October 23, 2014

புத்தக வேட்டை


ON BOOKS:
These are not books, lumps of lifeless paper, but minds alive on the shelves. From each of them goes out its own voice…and just as the touch of a button on our set will fill the room with music, so by taking down one of these volumes and opening it, one can call into range the voice of a man far distant in time and space, and hear him speaking to us, mind to mind, heart to heart.--Gilbert Highet
***************************
ஞாயிற்றுக் கிழமைகளில்  டில்லி செங்கோட்டை செல்லும்  தாரியாகஞ்சின் அரைமைல் நீள நடைபாதையில்  பழைய புத்தகங்கள் கொட்டிக் கிடக்கும். தாரியாகஞ்சின் வெகு அருகில் இருந்த மின்டோ ரோடில் என் வீடு இருந்ததால் அடிக்கடி போய் வருவேன்.

அறுபதுகளில், ஒரு சமயம் பியர் டேனினாஸ்  (PIEERE DANINOS 1913-2005 ) என்ற பிரஞ்சு எழுத்தாளர் எழுதிய  LIFE WITH SONIA  என்ற புத்தகம் (ஆங்கில மொழிபெயர்ப்பு) கிடைத்தது. நகைச்சுவைப் புத்தகம் என்று போடப்பட்டிருந்ததால், விலையைப்பற்றி  யோசிக்காமல் முழுதாக ஒரு ரூபாய் கொடுத்து வாங்கி விட்டேன்!

தன் மனைவியைக் கிண்டல் அடித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. சூப்பர் புத்தகம். ( பின்னால் அவர் கட்டுரை ஒன்றைத் தமிழ்ப்படுத்திப் போடுகிறேன்!) அதன் பிறகு, மேஜர் தாம்ப்ஸன் என்ற கதாபாத்திரத்தை வைத்து அவர் எழுதிய மூன்று லட்டு புத்தகங்களைத் தேடிப் பிடித்து வாங்கினேன்.  இவரது புத்தகங்கள் 28 மொழிகளில்  வெளிவந்துள்ளன.

October 06, 2014

தொச்சு பகவான்



தொச்சுவை பார்த்தபோது எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. பல சமயம் -ஏன் ஒவ்வொரு சமயமும் என் மைத்துனன் தொச்சுவைப் பார்த்ததும் தூக்கிவாரிப் போடுவது சகஜம்தான். லேசான அதிர்ச்சி, கூடுதலான அதிர்ச்சி, அதிக அதிர்ச்சி என்று அதிர்ச்சியின் அளவில் மாறுதல் இருக்குமே தவிர, அதிர்ச்சி இல்லாமல் இருக்காது. ஆனால் இந்த சமயம் அவனைப் பார்த்தபோது ஏற்பட்ட அதிர்ச்சி சற்று அதிகமானது.

    தொச்சு காவி உடையில் இருந்தான்! காவி வேட்டி, கிட்டத் தட்ட கணுக்கால் வரை நீண்ட ஜிப்பா, ஆயிரம் தான் அங்கச்சியைத் திட்டிக்கொண்டே இருந்தாலும், துறவியாக மாறக்கூடியவன் அவன் அல்லவே!

அதிர்ச்சியிலிருந்து சுதாரித்துக்கொண்டு, “என்னப்பா இது புதிய கோலம்? உன்னை தொச்சுன்னு கூப்பிடவேண்டுமா அல்லது தொச்சு பகவான்னு கூப்பிட வேண்டுமா ....?  கமலா!  பார், யார் வந்திருக்கான்னு .... தொச்சு பகவான் வந்திருக்கிறார், பாத பூஜை பண்ணி உள்ளே “ஏள” பண்ணு என்றேன்.
    என் அருமை மாமியார் பின் தொடர, என் அருமை மனைவி கமலா, “தொச்சுவை பாதகன்னு சொல்லிக்கொண்டே இருப்பீங்க, திடீர்னு அவன் மேல் என்ன கரிசனம்? பகவான்னு சொல்றீங்க!'' என்று கேட்டுக் கொண்டே வந்தாள். தொச்சுவின் உடை அலங்காரத்தைப் பார்த்து, “என்னடா தொச்சு?.... இது என்ன வேஷம்? என்று கேட்டாள்.
    ”வேஷமும் இல்லே, கோஷமும் இல்லே. இது சும்மா ஒரு இது தான்.''
    ”என்னப்பா தொச்சு. டி வி. பேட்டியில் பதில் சொல்பவர்கள் போல், ஒரே இதுவா பேசறே?''
    ”உள்ளே வாடா, வந்தவனை வாசலிலேயே நிக்க வச்சுண்டு பேசற வழக்கத்தை எத்தனை வருஷமானாலும் விடமாட்டீங்களே!'' என்று கமலா தொச்சுவை வரவேற்றபடியே என்னையும் தூற்றினாள். சந்தடிசாக்கில் கந்தகப் பொடி வைப்பதில் கெட்டிக்காரி.
    ”அத்திம்பேர், இந்த டிரஸ்ஸைக் காவியாகப் பார்க்காதீங்க. இது கதர் துணி. சுதந்திரம் வந்து ஐம்பது வருஷம் ஆச்சு. காந்திஜி கதர் உடுத்தச் சொன்னார். ஆனால் நாம் காந்தியை மறந்து விட்டமாதிரி கதரையையும் மறக்க ஆரம்பிச்சுட்டோம் .... அதனாலே ....?''
    ”என்னப்பா, அதனால்'னு சொல்லி நிறுத்திட்டே? விளம்பர இடைவேளைக்குப் பிறகு தொடருமா'' என்று கேட்டேன்.