April 23, 2014

கமலாவும் கம்ப்யூட்டரும்

  
ஒரு சின்ன முன்னோட்டம்
என்னுடைய ’கமலாவும் கத்தரிக்காய் கூட்டும்’   புத்தகம் 1988-ல் பிரசுரமானது. விலை ரூ.18! அணா, பைசா என்ற வார்த்தைகள் புழக்கத்திலிருந்த   காலத்தில் எழுதப்பட்ட கதைகள் தொகுப்பு. லைப்ரரி ஆர்டர் எதுவும் இல்லாமலேயே, 4.5  மாதங்களில்  விற்று விட்டது.  அதிலிருந்து ஒரு கமலா-தொச்சு கதையைப் போடுகிறேன்.  25-30  வருஷம் ஆனாலும் இன்னும் நகைச்சுவையை ரசிக்க முடியும். இது யாரோ சொன்னது அல்ல. இதைச் சொன்னது நான்தான்!
புத்தகத்தில் போடப்பட்டிருந்த  முன்னோட்டமும் கதையும். 
                                        ----------------------------------
     * கோபம் வந்தால் கமலா வேஸ்ட் பண்ண மாட்டாள். ஒருத்தர்  இல்லாவிட்டால் வேறு ஒருவர் மேல் அதைச் செலுத்தி விடுவாள்.
* தொச்சு மட்டும் பவநகர் சமஸ்தானத்திற்கு திவானாகப் போயிருந்தால், சமஸ்தானம் திவாலாகிப் போயிருக்கும்.
    * கமலா என்னை எத்தனை விதமாகத் திட்டினாலும், "நாசமாகப் போக' என்று திட்டமாட்டாள். காரணம் என் மேல் அவளுக்கு அளவு கடந்த ஆசை
   * ....என்று கமலாவிற்கு ஜிங்-சிக் போட்டேன். வெற்றிகரமான தாம்பத்யத்திற்கு ஆதார சுருதியே ஜிங்-சிக் தான்!
   * கமலா ஹார்மோனியம் வாசிக்க, ஏதோ ஒரு கட்டை சுயாட்சி பெற்று, தன்னிச்சையாக உரிமைக் குரலை எழுப்பியது. கமலாவின் கட்டைக் குரலுக்கு, ஹார்மோனியக் "கட்டை"யின் குரல் எவ்வளவோ தேவலாம்!.
       * கமலா பாடியது கர்நாடக இசை அல்ல. கர்நாடக இ(ம்)சை!
      * "கொள்ளை லாபம்” என்றாள் கமலா. "கொள்ளை போய் விடும் நமக்கு. லாபம் கிடைத்துவிடும் கடைக்காரருக்கு' என்றேன்

###########

கமலாவும் கம்ப்யூட்டரும்

     காலையில்  நான் கையில் பேப்பரை எடுத்தால் என் அருமை மனைவி கமலாவிற்குப் பொறுக்காது.

     "ஏன்னா. . . அடுப்பிலே குழம்பு கொதிக்கிறது. போய் அரை அணாவுக்குக் கொத்தமல்லி வாங்கிக் கொண்டு வாங்கோ. . . '' என்று டூ-இன்-ஒன் (அதிகாரம் ப்ளஸ்  அவசரம்) குரலில் என்னை விரட்டுவாள். அரையணாவிற்குக் கொத்தமல்லி கேட்டால் காய்கறிக்கடைக்காரர் கொத்திக் குதறி விடுவார் என்பது கமலாவுக்கு மட்டும் தெரியாது.

     இல்லாவிட்டால், சமையலறையிலிருந்து கத்துவாள், "பரணிலிருந்து அப்பளக் குழவியை எடுத்துக் கொடுங்கள்'' என்று.  எங்கள் வீட்டில் அப்பளக்குழவியை ஒரே ஒரு காரியத்திற்குப் பயன்படுத்துவாள் கமலா. டூத்பேஸ்ட் ட்யூபில் கடைசி  கடுகு அளவு "பேஸ்ட்"டை எடுக்கக்  குழவியை அதன் மேல் ஓர் ஐம்பது தடவை ஓட்டி, (ரோடு எஞ்சின் ஏறியது போல் தட்டையாகிப் போகும் வரை)  பேஸ்ட்டை எடுத்து உபயோகிப்பாள்.
அதுவும் இல்லாவிட்டால் பால்காரருடன் சண்டை போட ஆரம்பிப்பாள்,

     "நேற்று முக்கால் ஆழாக்குக் குறைச்சுக் கொடுத்தே. இன்னிக்கு அரை ஆழாக்குச் சேர்த்துக் கொடுத்துடு. ஞாபகம் வைச்சுக்க, இன்னும் ஏழரை ஆழாக்கு நீ பாக்கி.....நாளுக்கு நாள் பால் தண்ணியாயிண்டே போறது. ஹும்..... நான் கத்தி என்ன பிரயோஜனம்...? ஐயா கிட்டே பணம் வாங்கிண்டு போயிடுவே கரெக்டா.... அவர் ஒரு வார்த்தை சொல்லமாட்டார். அவர் அலட்டல் எல்லாம் சமையல் கட்டு வரை தான். . . . '' என்று பால்காரரைத் திட்ட முடியாத கோபத்தை என் பக்கம் திருப்பி விடுவாள்.

        ஒருவிஷயத்திற்குக் கமலாவைப் பாராட்டாமல் இருக்க முடியாது. கோபம் வந்து விட்டால் அதை வேஸ்ட் பண்ண மாட்டாள். ஒருத்தர் இல்லாவிட்டால் வேறு ஒருத்தர் மேல் அதைச் செலுத்தி விடுவாள்!

     இப்படித்தான் அன்றொரு நாள் அவள் வாதம், விவாதம், விதண்டாவாதம் மூன்றையும் கலந்து நாலு வீடுகள் கேட்கும் அளவிற்கு உரத்த குரலில் பால்காரருடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள்!

     "எனக்கா கணக்குத் தெரியாது? நான் தான் காலண்டரில் கரெக்டா எழுதிண்டு வர்றேனே! இதோ பார், ஒண்ணாம் தேதி இரண்டரை ஆழாக்கு, காலையில், சாயங்காலம் மூணு ஆழாக்குக் கொடுத்தே. முன்தினம் பாக்கி அரை ஆழாக்குப் போனா, இரண்டரை தான் கணக்கு. அப்புறம் இரண்டாம் தேதி மாடு உதைச்சிட்டுதுன்னு ஒன்பதரை ஆழாக்கு. . . ''

     ஆழாக்கு என்ற வார்த்தையைத் தமிழ்நாட்டில் இன்றும் பாதுகாப்பாகக் கட்டிக் காத்து உபயோகித்து வரும் ஒரே நபர் கமலா தான்.

     போன வருஷம் வரை மூணே காலணா, ஆறே முக்காலணா என்று சொல்லிக் கொண்டிருந்தவள், இப்போது தான் நயா பைசாவிற்கு வந்தாள். ஆறு மாதம் வரை ஒரு வீசை, அரை வீசை என்று சொல்லி அதற்குக் கிராம் கணக்கில் என்னைக் கேட்டு, காய்கறி, சாமான்கள் வாங்கி வந்து கொண்டிருந்தாள்!

     கமலா-பால்காரர் விவாதம், பேப்பரைப் படிக்க விடாமல் என்னைத் தடை செய்தது. ஆகவே, நான் "என்ன கமலா, பால்காரருடன் போராட்டம்?  உனக்கு ஒரு கம்ப்யூட்டரை வாங்கித் தந்து விடுகிறேன், பால் கணக்குப் பார்க்க'' என்றேன். அந்தக்கணம் என் நாக்கில் சனி குடியேறி இருக்க வேண்டும்!

     "ஆஹா...கம்ப்யூட்டர் தானே...நீங்க தானே...ஹும்... இந்த ஜன்மத்திலே இல்லே...''

     "ஏன் கமலா இப்படி அலுத்துக்கறே?... கம்ப்யூட்டர் வாங்கித் தருவேன். அதை உபயோகிக்க முதலில் கத்துக்கணும். அதுக்குன்னு என்னென்னமோ லாங்கவேஜ் இருக்காம்.''

     "இருந்தால் என்ன... நம்ப வீட்டுக்கு வந்தால், நாம்ப பேசற பாஷையைத் தானா புரிஞ்சுண்டுடறது... இப்போ நாய்க்குட்டி இருக்குது... அது வெள்ளைக்காரங்க வீட்டிலே வளர்ந்தால், "ஸிட்"டுனா உட்காரும். இந்திக்காரன் வீட்டிலே வளர்ந்தால் "பைட்"னா உட்காரும்... எல்லாம் பழக்கற விதத்திலே இருக்கிறது...''

     ''....ஆமாம், ஆமாம். கமலா, நீ சொல்றது ரொம்ப சரி'' என்றேன். (இப்படிச் சொல்லாவிட்டால் இந்த விவாதம் பதினெட்டு நாட்கள் தொடரும், கமலாவிற்குப் பாரதப் போரில் நிறைய ஈடுபாடு உண்டு.)

     "ஊர்லே ஒரு குப்பைத் தொட்டி விடாமல் கம்ப்யூட்டர் காலேஜ் விளம்பரங்களை எழுதியிருக்காங்க. .. எதிலேயாவது சேர்ந்தால், தன்னாலே தெரிஞ்சுண்டுடறது. இது என்ன பெரிய அசுர வித்தையா...?''  என்று கேட்டாள்.
                                                 *                             *
     போதாத காலம் என்று வந்து விட்டால் அது எத்தனையோ விதமாக  வரலாம். ஏன், ஏர் பஸ்ஸிலும் (அமெரிக்காவிலிருந்து என் மருமான் ஸ்ரீதர் உருவில்) அல்லது 17-ஆம் நூற்றாண்டு சைக்கிளிலும் (என் அருமை மனைவி கமலாவின் அருமைத் தம்பி தொச்சுவின் உருவில்!) வரலாம். எனக்கு ரொம்பவும் போதாத காலமாக இருந்திருக்க வேண்டும். ஆகவே அது இரண்டு உருவிலும் வந்தது.
     அமெரிக்காவிலிருந்து வந்த ஸ்ரீதர், ஏதோ சுண்டைக்காய் வற்றல், வேப்பம்பூ, வெங்கடேச சுப்ரபாத காஸட்,' சமைத்துப் பார்' புத்தகங்கள் என்று வாங்கிக்கொண்டு  ஊரைப் பார்க்க போக வேண்டியது தானே? இவனை யார், தான் வாங்கியிருக்கும் கம்ப்யூட்டரைப் பற்றிப் பெருமையடித்துக் கொள்ளச் சொன்னார்கள், கமலாவின் எதிரில்....?

     "மாமி....கம்ப்யூட்டர் இல்லாமல் உலகத்தில் இனிமே ஒண்ணுமே நடக்காது. எங்க வீட்டுக் கம்ப்யூட்டரில் சமையல் குறிப்பிலிருந்து இன்கம்டாக்ஸ் கணக்கு வரை எல்லாம் இருக்கு. அது மட்டுமில்லை. பால் கணக்கு, தயிர் கணக்கு கூட போடலாம்'' என்றான்.

     "ஏண்டா, அது என்னமோ வெவ்வேறு லாங்க்வேஜ் இருக்குன்னு உங்க மாமா பயமுறுத்தறாரே...இங்கெல்லாம் வெச்சுக்கறது கஷ்டமில்லையா....?''

     "ஒரு மண்ணுமில்லை. சின்னப்பசங்கள் கூட சுலபமா உபயோகிக்கலாம்...''

     "நீ சொல்லிட்டே....உங்க மாமா மனசு வந்து வாங்கணுமே...அதில்லாம பாவம் பணத்துக்கு எங்கே போவார்? அவர் அம்மாவுக்கு அனுப்பணும்... போறாததுக்கு அவர் அக்கா, ரஜினிகாந்த், கமலஹாசன் மாதிரி வசூல் சக்ரவர்த்தி, அப்பப்போ வந்துடுவா. தம்பி கையில முழுசா நூறு ரூபா நோட்டு இருந்தால், அங்கே மூக்கிலே வியர்க்கும்...போடாப்பா...அமெரிக்காவைப் பற்றியே இங்கே பேசாதே....''
        *                                       *
     ஸ்ரீதர் போட்ட விதையின் மேல் நான் வெந்நீர் விட நினைத்தேன். தைரியமில்லாததால் சும்மா இருந்து விட்டேன். ஆனால் அருமை மைத்துனன் தொச்சு அதற்குத் தொழு உரம், விஜய் உரம், யூரியா, டி.ஏ.பி. என்று பலவித உரங்களைப் போடுவான் என்று தெரிந்திருந்தால், வந்தது வரட்டும் என்று வெந்நீரை விட்டிருப்பேன்.

     தொச்சு ஒரு நாள் அகால வேளையில் வந்தான். (அவன் எப்போதும் வந்தாலும் எனக்கு அகால வேளைதான்.)
     என் மாமியாரும் கமலாவும் தொச்சுவுக்குப் பூரண கும்பம் வைத்து வரவேற்றார்கள்.

     "வாடாப்பா....தொச்சு....எப்படி இருக்கே....? அங்கச்சி எப்படி இருக்கா? பசங்கள்லாம் செüக்கியமா?'' என்று தாய்ப் பாசமும் தம்பிப் பாசமும் வெள்ளமாகப் பெருக்கெடுத்தோட, அவனை வரவேற்றனர்.

     இந்த சமயத்தில் தொச்சு இருமினான்.

     "என்னடா இப்படி லொக்கு லொக்குன்னு இருமறே.?...உடம்பைப் பார்த்துக்காமல், ஓயாமல் ஓடியாடினால் இப்படித் தான் வரும்!'' என்று அக்காக்காரி பச்சாதாபப்பட --

     "ஏண்டி கமலா. எல்லாருக்குமா நாற்காலியில் உட்கார்ந்துண்டு தத்துபித்துன்னு எழுதினால் பணம் வரும். அவனுக்குக் கெட்டிக்காரத்தனம் இருக்கு... சாமர்த்தியம் இருக்கு... .அதிர்ஷ்டம் இல்லையேடி'' என்று மாமியார்க்காரி பின் பாட்டுப் பாட--

     (பின் பாட்டு என்பது என்னைப் "பின்"னால் குத்தும் பாட்டு)

     "அக்கா, அம்மா... என் இருமலை விடுங்கோ... அத்திம்பேர்கிட்ட முக்கியமான சமாசாரம் சொல்லிட்டு ஆசீர்வாதம் வாங்கிண்டு போக வந்தேன்'' என்றான் தொச்சு.

     ஆசீர்வாதத்தை அவன் வார்த்தைகளால் மட்டுமல்ல, பொட்டலங்களாகவும் வாங்கிக் கொண்டு போவது வழக்கம்!

     இனிமேலும் நான் பேசாமல் இருந்தால், தொச்சுவை அவமரியாதையாக நடத்தினேன் என்று பயங்கரக் குற்றச்சாட்டை, குதிரைச் சாட்டையைப் போல் என் மேல் வீசுவார்கள் என்று தெரியுமாதலால், நான் பொய்யான உற்சாகத்துடன்,  "என்னப்பா! தொச்சு...என் ஆசீர்வாதம் உனக்கு இல்லாமலா...? ஏன் கமலா, தொச்சுவுக்கு காப்பி, கீப்பி எதுவும் கிடையாதா...?  சொல்லுப்பா, தொச்சு...'' என்றேன்.

     "இல்லே அத்திம்பேர், தொச்சு கம்ப்யூட்டர்ஸ்னு ஒரு கம்பெனி ஆரம்பிச்சிருக்கேன்...''  தொச்சு சொல்லி முடிக்கு முன், கமலா ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ந்தது போல், "அப்படியாடா.. கம்ப்யூட்டராடா... அடடா... அத்திம்பேர் கூட கம்ப்யூட்டர் வாங்கணும்னு சொல்லிக் கொண்டிருந்தார்... சொல்லுடா, சொல்லுடா... என்ன கம்ப்யூட்டர்?'' என்று ஆர்வத்துடன் கேட்டாள்.

     ஏதோ ஒரு கம்ப்யூட்டர் கம்பெனிக்கு ஏஜென்சி எடுத்திருந்தான் தொச்சு. ஆகவே அடுத்த பதினைந்து நிமிஷத்திற்கு இன்புட், அவுட்புட், சி.டி.யூ., டிஸ்ப்ளே, மெமரி, மெகாபைட், ஸாஃப்ட்வேர், டிஸ்க், பேஸிக் என்று பல வார்த்தைகளைப் போட்டுக் குழப்பினான்.

     "அக்கா, கோபால் லாங்க்வேஜ் சுலபமாகக் கத்துக்கலாம்...''

     "அதென்னடா கோபால், ராஜ கோபால்னு?'' என்று என் மாமியார் கேட்டாள்.

     "டி-பேசுன்னு கூட ஒரு லாங்க்வேஜ் இருக்கு, அம்மா.''

     "அதென்னடா "டி' போட்டுப் பேசறது... கம்ப்யூட்டர்னா மரியாதை கூட வேண்டாமோடா...? கலிகாலம்... சரி... சரி... சாப்பிட வாடா... டிபன் அடை பண்ணி இருக்கிறேன்'' என்று அழைக்க, தாய் சொல்லை, இந்த மாதிரி விஷயங்களில், தட்டாத தனயன் அடையிருக்குமிடத்தை அடைந்தான்.
                         *                     *
      "தொச்சு... சீப்பாக வாங்கித் தர்றேன்னு சொல்லியிருக்கான். அதனாலே நான் கம்ப்யூட்டர் கிளாஸ்ல சேர்றேன்'' என்று ஒரு நாள் கேட்டாள் கமலா.

     "என்ன கமலா, இந்த வயசிலே போய் கிளாஸ். அது இதுன்னு போக முடியுமா? சின்னச் சின்னப் பசங்கள் படிக்கிற இடத்தில் நீ போனால், பாட்டியம்மான்னு தான் கூப்பிடுவாங்க...''

     "இருக்கட்டுமே... அப்புறம் பேப்பர்லே வந்திருக்கிற விளம்பரத்தைப் பார்த்தீங்களா? ஏழாம் தேதிக்குள் சேர்ந்தால் இருநூறு ரூபாய் ட்யூஷன் சம்பளத்தில் சலுகையாம். நான் கூடப் பார்க்கலை. அங்கச்சிதான் பார்த்தாளாம். அவ ஓடி வந்து சொன்னா...'' என்றாள் கமலா.

     ஓஹோ! அங்கச்சியும் வந்தாயிற்றா, தன் பங்குக்குக் கைங்கரியம் செய்ய! இனி, என் பேச்சு எங்கே எடுபடப் போகிறது?

     "செய் கமலா... எவ்வளவு வாரம் பயிற்சி?'' என்று கேட்டேன்.
            *                      *
    அடுத்த மூன்று மாதம் கமலா கம்ப்யூட்டர் வகுப்புக்குப் போனாள். அவ்வப்போது தொச்சு வந்து, "அக்கா, எப்படி போறது கிளாஸ்...? உனக்குச் சொல்லித் தரணுமா...? கற்பூரம் மாதிரியாச்சே... "கப்"புன்னு பிடிச்சிப்பியே...'' என்று ஐஸ் வைத்துக் கொண்டிருந்தான். அவன் ஐஸ் வைக்க வைக்க எனக்கு உடம்பெல்லாம் எரிந்தது!

     இருநூறு ரூபாய் மிச்சம் பிடிக்கச் சேர்ந்ததால் அந்தக் கம்ப்யூட்டர் சர்வகலாசாலை(!) ஒரு திண்ணைப் பள்ளிக் கூடம் மாதிரி நடந்தது. இருந்தாலும் மூன்று மாத முடிவில் விலை உயர்ந்த காகிதத்தில் அழகாக அச்சிடப்பட்ட சர்ட்டிபிகேட்டை லாமினேட் செய்து கமலாவிடம் கொடுத்தார்கள். ரூபாய் நோட்டைவிட விலை உயர்ந்த காகிதம் அது! காரணம் அதன் விலை மதிப்பு 1500 ரூபாய்.
     பட்டமளிப்பு(!!) விழாவிற்கு ஒரு முன்னாள் எம்.எல்.ஏயை அழைத்து இருந்தார்கள். அவர் கமலாவை ஆகா, ஓகோ என்று பாராட்டினார். "இந்த வயதிலும் படிக்கும் ஆர்வம் கொண்ட இந்தத் தாய்க்குலத்திற்குத் தலை வணங்குகிறேன். இது தமிழ்ப் பெண்களுக்கே உரிய அரிய பெரிய சிறப்பு... அன்று இமயத்திற்குச் சென்று கனக, விஜயர்கள் தலையில் கல் கொண்டு வந்தார்கள்...'' எந்த நிகழ்ச்சியானாலும் முதல் இரண்டு வாக்கியங்களுக்குப் பிறகு கனக விஜயர்களைப் பிடித்துக் கொண்டு விடுவார் எம்.எல்.ஏ!
                                                       *                  * 
ஒரு நாள் ஆபீஸிலிருந்து வீடு திரும்பும் போது சமையலறையில் தொச்சுவின் குரல் கேட்டது. (அவனுக்கு என் வீட்டின் சமையலறையின் மேல் அலாதியான ஈடுபாடு).

     "அக்கா... மந்தைவெளியிலே இப்பத்தான் காலேஜ் ஆரம்பிச்சான் அந்தப் பையன். இப்போ அமெரிக்காவில வேலை கெடைச்சுட்டுது... போறான்...''

     "சரி தாண்டா தொச்சு... சீப்பா வர்றதுன்னு சொல்றே நானும் கொஞ்சம் படிச்சுட்டேன். ரொம்ப சௌகரியம்தான். வீட்டிலே ஒண்ணு இருந்தால்...ஆனா...''

    "என்ன அக்கா... அத்திம்பேர் ஒரு நாவல் எழுதினால் ஐயாயிரம் ரூபாய் வர்றது. அவருக்கு இன்னிக்கு இருக்கிற டிமாண்டிற்கு, எது வேண்டுமானாலும், வாங்க முடியும்!'' (தொச்சு பெரிய வலையாக விரிக்கிறான்')

     நான் உள்ளே நுழைந்ததைப் பார்த்ததும் தொச்சு, "அத்திம்பேர் வாங்கோ. உங்களைப் பத்தித்தான் பேசிண்டிருந்தோம்...! அக்கா... அத்திம்பேருக்கு ஒரு கப் காப்பி கொடு'' என்று உபசரித்தான். என் வீட்டுக் காப்பியை எனக்குக் கொடுப்பதில் அவன் மன்னன்.

     "என்னப்பா தொச்சு... நீ வந்தாலே என் பர்ஸுக்கு டபுள் நிமோனியா வந்துடும்...'' என்று நான் ஆரம்பிக்க,

கமலா  "ஆமாம், சொல்ல மாட்டீங்க. அவனால ஆயிரம் லாபம் கிடைச்சதை மறந்துடுவீங்க. ஒரு ஒண்ணே காலணா (ஆமாம், கமலா இன்னும் காலணா யுகத்தில் தான் இருக்கிறாள்!)  நஷ்டம் ஆனா, குடிமுழுகிப் போன மாதிரி கத்துவீங்க. உங்க அம்மா ஒரு மொக்கைப் பென்சிலால் கார்டு எழுதி விட்டால் உடனே தலையை அடகு வெச்சாவது பணத்தைக் கொட்டுவீங்க. அம்மாவுக்குச் செய்ய வேண்டியதுதான். அதுக்கும் அளவு வேண்டாமோ...? இவ்வளவு செய்றீங்களே, ஒரு திருப்தி உண்டா? அது ரத்தத்திலேயே கிடையாது. ஏன், என் கல்யாணத்தில் ஜானவாசத்தின் போது...'' - கமலா முப்பது வருஷ புராணத்தை ஆரம்பித்து விட்டாள்.

     நான் அவளைப் பேச விடாமல், "விடு கமலா.. என்ன தொச்சு? என்ன சேதி?'' என்று சர்க்கரை தடவிய விஷம் தோய்ந்த குரலில் கேட்டேன்.

     "அத்திம்பேர்..ஒரு கம்ப்யூட்டர். பிராண்ட் நியூ...விலைக்கு வர்றது. அதை வாங்கின பையனுக்கு அமெரிக்காவிலே வேலை கெடைச்சுட்டுது... போறான். வந்த விலை வரட்டும். கொடுத்துடறேன்னு சொன்னான்... பன்னிரண்டாயிரம்தான். அப்பழுக்கில்லாமல் இருக்கு. அக்காதான் படிச்சிருக்காளே... உபயோகமாக இருக்கும்....'' என்றான்.

     "பன்னிரண்டாயிரமா? நம்மால முடியாது. எவ்வளவு குறைப்பானாம்?''

     "உண்மையைச் சொல்றேன் அத்திம்பேர். பன்னிரண்டாயிரத்துக்கு விற்றுக் கொடுத்தால் எனக்கு  ஆயிரம் ரூபாய் தர்றேன்னு சொன்னான். அதனால் பதினொண்ணுக்குச் செட்டில் பண்றேன். எனக்கு ஆயிரம் இல்லாவிட்டால் போகிறது'' என்றான்.

     "அத்திம்பேருன்னா, வர்ற லாபத்தையும் விட்டுடுவான் தொச்சு... அவனுக்குப் பணம் முக்கியமில்லை. மனுஷாள் தான் முக்கியம்'' என்று அவசர சர்டிபிகேட்டை என் மாமியார் கொடுத்தாள்.

     கமலா, "இல்லை அம்மா...'' என்று ஆரம்பித்தாள். மேல்கொண்டு என்னென்ன வசனங்கள், வசவுகள், சாடல்கள், நிஷ்டூரப் பேச்சுக்கள் வரும் என்று எனக்குத் தெரியுமாதலால், நான் இடைமறித்து, "செய்ப்பா, தொச்சு. நல்ல கண்டிஷன்ல இருந்தா பத்தாயிரத்திற்கு வாங்கிக்கறேன்'' என்றேன்.

     "டன், அத்திம்பேர்'' என்றான், தொச்சு.  சரியான திரு‘டன்'!
                                                     *            *
        கம்ப்யூட்டர் வந்துவிட்டது. அதற்கு அழகான மேஜை, தூசி படியாதிருக்க எம்ப்ராய்டரி பண்ணிய கவர், எல்லாம் போட்டாயிற்று. கமலா ஒரு வாரம் விடாமல் அதன் முன்னேயே உட்கார்ந்து இருந்தாள். சில சமயம் அவள், "சே, என்ன கம்ப்யூட்டர்?'' என்று அலுத்துக் கொள்வாள். காரணம், சும்மா 12 x 8 என்ற பெருக்கலுக்கு முழு ஸ்கிரீன் அளவு 200 எண்களில் விடை (!) வரும். கம்ப்யூட்டருக்கு ஆழாக்கு, வீசை, காலணா, மரக்கால், முழம். விரற்கடைம் சிட்டிகை, கெஜம், மைல் என்பதெல்லாம் புரியவில்லை. கமலா அதற்கு ’கமலா லாங்க்வேஜ்’ கற்று கொடுக்க எடுத்த முயற்சிகள் பலிக்கவில்லை!
                                                             *                                    *
     "அதென்னப்பா நீ தப்புத் தப்பாகக் கணக்குப் போடறே. ஒண்ணாம் தேதி முக்கால் ஆழாக்குக் குறைச்சுக் கொடுத்தே. அப்புறம் ஆறே முக்காலணா பணம் பாக்கி இருக்கு...''
      பால்காரருடன் கமலாவின் வழக்கமான விவாதம்தான்!
     கமலாவிடம் கம்ப்யூட்டர் தோற்றுவிட்டது!

10 comments:

  1. ஹா... ஹா... ஹா... பேஸிக், டிபேஸ், கோபால் என்று ஆரம்ப காலத்து கம்ப்யூட்டர் மொழிகளை நினைவுபடுத்தியதுடன் வாய்விட்டுச் சிரிக்கவும் வைத்தது கமலாவின் கம்ப்யூட்டரின் புராணம்.

    ReplyDelete
  2. கலகல கம்ப்யூட்டர் புராணம் ரசிக்கவைத்தது..!

    ReplyDelete
  3. விஷயம் எத்தனை புராதனப் பழசாயிருந்தால் என்ன, நகைச்சுவை என்றென்றும் புதிதுதான்! - ஜெ.

    ReplyDelete
  4. Your posts are like readers digest and whenever I read it, I feel fresh and energetic. Good humour.
    Whenever Thouchu visits your home, it is an agala velai or PORATHA VELAI for you.

    ReplyDelete
  5. அருமை!எங்கிருந்து தான் இந்த நச் நகைச்சுவை வார்த்தைகள் கொட்டுகிறதோ?பிரம்மாதம்,போங்கோ!

    ReplyDelete
  6. இந்த COBOL, FORTRAN வந்த புதிதில் நான் எழுதிய கவிதை இதோ :


    கம்ப்யூட்டரை காதலித்து
    கற்பிழந்த கவிதா...
    பிள்ளைகளைப்
    பெற்றாள்,
    தப்பு..தப்பாக!

    ReplyDelete
  7. சார் நமஸ்காரம்,
    வெற்றிகரமான தாம்பத்யத்திற்கு ஆதார சுருதியே ஜிங்-சிக் தான்!..., "ஊர்லே ஒரு குப்பைத் தொட்டி விடாமல் கம்ப்யூட்டர் காலேஜ் விளம்பரங்களை எழுதியிருக்காங்க. ..., "என்னப்பா தொச்சு... நீ வந்தாலே என் பர்ஸுக்கு டபுள் நிமோனியா வந்துடும்...'' இந்த மாதிரி கொடுக்கும் டிப்ஸ்களுக்கே உங்களுக்கு தாம்பத்திய குல சக்ரவர்த்தி, தாம்பத்யம் பூஷணம், யுக புருஷர் திலகம் என தங்கள் கால வாழ்க்கைக்கு முன் பிறந்திருந்தால் இதுபோல எதாவது பட்டம் கொடுக்க விளைந்திருப்பேன். நீங்கள் இங்கு பதிவு செய்துள்ள விஷயங்கள் எதுவும் மாறவில்லை. வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.

    ReplyDelete
  8. ரசித்தேன்....

    கம்ப்யூட்டர் கமலாவிடம் தோற்று விட்டது.... :))

    ReplyDelete
  9. ரொம்பப் பிரமாதமான கதை. மிக சுவாரசியாமாக இருந்தது. நன்றி.

    முரளி.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!