அமெரிக்க எழுத்தாளர் லியோ ராஸ்டன் நகைச்சுவைப் பொன்மொழிகள், குட்டிக்கதைகள், நாவல்கள், வாழ்க்கை வரலாறுகள் தவிர நிறைய கட்டுரைகளும் ஹாலிவுட்டில் 5, 6 திரைப்படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு ஒரு ’புக்-சேலி’ல் இவர் எழுதிய Passion and Prejudices என்ற புத்தகத்தை வாங்கினேன். அந்த புத்தகத்தில் இருந்த ஒரு கட்டுரையைத் தமிழில் தருகிறேன். அவர் கொடுத்திருந்த தலைப்பு: THE CIGAR: A FERVENT FOOTNOTE TO HISTORY
----------------------------------
கட்டுரையைப் படிக்க ஆரம்பிக்குமுன் ஒரு சுவையான துணுக்கு. இந்த புத்தகத்தை நான் வாங்கிய விலை: 15 சென் ட்டுக்கும் குறைவு (ரூ.10). பிறகு ஒரு நாள், ராஸ்டனின் மற்ற புத்தகங்கள் ஏதாவது வாங்கலாமா என்று வலை வீசினேன்.
1978–ல் வெளியான Passion and Prejudices புத்தகத்திற்கு (புதுப் புத்தகம் -முதல் பதிப்பு) ஒரு புக் ஸ்டோர் வைத்திருந்த விலை:(படத்தைப் பார்க்கவும்!) அதிர்ச்சி அடையாதீர்கள்: டாலர் 3272.97. தபால் கட்டணம் தனி!
-------------------------------------
இனி சுருட்டுக் கட்டுரைக்குப் போகலாம். சிகரெட் பிடிப்பவர்களின் சிகரெட் மோகத்தை( அல்லது வெறியை) புகை பிடிக்காதவர்களால் அறிந்து கொள்ள முடியாது. என் பதினாறாவது வயதிலிருந்து தினமும் ஒரு பாக்கெட் பிடித்து வந்தேன். இப்போது அந்த பழக்கத்தை உதறித் தள்ளி விட்டேன்.
புகையிலையின் மோகத்தை நான் நன்கு அறிவேன் அதன் பிடியில் அகப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் மீது எனக்கு உள்ள அனுதாபம் ஆழமானது.
இரண்டாம் உலகப் போரின் போது- அதாவது 40 களில்- நடந்த சம்பவம் சிகரெட் வெறி தொடர்பானது.
ராபின் என்பவர் அமெரிக்க ஸ்டேட் டிபார்ட்மென்டில் உயர் அதிகாரி. (இது அவருடைய உண்மையான பெயர் இல்லை. அவரது பேரன், பேத்தி எவராவது இந்தக் கட்டுரையைப் படிக்க நேர்ந்தால் மனவருத்தம் அடைவார்கள் என்பதால் பெயரை மாற்றி உள்ளேன்.
ராபின், பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் படித்துத் தேறி ஸ்டேட் டிபார்ட்மென்டில் வேலைக்குச் சேர்ந்தான். சாதாரண எழுத்தர் வேலைதான். இருந்தாலும் அதில் அவன் தன் செயல் திறமையையும், மொழித் திறமையையும் காட்டி மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெற்றான்.