November 24, 2014

பென்குரியனும் பில் கேட்ஸும்

 சில பதிவுகளுக்கு முன்பு இஸ்ரேலின் முதல் பிரதமராக இருந்த பென் குரியனைப் பற்றி எழுதி இருந்தேன். ( இங்கே சொடுக்கவும்: பென் குரியன் பதிவு
அதில் ஒரு சுவையான தகவலை எழுத விட்டு விட்டேன். அதை இங்கு தருகிறேன்.

இன்னிக்கு உங்கள் வேலை
David Ben-Gurion
 பென் குரியன் பிரதமராக இருந்த ஒரு சமயம் (செப்டம்பர் 1953 வாக்கில்) தன் வீட்டில் சில நண்பர்களுடன் டின்னர் சாப்பிட்டு விட்டுப் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது சமையலறையிலிருந்த அவருடைய மனைவி குரல் கொடுத்தாராம் ”பென் குரியன். இன்னிக்கு உங்க டியூட்டி” என்று,

“ எக்ஸ்கியூஸ் மீ.. ஒன் மினிட்” என்று நண்பர்களிடம் சொல்லிவிட்டு, சமையலறைக்குப் போய் பாத்திரங்களைத் தேய்த்து வைத்து விட்டு வந்தாராம். அன்று  அவர் பாத்திரம் தேய்க்க வேண்டிய முறை தினமாம்!

இப்போது இதை எழுதியதற்கு ஒரு காரணம் இருக்கிறது:

’மைக்ரோஸாஃப்ட்’ பில் கேட்ஸின் மனைவி   MELINDA GATES, ’டைம்ஸ்’ வார இதழின் பத்துக் கேள்விகள் என்ற பகுதியில் இந்த வாரம்   இடம் பெற்றிருக்கிறார்..
Melinda Gates
அதில் வந்த ஒரு கேள்வியும் பதிலும் இதோ.
டைம்ஸ் நிருபர்: உலகின் மிகப் பெரிய பணக்காரர் (பில் கேட்ஸ்) எப்போதாவது பாத்திரம் கழுவி எடுத்து வைப்பாரா?

MELINDA GATES:  உண்மையைச் சொல்லப் போனால் ‘இல்லை’  இரவு டின்னருக்குப் பிறகு, எல்லாரும் சேர்ந்து இந்த வேலையைச் செய்வோம்.
பாத்திரங்களைக் கழுவுகிற வேலை அவருக்குப் பிடிக்கும்.
அவருடைய வீட்டில் சகோதரியுடன் வளர்ந்தவர். சகோதரியும் அவரும் சேர்ந்து பாத்திரங்கள் கழுவுவது வழக்கம்.
பாத்திரங்களை டிஷ் வாஷரில்   ’லோட்’ செய்ய  அவருக்குப் பிடிக்கும். கழுவின பாத்திரங்களை எடுத்து வைக்கும் வேலை பிடிக்காது... அல்லது, இப்படி வைத்துக் கொள்ளுங்கள். எடுத்து வைக்கும் வேலையை அவர் செய்வதற்கு நாங்கள் விடுவதில்லை!

November 17, 2014

அன்புடையீர்,

வணக்கம்.

அடுத்த பதிவு தாமதமாக வரும்.

எனக்குச் சற்று ஓய்வு தேவைப்படுகிறது.

-கடுகு

# # # # # # # # # # # # 

November 03, 2014

ஐன்ஸ்டீன்- தெரிந்த பெயர்; தெரியாத தகவல்கள்


ஐன்ஸ்டீன்,  தனது UNIFIED CONCEPT THEORY என்ற கோட்பாட்டை அறிவித்து, அது உலகம்  முழுதும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி இருந்த சமயம்  நடந்த நிகழ்ச்சி.
ஐன்ஸ்டீன் நியூயார்க்கில் தனது நண்பரின்  வீட்டில்2,3 நாட்கள் தங்கி இருந்தார். பிறகு அவர் தன் சொந்த ஊரான பிரின்ஸ்டனுக்குப் போனார். 
அவர் சென்றதும், அவர் தங்கி இருந்த அறையை வேலைக்காரப் பெண்மணி பெறுக்கப் போனார் . அறை சுவற்றைப் பார்த்தும் அதிர்ச்சி அடைந்தார். காரணம் சுவர் பூராவும் ஏதேதோ  எண்கள் எழுதப்பட்டிருந்தன. அத்துடன்  குறிப்புகளும் எழுதப்பட்டிருந்தன.  ஐன்ஸ்டீன் ஏதோ கிறுக்கித்தள்ளி இருந்தார்.
வேலைக்காரப் பெண்மணி தன் எஜமானரைக் கூப்பிட்டுக் காண்பித்தார். எல்லாம் கணித சூத்திரங்களாக இருந்தன.
ஐன்ஸ்டீனின் நண்பர்   உடனே இரண்டு பேருக்குப் போன் செய்தார். முதலில் ஐன்ஸ்டீனுக்குப் போன் பண்ணி, அந்த சுவரில் எழுதி இருப்பதைப் பற்றிக் கேட்டார். " ஓ, அவையெல்லாம் என் தியரி தொடர்பான சூத்திரங்கள்”‘என்றார்.

‘அப்படியா..சரி” என்று சொல்லிவிட்டு, போனை வைத்து விட்டார்அடுத்து,அவர்  பெரிய கண்ணாடி கடைக்குப் போன் பண்ணினார். ஐன்ஸ்டீன் ‘கிறுக்கிய’ கணித சூத்திரங்கள் பாதுகாப்பாக இருக்க, சுவர் அளவு கண்ணடி சட்டம் போட ஆர்டர் கொடுத்தார்!
*    *        *
ஒரு சமயம் ஐன்ஸ்டீனுக்கு ஒரு கடிதம் வந்தது. “ நீங்கள் மிகச் சிறந்த சிந்தனையாளர் . உங்களுடைய மிகச் சிறந்த ஆறு எண்ணங்களை, எங்கள் கமிட்டிக்குத் தெரியப்படுத்தினால் மிக்க மகிழ்ச்சி அடைவோம்” என்று கேட்டிருந்தார்கள்.
இதற்கு ஐன்ஸ்டீன் எழுதிய ஆறு வார்த்தைப் பதில்: கடவுள், தேசம், மனைவி, கணிதம், மனித சமுதாயம்,உலக அமைதி!”
*    *        *