July 14, 2016

சி.வி. ராமனின் எளிமை



எம். வி. காமத் ஒரு பத்திரிகை நிருபர். சில ஆண்டுகள் இல்லஸ்ட்ரேடட் வீக்லியின் ஆசிரியராக இருந்தார். அமெரிக்காவில் டைம்ஸ் ஆப் இந்தியாவின் நிருபராக இருந்தார். பின்னால் பிரசார் பாரதியின் தலைவராகவும் இருந்தவர். அவர் சமீபத்தில் தனது 93வது வயதில் காலமானார். 

 A journalist at at Large  என்ற அவர் எழுதிய  புத்தகத்தில் பல தகவலகளைத் தந்திருக்கிறார்.. நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஸி.வி. ராமன் பற்றி எழுதியுள்ள குட்டிக் கட்டுரையைச் சுருக்கித் தருகிறேன்.

நோபல் பரிசு பெற்ற டாக்டர் சி.வி. ராமனிடமிருந்து கற்ற பாடங்கள்

ஒரு கோடை கால மாலை நேரம். சூடு குறையவில்லை. டில்லி கான்ஸ்டிட்யூஷன் ஹவுஸின் வரவேற்பு ஹாலில், அங்கிருந்த பல பத்திரிகைகளைப் புரட்டிக் கொண்டிருந்தேன். என்னைத் தவிர அங்கு வேறு யாரும் இல்லை.
     புது டில்லிக்கு நான் புதிது. யாரையும் எனக்குத் தெரியாது. கையில் அதிகப் பணமும் இல்லாததால் எங்கும் பார்ட்டி, கீர்ட்டி என்று போக வசதி இல்லை. ஆகவே லௌஞ்சில் தனியாகப் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தேன்.
     அந்த சமயம் யாரோ ஒருவர் என் சோபாவுக்கு எதிரில் இருந்த சோபாவின் அருகில் வந்து கொண்டிருந்தார். அவர் தலைப்பாகையைப் பார்த்ததும் எனக்கு அவர் டாக்டர் சி.வி. ராமன் என்பது தெரிந்தது. பௌதிகத்தில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி என் எதிரில்! அவருடன் பேசலாமா கூடாதா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இப்படி ஒரு வாய்ப்பு கிடைப்பது அபூர்வம். அதை நழுவ விடக்கூடாது. ஆகவே அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். 

அவரை நான் அடையாளம் தெரிந்துகொண்டது அவருக்கு சிறிது மகிழ்ச்சி அளித்திருந்தது. பிறகு நாங்கள் இருவரும் உரையாடினோம்.
     அதிர்ஷ்டவசமாக சில நாட்களுக்கு முன்பு வைரங்களைப் பற்றி ரேடியோவில் அவர் ஆற்றிய உரையை The Indian Listener பத்திரிகையில் பிரசுரித்திருந்ததைப் படித்து இருந்தேன். அந்த சமயம் அவர் வைரங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார். அவர் ஆற்றிய உரையில் இரண்டு, மூன்று விஷயங்கள் எனக்குப் புரியவில்லை. அவரிடம் பணிவுடன் “என் சந்தேகங்களுக்கு விளக்கம் தர முடியுமா?” என்று கேட்டேன்.
     அவர் முகம் மலர்ந்தது. தன்னுடைய உரையைக் கவனமாகப் படித்து, விளக்கம் கேட்பவர்களும் இருக்கிறார்கள் என்பதே அவர் மகிழ்ச்சிக்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும். அவர் எனக்கு விளக்க ஆரம்பித்தார். அவர் பேசப் பேச அவருக்கே மிகவும் உற்சாகம் ஏற்பட்டது. நானும் தலையை ஆட்டி கவனமாகக் கேட்டேன். எல்லாவற்றையும் விளக்கிய பிறகு அவர் எழுந்து நின்றார்; என் கையைப் பிடித்துக் கொண்டு என்னைப் பின்புறம் இருந்த தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு இருந்த சில கூழாங்கற்களை கையில் எடுத்துக் கொண்டு மேலும் சில விளக்கங்களைக் கற்களை வைத்துக் கூறினார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தன்னுடைய கோட்பாட்டை எனக்குத் தெளிவாக எடுத்துரைத்தார்.
     அமெரிக்கா போன்ற இடங்களில் இப்படி ஒரு உரையை அவர் நிகழ்த்தி இருந்தால் பல ஆயிரம் டாலர்கள் சம்பாதித்திருப்பார். எனக்கு– ஒற்றையாளான எனக்கு– இலவசமாகக் கிடைத்தது,
     அன்று விலைமதிப்பற்ற பாடத்தை – இல்லை – பாடங்களைக் கற்றுக்கொண்டேன்.
     ஒன்று. எவ்வளவு பெரிய அல்லது பிரபல பிரமுகராக இருந்தாலும் அவருடன் பேச வாய்ப்புக் கிடைத்தால் அதை நழுவவிடக்கூடாது.; இரண்டாவது, நமக்கு எல்லாம் தெரியும் என்று பாசாங்கு செய்யவே கூடாது. உண்மையான அறிவாளிகள் எப்போதும் ஞான சூனியங்களுக்கு விளக்கங்களைக் கூறத் தயங்க மாட்டார்கள். மூன்றாவது, நமக்கு எதிரே இருந்து பேசுபவரது உரையை மரியாதை கலந்த கவனத்துடன் கேட்க வேண்டும். அவரைச் சந்தித்ததனால், பத்திரிகையில் எழுத விஷயம் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் எனக்குக் கிடைத்தது விலைமதிக்க முடியாத ஒன்று. அது அற்புதமான பாடம் !

முக்கிய குறிப்பு: இந்தப் பதிவைத் தட்டச்சு செய்து உதவியது: சகோதரி திருமதி எஸ். ஷோபனா.  அவருக்கு என் நன்றி!

5 comments:

  1. எங்களுக்கும் சில பாடங்ககள் கிடைத்தன!!!

    ReplyDelete
  2. பின்னூட்டத்திற்கு நன்றி-கடுகு

    ReplyDelete
  3. A respected journalist and a great scientist met alone. What an experience to the journalist! Even scientists are down to earth to explain their theory to laymen. Great men.

    ReplyDelete
  4. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

    வணக்கம்.

    தனக்குக் கிடைத்த அனுபவத்தை மட்டுமல்லாது, அதிலிருந்து தான் கற்றுக் கொண்டதையும் அருமையாக சொல்லியிருக்கிறார்.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    நாங்களும் கற்றுக் கொள்கிறோம்.

    அன்புடன்

    சீதாலஷ்மி சுப்ரமணியம்

    ReplyDelete
  5. C.V.Raman is a great personality.M.V.Kamath too a great journalist.Both are simple and humble and our writer Augusthian also simple and humble.
    K.Ragavan.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!