பாஸ்டன் நகர் விஜயம்
சில மாதங்களுக்கு முன்பு நியூஜெர்சியிலிருந்து பாஸ்டன் நகருக்குப் போக வேண்டியிருந்தது. அங்கு ஒரு பரத நாட்டிய அரங்கேற்றத்திற்கு என்னை அழைத்திருந்தார்கள்,
பாஸ்டன் நகருக்குப் போகும் விரைவு ரயிலில் டிக்கட் முன் பதிவு செய்தேன். நிகழ்ச்சிக்கு ஒரு வாரம் முன்னதாகப் போனால், பிரபல ஹார்வர்ட் பல்கலை கழகம், அமெரிக்காவின் மிக மிக பழமையான பிரம்மாண்டமான 1895-ல் நிறுவப்பட்ட பாஸ்டன் நூலகம், அபாரமான அக்வேரியம் ஆகியவை களையும் சுற்றிப் பார்க்கலாம் என்பது என் எண்ணம். பாஸ்டன் நூலகத்தில், மாதம் ஒரு நாள் பழைய புத்தகங்கள் விற்பனை இருக்கும் என்றும்,
ஏராளமானப் புத்தகங்கள் அரை டாலருக்கும், ஒரு டாலருக்கும் கிடைக்கும் என்பதும் ஒரு காரணம்.
அதனால் ஒரு வாரம் முன்னேயே போக பதிவு செய்தேன். ரயில் டிக்கட் : போய் வர 300 டாலர்! ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் பயண தேதியை 5,6 நாள் தள்ளி மாற்ற வேண்டியிருந்தது. வாங்கிய டிக்கட்டைப் புது தேதிக்கு மாற்றினேன். டிக்கட்
பதிவு ஆனதும் ஒரு குட்டித் தகவல் வந்தது: “ டிக்கட் கட்டணம் 200 டாலர் போக 100 டாலர் திருப்பி அனுப்பப்படுகிறது!” ’இதென்னடா கூத்து’ என்று சந்தோஷமாகத் துள்ளிக் குதித்து விட்டு, விசாரித்தேன். அமெரிக்காவில் ரயில் கட்டணங்கள் பயணத் தேதியை பொருத்து இப்படி மாறுவது உண்டு என்றும்,
எவ்வளவுக்கெவ்வளவு முன்னதாகப் பதிவு செய்கிறோமோ
அதற்கேற்றார்போல் கட்டணம் குறைவாக இருக்கும் என்றார்கள்!
குறிப்பிட்ட
தினம் எடிஸன் பகுதியில் உள்ள மெட்ரோ பார்க் ரயில் நிலையத்தை அடைந்தேன். பாஸ்டன் ரயில் வருவதற்கு
இரண்டு நிமிஷத்திற்கு முன்பு ஒரு அறிவிப்பு செய்தார்கள். “ ரயிலில் ‘QUIET கம்பார்ட்மெண்ட்’ கடைசியில் இருக்கிறது”
என்று. அதென்ன QUIET கம்பார்ட்மெண்ட் என்று
விசாரித்தேன். “ அந்த கம்பார்ட்மென்ட்டில் யாரும்
சப்தம் போடமாட்டார்கள். படிப்பார்கள் அல்லது தங்கள்
ஆபீஸ் வேலையை பார்ப்பார்கள். யாரும் பேச மாட்டார்கள். ரயிலில் இன்டர்நெட் ( WI-FI) வசதி உண்டு” என்றார்கள்.