February 22, 2016

பூங்கா ஸ்டேஷனில்..

கடவுள் கை கொடுத்த  கணங்கள்!

நம் வாழ்க்கையில் எத்தனையோ  மறக்க முடியாத சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிக்கின்றன. மறக்க முடியாது என்று நாம் கருதிய நிகழ்ச்சிகளைப் பிறகு மறந்தே போய்விடுகிறோம்.  வேறு சில சம்பவங்கள் நிகழ்ந்த கணம் மனதில் உறைந்து விடுகின்றன – நடந்த தேதி, ஆண்டு போன்றவை மறந்து விட்டாலும்!
என் வாழ்வில் நடந்த சில சம்பவங்களை எழுதலாம் என்று இருக்கிறேன். அவை என் வாழ்வில் நடந்தது என்பது முக்கியமே இல்லை.  ஆனால் இந்த சம்பவங்களில் எல்லாம் கடவுள்  கை கொடுத்த கணங்கள் உள்ளன.  கடவுள் ஒரு  SPLIT SECOND-ல் செய்த அற்புதங்கள் உள்ளன! இது தான் முக்கியம்.
சிலவற்றை  COINCIDENCE என்று சொல்லிவிடலாம். அது உங்கள் விருப்பம். ஆனால் என்னை பொறுத்தவரை அவை யாவும் கடவுள் செய்த அற்புதங்கள்தான்.
இது பல  EPISODE கொண்டது. ஒருதொடராகப் போடப் பார்க்கிறேன். 
  
மின்சார ரயிலில், மில்லி செகண்டில் நடந்த அற்புதம்!இது 
1956-ல் நடந்த சம்பவம்.

செங்கல்பட்டில் நான் இருந்த கால கட்டம். அப்போது என் இரண்டாவது  மூத்த  சகோதரருக்குக் கலியாணம் நிச்சயமாயிற்று. ஈரோட்டில் செப்டம்பர்  15-ம் தேதியென்று முகூர்த்தம் குறித்தாகிவிட்டது.  நிச்சயம் ஆன தேதி செப்டம்பர் 1!  அவரை விட மூத்த அண்ணா காஷ்மீரில் ராணுவ மருத்துவ மனையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவருக்குக் கடிதம் போட்டோம், (போன் இல்லாத காலம் அது!) அவரிடமிருந்து ஒரு வாரம் கழித்துப்  பதில் வந்தது,  கட்டாயம் வந்து விடுகிறேன்” என்று.

ஆனால் அதற்குள் பெண் வீட்டார், 15-ம் தேதியை விட 14-ம் தேதி மிகவும் பொருத்தமாக இருக்கிறது என்று சொல்லி முகூர்த்த தேதியை மாற்றிவிட விரும்பினார்கள். நாங்களும்  சம்மதித்தோம்.  அதன் பிறகு மறுபடியும், தேதி மாறியத் தகவலை எழுதி பெரிய அண்ணாவுக்குக் கடிதம் போட்டோம்..

February 16, 2016

என் அன்பான நேயர்களுக்கு,

 என் அன்பான நேயர்களுக்கு, 
வணக்கம்.
எட்டு மாதங்களுக்கு மேலாகப்  புதிய பதிவுகள் போட் இயலாமல் போனது.
கண் கோளாறு இன்னும் முற்றுமாகக் குணமாகவில்லை.  தினமும் கிட்டதட்ட எட்டு மணி நேரம் படிப்பது, எழுதுவது என்று இருந்தது, போய், பன்னிரண்டு மணி நேரம் படுப்பது, தூங்கி எழுவது என்று ஆகிவிட்டது.  இந்த சோம்பல் வாழ்க்கையே சுகம் என்று ஆகி விடப் போகிறதே என்று அடிமனதில் கவலை ஏற்படத் துவங்கியது!  அப்படி ஏற்படாமல் இருக்கவோ என்னவோ, சோபானா,  நெல்லைத் தமிழன்  போன்றவர்கள்  பின்னூட்டம், ஈ-மெயில்  என்று போட்டுக் கொண்டிருந்தார்கள்.  எல்லாருக்கும் நன்றி.
விசையுறு பந்தினைப் போல் செலும் உடல் வந்துவிடும் இன்னும் சில நாட்களில்.
 இன்னும்  ஒரு வாரத்தில் அடுத்த பதிவு - போடுகிறேன்.
- கடுகு