1. “இது...இது....இந்த இரண்டு வரிகளும் நான் எழுதிய வசனம்” - ரொம்பவும் ரசித்தேன்.

    புத்தகம் வேறு, திரைப்படம் வேறு. எனக்குத் தெரிந்து, God Father ஒன்றுதான், நாவலின் feelஐத் திரைப்படமும் கொடுத்தது என்று பெயர் வாங்கியது. ஜுராசிக் பார்க் புத்தகத்திற்கும் திரைப்படத்துக்கும் நிரம்ப வேறுபாடு. நாவல் எழுத்தாளரின் கற்பனை. திரைப்படம் என்பது வியாபாரிகளின் கூட்டுக்கலவை.

    சுஜாதா அவருடைய திரைப்படத்திற்கும் நாவலுக்கும் சம்பந்தமேயில்லை என்று சொல்லியிருக்கிறார். ஆரம்பத்தில் பிரியா படத்தைப் பார்த்து அப்செட் ஆனவர், அதுக்கப்புறம் கண்டுகொள்ளவில்லையாம். அவரது கரையெல்லாம் செண்பகப்பூ கொஞ்சம் பரவாயில்லாமல் திரையில் வந்தது என்று நினைக்கிறேன். பிரிவோம் சந்திப்போம், தமன்னா நடித்து வேறு மாதிரி திரைப்படமாக வந்தது.

    தொலைக்காட்சியில் உங்கள் கமலா கதைகள் வந்ததா? மக்கள் எதை ரசிக்கிறார்கள் என்று ஒவ்வொரு வாரமும் பார்த்து கேரக்டர்களையே நீட்டி, குறுக்கி வித்தை காண்பிப்பார்களே தொலைக்காட்சியில்.

    ReplyDelete
  2. பதிவின் அகலத்தை கொஞ்சம் அதிகப் படுத்தினால் படிப்பதற்குத் தோதாக இருக்கும்.

    ReplyDelete
  3. என்னாச்சு என்னுடைய பின்னூட்டம்?

    “இது...இது....இந்த இரண்டு வரிகளும் நான் எழுதிய வசனம்” - இந்த வரிகள் நல்லா இருந்தது.

    நாவல் வேறு. திரைப்படம் வேறு. கதைல இன்ஸ்பைர் ஆகி, காட்சிப்படுத்தும்போது இயக்கு'நர், இதை இப்படி மாற்றலாம் என்றெல்லாம் எண்ணி மாற்றிவிடுவார்கள். நம்ம ஊர்ல, வி'நியோகஸ்தர்கள், தயாரிப்பார்கள் (போதாக்குறைக்கு ஹீரோ), வியாபாரத்துக்குத் தேவையான சில அம்சங்களைச் சேர்க்கச் சொல்லுவார்கள். அது, ஒரிஜினல் நாவலைவிட்டுத் தள்ளி நிற்கும். இதுல ஹீரோ, என்னை ஹீரோயின் திட்டுவதாக இருந்தால் ரசிகர்கள் ஏத்துக்கமாட்டாங்க.. அவ கண்ணாடியைப் பாத்து அவளையே திட்டறதாக் காட்சியை மாத்திடுங்க என்று சொல்லி, அடை வார்க்க வந்து, மசாலா தோசை செய்ததுபோல் படத்தை மாத்திடுவாங்க.

    சுஜாதா அவர்களுக்கும் இந்த எக்ஸ்பீரியன்ஸ் ஜாஸ்தி. பிரியா படத்தில் ரொம்ப ஷாக் ஆன அவர், அதற்கு அப்புறம் தெளிந்துவிட்டார். கதையைப் படமாக்கும் உரிமையைக் கொடுத்தோமோ பணத்தைப் பாக்கெட்டில் போட்டோமா.. அதோட அதை மறந்துவிடவேண்டியதுதான் என்ற நிலைக்கு வந்துவிட்டார். அவரைச் சங்கடப்படுத்தவேண்டாம் என்று, 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' போல், கதையை அவருக்குத் தெரியாமல் சுருட்டிக்கொண்டும் இருக்கிறார்கள்.

    ஹாலிவுட்டுலயும் இதே கதைதான் என்று இதன்மூலம் தெரிகிறது. ஆனால் அங்கு கதையைச் சுருட்டமுடியாது. (ரைட்ஸ் இருப்பதால்)

    ReplyDelete
  4. A great collection of views of authors. The movie goers' taste is different from readers. If it is understood, there will be no hard feelings. Also the movie maker has to inform the author that he is going to make a film based on the novel with cinematic changes which my be unpalatable to the writer. After all, the movie director and screen play writer are also creators and know more about the pulse of movie goers. The disappointment comes only when it is said the writer's novel will be made into a movie.

    ReplyDelete
  5. Sometimes,the binary happens.Chmmean was successful both as a story & screenplay; it all depends on various factors.Thks..

    ReplyDelete
  6. சுஜாதாவின் ப்ரியா நாவல் படமாக்கப்பட்ட பொழுது விகடன் விமர்சனத்தில்," இந்த பெயரில் சுஜாதா ஒரு நாவல் எழுதினார், அதற்கும் இதற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? என்று எழுதினார்கள். 

    நாவலை கெடுக்காமல் எடுக்கப்பட்ட படங்கள் என்று சில நேரங்களில் சில மனிதர்களையும், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாளையும் கூறலாம்.

    ReplyDelete
  7. << ப.கந்தசாமி: பதிவின் அகலத்தை கொஞ்சம் அதிகப் படுத்தினால் படிப்பதற்குத் தோதாக இருக்கும்.>>
    2009ல் தாளிப்புவைத் துவங்கியபோது தெரியமல் இந்த வடிவமைப்பைத் தேர்ந்தெடுத்துவிட்டேன். அதை மாற்றத் தெரியவில்லை.-- கடுகு

    ReplyDelete
  8. Long back when I was a student.. I read a story written by you in single stretch...I have strong belief that, When I saw 'Maikhel, Madhana,Kama Rajan' I remembered your story.... Is it true that you wrote a story... similar to that movie... ofcource I read the book first....

    ReplyDelete
  9. I did not write Micheal.. story. And Ihave not seen the film so far. May besomeone who had read it would have 'contributed' soem incidentgs toi the movie.-- Kadugu

    ReplyDelete
  10. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

    வணக்கம்.

    மைக்கேல் மதன காமராஜன் படம், மற்றும் அபூர்வ சகோதரர்கள் படம் இரண்டுமே, தங்களுடைய ”ஐயோ பாவம் சுண்டு” நாவலை நினைவு படுத்தியது உண்மை.

    வணக்கம்.

    அன்புடன்

    சீதாலஷ்மி சுப்ரமணியம்

    ReplyDelete
  11. இருக்கலாம் என்று சொல்வதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும். - கடுகு

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!